நான் யார் ?
[மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாள் முதல் தொடரும் கேள்வி!]
’நான் யார்’ என்ற கேள்வி எத்தனை எளியது! சிறு குழந்தை கூட ‘நீ யார்’ என்று கேட்டால் உடனே தன் பெயரைச் சொல்லுமே! என்று தோன்றுகிறதல்லவா? உண்மையில் இக்கேள்விக்குப் பதில் மிகவும் ஆழமானது. ஒருவனது பெயர் மட்டுமே இக்கேள்விக்கு விடையாகாது. இதற்குச் சரியான. தெளிவான பதிலைத் தெரிவிப்பதே அத்யாத்ம சாஸ்திரம்.
நமக்குள் இருக்கும் ’நான்’ என்பதையே ஜீவாத்மா என்றும் ஒவ்வொரு ஜீவாத்மாவிற்குள்ளும் உள்ளே இருந்து அதை நடத்தும் , இயக்கும் சக்தியை பரமாத்மா என்றும் இந்த சாஸ்திரம் கூறுகிறது. எனவே ஜீவாத்மா, பரமாத்மா என்று உள்ளிருக்கும் இரண்டையும் அறிந்து கொள்ளும் பொழுது வெளியில் தெரியும் நம் உடல் என்பது எதைச் சேர்ந்தது என்னும் கேள்வி! ‘என்னுடைய உடல்’ என்னும் பொழுதே ’நான்’ என்றும் ‘என்னுடைய உடல்’ என்பதும் வெவ்வேறு இரு வஸ்துக்கள் என்று உணர்கிறோம். உடலுக்குள் ஜீவாத்மா இருக்கும் வரைதான் நாம் ‘நாமாக’ மனிதர்களாக இருக்கிறோம். அது வெளியேறிவிட்டால் அது வெறும் உடல் மட்டுமே. அதன் பெயர் கூட கட்டை என்று மாறிவிடுகிறது. அசைவற்ற, இயக்கமற்ற, உயிரோட்டமற்ற, கட்டாயமாக அழிக்கப்பட வேண்டிய ஒரு பொருளாகி விடுகிறது. எனவே உடல் வேறு,அதனுள்ளிருக்கும் ‘நான்’ எனப்படும் ஜீவாத்மா வேறு, உள்ளிருந்து அதை இயக்கும் பரமாத்மா வேறு என்று இம்மூன்றும் புலனாகிறது.
உடலின் நலத்தைக் கருதிச் செய்பவை, ஆத்மாவின் நலத்தைக் கருதிச் செய்பவை என்று நாம் செய்யும் செயல்களும் இரண்டு பிரிவுகளாகி விடுகின்றன.
இதை வடமொழியில் தேக யாத்திரை என்றும் ஆத்ம யாத்திரை என்றும் கூறுவார்கள். யாத்திரை என்பதற்குப் பயணம் என்று பொருளல்லவா? எனில் நம் உடலும் உயிரும் நாள்தோறும் பயணிக்கின்றனவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக