ஸ்ரீ:
கலியனுரையில் குடிகொண்ட கருத்து
Dr.ஹேமா ராஜகோபாலன், பெங்களூரு
'தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே'
என்று ஸ்வாமி தேசிகன் ஆழ்வார்களின் தெள்ளமுதான தமிழ் பாசுரங்களைக் கொண்டு மறைகளிலே மறைத்துச்சொல்லப்படும்
மெய்ப்பொருளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்
என்று அருளிச் செய்கிறார். அங்ஙனமே ஆழ்வார்களின் பாசுரங்களில் பொதிந்துள்ள உட்கருத்துக்களையும்
ஆழ்வார்களின் திருவுள்ளக் கிடைக்கையையும் ஸ்வாமி தேசிகனின் படைப்புகளிலிருந்து நன்கறியலாம் என்பது ஆன்றோர்கள் காட்டும் உண்மையாகும்.
ஆழ்வார்களின் பாசுரங்களை நம் பூர்வாசார்யர்கள்
பல வ்யாக்யானங்கள் வாயிலாக விவரித்துள்ளனர்.
ஸ்வாமி தேசிகனும் பல ஸ்தோத்ரங்கள், தமிழ் ப்ரபந்தங்கள் மற்றும் பல ரஹஸ்ய க்ரந்தங்கள் வாயிலாக ஆங்காங்கே பலவிடங்களில் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் உணர்த்தும் பொருளையும் ஆழ்வார்களின் திருவுள்ளக் கருத்துகளையும் சுருக்கியும் விரித்தும் நமக்குக் காட்டியருளுகிறார். 'கலியனுரை குடி கொண்ட கருத்துடையோன்' என்பது ஸ்வாமி தேசிகனுக்குக் கிடைத்த பெருமையாகும். சந்தமிகு தமிழ் மறையோனாகிய இத்தூப்புல் வள்ளல் கலியனின் உரையிலே குடிகொண்டிருக்கும் கருத்தினைக் காட்டியருளும் அழகினை 'ஒரு சோறு பத'மென அனுபவிக்கலாம்.
அம்பரம் அனல் கால் நிலம்
சலமாகிநின்ற அமரர்கோன்
வம்புலாமலர் மேல் மலி
மடமங்கைதன் கொழுநன் அவன்
கொம்பின்னன்ன இடை மடக்
குறமாதர் நீளிதணந்தொறும்
செம்புனம் அவை காவல்கொள்
திருவேங்கடம் அடை நெஞ்சமே என்பது திருவேங்கடத்தெம்பெருமான் விஷயமாகக் கலியன் அருளிச் செய்த பாசுரமாகும் [பெரிய திருமொழி 1.8.8]
இப்பாசுரத்தில் அம்பரம், அனல், கால்,
நிலம், சலம் என்றது முறையே ஆகாயம், நெருப்பு, காற்று, பூமி, தண்ணீர் எனப்படும் பஞ்ச
பூதங்களாகும். இப்பஞ்ச பூதங்களும் தாமேயானவன், அதாவது பஞ்சபூத ஸ்வரூபியானவனும்,
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும், பூவின்மிசை[அலர்மேல்]
மங்கைக்குத் துணைவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருவேங்கடமலையைச் சென்றடைவாய்
என் நெஞ்சமே என்று அருளிச் செய்கிறார். இப்பாசுரத்தின் முதலிரண்டு அடிகளில் திருவேங்கடத்தெம்பிரானைப்
பாடியவர் அடுத்த இரண்டு அடிகளில் அம்மலையின் தன்மையைப் பாடுகிறார். வஞ்சிக்கொடியையொத்த,
மெலிந்த, சிற்றிடை கொண்ட, மடமை நிறைந்த
குற மகளிர் 'இதணம்' என வழங்கப்பெறும் காவற்பரண்களில் இருந்து செவ்வியதான தம் வயல்களை
காவல் செய்து கொண்டிருக்கப்பெற்றதான திருமலை என்கிறார்.
'தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:' என்பது ப்ரமாணம். ச்ரிய:பதியான எம்பெருமான்
நித்யஸூரிகள் சூழ்ந்திருந்தேத்தி நிற்கும் தம் பரமபதத்தை விட்டு பாற்கடலில் வந்து வ்யூஹ
மூர்த்தியாய் எழுந்தருளியது கருணையின் கார்யமே என்று ஞானியர் போற்றுவர். கருணையே வடிவானவன்
எம்பெருமான். அவன் தம்மடியார்களை ரக்ஷிக்கத் திருவுள்ளம் கொண்டு ராம, க்ருஷ்ணாதி அவதாரங்கள் எடுத்ததெல்லாம் இப்பாற்கடலில்
வ்யூக மூர்த்தியாய் வந்த பின்னரே. எனவேதான் க்ஷீராப்திநாதனை 'அவதாரக் கிழங்கு' எனவும்
அவதாரங்களுக்கெல்லாம் இதுவே 'நாற்றங்கால்' எனவும் போற்றுவர். 'ஏஷ நாராயண ஸ்ரீமான் க்ஷீரார்ணவ
நிகேதன: ஆகதோ மதுராம்புரி' என்னும் மந்த்ர புஷ்பத்தின் பொருளும் இதுவேயாம். ஸாது பரித்ராணமும், துஷ்க்ருத
விநாசமும் காரணங்களாகக் கொண்டு பிறப்பிலியானவன் நாட்டில் பிறந்து படாதனபட்டு தர்மத்தையும்
அழிந்துவிடாமல் ஸம்ஸ்தாபனம் செய்தருளினான். தம் நிலத்திலே பயிர் செய்த ஒரு விவசாயி
அப்பயிர்கள் நன்கு வளர்ந்து, கதிர்கள் நிறைந்து, முதிர்ந்து நிற்கும் காலத்தில் அவ்விளைநிலத்தின்
அருகிலேயே குடிசை போட்டுக்கொண்டு படுத்திருந்து அவற்றைக் கண்ணும் கருத்துமாய் கவனித்துக்
கொள்வான். தம் மனைவி மக்களை வீட்டிலே விட்டுவிட்டுத் தாம் மட்டும் தனியே வந்து ஊண்,
உறக்கம் கொள்ளாமல் மழை, வெய்யில் பாராமல் விளைபயிரைத் தாய் போல் கண்ணும் கருத்துமாய்
காத்துக்கிடக்குமாப் போலே, உயிர்களைக் காக்கும் பொருட்டு பரமபதம் விட்டு பாற்கடலில்
வந்து உறங்குவான்போல் யோகு செய்து கிடக்கும் பெருமானை ஆழ்வார்களும் ஆசார்யர்களும் பலபடியாகக்
கொண்டாடுகிறார்கள்.
வ்யூஹ, விபவத்தில் மட்டுந்தானா? அர்ச்சா
ரூபியாகத் திருத்தலங்களில் எழுந்திருளியிருப்பவனும் கருணை புரிவதில்
குறைந்தவனன்றே! இவனும் தம் விளைநிலத்தைக் காத்து, அதன் செழிப்பைக்கண்டு மகிழும்
ஒரு விவசாயி போலே என்று போற்றுகிறார் ஸ்வாமி தேசிகன் தம் தயா
சதகத்தில். "சரணாகத ஸஸ்ய மாலிநீயம், வ்ருஷ சைலேச க்ருஷீவலம் திநோதி" என்று
வேங்கடமலையரசனை 'க்ருஷீவல:' என்று ஒரு விவசாயியாகக் காட்டுகிறார். எம்பெருமானிடமிருந்து பெருகிவரும்
தயாப்ரவாஹத்தினால் [தயாதேவியினால்] சரணாகதர்கள் என்னும் செம்மையான பயிர்கள் மாலை, மாலையாகச்
செழித்து வளர்ந்து பூமிதேவியை அலங்கரித்திருக்க அச்செழு மையான விளைச்சலைக் கண்டு உள்ளம்
பூரிக்கிறான் திருவேங்கடவன் என்னும் உழவன் என்றருளிச் செய்கிறார்.
திருமலைத் தெய்வத்தை ஒரு 'விவசாயி' என்றருளிச்
செய்த ஸ்வாமியின் இச்சொல்லையே ஒரு திறவு
கோலாகக்கொண்டு அவரது வழித்தடம் பற்றிச்சென்று இப்பாசுரத்தை அநுபவிக்கப்புகும்
பொழுது வேங்கடத்தினுச்சியில் விளங்கும் பெருமானின் புகழ் அதினும் உயரத்தில் ஓங்கும்படி
பாசுரம் பேசுவதை உணர்ந்து இன்புறலாம்.
கலியன் வரைந்த இப்பாசுரமென்னும் ஓவியத்தில்
திருமகள் கேள்வனாகிய திருமலை தெய்வத்தையும், காவற் பரண்களில் நிற்கும் குற மாதர்களையும்
காண்கிறோம். பூங்கொடிபோல் இளமையும், மென்மையும், சிற்றிடையும் கொண்ட குற மகளிர் வாழும்
மலை இம்மலை. இவர்கள் தங்கள் வீடுகளையும், கணவன்மார்களையும் விட்டு வயலுக்கு வந்து அங்கே
உயரமான இடத்தில் அமைந்திருக்கும் காவற் பரண்களிலே ஏறி நின்று கொண்டு 'கவண் கல்' எறிந்து
தங்கள் புனத்திலே விளைந்து நிற்கும் கதிர்களைத் தின்ன வரும் கிளி முதலிய பறவைகளையும்,
மண்ணுக்கடியில் விளைந்திருக்கும் வள்ளி முதலான கிழங்குகளை அகழ்ந்தெடுத்துத் தின்ன வரும்
பன்றி முதலான சின்ன மிருகங்களையும் 'ஆலோலம்' என்று கூவி அடித்துத் துரத்தியும், கொன்றும்
காவல் காக்கிறார்கள்.
உயர்வற உயர்ந்தவனான உலப்பில் கீர்த்தியம்மானையும்,
அவன் அத்துணை பெருமைகட்கும் எதிர்தட்டாக விளங்கும் குற மகளிரையும் மலையின் பெருமையைச்
சொல்ல வந்த ஒரே பாசுரத்தில் ஆழ்வார் பாடுவதன் காரணமென்ன? ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்தபடி
திருமலை எம்பெருமானை ஒரு உழவனாகக் கொண்டால் இவ்விருவர் புரிவதும் 'ரக்ஷண காரியம்' எனப்படும்
காக்கும் தொழிலே என்பதை உணரலாம்.
தங்கள் விளைநிலங்களைக் காக்கும் இக்குறமகளிர்
மடமையுள்ள, இடக்கை வலக்கையறியாத பெண்பிள்ளைகள். அவனோ ஸர்வக்ஞன். இவர்கள் தம் ஒவ்வொரு
பருவத்திலும் [ தந்தை, மகன், கணவன் என்று] பிறரால் ரக்ஷிக்கப்பட வேண்டியவர்கள். அவனோ
ஸர்வஜகத்துக்கும் ரக்ஷகன்.இவர்கள் காப்பது சிறுபுனம் [வயல்]. அவன் காப்பதோ அகில ஜகத்தையும்.
இவர்கள் ரக்ஷிப்பது அழியக்கூடியதும், அல்பவிலையுடையதுமான காயும், கிழங்குகளும், தானியங்களுமே.
அவன் ரக்ஷிப்பதோ அழிவற்றதான தர்மத்தையும், விலையற்ற ரத்னங்களாகிற ஜீவாத்மாக்களையுமேயாகும்.
இவர்கள் கைகளில் கவண் கல்லும், உண்டை வில்லும் ஆயுதங்கள். அவனிடமோ பஞ்சாயுதங்கள். இவர்கள்
தங்களைக்காப்பாற்றும் கணவன்மார்களை வீட்டிலே விட்டு இங்கு வந்து பயிர்களைக் காத்து
நிற்கிறார்கள். அவனோ 'ஸாது பரித்ராணாம்' என்னும் விரதமேற்கொண்டு அடியவர்களைக் காக்குமுகமாகத்
தன் பத்தினியாகிற அலர்மேல் மங்கையையும் கீழே வீட்டிலிருக்கும்படி விட்டு விட்டு மலைமேல்
வந்து நிற்கின்றான்.
பரமபதத்தில் வீற்றிருப்பவன், பாற்கடலில்
படுத்திருப்பவன் இங்கே வேங்கடமலையில் நின்றநிலையில் இருக் கிறான். இப்பெண்கள் நிற்கும் நிலை கண்டு வெட்கித்
தானும் நிற்கிறான் போலும்! காவல் தொழில் புரிபவர்கள்
படுத்துறங்கலாமோ? அமர்ந்திருந்தாலும் கண் பார்வை நிலத்தின் எல்லை வரை செல்லாதே! எனவே
இவர்களைப்போல் அவனும் நிற்கிறான். சிறுபுனம் காக்கும் இவர்கள் சிறு பரண் கட்டி ஏறி
நிற்கின்றார்கள். ஏழுலகங்களையும் காக்க வேண்டியவனாதலால் அவன் ஏழுமலையின் உச்சியில்
ஏறி நிற்கின்றான் போலும்!
இப்பாரத பூமி நிலவுலகுக்கெல்லாம் புண்ணிய
பூமியாகும். 'ஏதத் வ்ரதம் மம' என்று காப்பதையே தம் விரதமாகக் கொண்ட எம்பெருமான் 'பண்ணிய
நல் விரதமெல்லாம் பலிக்குமென்று பாரதத்தில் வந்து படிந்திட்டான்'. உலகுக்கெல்லாம் தேசமாய்
[தேசுடன்] திகழும் மலையானதால் இம்மலைமேல் நின்று இச்செம்மையான பூமியைக் காத்து நிற்கிறான்.
பூமிக்குச் செம்மையாவது யாது? 'செம்மை' என்னும் அடைமொழி செழிப்பைக்காட்டும். பயிர்
செழித்து வளரும் புனம் 'செம்புனம்' எனப்படுகிறது. அதுபோல் பூமிக்குச் செம்மையாவது அதில்
வாழும் ஜீவர்களால் ஏற்படும் என்பதை 'சரணாகத ஸஸ்யமாலிநீயம்' என்று குறிப்பால் உணர்த்துகிறார்
ஸ்வாமி தேசிகன். ஆசார்யர்களின் திருவருளுக்கிலக்காகி, நல்லறிவு பெற்று, 'நின்னருளாங்கதியின்றி
மற்றொன்றில்லேன்' என்று எம்பெருமானை அண்டி, அவரிடம் 'என் திருமால் அடைக்கலங்கங்கொள்
என்னை நீயே' என்று அனைத்து ஜீவர்களும் சரணாகதர்கள் ஆகும் பொழுதே பூமி செம்மை பெற்று
'செம்புனம்' ஆகும் என்பது இங்கே கலியனும், அக்கலியனுரை குடி கொண்ட கருத்துடைய ஸ்வாமி
தேசிகனும் உணர்த்தும் குறிப்பாகும்.
பயிர்கள் செழித்திருந்தால்தான் அதைக்
காப்பவர்களும் ஆர்வமும், அக்கரையும் மிக்குடையவராய் மகிழ்வுடன் காப்பர். அதுபோல் சரணாகதர்கள் பெருகினால் எம்பெருமானும்
மகிழ்வுடன் காப்பானன்றோ!