ஸ்ரீ:
தார்மிக ரத்ன ப்ரதீப ஸ்ரீ உ.வே.N.R.கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் [1886-1966] தஞ்சை ஜில்லா நீடாமங்கலத்தில் பிறந்தார். இவர் தம் ஏழாவது வயதில் கவிச்சக்ரவர்த்தி கம்பனின், கம்பராமாயணத்தின் அறிமுகம் ஒரு பெரியவரின் ஆசியுடன் கிடைக்கப் பெற்று அவ்விளம் வயதிலேயே அந்நூலை முழுவதும் மனனம் செய்தார்.
சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த இவர் வேதமும், வடமொழியும் கற்று நல்ல புலமை பெற்றிருந்தார். சுமார் நாற்பதாண்டுகள் மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும் , சிலகாலம் சமஸ்க்ருத அகாதமியின் தலைவராகவும் பணியாற்றினார். மும்மொழிகளிலும் இவர் ஆய்ந்து எழுதிய கட்டுரைகள் பல பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. சிறந்த வைணவச் செம்மலாகத் திகழ்ந்த இவர் பொருள் நயத்துடனும், நகைச்சுவையுடனும் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர்.
தமிழ்மொழியில் வல்லுநராகத் திகழ்ந்த இவர் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும், கம்ப ராமாயணம், சடகோபர் அந்தாதி ஆகிய நூல்களுக்கும் பல வகை ஆய்வுக் கட்டுரைகளும், விளக்கவுரைகளும் எழுதியுள்ளார். அவை அவ்வப்பொழுது ‘செந்தமிழ், ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா’,போன்ற பத்திரிகைகளில் வெளி வந்தன. திருப்பாவை, திருமாலை, சடகோபரந்தாதி ஆகிய மூன்று நூல்களுக்கும் அவர் எழுதிவைத்திருந்த உரைகள் கையெழுத்துப்ரதிகளாக சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் இறையருளால் கிடைத்தன. அவைகள் கடந்த ஆண்டுகளில் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. இந்நூல்களை இயற்றியவர்களின் எண்ணங்களையும் அவர்கள் கையாண்ட தமிழ் மொழியின் ஏற்றத்தையும் போற்றும் வண்ணமாக அமைந்துள்ளன இவருடைய உரைகள். சொல்ல வந்ததை மிகச் சுருக்கமாகக் கூறுவது இவருடைய இயல்பு. அவற்றை சற்றே விவரித்து அதன் தன்மையும், மணமும் மாறாமல் எழுதினால் அனைவரும் புரிந்து கொண்டு சுவையை அனுபவிக்க இயலும் எனப் பலர் கருதியதையொட்டி வரும் நாட்களில் தொடர்ந்து அவ்விளக்கங்களை இவ்விடுகையில் இட எண்ணியுள்ளேன்.