ராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஜனவரி, 2011

நாடகமும் நடிகர்களும்

திவ்ய தம்பதியை [பெருமாள், தாயாரை ] நடிகர்கள் என்றும், ’உண்மைக்கதை’ என்று சொல்லப்படும் ராமாயணத்தை நாடகம் என்றும் சொல்லலாமா என்பது கேள்வி. இதற்கு ஸ்வாமி தேசிகன் தாமருளிச் செய்த ‘தசாவதார ஸ்தோத்திரத்தின் முதலிலேயே பதில் அருளிச் செய்துள்ளார்! ‘ரங்கம்’ என்பதற்கு ‘நாடக மேடை’ என்பது பொருள். ‘திருவரங்கம்’ என்னும் இந்த மேடையிலே மீன், ஆமை. பன்றி, நரசிம்மம் ஆகிய பத்து விதமான வேடங்களில் தோன்றி திருவரங்கன் நடிக்கிறார். அவரது தர்மபத்னியாகிய திருவரங்க நாச்சியாரும் அவருக்கு ஏற்ற வடிவெடுத்து உடன் நடிக்கிறார். இவர்கள் வேடத்தையும், செயலையும் கண்டு ரசிகர்களாகிய அடியார்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று அருளியுள்ளார்!

‘புவியும் இருவிசும்பும் நின்னகத்த’ என்கிறார் நம்மாழ்வார். பூமி [ இதைலீலா விபூதிஎன்பர்] மோக்ஷம் [இதை நித்ய விபூதி என்பர்] என உபய விபூதியும்[இருசெல்வங்களும்] ஆக அனைத்துமே அவன் சொத்தாக இருக்கையில் அவன் எதற்காக யாருக்காக நடிக்கவேண்டும்? என்ன தேவை?

எல்லாம் நமக்காக!

வழியல்லா வழியில் சென்று வருந்தி நிற்கும் நம்மைத் திருத்த ’வேதம் முதலியவைகளைக் கொண்டு நல்லவற்றை சொல்லிப் பயன் உண்டாகவில்லையே, இதையே ஒரு நாடமாக நடித்துக் காட்டினால் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ள இயலுமே!’ என்று கருதியே இவர்கள் நாடகம் நடத்துகிறார்கள்.  இதையே ‘தசாவதாரங்கள்’ என நாம் கூறுகிறோம். அலகிலா விளையாட்டுடையானுக்கு இதுவும் ஒரு விளையாட்டே!

செவ்வாய், 4 ஜனவரி, 2011

சுந்தர காண்டம்

இன்று ஸ்ரீஹனுமத் ஜயந்தி. ‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்படும் அனுமனைப் பற்றிய சில சிந்தனைகள்.

வேதம் கூறும் பரம்பொருளே உலகோர்க்கு  நல்வழி காட்டித்தர ராமனாக வந்து அவதரித்தது. தசரதனைத் தந்தையாகப் பெற விரும்பி அவர் மகனாகப் பிறந்தார். அவ்வண்ணமே அப்பரம்பொருளின் திருக்கல்யாண [நற்] குணங்களைப் கூறத் தாமும் ஆசைப்பட்டது வேதம். மஹரிஷி வால்மீகியைத் தந்தையாகப் பெற விரும்பியது போலும்! அவர் மூலமாக ஸ்ரீமத் ராமாயணம் அவதரித்தது! எனவே ராமாயணம் என்பது வேதமே என்பது பெரியோர் கருத்து.

 பரம்பொருளான தெய்வம் நம் நன்மைக்காக நடத்திக் காட்டிய நாடகமே ராமாயணம். ’பரம் பொருளுடன் சேர்ந்து இன்பமாக இருக்க வேண்டிய ஜீவாத்மா உலகில் ஏற்படும் அல்பமான ஆசைகளினால் பிறவிக்கடலில் அலைந்து துன்புற்று இறுதியில் ஒரு நல்லாசிரியரின் [ஸதாசார்யன்] துணையினால் ஞானம் பெற்று அப்பரம் பொருளின் துணை கொண்டு அவனையே சரணடைந்து, அவனது இருப்பிடமாகிய பரமபதத்தைச் சென்றடைந்து இன்பம் பெறுகிறது’ என்பதை உணர்த்துவதற்குத் தோன்றிய நாடகம்.

இதில் ராமன் பரமாத்மா, சீதை ஜீவாத்மாவாக நடிக்கிறாள். பொன்மான் என்னும் ஆசையினால் அல்லல்பட்டு[ சரீரம்] லங்கை என்னும் சிறையிலிருந்து வாடியபின் அனுமனின்[ஆசார்யன்] பேருதவியால் ராமனால் மீட்கப்பட்டு அவனுடன் இணைகிறாள். இதில் அனுமனுக்கு ஒரு ஆசார்யனின் ஸ்தானம். பிரிந்தவர்களை சேர்த்துவைக்கும் பாலமாக [கடகர் என்பர் வடமொழியில்] திகழ்கிறார் என்பதே அனுமனின் சிறப்பு!

ராமாயணத்தின் ஆறு காண்டங்களுள் ஐந்துகாண்டங்களின் பெயர்கள் காவியநாயகனைக்கொண்டு அமைந்துள்ளன.சுந்தர காண்டத்தின் நாயகன் ராமனல்ல,  அனுமனே! சுந்தரம் என்பது அனுமனின் ஒருபெயர். இவன் செய்த பணி மகத்தானது . எனவே இக்காண்டத்திற்கு இப்பெயரையிட்டார் வால்மீகி பகவான்!