செவ்வாய், 4 ஜனவரி, 2011

சுந்தர காண்டம்

இன்று ஸ்ரீஹனுமத் ஜயந்தி. ‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்படும் அனுமனைப் பற்றிய சில சிந்தனைகள்.

வேதம் கூறும் பரம்பொருளே உலகோர்க்கு  நல்வழி காட்டித்தர ராமனாக வந்து அவதரித்தது. தசரதனைத் தந்தையாகப் பெற விரும்பி அவர் மகனாகப் பிறந்தார். அவ்வண்ணமே அப்பரம்பொருளின் திருக்கல்யாண [நற்] குணங்களைப் கூறத் தாமும் ஆசைப்பட்டது வேதம். மஹரிஷி வால்மீகியைத் தந்தையாகப் பெற விரும்பியது போலும்! அவர் மூலமாக ஸ்ரீமத் ராமாயணம் அவதரித்தது! எனவே ராமாயணம் என்பது வேதமே என்பது பெரியோர் கருத்து.

 பரம்பொருளான தெய்வம் நம் நன்மைக்காக நடத்திக் காட்டிய நாடகமே ராமாயணம். ’பரம் பொருளுடன் சேர்ந்து இன்பமாக இருக்க வேண்டிய ஜீவாத்மா உலகில் ஏற்படும் அல்பமான ஆசைகளினால் பிறவிக்கடலில் அலைந்து துன்புற்று இறுதியில் ஒரு நல்லாசிரியரின் [ஸதாசார்யன்] துணையினால் ஞானம் பெற்று அப்பரம் பொருளின் துணை கொண்டு அவனையே சரணடைந்து, அவனது இருப்பிடமாகிய பரமபதத்தைச் சென்றடைந்து இன்பம் பெறுகிறது’ என்பதை உணர்த்துவதற்குத் தோன்றிய நாடகம்.

இதில் ராமன் பரமாத்மா, சீதை ஜீவாத்மாவாக நடிக்கிறாள். பொன்மான் என்னும் ஆசையினால் அல்லல்பட்டு[ சரீரம்] லங்கை என்னும் சிறையிலிருந்து வாடியபின் அனுமனின்[ஆசார்யன்] பேருதவியால் ராமனால் மீட்கப்பட்டு அவனுடன் இணைகிறாள். இதில் அனுமனுக்கு ஒரு ஆசார்யனின் ஸ்தானம். பிரிந்தவர்களை சேர்த்துவைக்கும் பாலமாக [கடகர் என்பர் வடமொழியில்] திகழ்கிறார் என்பதே அனுமனின் சிறப்பு!

ராமாயணத்தின் ஆறு காண்டங்களுள் ஐந்துகாண்டங்களின் பெயர்கள் காவியநாயகனைக்கொண்டு அமைந்துள்ளன.சுந்தர காண்டத்தின் நாயகன் ராமனல்ல,  அனுமனே! சுந்தரம் என்பது அனுமனின் ஒருபெயர். இவன் செய்த பணி மகத்தானது . எனவே இக்காண்டத்திற்கு இப்பெயரையிட்டார் வால்மீகி பகவான்!

2 கருத்துகள்:

  1. அருமையாக ஆரம்பித்திருக்கின்றீர்கள். தினசரி ஸ்ரீயில் தோய்ந்து அனுபவிக்கக் காத்திருக்கிறேன். தாங்கள் கற்றதை அடியேனைப் போல ஏதொன்றும் அறியாதவர்களையும் உங்கள் எழுத்து அறிந்து அனுபவிக்கச் செய்யும் என்பது நிச்சயம். இடையிடையே ஸ்ரீ என்.ஆர்.கே. ஸ்வாமி எழுதியதையும் இங்கு இட வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு