திங்கள், 10 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

சங்கத் தமிழ் மாலை- ஸ்ரீஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைக்கு ஓர் அனுபவ உரை
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

முன்னுரை

‘நோன்பு நோற்றல்’ என்பது முன்காலத்திலிருந்தே செய்யப்படும் ஒரு செயலாகும். இது உள்ளத்தையும், உயிரையும் உயர்வடையச் செய்கிறது. இவ்வுயர்வினால் ஒருவனது செயல்களும் உயர்வடைகின்றன. உலகில் நெடுங்காலமாக எல்லாவிடங்களிலும் எல்லா மக்களிடமும் நோன்புகள் பலபடியாகக் காணப்படுகின்றன. இதனால் பயனடைவதாக மக்கள் 
எண்ணுவதே இதன் பெருமையைக் காட்டுகிறது.

திருவள்ளுவர் ‘ஒருவன் கற்ற கல்வி அவனுக்கு பின்வரும் ஏழ் பிறவிக்கும் உயிர்த் துணையாக நிற்கும்’ என்கிறார் [குறள் 40.8] தவம் என்னும் அதிகாரத்தில் உலகில் பலர் தவம் செய்யாதவர்களாக இருப்பதால் ஆற்றல் அற்றவர்களாக இருக்கிறார்கள் . தவம் செய்ய சிலரே ஆற்றாலுடையவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் [27-10] தவம் என்பது தன்னுடைய துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதும் பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமல் இருத்தலும் ஆகும் என்று தவத்தின் வடிவத்தைக் கூறுகிறார். மேலும் இத்தவமானது முன்பு செய்த தவத்தால் கைகூடும். அது இல்லையேல் முயற்சி செய்வதும் பயனளிப்பதும் அரிதகும் என்கிறார் [27-12] . வாழ்கையில் நாம் சம்பாதிக்கும் செல்வங்களில் கல்வி, நோன்பு இவைகள் மூலமாகப் பெறும் செல்வங்கள் மற்றெல்லாச் செல்வங்களைக் காட்டிலும் உயர்ந்தவையாகும் என்பதே வள்ளுவர் கருத்து.

இந்நோன்புகள் பலவகைப்பட்டவை. பலநூல்களும் இவைகளை விளக்குகின்றன. அடைய வேண்டிய பலனுக்குத் தகுந்த நோன்பினைத் தக்க பெரியோர்களிடம் கேட்டறிந்து அதன்படி கடைப்பிடிப்பதே வழக்கமாகும்.

பெரியாழ்வாரின் திருமகளாக வளர்ந்த ஆண்டாள் பெருமாளே தனக்கு நாயகனாக வேண்டும் என்னும் உறுதி கொண்டாள். ஸ்ரீபாகவத புராணத்தில் 10வது ஸ்கந்தம் 22வது அத்யாயத்தில் “காத்யாயனி” விரதம் என்னும் நோன்பை அறிவிலா இடைச்சிறுமியர்கள் நோற்று தாங்கள் விரும்பியபடியே கண்ணனைக் கணவனாக அடைந்தார்கள் என அறிந்து கொள்கிறாள்.

இது வேதத்திற்கு ஏற்புடைய நோன்பாகும். மனிதன் இங்கு வாழ்ந்தபின் மோக்ஷத்தைச் சென்றடையவேண்டும். ’கதி’ [அர்ச்சிராதி, தூமாதி முதலிய வழிகள்] ’அயனம்’ [உத்தராயணம், தக்ஷிணாயணம்] என்னும் இவ்விரு சொற்களால் மோக்ஷத்திற்குச் செல்லும் வழியைப்பற்றி ஆராயும் கூட்டத்தினரின் தலைவர் கத்யயனர் என்னும் ரிஷியாகும். இவர் குலத்தில் பிறந்தவர் காத்யாயனி. இப்பெயருடைய பார்வதி தேவியே இந்த நோன்பின் வழிபடு தெய்வமாகும். பெரியாழ்வாரும் பரம்பொருளைப்பற்றிக் கூறி பொற்கிழியைப் பரிசாகப் பெற்றவர். இவர் திருமகளாகிய ஆண்டாள் இவர் பரம்பொருள் என்று காட்டித் தந்த கண்ணபிரானையே அடைய விரும்பினாள். அவனையே தன் நோன்பின் வழிபடு தெய்வமாகக் கொண்டாள். அவனையடைய அவனே வழி [உபாயம்] என்று கருதினாள். ஆழ்வார்கள் அனைவரும் கண்ணபிரானையே ஆறும், பயனுமாக [செல்லவேண்டிய வழி, சென்றடையும் பயன்] அறுதியிட்டனர். அதற்கேற்ப இவள் நோற்ற நோன்பும், அதன் பயனும் திருப்பாவையின் முப்பது பாடல்களிலும் பொதிந்துள்ளன.

“ஆழ்வார், எம்பெருமானார் ஸம்பிரதாயம்” என்று வழங்கப்படும் ஸம்பிரதாயத்தைச் சேர்ந்தோருக்கு இத்திருப்பாவை முதல் நூலாகவும் ஆண்டாளின் மற்றொரு படைப்பான நாச்சியார் திருமொழி இதன் குறிப்புரையாகவும், மாறன் சடகோபனின் [நம்மாழ்வாரின்] நான்கு நூல்களும் இவைகளின் விரிவுரைகளாகவும், திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்களும் இவைகளின் விரிவுரைகளாகவும் அமைந்துள்ளன. மற்றைய ஆழ்வார்களின் அருளிச் செயல்களும், இராமானுச நூற்றந்தாதியும் மேற்கண்ட நூல்களிலிருந்து அவர்கள் கண்டெடுத்த மாணிக்கக் குவியல்களாகும். இதுவே நாலாயிர திவ்யப்ரபந்தங்களின் சிறப்பாகும்.
இத்திருப்பாவைக்கு முன்னோர்கள் ஐவர் உரை செய்துள்ளனர். நால்வர் புற உரையும் ஒருவர் அகவுரையும் [ஸ்வாபதேசம்] வரைந்துள்ளனர்.

இவ்வுரையாசிரியர்கள் மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் வேதம், சாஸ்திரங்கள் ஆகியவற்றையும் எடுத்துக் காட்டி விளக்கியுள்ளதை நோக்குகையில் அவர்களுடைய உயர்ந்ததான கல்வி, அறிவு, ஆற்றல்கள் அனைவரையும் வியக்கச் செய்வனவாகும். தன் நூல் ‘சங்கத் தமிழ் மாலை முப்பது’ என்று தாம் காட்டித்தந்த குறிப்பை இனி வருவோர் உணர்ந்துகொண்டு அதன்படி பொருள் காணவேண்டும் என்பது ஆண்டாள் நமக்கு அன்புடன் இட்ட கட்டளை எனக்கொண்டு அதன்படி இவ்வுரையை எழுத விழையும் அடியேனுடைய இம்முயற்சியும் முறையானதே.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக