சனி, 22 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

தனியன் 3


”சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே ! தொல்பாவை,
பாடி யருளவல்ல பல்வளையாய்,- நாடிநீ
வேங்கடவற் கென்னை விதி' என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.”
               
[இது உய்யக்கொண்டார் அருளியது]

விளக்கம்

”சூரியனுடைய ஒளிபோல் நான் என் கணவர் இராகவனுக்கு. சூரியனிலிருந்து எப்படி ஒளியைப் பிரிக்க முடியாதோ அதுபோல அவரிடமிருந்து என்னையும் பிரிக்க முடியாது.” என்று இராவணனைப் பார்த்து சீதை சொல்கிறாள். வெளிச்சமில்லாத சூரியன் தோசைக்கல் போலத்தான்! ஒருவர் கண்ணிலும் புலப்படமாட்டான். பிராட்டியில்லாவிட்டால் பெருமாளும் அதுபோலத்தான். பேயாழ்வார் ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று திருமார்பிலுள்ள பிராட்டியைக் கொண்டுதான் வந்திருப்பவர் பெருமாள் என்பதைக் குறிப்பிட்டுக்காட்டுகிறார். எனவே இவைகளைக் கருத்திற்கொண்டே ஆண்டாளை ‘சுடர்கொடி’ என்று பாடினார். இச்சுடரின் வெளிச்சத்தில் ரங்க மன்னார் பெருமாளை இவர் ஸேவிக்கிறார்.


பழந்தமிழ் நூலாகிய ’பிங்கல நிகண்டு’ அக்காலப் பெண்களின் அனுஷ்டானத்தை [பழக்க வழக்கங்களை] கூறும்போது ‘பனிநீர் தோய்தலும் , பாவையாடலும்’ என்று இப்பாவை நோன்பை குறித்து இது பெண்கள் செய்யவேண்டிய நோன்பு என்று கூறுகிறது. பரிபாடலும்’இந்த நோன்பு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுக் கன்னிப் பெண்கள் அனுஷ்டித்து வந்த நோன்பு என்று கூறுகிறது. இந்நோன்பில் பாடும் பல பாவைப் பாடல்கள் தொடர்ந்து வழக்கத்தில் இருந்திருக்கவேண்டும் என்றும் தெரிகிறது. ஜைனர்களும் ஒரு தமிழ் திருப்பாவைப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு இந்த நோன்பை நோற்றார்கள் என்றும் தெரிகிறது. ஆதலால் இது மிகப் பழமையான,  பழங்காலம் தொட்டேகைக் கொள்ளப் பட்டு வந்துள்ளது என்பதைக் காட்ட ‘தொல் பாவை’ என்கிறார்.


நாச்சியார் திருமொழியில் முதல் திருமொழியில் மூன்றாம் பாசுரத்தில் தன்னை வேங்கடவனுக்கு உய்த்துவிடும்படி [சமர்ப்பித்து விடும்படி] ஆண்டாள் பாடுகிறாள். அவளுடைய திருவடிகளைப் பற்றியிருக்கும் நாமும் அவளது இவ்வழக்கத்தையே பின்பற்றி அந்த வேங்கடவன் பால் பக்தியுடன் இருக்கவேண்டும். அத்தகைய பக்தி தம்முள் உண்டாவதற்கு வேண்டுகிறார். [நல்குதல்- மகிழ்வுடன் குறித்தல்]


குறிப்பு


முப்பது பாட்டுக்களோடு கூடிய இத்திருப்பாவை நூலுக்கு முதல் 5 பாட்டுக்கள் பாயிரமாக அமைந்துள்ளன. முதல் மூன்று பாட்டுக்களால் [எம்பெருமானின் நிலைகளான பரம், வ்யூஹம்,விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என்னும் ஐந்தினுள் பர, வ்யூஹ, விபவங்கள் ஆகிய நிலையிலுள்ள எம்பெருமான்களைப் பற்றி  கடவுள் வாழ்த்தாகப் பாடுகிறாள். இந்த நோன்பு இதன் அங்கங்கள் [பகுதிகள்] இதன் அனுஷ்டானம் [நோற்கும் முறை] இந்நோன்பினால் கிடைக்கும் பயன் இவைகளையும் சொல்லி நான்காவது பாடலில் வான் சிறப்பையும், நான்காவது நிலையில் அர்ச்சையின் பெருமையையும் எடுத்துரைக்கிறாள். ஐந்தாவது பாடலில் இந்த நான்கு பாட்டுகளின் பொருள்களையும் தொகுத்துக்கூறி இந்நோன்பு மற்றும் இதில் செய்யும் பல காரியங்களுடைய பலன் ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறாள். இத்துடன் இந்நூலின் 5 பாயிரங்களும் முடிவடைகின்றன. 






வெள்ளி, 21 ஜனவரி, 2011

ஆத்ம, தேக யாத்திரைகள்



ஆத்ம யாத்திரை, தேக யாத்திரை என்கிறோமே, அப்படியானால் ஜீவாத்மாவும் அதன் உடலும் தினமும் பயணிக்கின்றனவா?
ஆம். இதுதான் நம் வாழ்க்கைப் பயணம். நம் வாழ்நாள் முழுவதும் இவை இரண்டும் இணைந்தே பயணிக்கின்றன. அதனால் இரண்டையும் பேணிக்காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது.
தேக யாத்திரைக்காக நாம் செய்யவேண்டியது உடலுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து நன்கு பேணி வளர்ப்பது. ஆத்ம யாத்திரைக்கு அதன் நலனுக்காக நாம் செய்யவேண்டியது என்ன?
இந்தக் கேள்விக்கு விடையளிக்கிறது நம் வேத வேதாந்தங்கள். நம் ஸம்ப்ரதாயத்தில் தத்வ, ஹித புருஷார்த்தங்கள் என்னும் மூன்று தலைப்புகளில் இந்த விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. இதை நன்குணர்வதால் வரும் அறிவை ஞானம் என்றும் விவேகம் 
என்றும் கூறுகிறோம்.

இந்த விவேகத்தை, ஞானத்தை நாம் பெறுவதால் நமக்குக்  கிடைக்கும் நன்மைகள் அல்லது பலன்கள் என்ன?
முதன் முதலில் எழுந்த கேள்வியாகிய ‘நான் யார்’ என்பதற்கு இந்த ஞானம் [அறிவு] வந்த பிறகே சரியான தெளிவான உறுதியான பதில் கிடைக்கும். நான் யார் என்பது தவிர இதைத் தொடர்ந்து வரும் பல கேள்விகளுக்கும் கூட விடை கிடைக்கும். நான் யார்? நான் எத்தனை காலமாக இருக்கிறேன்? இப்பொழுது இங்கிருக்கும் நான் முன் எங்கிருந்தேன்?  இப்பிறவியில் என்காலம் முடிந்த பின் நான் என்ன ஆவேன்? எங்கு செல்வேன்? இப்பிறவி எனக்கு ஏன் கிடைத்தது? இதில் நான் செய்யவேண்டியவை என்ன? பெற்ற இப்பிறவியை எவ்வாறு பயன் படுத்துவது? எது சரி? எது தவறு?  இதுகாறும் நடந்த ஆத்ம தேக  [பயணங்கள்] யாத்திரை இந்தப் பிறவியோடு முடிந்துவிடுமா? முடிவே கிடையாதா?  உண்டென்றால் அதன் முடிவு எப்படியிருக்கும்? ஜீவாத்மாவிற்குள் இருந்து அவனை இயக்கும் பரமாத்மாதான் இவ்விருயாத்திரைகளையும் நடத்துகிறானா? இப்படி பலவிதமான கேள்விகள்! இவை அனைத்துக்கும் விடையளிக்கும் ஒரே கல்விதான் “அத்யாத்ம சாஸ்த்ரம்”.

மேற்கண்ட கேள்விகளுக்கு ஆராய்ந்து தெளிவான விடை கிடைக்க ஆத்ம  விசாரம், தர்ம விசாரம், வேதாந்த விசாரம் செய்ய வேண்டுமென பெரியோர் பணிப்பர். ‘விசாரம்’ என்பதற்கு விசாரித்துத் தெளிதல், ஆராய்ந்து அறிதல் என்பதாகும்.

விசாரம், விசார் என்னும் சொல்லை தமிழிலும், ஹிந்தியிலும் ‘கவலை’ என்னும் பொருளில் நாம் பயன்படுத்துகிறோம் மேற்சொன்ன ஆத்ம விசாரம், தத்வ விசாரம், முதலியவற்றைப்பற்றி நாம் ஏன்  விசாரப்படவேண்டும்? இவை நமக்குத் தேவைதானா?       

வியாழன், 20 ஜனவரி, 2011

உடலும் உயிரும்

நான் யார் ?
[மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாள் முதல் தொடரும் கேள்வி!]

’நான் யார்’ என்ற கேள்வி எத்தனை எளியது! சிறு குழந்தை கூட ‘நீ யார்’ என்று கேட்டால் உடனே தன் பெயரைச் சொல்லுமே! என்று தோன்றுகிறதல்லவா? உண்மையில் இக்கேள்விக்குப் பதில் மிகவும் ஆழமானது. ஒருவனது பெயர் மட்டுமே இக்கேள்விக்கு விடையாகாது. இதற்குச் சரியான. தெளிவான பதிலைத் தெரிவிப்பதே அத்யாத்ம சாஸ்திரம்.

நமக்குள் இருக்கும் ’நான்’ என்பதையே ஜீவாத்மா என்றும் ஒவ்வொரு ஜீவாத்மாவிற்குள்ளும் உள்ளே இருந்து அதை நடத்தும் , இயக்கும் சக்தியை பரமாத்மா என்றும் இந்த சாஸ்திரம் கூறுகிறது. எனவே ஜீவாத்மா, பரமாத்மா என்று உள்ளிருக்கும் இரண்டையும் அறிந்து கொள்ளும் பொழுது வெளியில் தெரியும் நம் உடல் என்பது எதைச் சேர்ந்தது என்னும் கேள்வி! ‘என்னுடைய உடல்’ என்னும் பொழுதே ’நான்’ என்றும் ‘என்னுடைய உடல்’ என்பதும் வெவ்வேறு இரு வஸ்துக்கள் என்று உணர்கிறோம். உடலுக்குள் ஜீவாத்மா இருக்கும் வரைதான் நாம் ‘நாமாக’ மனிதர்களாக இருக்கிறோம். அது வெளியேறிவிட்டால் அது வெறும் உடல் மட்டுமே. அதன் பெயர் கூட கட்டை என்று மாறிவிடுகிறது. அசைவற்ற, இயக்கமற்ற, உயிரோட்டமற்ற, கட்டாயமாக அழிக்கப்பட வேண்டிய ஒரு பொருளாகி விடுகிறது. எனவே உடல் வேறு,அதனுள்ளிருக்கும் ‘நான்’ எனப்படும் ஜீவாத்மா வேறு,  உள்ளிருந்து அதை இயக்கும் பரமாத்மா வேறு என்று இம்மூன்றும் புலனாகிறது.

உடலின் நலத்தைக் கருதிச் செய்பவை, ஆத்மாவின் நலத்தைக் கருதிச் செய்பவை என்று நாம் செய்யும் செயல்களும் இரண்டு பிரிவுகளாகி விடுகின்றன.

இதை வடமொழியில் தேக யாத்திரை என்றும் ஆத்ம யாத்திரை என்றும் கூறுவார்கள். யாத்திரை என்பதற்குப் பயணம் என்று பொருளல்லவா? எனில் நம் உடலும் உயிரும் நாள்தோறும் பயணிக்கின்றனவா?     

புதன், 19 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம்




வேடிக்கைப் பாட்டு

அருக்கஞ்சட்டியில் தண்ணீரை வைத்து
அக்கரைக்கிக்கரை நீந்தியும் பார்த்தேன்
அப்படி என்னுயிர் போகவுமில்லை
ஆயனெழுத்துக்கு யானென்ன செய்வேன்?

நல்ல எண்ணையிலே தோசையைப் போட்டு
நாற்பது நாளைக்குத் தின்னுமே பார்த்தேன்
அப்படி என்னுயிர் போகவுமில்லை
ஆயனெழுத்துக்கு யானென்ன செய்வேன்?

தாம்புக் கயிற்றை பந்தாகச் சுற்றித்
தலைக்கு வைத்துப் படுத்துமே பார்த்தேன்
அப்படி என்னுயிர் போகவுமில்லை
ஆயனெழுத்துக்கு யானென்ன செய்வேன்?

மொந்தம் பழத்திலே முப்பது சீப்பு
முந்நூறு நாளைக்குத் தின்னுமே பார்த்தேன்
அப்படி என்னுயிர் போகவுமில்லை
ஆயனெழுத்துக்கு யானென்ன செய்வேன்?

நாலு நாளைக்கொருதரம் எண்ணைய்
நன்றாகத் தேய்த்துக் குளித்துமே பார்த்தேன்
அப்படி என்னுயிர் போகவுமில்லை
ஆயனெழுத்துக்கு யானென்ன செய்வேன்?

மோரை விலக்கிப் பாலைச் சொரிந்து
முப்பது நாளைக்குத் தின்னுமே பார்த்தேன்
அப்படி என்னுயிர் போகவுமில்லை
ஆயனெழுத்துக்கு யானென்ன செய்வேன்?

கம்பநாட்டாழ்வான் [கம்பம்+நாட்டு+ஆழ்வான்]

மாறன் சடகோபன் ப்ரகாசிப்பித்த ப்ரபத்தி மார்க்கத்துக்குத் தன் இராமாவதாரச் செய்யுளாலும், சடகோபனுக்கு அந்தாதியாலும் இவன் ஜயஸ்தம்பம் [கம்பம்] நாட்டினானாதலின் இவன் கம்ப நாட்டாழ்வானானான்.


செவ்வாய், 18 ஜனவரி, 2011

அத்யாத்ம சாஸ்த்ரம்



இந்தச் சொல்லை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இதன் பொருள் யாது? ’கல்வி’ என்பது என்ன?பலவற்றைக் கற்றுக்கொள்ள, விஷயங்களைத் தெரிந்து கொள்ள சாதனமாக இருப்பது கல்வி. இதைத்தான் வடமொழியில் வித்யை என்கிறோம். ‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்கின்றனர். கலைகள் எனப்படுவது இக்கல்வியின் ஒரு பகுதியே. இக்கலைகள் வாழ்க்கைக்குப் பயன்படுபவை.

இக்கல்விகள் பலவகையாவன. அவரவர் தேவைக்கேற்ப, செய்யவிருக்கும் தொழிலுக்கேற்ப, அவரவர் விருப்பம் ,ஈடுபாடு இவற்றுக்கேற்ப உலகில் பலவிதமான கல்விகள் உண்டு.ஆனால் இவற்றுள் எல்லாம் தலை சிறந்த கல்வி என்பதுஆன்மீகக் கல்வியே என்பர் நம் பெரியோர். இதையே அத்யாத்ம சாஸ்த்ரம் என்கிறோம். பிறவற்றை அறியும் முன் ஒருவன் தன்னைப் பற்றி உணர வேண்டாமா? ’நான் யார்’ என்னும் கேள்விக்கு விடை தெரிந்து கொள்ளவேண்டாமா? இதைத் தெரிவிக்கும் கல்வியே அத்யாத்ம சாஸ்த்ரம். ‘ஆத்மானம் அதிக்ருத்ய க்ருதம் சாஸ்த்ரம் அத்யாத்ம சாஸ்த்ரம்’ அதாவது ஆத்மாவைப் பற்றிப் பேசும் சாஸ்த்ரம் என்பது இதன் விளக்கம்.
உடல் வளர்க்க வயிற்றுப்பிழைப்புக்காகக் கற்கும் கல்வி தேவையாயினும் ஆத்மாவின் நலத்துக்காகக் கற்கும் கல்வி உயர்ந்ததன்றோ! எனவேதான் ஸ்வாமி தேசிகன் ஆன்மீகக் கல்வி தவிர மற்றவற்றைச் ’சுமையான கல்விகள்’ என்கிறார். திருவள்ளுவரும் ஆன்மீகக் கல்வியை ஏற்றிப் பேசுகிறார். இக்கல்வி ஒருவனுக்கு உயிர்துணையாக விளங்குவதால் பின் வரும் ஏழு பிறவிகளுக்கும் அது அவனுடைய உயிர்ச் செல்வமாகிறது என்கிறார்.
            ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
            எழுமையும் ஏமாப்புடைத்து [40.8]
ஆத்மாவைப் பற்றிய கல்விமட்டுமே ஆத்மாவுக்கு உயிர்த்துணை
உயிர்ச் செல்வமாக முடியும். உடல் வளர்க்க உதவும் கல்வி உடலோடு அழிந்துவிடும் என்பது வள்ளுவர் போன்ற ஆன்றோர்களின் கருத்து.

‘நான் யார்’  இதற்குச் சரியான பதில் நமக்குத் தெரியுமா?

திங்கள், 17 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


தனியன் 2

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்க்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்_இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

அன்னவயல் என்பது உடலை வளர்க்கும் நெல் முதலிய தானியங்கள் வளரும் இடம் என்றும்,  அன்னம் நீரைப் பிரித்து பாலை மட்டும் பருகுவது போல் தீய எண்ணங்களை விடுத்து ஆத்மாவை வளர்க்கும் சிறந்த எண்ணங்கள் மட்டுமே தோன்றும் மனத்தையும் குறிப்பதாக இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். மனதாகிற வயலில் நீரை ஒதுக்கி பாலை மட்டும் பருகும் அன்னப் பறவை போல எண்ணம் சொல், செயல், மூன்றாலும் ஸாரமற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டு ஸாரமான பொருளைமட்டுமே கொள்ளவேண்டும் என்பதையே ’அன்னவயல்’ குறிக்கிறது.

பகவானை அடைய முப்பத்திரண்டு வித்யைகள் [வழிகள்] வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இவை பாரதத்தில் மிகப் பிரபலமாகவும் பலராலும் கைக்கொள்ளப் பட்டதாயும் உள்ளவை. இவை தவிர பகவானையடைய ஆண்டாள் ஒரு புது வித்யையை இங்கே கற்றுத்தருகிறாள். கன்னிப் பெண்கள் நாட்டில் நல்ல மழை பெய்யவும் தங்கள்பால் குறையாத அன்பும், நிறைந்த ஆயுளும் உடையவர்களான கணவர்கள் தங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நோற்றுவரும் இந்நோன்பினால் எம்பெருமானும் மகிழ்கிறான், மோக்ஷம் வரையிலான உயர்ந்த பலன்களையும் கொடுக்கிறான் என்பதை நோக்கும்பொழுது இந்தத் திருப்பாவையும் ஒரு மோக்ஷ வித்யையே என உணரலாம். இது ஆண்டாள் காட்டிய புது வழி. பிராட்டியான இவளுக்கு ஜீவர்கள் அனைவரும் குழந்தைகளே. தம் குழந்தைகளை நல்வழிப்படுத்த தாயான இவளுக்கும் தகுதி உண்டன்றோ!

கடந்த யுகங்களான க்ருத, த்ரேதா மற்றும் த்வாபர யுகங்களில் முன் சொன்ன இந்த 32 வித்யைகளைக் கைக்கொண்டு மோக்ஷ பலனைப் பெற வல்லவர்களாக விளங்குவதற்குத் தேவையான நீண்ட ஆயுள், நோயற்ற உடல், யோகாப்யாஸம் முதலியனவற்றால் 10 [கர்ம5, ஞான5] இந்த்ரியங்களையும் தன் வசத்தில் வைத்துக்கொள்ளவல்ல உயர்ந்த சக்தியும், இந்த வித்யைகளுக்குத் தேவையான சாதனங்கள் ஆகிய அனைத்தையும் உடையவர்களாக மக்கள் விளங்கினர். மாறாக இக்கலியுகத்திலோ குறைந்த ஆயுள், பிணி, பசி, மூப்பு, துன்பம் இவைகளால் பீடிக்கப்பட்ட உடல் கட்டுப்படுத்த இயலாத இந்த்ரியங்களினால் உண்டாகும் தூக்கம் சோம்பல் ஆகிய தாழ்ந்த குணங்கள் , தேவையான சாதனங்களை வாங்கவியலாத ஏழ்மை ஆகியவற்றால் அந்த 32 வித்யைகளை இவர்களால் கைக்கொள்வியலாது என்பதை உணர்ந்த ஆண்டாள் மிக எளியதான இவ்வழியைக் காட்டினாள். மிகக் குறைவான காலச் செலவும், பொருட் செலவும் உடைய இவ்வித்யையால் பகவானும் மகிழ்ந்து இவ்வுலகில் நல்ல வாழ்வையும் பின்னர் மோக்ஷ பலனையும் கொடுக்கவல்லதானது . ஆண்டாள் பாலை பரிபாடல் முதலிய சங்க நூல்களிலிருந்து தெரிந்து, அதைப் பிற விஷயங்களிலிருந்து பிரித்தெடுத்து ஒரு புது வித்யையாக ஆக்கித் தந்துள்ளாள் என்பதால் புது வித்யையைத் தந்த ஆண்டாளை ’ புதுவை’ ஆண்டாள் என்கிறார்.

இது புதிது. பரி பாடல், நற்றிணை முதலிய பல சங்க நூல்களில்காணப்படும் பலவிதமான கலைகளிலிருந்து இதைப் பிரித்தெடுத்து தொடுத்துக் கொடுத்ததால் இதற்கு சங்கத் தமிழ் மாலை என்னும் பெயரை இறுதிப் பாட்டில் இவள் தானே சூட்டியுள்ளாள்.

வேதத்திற்குப் பொருந்தக் கூடியது, வேதத்தின் ஒப்புதல் இதற்குண்டு. ஆதலால் இது ஒரு வேத வித்யை. எனவே இதை வேதப் பொருளான அரங்கர்க்குக் கொடுத்தாள்.

 இயற்றமிழால் ஆக்கப்பட்டது போல் காணப்படும் இந்நூலை இன்னிசையால் என்று இசைத் தமிழாகக் கூறுகிறாரே  [சங்கீதம் கீர்த்தனைகள் போன்றவை இசைத் தமிழ்] இசைத்தல் என்பது மீண்டும் மீண்டும் ஜபித்தலைக் காட்டும் [chant, riff] இத்திருப்பாவையின் எழுத்துக்கள் மந்திரங்களில் உள்ள எழுத்துக்களைப் போல் எதிர்பார்க்கும் சிறந்த பலன்களையெல்லாம் கொடுக்கக் கூடியவையாக இருக்கின்றன. எனவே இந்நோக்கில் இது இசைத் தமிழ். [இசை என்பதற்கு கேட்பவரை இசையவைக்க வல்லது என்றும் பொருள்] உயர்ந்த பலனைத் தர வல்ல இந்த இசையை இன்னிசையால் என்று கூறினார்.

பல்பதியம்- வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை [ஏக வசனம், த்வி வசனம், பகு வசனம்] என்னும் அமைப்பு உண்டு. இதில் இரண்டுக்கு மேற்பட்ட பல என்பதன் தொடக்க எண்ணான மூன்று என்பதை உள்ளடக்கி மூன்று பதிகம் , முப்பது பாட்டு என்று பொருள். பூமாலையானது பூ என்னும் சொல்லுக்கு அதன் வடமொழி பெயராகிய ‘ஸுமனஸ்’ அதாவது நல்ல உள்ளம் என்றும் பொருள் கொள்ளலாம்.[ இவள் ’அன்னவயல்’ உடைய ஆண்டாளாயிற்றே!]

ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அம்சமாக அவதரித்தவள். பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமிக்கு இயல்பு [தன்மை] ’கந்தம்’ எனப்படும் வாசனையாகும் எனவே இவள் சூடிக்கொடுத்த பூமாலை வெளிப்புற இந்த்ரியமான மூக்கிற்கு இன்பம் கொடுப்பது. இவள் பாடிக்கொடுத்த பாமாலையோ வேத சாஸ்த்ரங்கள் அறுதியிடும் உண்மைப் பொருள்களாகிய மணங்கள் வீசுவது. அதனால் ஞானமும் அனுஷ்டானமும் பெருகி அதன் பலனாக மோக்ஷமும் கிடைத்துவிடுவதால் உள்ளேயுள்ள ஆத்மாவின் இன்பத்துக்கும் காரணமாய் அமைகிறது. இவள் தாய். ஆத்மாக்கள் எல்லாம் இவள் குழந்தைகள். குழந்தைகள் எதற்கும் தாயாரையே சொல்வார்கள். அதனால் சூடிக் கொடுத்தாளைச் சொல்லு என்று முடித்தார். இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’ யைக் கொண்டு சூடிக்கொடுத்தாளை என்பதுடன் நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ என்பதைக்கொண்டு சூடிக்கொடுத்தாளுக்குச் சொல்லு என்றும் ஏழாம் வேற்றுமை உருபைக்கொண்டு [இல்,இடம், கண்] சூடிக்கொடுத்தாளிடம் சொல்லு என்றும் பொருள் கொள்ளலாம் ஏனெனில் ”பொருள் சேர் மருங்கின் வேற்றுமை சாரும்”, பொருள்போகும் வழியில் வேற்றுமையை மாற்றிக்கொள்ளலாம் என்பது தமிழ் இலக்கணம்.