திங்கள், 7 செப்டம்பர், 2020

 

ஸ்ரீ:

நம்மை வாழ்விக்கும் நல்லெழுத்துக்கள்

Dr ஹேமா ராஜகோபாலன், பெங்களூரு

எழுத்தறிவித்தவன் இறைவனாகும்  என்பது பழந்தமிழ் முதுமொழி. கல்வி கற்பித்த ஆசானை தெய்வமாகக் கருதவேண்டுமென்பது இதன் பொருள். இதையே ஆசார்ய தேவோ பவ என்கிறது வேதம். இம்முதுமொழிக்கு எழுத்தை அறிவித்தவன் இறைவனே  என்றும் பொருள் கொள்ளலாம். அங்ஙனம் கொள்ளும்போது பல அழகான பொருள்களை இவ்வாக்கியம் தன்னுள் அடக்கியுள்ளதை அறிந்து மகிழலாம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்ற வள்ளுவரின் வாக்குப்படி என்னும் முதல் எழுத்து அகாரவாச்யனான எம்பெருமானையே குறிக்கும். எனவே இந்த முதலெழுத்துக்குள் இறைவன் இருக்கிறான் என்பது தேறுகிறது. ஓங்காரமாகிய ப்ரணவமும் இப்படியே! இதை முதலெழுத்தாகக் கொள்ளும் பொழுது இதற்குள்ளும் , என்று மூன்று அக்ஷரங்கள் உள்ளதையும், அவற்றுள் முதலெழுத்தாக அகாரமே உள்ளதையும் காண்கிறோம். ஸ்வாமி தேசிகன் செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில் என்று திருவரங்க விமானம் ப்ரணவ ரூபத்தில் இருப்பதாகக் கூறுகிறார். அதனுள்ளே அகார வாச்யனான எம்பெருமானும் எழுந்தருளியுள்ளான். எனவே எழுத்துக்களில் எம்பெருமானையே காணலாம் என்கிறது சாஸ்த்ரம். தூவலம்புரியாம் ஒன்றில் துவக்கமாம் வண்ணம் ஒன்றால் என்று ஸ்வாமி தேசிகனும் ப்ரணவத்தின் முதலெழுத்தாக எம்பெருமான் விளங்குகின்றான் என்று அருளிச்செய்கிறார். வடமொழியில் எழுத்துக்களை வர்ணம் என்பர். இதையே ஸ்வாமி தமிழில் வண்ணம் என்று இங்கு அருளிச் செய்துள்ளார். இப் ப்ரணவத்தில் பிராட்டியைக் குறிக்கும் உகாரமும் உண்டு. ஸ்வாமி தேசிகன் திரு உரையாய் தாம் பொருளாய் நிற்பார் வந்தார் என்று பாடுகிறார். ‘சொல்லையும் பொருளையும் பிரிக்கவியலாது, பிராட்டியும் பெருமாளும் போலேஎன்பது இதன் தாத்பர்யம்.

ஒருவருடைய எண்ணமே ஏட்டில் பதிக்கையில் வண்ணம் (வர்ணம், நிறம்) பெறுகிறது! ஆக எண்ணங்களே எழுத்தாகின்றன. இப்படி எழுதுவதென்பது கல் தோன்றி  மண் தோன்றா காலத்திலேயே, மொழி தோன்றிய பொழுதே தோன்றியது எனலாம். வேதத்தை ச்ருதி என்றும் எழுதாக்கிளவி என்றும் சொல்வது கொண்டு அது செவிவழி வந்தது, எழுதப்படாததுஎன்பதை உணரலாம். செவிகளால் கேட்டுக்கேட்டு கற்பதே வேதம் கற்கும் முறையாகும். அங்ஙனம் கேட்டவை மனதில் பதிந்து  [ஸ்மரணம்] அது எழுதப்படும் பொழுது ஸ்ம்ருதி எனப்பட்டது. எனவே வேதத்தில் கூறப்படும் செய்திகளை மனு, சாண்டில்யர், யாஜ்ஞவல்க்யர் முதலியோர் எழுதி ஸ்ம்ருதிகளைப் படைத்தனர். நூல்களை எழுதுவது என்பது, அதாவது தம் எண்ணங்களை ஏட்டில் பதிவிடுகை என்பது இங்கிருந்து தொடங்கியதெனலாம்.

ஒரு குழந்தைக்கு எழுதக் கற்பிக்கும் ஸம்ஸ்காரம் அக்ஷராப்யாஸம் எனப்படுகிறது. குழந்தை பிறந்த அடுத்த க்ஷணமே சாப்பிடுகிறது. இதற்கும், பேசுவதற்கும் ஒரு ஸம்ஸ்காரம் தேவைப்படவில்லை. தாயின் முகம் பார்த்து குழந்தை தாமாகவே கற்றுக்கொண்டு பேசுகிறது. எனவே தான் இம்மொழியை தாய் மொழி என்கிறோம். எழுதுவதற்கு மட்டுமே சாஸ்திரத்தில் ஒரு தொடக்கம் சொல்லப்பட்டுள்ளது என்பதைக் காணும் பொழுது எழுத்தின் பெருமையை நம்மால் உணரமுடிகிறது.

ஆதியில் இந்த எழுத்து என்பது யார் யாரால் எழுதப்பட்டது என்பதைக் காணலாம். எம்பெருமான், அவனே எழுத்து! உடல்மிசை உயிரென கரந்தெங்கும் பரந்துளன் என்ற நம்மாழ்வாரின் கூற்றுப்படி இந்த அக்ஷரங்கள் எனப்படும் எழுத்துக்களில் அவனே மிளிர்கிறான். எனவேதான் இவைகள் க்ஷரம் இன்றி [அழிவின்றி] அக்ஷரமாக விளங்குகிறது.  ஆதியில் முதல் முதலாக எழுதியவர்  நான்முகனாகிய ப்ரம்மா எனலாம். இவர் எழுதியதை  ப்ரம்ம லிபி என்பர். இவர் தாம் படைக்கும் ஜீவாத்மாகளின் தலையில் அவரவருடைய பாவ புண்ணியத்திற்கேற்ப எழுதிவிடுகிறார். ஒருவருடைய ஆயுள், கல்வி, செல்வம் மூன்றும் அவரவர் தலையெழுத்துப்படி அவர் பிறக்கும் பொழுதே நிச்சயிக்கப்படுகிறது என்கிறது சாஸ்த்ரம் .இதைத்தான் நாம் தலைவிதி என்கிறோம். [ விதி என்பது நான்முகனுக்கொரு பெயர். விதியாகிய அவன் நம் தலையில் எழுதுகிறான்] இந்த ப்ரம்ம லிபியை யாராலும் மாற்றவோ அழிக்கவோவியலாது என்பது விதி, சட்டம்! ஆனால் ஸ்வாமி தேசிகன் தாம் அருளிச் செய்த ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தில் விலுப்த மூர்தன்ய லிபிக்ரமாணாம்------- என்று தொடங்கி ஒரு ச்லோகம் அருளிச் செய்கிறார். அதில் ‘’எம்பெருமானுடைய திருவடிகளின் துகள்களுக்கு இந்த ப்ரம்ம லிபியை அழிக்கும் வல்லமை உண்டு’’ என்கிறார். எனவே நம் தலை எழுத்து நல்ல விதத்தில் மாற்றி அமைய எம்பெருமானின் திருவடிகளைச் சரணமாகப் பற்றவேண்டுமென்பது ஸ்வாமி நமக்கு விடுக்கும் செய்தியாகும்.

ஸ்ம்ருதிகளுக்குப் பிறகு இதிஹாஸ புராணங்கள் எழுதப்பட்டன. ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்ரீமத்ராமாயணத்தையும், ஸ்ரீவ்யாஸ பகவான் மஹாபாரதத்தையும் அருளிச்செய்ததை நாம் அறிவோம். மாநிஷாத ப்ரதிஷ்டாம் என்று சோகத்தில் ஒரு ச்லோகம் உருவாகியது. இதுவே ப்ரம்மாவின் திருவருளால் மங்களகரமான தொடக்கமாகி ஸ்ரீமத் ராமாயணமென்னும் அழகிய காவியமாயிற்று. மஹாபாரதமும் ஸ்ரீவ்யாஸர் சொல்ல விநாயகரால் எழுதப்பட்டது என்பர். இவ்விரு இதிஹாஸங்களிலும் தூது அனுப்பிய நிகழ்வுகள் உண்டு. ராமாயணத்தில் அனுமனும், மஹாபாரதத்தில் ஸ்ரீக்ருஷ்ணனும் தூதுவர்களாகச் சென்ற பொழுது அவர்களுடைய வாய்மொழியே அன்று தூது செய்திகளாயின. ஆனால் ருக்மிணிப் பிராட்டி ச்ருத்வா குணான் புவனஸுந்தரா என்று தொடங்கி ஏழு ச்லோகங்கள் எழுதி, ஒரு கடிதத்தை ஸ்ரீக்ருஷ்ண பகவானுக்கு அனுப்பியதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரம் பாசுரங்களையும் நாதமுனிகள் தம் யோக சக்தியின் மூலம் பெற்று நமக்கு அளித்தார். ஆழ்வார்களும் தாங்கள் எழுதியதாகக் கூறுவதை அவர்கள் பாசுரங்களில்  காணலாம். தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன்போது என்று திருமழிசை ஆழ்வார்  எம்பெருமானைப் பற்றித் தாம் எழுதியாக அருளிச்செய்கிறார். பெரியாழ்வார் இதைக் கூறும் அழகே தனி! கோயில் பொறியாலே ஒற்றுண்டு என்கிறார்! தம்முடைய தோள்களில் எம்பெருமானின் சின்னங்களான சங்கு சக்கர அடையாளத்தைப் பதித்துகொண்டு எம்பெருமானுக்குத் தாம்  அடிமைப்பட்டவன் என்று பட்டயம் செய்து கொடுத்ததைச் சொல்கிறார்! விஷ்ணுசித்தராகிய இவர் சித்தத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கே தம் ஆத்மா, சரீரம் இரண்டும் உரியவை என்பதை திருப்பல்லாண்டு மற்றும் தம் திருமொழியில் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். இவருடைய திருமகளோ கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதினேன் என்கிறாள்.  இவை நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே என்று நம் ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்து இந்த நாலாயிரமாகிய எழுத்துக்களே நம்மை வாழ்விக்க வல்லதுஎன்கிறார்.

ஆழ்வார்களைத் தொடர்ந்து எண்ணிறந்த ஆசார்யர்களும் நமக்கு எழுதிவைத்துச் சென்ற நூல்கள் அனைத்தும் பொக்கிக்ஷங்களாகும். பகவத் ராமானுஜர் வேதத்தைக் காக்கும் கேடயங்களாக ஒன்பது நூல்களை நவரத்னங்களாக அருளிச்செய்தார். இவை  விசிஷ்டாத்வைத கோட்பாடுகளையும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தங்களையும் ஐயம் திரிபர நாம் தெரிந்துகொள்ள உதவும் அரிய படைப்புகளாகும். அவதரித்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றும் அவர் நம்முடன் வாழ்கிறார் என்னும் நிலையைத்  தோற்றுவிப்பவை அவர் மூலம் அவதரித்த நூல்களேயன்றோ!

அடுத்தபடி ஆசார்ய ஸார்வபெளமனாகிய ஸ்வாமி வேதாந்த தேசிகன் அருளிச்செய்த நூல்களைப் பற்றி சிந்திக்கலாம். எண்ணிப்பார்க்கவும் முடியாத, எண்ணிலடங்காப் பல நூல்கள்!  இவர் அருளிச்செய்த இந்நூல்கள் அனைத்தையும் பொருள் விளங்கும்படி ஒரு மனித ஆயுட்காலத்தில்  பூரணமாக வாசித்துவிட முடியாதுஎன அபிநவ தேசிகராகிய ஸ்ரீஉத்தமூர் ஸ்வாமி அருளிச்செய்வதுண்டு. தினசரி வாழ்வில் இம்மியும் பிசகாத அனுஷ்டானங்கள், பலருடைய பல நூல்களையும் வாசித்தல்,  சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபங்கள் ஸாதித்தல், எனப் பலவற்றுக்கு மத்தியில் இத்துணை நூல்களையும் ஸ்வாமி தேசிகன் எப்படித்தான் எழுதினாரோ என்று நாம் வியக்கிறோம்! ஸாக்ஷாத் பகவத் அவதாரமானதால் இங்ஙனம் அவரால்  எழுதிக் குவிக்க ஸாத்யமாயிற்று என்று கொள்ளலாம்! ஓரிரவில் ஒரு யாமத்தில் ஆயிரம் ச்லோகங்களை இயற்றவல்லவராய் இருந்த அவர் தம் ஆயுட்காலத்தில் இவ்வளவு நூல்களை இயற்றியதும் ஸாத்யமே அல்லவா?

ஓரொன்றுதானே அமையாதோ என்னும் கூற்றுப்படி அவருடைய எண்ணற்ற நூல்கள் ஒவ்வொன்றுமே நமக்கு வாழ வழிகாட்டும் ஆற்றுப்படை நூல்களாக அமைந்தவை என்று ஆன்றோர் போற்றுவர். இதற்குக் காரணத்தையும்  ஸ்வாமி தாமே அருளிச் செய்கிறார்.   

வெள்ளைப் பரிமுகர் தேசிகராய் அடியோம் உள்ளத்தெழுதியது ஓலையில் இட்டனம் யாம் என்று அருளிச்செய்கிறார்! எனவே தம்முடைய இதயத்தில்  எம்பெருமான்  எழுதிய எழுத்துக்களையே தாம் ஓலையில் எழுதித் தந்ததாகக் கூறும் அவர் பிறிதோரிடத்தில்ஓலைப்புறத்தில் எழுதுகின்றோம், உள்ளெழுதுமினேஎன்றும் அருளிச் செய்கிறார்! இவ்வோலையில் தாம் எழுதியதை நீங்கள் உங்கள் உள்ளத்தில் எழுதிக்கொள்ளுங்கள்என்று நமக்கும் போதிக்கிறார். இவரன்றோ ஒரு தலை சிறந்த  ஆசார்யர்!

இங்ஙனம் மாற்றவியலாத தலையெழுத்தையும் மாற்றியமைக்கக்கூடிய எம்பெருமானின் திருவடிகளைப் பணிவதும், மேலும் அதற்குண்டான வழிகளைத் தம் நூல்களின் வாயிலாகக் காட்டும் இவ்வேதாந்தாசார்யரின்  திருவடிகளையும் பணிவதுமே நம்முடைய தலையாய கடமையாகும்!

புழுக்கள்கூட எழுதும் என்று உரையாசிரியர்கள் வேடிக்கையாகச் சொல்வர்! ஈர மணலில் புழு ஊர்ந்து செல்கையில் அது சென்ற கோணல் மாணலான வழித்தடம் எழுத்துக்களைப்போல் தோன்றினாலும் ஏதும் பொருளற்ற அவை எழுத்துக்களாகா! புழுக்குறித்த எழுத்துக்கள் என்று இதற்குப் பெயரிட்டனர். வானேறப் போமளவும் வாழ்வு வாழ்தற்கு வழிகாட்டும் கல்வி அத்யாத்ம சாஸ்த்ரம் ஒன்றே! இதைத் தவிர மற்றவற்றைக் கற்பதை சுமையான கல்விகள் என்பார் ஸ்வாமி தேசிகன்! எனவே அச்சுமையான கல்வியையும் புழுக்குறித்த எழுத்தக்களாலான கவைக்குதவாத பல நூல்களையும்  கற்பதைக் காட்டிலும் ஸ்வாமி தேசிகனின் நூல்களைக் கற்றறிவது ஒன்றே நம்மை இங்கும், அங்கும் அதாவது எங்கும் திருவருள் பெற்று இன்புற்றிருக்கச்செய்யும் உன்னதமான  வழியாகும்.

ஸ்வாமி நிகமாந்த தேசிகன் திருவடிகளே சரணம்.