திங்கள், 10 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

சங்கத் தமிழ் மாலை- ஸ்ரீஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைக்கு ஓர் அனுபவ உரை
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

முன்னுரை

‘நோன்பு நோற்றல்’ என்பது முன்காலத்திலிருந்தே செய்யப்படும் ஒரு செயலாகும். இது உள்ளத்தையும், உயிரையும் உயர்வடையச் செய்கிறது. இவ்வுயர்வினால் ஒருவனது செயல்களும் உயர்வடைகின்றன. உலகில் நெடுங்காலமாக எல்லாவிடங்களிலும் எல்லா மக்களிடமும் நோன்புகள் பலபடியாகக் காணப்படுகின்றன. இதனால் பயனடைவதாக மக்கள் 
எண்ணுவதே இதன் பெருமையைக் காட்டுகிறது.

திருவள்ளுவர் ‘ஒருவன் கற்ற கல்வி அவனுக்கு பின்வரும் ஏழ் பிறவிக்கும் உயிர்த் துணையாக நிற்கும்’ என்கிறார் [குறள் 40.8] தவம் என்னும் அதிகாரத்தில் உலகில் பலர் தவம் செய்யாதவர்களாக இருப்பதால் ஆற்றல் அற்றவர்களாக இருக்கிறார்கள் . தவம் செய்ய சிலரே ஆற்றாலுடையவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் [27-10] தவம் என்பது தன்னுடைய துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதும் பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமல் இருத்தலும் ஆகும் என்று தவத்தின் வடிவத்தைக் கூறுகிறார். மேலும் இத்தவமானது முன்பு செய்த தவத்தால் கைகூடும். அது இல்லையேல் முயற்சி செய்வதும் பயனளிப்பதும் அரிதகும் என்கிறார் [27-12] . வாழ்கையில் நாம் சம்பாதிக்கும் செல்வங்களில் கல்வி, நோன்பு இவைகள் மூலமாகப் பெறும் செல்வங்கள் மற்றெல்லாச் செல்வங்களைக் காட்டிலும் உயர்ந்தவையாகும் என்பதே வள்ளுவர் கருத்து.

இந்நோன்புகள் பலவகைப்பட்டவை. பலநூல்களும் இவைகளை விளக்குகின்றன. அடைய வேண்டிய பலனுக்குத் தகுந்த நோன்பினைத் தக்க பெரியோர்களிடம் கேட்டறிந்து அதன்படி கடைப்பிடிப்பதே வழக்கமாகும்.

பெரியாழ்வாரின் திருமகளாக வளர்ந்த ஆண்டாள் பெருமாளே தனக்கு நாயகனாக வேண்டும் என்னும் உறுதி கொண்டாள். ஸ்ரீபாகவத புராணத்தில் 10வது ஸ்கந்தம் 22வது அத்யாயத்தில் “காத்யாயனி” விரதம் என்னும் நோன்பை அறிவிலா இடைச்சிறுமியர்கள் நோற்று தாங்கள் விரும்பியபடியே கண்ணனைக் கணவனாக அடைந்தார்கள் என அறிந்து கொள்கிறாள்.

இது வேதத்திற்கு ஏற்புடைய நோன்பாகும். மனிதன் இங்கு வாழ்ந்தபின் மோக்ஷத்தைச் சென்றடையவேண்டும். ’கதி’ [அர்ச்சிராதி, தூமாதி முதலிய வழிகள்] ’அயனம்’ [உத்தராயணம், தக்ஷிணாயணம்] என்னும் இவ்விரு சொற்களால் மோக்ஷத்திற்குச் செல்லும் வழியைப்பற்றி ஆராயும் கூட்டத்தினரின் தலைவர் கத்யயனர் என்னும் ரிஷியாகும். இவர் குலத்தில் பிறந்தவர் காத்யாயனி. இப்பெயருடைய பார்வதி தேவியே இந்த நோன்பின் வழிபடு தெய்வமாகும். பெரியாழ்வாரும் பரம்பொருளைப்பற்றிக் கூறி பொற்கிழியைப் பரிசாகப் பெற்றவர். இவர் திருமகளாகிய ஆண்டாள் இவர் பரம்பொருள் என்று காட்டித் தந்த கண்ணபிரானையே அடைய விரும்பினாள். அவனையே தன் நோன்பின் வழிபடு தெய்வமாகக் கொண்டாள். அவனையடைய அவனே வழி [உபாயம்] என்று கருதினாள். ஆழ்வார்கள் அனைவரும் கண்ணபிரானையே ஆறும், பயனுமாக [செல்லவேண்டிய வழி, சென்றடையும் பயன்] அறுதியிட்டனர். அதற்கேற்ப இவள் நோற்ற நோன்பும், அதன் பயனும் திருப்பாவையின் முப்பது பாடல்களிலும் பொதிந்துள்ளன.

“ஆழ்வார், எம்பெருமானார் ஸம்பிரதாயம்” என்று வழங்கப்படும் ஸம்பிரதாயத்தைச் சேர்ந்தோருக்கு இத்திருப்பாவை முதல் நூலாகவும் ஆண்டாளின் மற்றொரு படைப்பான நாச்சியார் திருமொழி இதன் குறிப்புரையாகவும், மாறன் சடகோபனின் [நம்மாழ்வாரின்] நான்கு நூல்களும் இவைகளின் விரிவுரைகளாகவும், திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்களும் இவைகளின் விரிவுரைகளாகவும் அமைந்துள்ளன. மற்றைய ஆழ்வார்களின் அருளிச் செயல்களும், இராமானுச நூற்றந்தாதியும் மேற்கண்ட நூல்களிலிருந்து அவர்கள் கண்டெடுத்த மாணிக்கக் குவியல்களாகும். இதுவே நாலாயிர திவ்யப்ரபந்தங்களின் சிறப்பாகும்.
இத்திருப்பாவைக்கு முன்னோர்கள் ஐவர் உரை செய்துள்ளனர். நால்வர் புற உரையும் ஒருவர் அகவுரையும் [ஸ்வாபதேசம்] வரைந்துள்ளனர்.

இவ்வுரையாசிரியர்கள் மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் வேதம், சாஸ்திரங்கள் ஆகியவற்றையும் எடுத்துக் காட்டி விளக்கியுள்ளதை நோக்குகையில் அவர்களுடைய உயர்ந்ததான கல்வி, அறிவு, ஆற்றல்கள் அனைவரையும் வியக்கச் செய்வனவாகும். தன் நூல் ‘சங்கத் தமிழ் மாலை முப்பது’ என்று தாம் காட்டித்தந்த குறிப்பை இனி வருவோர் உணர்ந்துகொண்டு அதன்படி பொருள் காணவேண்டும் என்பது ஆண்டாள் நமக்கு அன்புடன் இட்ட கட்டளை எனக்கொண்டு அதன்படி இவ்வுரையை எழுத விழையும் அடியேனுடைய இம்முயற்சியும் முறையானதே.         

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

விரிவுரை என்பது தேவையா?

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது ஒரு உயர்ந்த கலை. திருக்குறளின் பெருமைகளில் இதுவும் ஒன்று. எனினும் படிப்பவர்கள் அனைவரும் எழுதியவரின் கருத்தை ஐயந்திரிபற புரிந்துகொண்டு ரசிப்பதற்கு விளக்கவுரை என்பது அவசியமாகிறது. சிறுகதை, நாவல் என்னும்பொழுது இதன் தேவையில்லை. ஆனால் கடினமான தத்துவங்களையும், மதங்களின் கோட்பாடுகளையும் கூறும்பொழுது இவ்விளக்கவுரைகளின் தேவை ஏற்படுகிறது. இதை உணர்ந்தே நம் முன்னோர்கள் [ பூர்வாசாரியர்கள் ] ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு வ்யாக்யானம் எனப்படும் விரிவுரைகளை வட மொழியும், தமிழும் கலந்த மணிப்ரவாளம் என்னும் நடையில்எழுதிவைத்தனர். தமிழ்மொழியும், தத்துவங்களும், ஆழ்வார்கள் காட்டும் விசிஷ்டாத்வைத வேதாந்தக் கருத்துக்களும் அறிந்தவர்களும் கூட இவ்விரிவுரைகள் [    தங்கள் சிந்தனைக்கெட்டாத விஷயங்களையும் கூறுவதால் ]  தெவிட்டாத நல்விருந்தாக அமைவதை உணர்வர். எனவே எடுத்துக்கொண்ட பொருளைப்பற்றி அறிந்தோர், அறியாதார் என அனைவருக்கும் நூலின் ஆழத்தைப் புரிந்துகொண்டு அநுபவிப்பதற்கு 
விரிவுரைகளின் அவசியம் ஏற்படுகிறது.

ஸ்ரீ NRK ஸ்வாமி சுருக்கமாக எழுதும் இயல்புடையவர். ஸ்ரீஆண்டாள்       திருப்பாவையின் இறுதி பாசுரத்தில் ’ சங்கத் தமிழ் மாலை முப்பது ’ என்று அருளிச் செய்துள்ளார். எனவே இதுவும் ஒரு சங்கத் தமிழினால் வரையப்பட்ட நூல் என்னும் கருத்துடன், சங்கப் புலவர்களின் நூல் படைக்கும் முறையையும், ஆற்றலையும் நன்கு கற்று அறிந்திருந்த இவர் அதே கோணத்தில் இந்த விரிவுரையை எழுதியுள்ளார். சங்கத் தமிழைப் புரிந்து கொள்வது இக்காலத் தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு எளிதல்ல. மேலும் சொல்லவந்ததை சுருங்கக் கூறியிருப்பதாலும் இவருடைய உரைக்கும் ஒரு விளக்க உரையின் தேவை ஏற்படுகிறது

வெள்ளி, 7 ஜனவரி, 2011

ஸ்ரீ உ.வே.N.R.கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்

ஸ்ரீ:

தார்மிக ரத்ன ப்ரதீப ஸ்ரீ உ.வே.N.R.கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் [1886-1966] தஞ்சை ஜில்லா நீடாமங்கலத்தில் பிறந்தார். இவர் தம் ஏழாவது வயதில் கவிச்சக்ரவர்த்தி கம்பனின், கம்பராமாயணத்தின் அறிமுகம் ஒரு பெரியவரின் ஆசியுடன் கிடைக்கப் பெற்று அவ்விளம் வயதிலேயே அந்நூலை முழுவதும் மனனம் செய்தார்.    
சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த இவர் வேதமும், வடமொழியும் கற்று நல்ல புலமை பெற்றிருந்தார். சுமார் நாற்பதாண்டுகள் மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும் , சிலகாலம் சமஸ்க்ருத அகாதமியின் தலைவராகவும் பணியாற்றினார். மும்மொழிகளிலும் இவர் ஆய்ந்து எழுதிய கட்டுரைகள் பல பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. சிறந்த வைணவச் செம்மலாகத் திகழ்ந்த இவர் பொருள் நயத்துடனும், நகைச்சுவையுடனும் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர்.
தமிழ்மொழியில் வல்லுநராகத் திகழ்ந்த இவர் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும், கம்ப ராமாயணம், சடகோபர் அந்தாதி ஆகிய நூல்களுக்கும் பல வகை ஆய்வுக் கட்டுரைகளும், விளக்கவுரைகளும் எழுதியுள்ளார். அவை அவ்வப்பொழுது ‘செந்தமிழ், ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா’,போன்ற பத்திரிகைகளில் வெளி வந்தன. திருப்பாவை, திருமாலை, சடகோபரந்தாதி ஆகிய மூன்று நூல்களுக்கும் அவர் எழுதிவைத்திருந்த உரைகள் கையெழுத்துப்ரதிகளாக சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் இறையருளால் கிடைத்தன. அவைகள் கடந்த ஆண்டுகளில் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. இந்நூல்களை இயற்றியவர்களின் எண்ணங்களையும் அவர்கள் கையாண்ட தமிழ் மொழியின் ஏற்றத்தையும் போற்றும் வண்ணமாக அமைந்துள்ளன இவருடைய உரைகள். சொல்ல வந்ததை மிகச் சுருக்கமாகக் கூறுவது இவருடைய இயல்பு. அவற்றை சற்றே விவரித்து அதன் தன்மையும், மணமும் மாறாமல் எழுதினால் அனைவரும் புரிந்து கொண்டு சுவையை அனுபவிக்க இயலும் எனப் பலர் கருதியதையொட்டி வரும் நாட்களில் தொடர்ந்து அவ்விளக்கங்களை இவ்விடுகையில் இட எண்ணியுள்ளேன்.

புதன், 5 ஜனவரி, 2011

நாடகமும் நடிகர்களும்

திவ்ய தம்பதியை [பெருமாள், தாயாரை ] நடிகர்கள் என்றும், ’உண்மைக்கதை’ என்று சொல்லப்படும் ராமாயணத்தை நாடகம் என்றும் சொல்லலாமா என்பது கேள்வி. இதற்கு ஸ்வாமி தேசிகன் தாமருளிச் செய்த ‘தசாவதார ஸ்தோத்திரத்தின் முதலிலேயே பதில் அருளிச் செய்துள்ளார்! ‘ரங்கம்’ என்பதற்கு ‘நாடக மேடை’ என்பது பொருள். ‘திருவரங்கம்’ என்னும் இந்த மேடையிலே மீன், ஆமை. பன்றி, நரசிம்மம் ஆகிய பத்து விதமான வேடங்களில் தோன்றி திருவரங்கன் நடிக்கிறார். அவரது தர்மபத்னியாகிய திருவரங்க நாச்சியாரும் அவருக்கு ஏற்ற வடிவெடுத்து உடன் நடிக்கிறார். இவர்கள் வேடத்தையும், செயலையும் கண்டு ரசிகர்களாகிய அடியார்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று அருளியுள்ளார்!

‘புவியும் இருவிசும்பும் நின்னகத்த’ என்கிறார் நம்மாழ்வார். பூமி [ இதைலீலா விபூதிஎன்பர்] மோக்ஷம் [இதை நித்ய விபூதி என்பர்] என உபய விபூதியும்[இருசெல்வங்களும்] ஆக அனைத்துமே அவன் சொத்தாக இருக்கையில் அவன் எதற்காக யாருக்காக நடிக்கவேண்டும்? என்ன தேவை?

எல்லாம் நமக்காக!

வழியல்லா வழியில் சென்று வருந்தி நிற்கும் நம்மைத் திருத்த ’வேதம் முதலியவைகளைக் கொண்டு நல்லவற்றை சொல்லிப் பயன் உண்டாகவில்லையே, இதையே ஒரு நாடமாக நடித்துக் காட்டினால் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ள இயலுமே!’ என்று கருதியே இவர்கள் நாடகம் நடத்துகிறார்கள்.  இதையே ‘தசாவதாரங்கள்’ என நாம் கூறுகிறோம். அலகிலா விளையாட்டுடையானுக்கு இதுவும் ஒரு விளையாட்டே!

செவ்வாய், 4 ஜனவரி, 2011

சுந்தர காண்டம்

இன்று ஸ்ரீஹனுமத் ஜயந்தி. ‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்படும் அனுமனைப் பற்றிய சில சிந்தனைகள்.

வேதம் கூறும் பரம்பொருளே உலகோர்க்கு  நல்வழி காட்டித்தர ராமனாக வந்து அவதரித்தது. தசரதனைத் தந்தையாகப் பெற விரும்பி அவர் மகனாகப் பிறந்தார். அவ்வண்ணமே அப்பரம்பொருளின் திருக்கல்யாண [நற்] குணங்களைப் கூறத் தாமும் ஆசைப்பட்டது வேதம். மஹரிஷி வால்மீகியைத் தந்தையாகப் பெற விரும்பியது போலும்! அவர் மூலமாக ஸ்ரீமத் ராமாயணம் அவதரித்தது! எனவே ராமாயணம் என்பது வேதமே என்பது பெரியோர் கருத்து.

 பரம்பொருளான தெய்வம் நம் நன்மைக்காக நடத்திக் காட்டிய நாடகமே ராமாயணம். ’பரம் பொருளுடன் சேர்ந்து இன்பமாக இருக்க வேண்டிய ஜீவாத்மா உலகில் ஏற்படும் அல்பமான ஆசைகளினால் பிறவிக்கடலில் அலைந்து துன்புற்று இறுதியில் ஒரு நல்லாசிரியரின் [ஸதாசார்யன்] துணையினால் ஞானம் பெற்று அப்பரம் பொருளின் துணை கொண்டு அவனையே சரணடைந்து, அவனது இருப்பிடமாகிய பரமபதத்தைச் சென்றடைந்து இன்பம் பெறுகிறது’ என்பதை உணர்த்துவதற்குத் தோன்றிய நாடகம்.

இதில் ராமன் பரமாத்மா, சீதை ஜீவாத்மாவாக நடிக்கிறாள். பொன்மான் என்னும் ஆசையினால் அல்லல்பட்டு[ சரீரம்] லங்கை என்னும் சிறையிலிருந்து வாடியபின் அனுமனின்[ஆசார்யன்] பேருதவியால் ராமனால் மீட்கப்பட்டு அவனுடன் இணைகிறாள். இதில் அனுமனுக்கு ஒரு ஆசார்யனின் ஸ்தானம். பிரிந்தவர்களை சேர்த்துவைக்கும் பாலமாக [கடகர் என்பர் வடமொழியில்] திகழ்கிறார் என்பதே அனுமனின் சிறப்பு!

ராமாயணத்தின் ஆறு காண்டங்களுள் ஐந்துகாண்டங்களின் பெயர்கள் காவியநாயகனைக்கொண்டு அமைந்துள்ளன.சுந்தர காண்டத்தின் நாயகன் ராமனல்ல,  அனுமனே! சுந்தரம் என்பது அனுமனின் ஒருபெயர். இவன் செய்த பணி மகத்தானது . எனவே இக்காண்டத்திற்கு இப்பெயரையிட்டார் வால்மீகி பகவான்!

திங்கள், 3 ஜனவரி, 2011

ஸ்ரீக்ருபா என்று முதலில் ஏன் தாயாரின் அருளை நாட வேண்டும்?

திருமகளை முன்னிட்டுக்கொண்டே எம்பெருமானை அடைய வேண்டும் என்பது நம் ஸம்ப்ரதாயம். நம் ஆசார்யரான ஸ்வாமி தேசிகன் இவளை நம் தாயென்றும் அன்பாலே தம் குழந்தைகளை அரவணைத்துச் செல்பவள் என்றும் ’தண்டித்தல்’ என்பதையே அறியாதவள் என்றும் கூறுகிறார் தம் ’யதிராஜ ஸப்ததி’ என்னும் ஸ்தோத்திரத்தில். தம் குழந்தைகளுக்கு அருள்புரிய இவள் எண்ணினால் பெருமாளும் மனைவி கூறும் நல்வார்த்தகளை மறுக்காது அருள் புரிவார். இவ்விருவரும் மனமொத்த, கருத்தொருமித்த தம்பதி என்று வேத, இதிஹாஸ, புராணங்கள் அனைத்தும் கூறுகின்றன. எனவே தாயாரின் அருள் என்பது பெருமாளின் அருளையும் சேர்த்தே பெற்றுத் தரவல்லது.

ஜயந்தி :

நாளை ஹனுமத் ஜயந்தி[4-1-11]. ’எடுத்த காரியம் நிறைவேற’ சுந்தர காண்டம் பாராயணம் செய்யவேண்டுமென்பதை அறிவோம். இந்த இடுகை தொடங்கும் நேரத்தில் ஹனுமத் ஜயந்தி அமைந்திருப்பது வெற்றிக்கு அறிகுறி எனக் கொள்ளலாம் அன்றோ!

‘ஜயந்தி’ என்ற வடமொழிச் சொல் ஆவணி மாதத்து கிருஷ்ண பக்ஷத்து அஷ்டமி திதியுடன் சேரும் ரோஹிணி நக்ஷத்திரமாகும்.இந்நாளில் அவதரித்தவர் ஸ்ரீ க்ருஷ்ண பகவான் ஒருவரே. எனவே கிருஷ்ணன் அவதரித்த தினத்தை மட்டுமே ஜயந்தி என்ற சொல்லால் குறிக்கலாம். ஆனால் காலப் போக்கில் ’பிறந்த தினம்’ என்ற பொருளில் வழக்கில் வந்துவிட்டது என்பது செய்தி!

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

ஸ்ரீ வைஷ்ணவர்களும், ஸ்ரீயும்

                  பெருமாள், தாயார், ஸ்வாமி தேசிகன், ஆசார்யர்கள் குறிப்பாக 44, 45, 46ம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர்கள் அனுக்ரஹத்தினாலும், அடியேனுக்கு சிறிதளவேனும் ஞானம் பெறும் வண்ணம் காலக்ஷேபம் ஸாதித்தருளிய ஸ்ரீ.உ.வே.ஸேவா ஸ்வாமி ஆகியோரின் திருவடிகளில் வணங்கி அவர்களுடைய நல்லாசிகளுடன் எழுதத் தொடங்குகிறேன்.

                  விஷ்ணுவை வணங்குபவர்கள் வைஷ்ணவர்கள். ’ ஸ்ரீ’யுடன் கூடிய விஷ்ணுவை வணங்குபவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள். தாயாரில்லாமல் பெருமாளை மட்டும் ஸேவிப்பது நம் ஸம்ப்ரதாயமல்ல. “ஸ்ரீமந்நாராயணன்” என்பதற்குத் திருவுடன் கூடிய திருமால் என்பது பொருள்.

                 “ஸ்ரீ” என்னும் வடமொழி எழுத்து /சொல்லுக்கு லக்ஷ்மி, பெண், செல்வம், சொத்து, மஹிமை, அழகு, காந்தி[ஒளி], நற்குணம், மேன்மை, தாமரைப்பூ, வில்வமரம் எனப் பல பொருள் உண்டு. “ஸ்ரீக்ருபா” என்னும் சொல்லுக்கு ‘லக்ஷ்மியின் அருள்’ என்பது. 

                 “ஸ்ரீ” என்று மனிதர்களின் பெயருக்கு முன்னால் சேர்ப்பது ‘மேன்மை தங்கிய’ [மேதகு] என மரியாதை நிமித்தமான குறியீடே.