ஞாயிறு, 9 ஜனவரி, 2011

விரிவுரை என்பது தேவையா?

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது ஒரு உயர்ந்த கலை. திருக்குறளின் பெருமைகளில் இதுவும் ஒன்று. எனினும் படிப்பவர்கள் அனைவரும் எழுதியவரின் கருத்தை ஐயந்திரிபற புரிந்துகொண்டு ரசிப்பதற்கு விளக்கவுரை என்பது அவசியமாகிறது. சிறுகதை, நாவல் என்னும்பொழுது இதன் தேவையில்லை. ஆனால் கடினமான தத்துவங்களையும், மதங்களின் கோட்பாடுகளையும் கூறும்பொழுது இவ்விளக்கவுரைகளின் தேவை ஏற்படுகிறது. இதை உணர்ந்தே நம் முன்னோர்கள் [ பூர்வாசாரியர்கள் ] ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு வ்யாக்யானம் எனப்படும் விரிவுரைகளை வட மொழியும், தமிழும் கலந்த மணிப்ரவாளம் என்னும் நடையில்எழுதிவைத்தனர். தமிழ்மொழியும், தத்துவங்களும், ஆழ்வார்கள் காட்டும் விசிஷ்டாத்வைத வேதாந்தக் கருத்துக்களும் அறிந்தவர்களும் கூட இவ்விரிவுரைகள் [    தங்கள் சிந்தனைக்கெட்டாத விஷயங்களையும் கூறுவதால் ]  தெவிட்டாத நல்விருந்தாக அமைவதை உணர்வர். எனவே எடுத்துக்கொண்ட பொருளைப்பற்றி அறிந்தோர், அறியாதார் என அனைவருக்கும் நூலின் ஆழத்தைப் புரிந்துகொண்டு அநுபவிப்பதற்கு 
விரிவுரைகளின் அவசியம் ஏற்படுகிறது.

ஸ்ரீ NRK ஸ்வாமி சுருக்கமாக எழுதும் இயல்புடையவர். ஸ்ரீஆண்டாள்       திருப்பாவையின் இறுதி பாசுரத்தில் ’ சங்கத் தமிழ் மாலை முப்பது ’ என்று அருளிச் செய்துள்ளார். எனவே இதுவும் ஒரு சங்கத் தமிழினால் வரையப்பட்ட நூல் என்னும் கருத்துடன், சங்கப் புலவர்களின் நூல் படைக்கும் முறையையும், ஆற்றலையும் நன்கு கற்று அறிந்திருந்த இவர் அதே கோணத்தில் இந்த விரிவுரையை எழுதியுள்ளார். சங்கத் தமிழைப் புரிந்து கொள்வது இக்காலத் தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு எளிதல்ல. மேலும் சொல்லவந்ததை சுருங்கக் கூறியிருப்பதாலும் இவருடைய உரைக்கும் ஒரு விளக்க உரையின் தேவை ஏற்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக