புதன், 20 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 11
கற்றுக் கறவை---

கன்று, கறவை என்னும் இரு சொற்களும் சேரும்போது இலக்கணப்படி மென் தொடர் [கன்று] வன் தொடராக [கற்று] மாறி கற்றுக்கறவை என்று ஆயிற்று.

கன்றுகளுடன் கூடின கறவை மாடுகளின் கூட்டங்கள் நிறைந்தது ஆய்ப்பாடி. அங்கே இடையர்கள் பசுக்களையும் எருமைகளையும் தினம் இரண்டு வேளை கறக்கும் தொழிலுடையவர்கள். அவைகளைக் கறக்கும்போது கன்றுகளை மனதிற்கொண்டு இரக்கம் மிகுந்தவர்களாகி அவைகளுக்குப் போதுமான பாலை விட்டுக் கொஞ்சம் கறந்ததும் நிறுத்திவிடுவார்கள். அவர்கள் இவைகளைக் கூட்டம் கூட்டமாகக் கறப்பதால் அவர்களுக்கு ஏராளமான பால் கிடைக்கிறது. கன்றுகளுக்கும் நிறைய பால் கிடைக்கிறது. [இங்கு கறவை என்றது பசு, எருமை இரண்டுக்கும் பொதுவான சொல்லாகும்] இவ்வாறு கோவலர் மனத்திலுள்ள இரக்கம், தயை, பண்பாடு ஆகியவை பற்றி இங்கு கூறலாயிற்று.

அடுத்து இவர்கள் வீரத்தைப் பற்றிப் பேசுகிறாள். இவர்களுடைய செல்வத்தில் பொறாமைப்பட்டு அவைகளைக் கவர்ந்து கொள்வதற்காக இவர்கள் மேல் படையெடுத்து வருபவர்களை இவர்கள் எதிர்த்துப் போர் செய்யும் திறமையைச் சொல்கிறாள். அப்படி படையெடுத்து வந்தவர்களை அவர்களுடைய வல்லமையெல்லாம் முற்றிலும் அழிந்து போய்விடும்படி இக்கோவலர்கள் வீரத்துடன் போரிட்டு வென்றுவிடுகிறார்கள். இனி இவர்கள் இருக்கும் திசையைக் கூட நினைக்கவும் பார்க்கவும் இயலாதபடி அவர்களை விரட்டிவிடுகிறார்கள் என்பதாக இவர்கள் வீரத்தின் பெருமைகளை ‘செற்றார் திறலழியச் சென்று செறுச் செய்யும்’ என்று கூறுகிறாள்.

பிறர் பொருளைக் கவர அவர் மேல் படையெடுத்துச் செல்வதை ’வெட்சித்திணை’ என்றும் எதிர்த்துப் போர் செய்தலை ’வஞ்சித்திணை’ என்றும் வென்றவர் வாகை மாலையை வெற்றிமாலையாக அணிவதை ’வாகைத் திணை’யென்றும் ஐயன் ஆரிதனார் இயற்றிய ’புறப் பொருள் வெண்பா மாலை’ கூறும்.

’எற்றுக்குறங்கும் பொருள்’ என்பது இத்தகைய கருணையும் வீரமும் உள்ள குலத்தில் பிறந்த உனக்கு உன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுமென வந்திருக்கும் எங்களிடம் கருணை உண்டாகவில்லையா? நோன்பை நோற்க வேண்டுமென்கிற வீரம் இல்லையா? குலத்தின் பெருமையுடன் அழகிய இடையும் மயில் போன்ற சாயலையும் பெற்று அழகியவளாகவும் இருக்கிறாய். நீ எங்களுக்கு ஒரு சிறந்த தோழியல்லவா? உன் உறக்கமென்பது கருணையினாலா, வீரத்தினாலா என்னும் பொருள்பட எற்றுக்குறங்கும் பொருள் என வினவுகிறாள்.

பொருள் என்ற சொல்லுக்கு ப்ரயோஜனம் என்பது அர்த்தமாகும். உனக்குக் கருணையும் வீரமும் இல்லையேல் உன் தூக்கத்துக்கு என்ன பயன்? நாங்கள் அழைப்பதால் உனக்கு ஏதாவது பலன் உண்டு என்றால் அதற்கு அடையாளமாக உன் உடலையாவது கொஞ்சம் புரட்டிக் காட்டலாகாதா? என்று ஆண்டாள் சொல்வது மிக முக்கியமாக கவனிக்கவேண்டியதாகும். சோம்பலை ஒழித்து பகவானின் ஆராதனத்தில் ஈடுபடுவதற்கு ஆர்த்தியும், ப்ரதிபத்தியும் [நல்லபடியாகச் செய்யவேண்டுமே என்னும் கவலையும்,ஈடுபாடும்]வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறும் இந்த அடையாளங்களை உறுதிப் படுத்துவதற்காக நீ உன் உடம்பைக்கூட சிறிதும் அசைத்துக் கொடுக்கமாட்டேன் என்கிறாயே? எங்கள் காரியத்திற்காக உன்னை ஒன்றும் செய்யச் சொல்லவில்லை. முகில் வண்ணன் பேர்படுவது உன் ஆத்மாவுக்கும் உன் வாழ்க்கைகும் உயர்வையே தரும் என்று கூறி இந்தத் தூக்கமும் சோம்பேறித்தனமும் அவ்வுயர்வினைத் தருமா? என்று இடித்துக் கூறுகிறாள். எற்றுக்குறங்கும் பொருள் என்பதைத் தனித்துப்பொருள் கொண்டு ’நமக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்யாமல் தூங்குவது அனைத்து நற்பயன்களையும் அழித்துவிடுமல்லவா? நாங்களெல்லோரும் வந்து அழைக்கும்போது கூட நீ இன்னும் அதிலிருந்து விடுபடாமல் இருக்கிறாயே என்று வற்புறுத்துவதாகவும் பொருள் கொள்ளலாம்.

கன்றுக்குத் தேவையான பாலை விட்டுவிட்டு மீதமுள்ள பாலைக் கறப்பது குற்றமாகாது. தங்களைக் கொன்றோ அல்லது சிறைபிடித்தோ தங்கள் செல்வத்தைக் கவர வரும் எதிரிகளின் பலத்தை அழித்து அவர்களைக் கொல்வதும் தற்காப்பிற்காகவே செய்வதால் அதுவும் குற்றமாகாது. எனவே இச்செயல்களைச் செய்யும் அவர்களை சிறிதும் குற்றமற்றவர்கள் என்று பொருள்பட குற்றமொன்றில்லாத என்று கூறுகிறாள்.

இங்கே பொற்கொடியென்றது பொன்போல் இருப்பவளே, பணிப்பொன்னாக, அதாவது ஆபரணமாக மாறி உயர்ந்த மக்களுக்கு அழகைக் கொடுக்கக் கூடியதான பணிப்பொன் போன்றவளே என்று கூறுகிறாள்.

பெரியோர் ‘சேஷத்வம் என்பது கட்டிப் பொன் போல், பாரதந்த்ரியம் என்பது, பணிப் பொன் போல் இருக்கும்’ என்று கூறுவர். அக்காலத்தில் மக்களுக்குத் தெரிந்த உலோகங்களில் எல்லாவற்றையும் விட உயர்ந்தது தங்கம். அதுபோல் பகவானுக்குத் ’தான் தாஸ பூதன், சேஷன்’ என்னும் உணர்ச்சியானது ஆத்மாவின் மற்ற உணர்ச்சிகளைக் காட்டிலும் மிக உயர்ந்தது. இந்த உணர்ச்சி ஏற்பட்டவர்கள் உயர்ந்ததான கட்டித் தங்கத்திற்கு ஒப்பாவார்கள்.  அதுவே பிறர்க்குப் பயன்படும் பொழுது பணிப் பொன்னாக [ஆபரணத் தங்கமாக] மாறுகிறது. இந்த ஆத்மா பகவத், பாகவத கைங்கர்யங்களில் ஈடுபடும் பொழுது ‘இவை அவன் இட்டக் கட்டளை’ என்று பாரதந்த்ரிய [பிறர்க்கு அடிமைப்பட்ட] உணர்ச்சியோடு செயல்படுகிறது. அப்படிப்பட்ட புண்ணியமான ஆத்மாவை உடையவளேஎன்னும் பொருளில் பொற்கொடியே என்று அழைக்கிறாள். உயர்ந்த பொருட்களெல்லாம் பகவானுக்கே அர்ப்பணமாக வேண்டும் . அதுபோல் பொற்கொடியான, உயர்ந்தவளான நீயும் இந்த நோன்பில் ‘இது sஎம்பெருமானுக்காவே’ என்னும் எண்ணத்துடன் கலந்து கொண்டு இதை அனுஷ்டிக்கவேண்டுமல்லவா என்கிறாள்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


பாசுரம்-10 தொடர்ச்சி

யோகாப்யாஸத்தினால் புலன்களை அடக்கி வென்றவர்களைக்கூட மயக்க வல்லது மாயை (ப்ரமாதம் யமினாம் மதி:) என்று ஸ்ரீபாகவதம் கூறுகிறது. இம்மாயைக்கு வசப்பட்டவளான இப்பெண் உயர்ந்த பலனைத் தரவல்ல நாராயண பஜனத்தை விட்டு வேறு வழியில் முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். இதை மனதில் கொண்டதால் ஆண்டாள் இவள் செய்யும் முயற்சி கும்பகர்ணன் தூக்கம் போன்ற பெருந்தூக்கம் என்று அறிவுறுத்தி, அதை விட்டுவிட்டு, அந்த மயக்கத்தையும் ஒழித்துவிட்டு நாராயணனைப் பஜிப்பதற்கு வாவென் றழைக்கிறாள். இதுவரை நீ செய்துவந்த அனுஷ்டானங்களாலும் உனக்கு ஒன்றும் குறையில்லை. அவை உன்னை இந்த மார்கழி நோன்பிற்குத் தகுதியானவளாக்கி விட்டன என்றும் போற்றுகிறாள்.
      
நாராயணன் என்பதற்கு ’நாற்றத்துழாய்முடி’ என்னும் அடைமொழி தந்திருப்பதற்கு நோக்கம் திருத்துழாயால் அலங்கரிக்கப் பெற்றுள்ள திருவடி முதல் திருமுடி வரை நாராயணனுடைய ஒவ்வொரு அங்கமும் அடியார்களுக்கு ஸேவிக்க, அனுபவிக்கத் தகுந்தனவாய் உள்ளன’ என்பதைக் காட்டுவதற்காகவே. எம்பெருமானின் திருவடிகளின் பெருமைகளை த்ரிவிக்ரமாவதாரத்தில் காணலாம். இதுபோல் மற்ற 15 பெருமைகளையும் ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ தேசிக ப்ரபந்தம். அதிகார ஸங்க்ரஹத்தில்’ உறுசகடமுடைய எனத் தொடங்கும் 51 வது பாசுரத்திலும், நவமணி மாலையில் ‘ஒருமதியன்பர்’ எனத் தொடங்கும் முதல் பாசுரத்திலும் காணலாம். பாண் பெருமாள் [திருப்பாணாழ்வார்] அருளிச் செய்த அமலனாதிபிரானில் பெருமாளின் திருவடி முதல் திருமுடி வரை எல்லா அங்கங்களையும் அவர் வர்ணித்து அனுபவித்திருக்கும் திறன் காண்க.

மாற்றமும் தாராரோ என்று இவளைச் சொல்லிவிட்டு போற்றப்பறை தரும் புண்ணியன் என்று பெருமாளைச் சொல்லியிருப்பது மிகவும் அழகு. இவ்விரண்டையும் இணைத்துப் பொருள் கொள்ளவேண்டும். யோக சாஸ்திரம் யமம், ப்ரத்யாகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஞானேந்த்ரிய, கர்மேந்த்ரியங்களை அடக்குவதற்கு பல வழிகளையும் யோசனைகளையும் கூறுகின்றன. அவைகளை வைதீக மதத்தைப் பின்பற்றும் அனைத்து ஸாதுக்களும் உகந்ததென ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ‘மெளன விரதம் ‘ என்பதை அனுஷ்டிப்பவர்களுக்கும் கூட வாயைத் திறந்து நாராயண’ பஜனம் பண்ணுவது அவசியம் என்கிறார்.

மெளனமாயிராமல் வாயைத்திறந்து பெருமாளைப் போற்றுவதும் அவர் குணங்களைப் பாடுவதும் மிகவும் அவசியமானது என்று நம் ஸம்ப்ரதாயத்தில் பலவிடங்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது.

‘நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை’ என்று திருமாலை முதற்பாட்டிலும், ‘சொல்லினால் தொடர்ச்சி நீ’ என்று திருச்சந்த விருத்தம் 71வது பாட்டிலும், ‘துஞ்சும் போதழைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்’ என்று பெரிய திருமொழி [1-10] பாசுரத்திலும், ஸ்நானம், ஸந்த்யா, ஜபம், ஹோமம் என்று ஆஹ்னிகத்தில் [தினமும் காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கப்போகும் வரை சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி செய்ய வேண்டியவைகளைக் கூறும் நூல்.] ஜபம் என்பதை சேர்த்துக் கூறியதும், பாவின் இன்னிசை பாடித்திரிவனே என்ற மதுர கவிகளின் வாக்கிலும், மற்றும் இதுபோல் பல ப்ரமாணங்களாலும் வாயைத்திறந்து பகவத் குணங்களைப் பாடுவது எவ்வளவு அவசியமானது என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. 

எனவே மாற்றமும் தாராரோ என்று இதை வலியுறுத்தியவள் அங்ஙனம் தன்னைப் போற்றுபவர்களுக்கு போற்றப் பறை தரும் புண்ணியனான அவனும் வேண்டிய நல்லனவெல்லாம் தருவான் என்னும் அழகிய பொருள் விளங்குமாறு பாடியுள்ளாள். மெளனமாக, பேசாதிருத்தல் என்பது பகவானை விடுத்து மற்ற லெளகீக விஷயங்களில் புத்தி சென்று அதைப் பேசியும் கேட்டும் இந்திரிய சக்தியை வீணாக்காமல் இருப்பதற்காகவே ஆகும். அதே சமயம் வாயை மூடிக்கொண்டிருந்தால் நம்மை அறியாமல் நம் மனமும் அறிவும் லெளகீக விஷயங்களில் செல்லக்கூடும். அதை தடுப்பதற்கு வழியாக
சரண்யனுடைய குண சேஷ்டிதங்களை வாயைத் திறந்து பாடியும் சொல்லியும் அனுபவித்தால் மனம் உலக விஷயங்களில் செல்லாமல் சரண்யனிடமே ஈடுபடும். மேலும் மனதை அடக்குவதற்கு யோக சாஸ்திரம் கூறும் ’மெளனம்’ என்பதன் நோக்கமும் நிறைவேறும், பகவானைப் பாடுவதால் அவனும் மகிழ்வான். எனவே இங்ஙனம் அவன் புகழ் பாடுதல் என்பதை ’மஹா மெளனம்’ என்றே சொல்லத்தகும், சொல்லலாம். மேலும் சாஸ்திரங்கள் அறுதியிட்ட முடிந்த பொருளான எம்பெருமானைப் பாடும் செயலாகையால்  ’வாய் திறப்பது’ என்பது இன்னும் தூய்மை பெறுகிறது. நாற்றத் துழாய் முடி நாராயணன் உன்னால் பாடப் பெறும் போது உன்னுடைய மெளன விரதமும் கெடாமல் மஹா மெளனம் ஆகிவிடும்.

அதுபோல் அவன் புகழை நாங்கள் பாடி நீ கேட்கும் பொழுது காதுகளின் கேட்கும் சக்தியை அடக்கிக் கொண்டு காது கேளாதது போல் இருக்கிறாயே அந்த உன்னுடைய நிஷ்டையின் [திறமை] பெருமையும் பகவத் கீர்த்தனங்களைக் கேட்கும் போது அதிகரிக்கும்.

தேற்றமாய் வந்து என்றதனால் இந்த பஜனைக்கு நீ எங்களோடு வந்து சேர்ந்தால் அப்பொழுது உன் மனம் மயக்கமற்றுத் தெளிவடையும். நீ ஸமாதி நிலையில் இருந்து பகவானை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு இந்த பஜனத்தில் கலந்து கொள். அப்பொழுது நீயே அதைக்காட்டிலும் இது எவ்வளவு உயர்ந்தது என்பதை உணர்வாய். மேலும் தன் மந்திர சக்தியால் யாரேனும் உன்னை மயக்கியிருந்தாலும் அந்த க்ஷுத்ர [தாழ்ந்த] சக்திகளெல்லாம் எங்களுடன் வந்து கலந்து கொள்ளவேணுமென்று நீ நினைக்கும் பொழுதே உன்னை விட்டு விலகிவிடும். பெருமாளின் பெருமைகளைக் கேட்பதும் பாடுவதும், நாராயணனுடைய ஆராதனத்திற்கான ஒன்பது வழிகளில் முதலிரண்டு வழிகளாக ’ச்ரவணம், கீர்த்தனம் விஷ்ணோ:’ என்ற ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் கேட்பதையும் பாடுவதையும் நீ விலக்கக் கூடாது என்பதை வலியுறுத்த ஊமையோ, செவிடோ என்று கேட்கிறாள்.

ஆக இந்த நோன்பினால் உடலின் சக்தி அதிகரிக்குமென்றும், இதர தேவதைகளைக் கொண்டாடும் பழக்கமுடையோருக்கும் நாராயாண பஜனத்துக்குத் தேவையான நல்ல தகுதியும் அமையும் என்றும், ஏற்கனவே கொண்டிருக்கும் அந்தந்த அனுஷ்டானங்களுக்கும் [பழக்க வழக்கங்களையும்] எவ்விதத் தடையும் ஏற்படுத்தாமல்,மாறாக இது மேம்படுத்திச் சிறக்கச் செய்யும் என்றும், மேலும் இந்த நோன்பில் கலந்துகொண்டு பயன் கண்டவுடன் இதுவே மிக உயர்ந்ததான வழி என்பது வெளியாகும் என்றும், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக வேறு வழியில் நடப்பவர்களுக்கும் எடுத்துக் காட்டி வற்புறுத்துகிறாள்.

ஸ்வர்கத்தின் அனுபவங்களின் பெருமைகளை பெரிய திருமடல் 19 முதல் 37 கண்ணிகளில் கண்டுகொள்க. ஜீவர்கள் பலவகைப்பட்ட பெரியோர்களால் விதிக்கப் பட்ட மார்க்கங்களில் எது மிகச் சிறந்தது, எது நல்லோர்களால் கைக்கொள்ளத்தக்கது என்று தேர்ந்தெடுத்து அந்த மார்க்கத்தைக் கைக்கொள்ளவேண்டும். அதற்கு அவனுடைய அறிவு முதலில் உதவவேண்டும். தன்னுடைய அறிவு மாறன் சடகோபனுடைய திருவடிகளில் படிந்து அதனால் தான் உஜ்ஜீவித்ததாய் [உயர்வடைந்ததாய்] பாடியருளிய மதுரகவிகளின் ‘கண்ணிநுண்சிறுத்தாம்பும்’, சடகோபரந்தாதியில் ‘அறிவே உன்னைத் தொழுதேன்’ என்று கம்பன் பாடியுள்ள பாடலும் இங்கு கருதத்தக்கது.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


பாசுரம்-10
நோற்று சுவர்க்கம்----

இதுவரை நான்கு பாட்டுக்களாலும் தங்களைப் பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் பெண்களை நாராயணனைப் போற்றிப் பாடுவதாகிய இந்த நோன்பினைக் கைக் கொள்ள அழைத்தாள். இப்பாட்டில் எழுப்பப்படுபவள் தாந்த்ரீகமான சில முறைகளைக் கையாளுபவள்.

இவள்பிற தேவதைகளைப் பூஜிப்பவள். ஸ்வர்கம் முதலான சில இன்பங்களை உயர்வாக மதிப்பவள். அவைகளை அடைவதற்கு வேண்டிய வழிகளில் சென்று கொண்டிருப்பவள். இவள் தூங்குகிறாள் என்று சொல்வதற்குப் பொருள் வேறு விதமானது. அதாவது பெருமாளைப் பற்றி நினைக்காமல் அஷ்டாங்க யோகம், ஹடயோகம் முதலான யோகாப்யாஸங்களைச் செய்து தன் மனம், அறிவு, சக்தி ஆகியவைகளை வளர்த்துக் கொள்பவள். அதைக் கொண்டு நாராயணனை நினையாமல் பிற தெய்வங்களை த்யானிப்பதற்கு மிகவும் பாடுபடுபவள்.
இவ்விதம் சக்திகளை வளர்த்துக் கொண்டவளாதலால் இவளை ‘அம்மனாய்’ என்று மரியாதை தோற்ற அழைத்து ’இவ்விதம் சொர்காதி இன்பங்களை அடைவதற்கு நீங்கள் விரதம் பூண்டு நோற்கிறீர்கள் அல்லவா என்று பாட்டைத் தொடங்குகிறாள்.

‘மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்’ என்றது’ நீங்கள் வாயில் கதவுகளைத் திறக்காவிட்டாலும் வாய் திறந்தாவது பதில் சொல்லக்கூடாதா என்று கேட்கிறாள். அம்மனாய் என்று முதலில் அழைத்த அப்பெண்ணைப் பின்னர் ‘நன்கலனே’ என்று அழைக்கிறாள். நன்கலம் என்பதற்கு ‘ஸத்பாத்ரம்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம், அதாவது ‘தகுதியை உடையவள்’என்பது பொருளாகும். இதுவரை இவள் செய்துவந்த யோகங்கள், அனுஷ்டானங்கள் இவற்றால் நோன்புகள் நோற்கும் சக்தியைக் கைவரப் பெற்றுள்ளாள். எனவே அந்தத் திறனைக்கொண்டு நாராயணனைப் பாடி பஜனம் செய்து இந்த மார்கழிநோன்பினையும் நோற்க’நீ தகுந்த பாத்திரமாயிற்றே’ என்று கூறி அவளை அழைக்கிறாள்.

அடுத்து திருத்துழாய் மாலையைத் திருமுடியில் அணிந்தவராகிய  ஸ்ரீமந்நாராயணன் நாம் வாயைத் திறந்து அவனைத் துதித்தால் நம்மை நிச்சயமாக காப்பாற்றுவான் என்பதை அவளுக்கு வற்புறுத்துகிறாள். பகவான் உலகத்துக்கு எல்லாவிதமான புண்ணியத்தையும் கொடுப்பவன்,மேலும் நம்மையெல்லாம் காப்பாற்றி அதனால் தானும் புண்ணியத்தை அடைபவன் என்று இரண்டுவிதமாகவும் பொருள் கொள்ளும்வண்ணம் ‘புண்ணியனால்’ என்று கூறியுள்ளாள்.

தொடரும்          

வியாழன், 31 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 9
தூமணி மாடம்---

இப்பாட்டின் தலைவி ஒரு பெரும் செல்வந்தருடைய பெண் என்பதை அவள் உறங்கும் அறையின் வருணனை காட்டுகிறது. இவள் முன்பே கண்ணனின் ஆசை விளையாட்டுகளில் ஈடுபட்டவள். அதனால் உற்சாகத்துடன் இந்த மார்கழி நீராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடியவள். பொழுது புலர்ந்தும் கூட இவள் இன்னும் உறங்குகிறாள்.

இங்கே ஊமையோ என்பதற்கு மெளன விரதம் இருக்கின்றாளோ என்றும் பொருள் கூறலாம். செவிடோ என்பது கேட்கும் சக்தியை உள்ளடக்கி இருக்கிறாளோ என்றும் கூறலாம். [யோக சாஸ்திரத்தில் ப்ரத்யாகாரம் என்னும் ஒரு நிலையுண்டு. அவ்வமயம் காதுகளின் கேட்கும் சக்தியைக் கூட அடக்கிக் கொண்டு வெளியில் ஒலிக்கும் ஒலிகள் எதுவும் காதில் புகாதபடி செய்யவியலும் நிலையாகும். ]

அடுத்து அனந்தல் என்பது ஒருவித மயக்க நிலையைக் கூறும் சொல். ஒருவர் தன் ஆத்மாவை மட்டுமே மனதில் நிறுத்தி அந்த தியானத்தில் உலகையே மறந்திருக்கும் ஒரு நிலையாகும். இதை நம்மாழ்வாரும், கீதையில் கண்ணனும் [3-17] கூறியுள்ளனர். மந்திரப்பட்டாளோ என்றது தன் வசம் இழந்து பிறர் வசப்பட்டிருத்தலாகும். ஒருவன் தன்னுடைய வலிமையான ஆத்ம சக்தியைக் கொண்டு வலிமையற்ற ஆத்ம சக்தியுடைய ஒருவரைத் தன் வசப் படுத்திக்கொள்வான். அப்போழுது வசப்பட்டவர் தமக்கென்று ஒரு நினைவும், செயலும் இன்றி அவன் சொன்னபடி ஆடுவான். [இதைப் பிறரை வசப்படுத்துதல் என்பர்]

மாமாயன் என்றது பகவானை. அவன் மாயையால் மயங்கியவள் இவள் என்பதால் அங்ஙனம் கூறுகிறாள். மேலும் மாதவன் [திருமகள் கேள்வன்] வைகுந்தன் [வைகுண்டத்திலிருக்கும் நாராயணன்] என்று அவனுடைய பல்வேறு நாமங்களையும் சொல்லியாவது அவளை எழுப்புங்கள் என்கிறாள் ஆண்டாள்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 9  'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

வியாழன், 24 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 8 கீழ்வானம்----
தொடர்ச்சி

ஆண்டாள் கண்ணனிடம் நிலையான பக்தி கொண்டவள். எனவே திருப்பாவை முழுவதிலும் கண்ணனுடைய பல லீலைகளையும் அவள் பாடியுள்ளதைக் காணலாம். பெரியாழ்வாரும் தம் திருமொழியில் கண்ணனுக்கே பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். எனவே கண்ணன் இவளுக்குத் தந்தைவழி சொத்துமாவான்.கீதையில் தன்னை ‘தேவாதிதேவன்’ என்று கண்ணன்  பலவிடங்களில் கூறியிருப்பதைக் கொண்டு இவளும் அவனைத் தேவாதிதேவன் என்கிறாள். அவனை ஸேவிக்கச் செல்லும் நாம் அவன் குண, ரூப, லீலைகளைப் பாடி அவனுடைய பெருமைகளை அறிந்துகொண்டபிறகு அவனை ஸேவிப்போம் என்கிறாள்.

இங்கு நிறைந்த பக்தியும், மனப்பக்குவமும் பெறுவதற்குண்டான செயல்களை முதலில் செய்துவிட்டுப் பின்னர் அவனை நாம் சென்று வணங்கலாம் என்கிறாள். இப்படி தூய பக்தியும்,தேவையான மனப்பக்குவமும் பெறுவதற்கு முதலில் நமக்கு அனுஷ்டானம் தேவை என்றுகூறி, மனம், செயல் இரண்டாலும் நம்மைத் தகுந்தவர்களாக்கிக் கொண்ட பின்னரே பகவானை வழிபடுதல் தகுந்த முறை என்பதை வரிசைப்படுத்திக் காட்டுகிறாள்.
ஆ! ஆ!  என்பது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தும் சொல். இவ்வாறு தம்மைப் பற்றிப் பாடியும் ‘அடைந்தவரைக் காப்பேன்’ என்னும் தம் உறுதிப்பாட்டை மனதில் கொண்டும் வரும் இவர்களைச் சரண்யனான பகவான் எதிர்பார்த்துக் காத்திருப்பான். இவர்கள் சென்று ஸேவித்ததும் அவனும் ஆச்சர்யமடைந்து அருள் புரிவான் என்பது பொருள்.

ஆராய்ந்து அருள் புரிவது என்பது நாம் மனம், மொழி, செயல்களால் தூய பக்தர்களாக, அவனையன்றி நமக்கு வேறு தெய்வமில்லை என்னும் திடமான நம்பிக்கையுடன் இருக்கும் நம்முடைய நிலையைச் சரண்யன் உணர்ந்து கொள்ளுதலாகும்.       

புதன், 23 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 8
கீழ்வானம்----

இப்பாட்டில் இன்னும் கொஞ்சம் பொழுது விடிந்து கிழக்கு வெளுத்து விட்டதைச் சொல்கிறாள். எருமைகளெல்லாம் அவிழ்த்துவிடப்பட்டு புல் தரையில் மேய்கின்றன. சிறுமிகள் பலர் நீராட்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர். நாங்களும் போகாமல், அவர்களையும் நிறுத்திவைத்துவிட்டு, உன்னை அழைத்துப் போவதற்காக வந்து கூப்பிடுகிறோம். ஏனெனில் நீ உற்சாகம் உள்ளவள். இதில் கலந்து கொள்வாய் என்பதால் உன்னை அழைக்கிறோம் என்கிறாள்.

முதல் நாள் மாடுகள் மேய்ந்த புல் தரையில் இரவில் புதிய தளிர் உண்டாகி விடியற்காலையில் அதை மீண்டும் மாடுகள் மேயும். அங்ஙனம் புதிதாய் தோன்றிய தளிர் ‘விட்ட தளிர்’ எனப்படும். அதைச் சுருக்கி ’வீடு’ என்கிறாள். பெரியாழ்வார் ’ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்’ என்று பாடினார். ஆத்மா தனக்கு ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு பூமியில் பிறக்கின்றது. இதை எடுத்த சரீரமென்று சொல்லவந்தவர் சுருக்கி ’ஏடு’ என்கிறார். ’எடு’ என்னும் பகுதியடியாக ’ஏடு’ என்றது போல் இவளும் இங்கு விட்ட தளிரை ’விடு’ என்னும் பகுதியடியாக ’வீடு ’என்று பாடுகிறாள்.

[பூர்வாசார்யார்களின் விளக்கம் சிறுவீடு என்பதற்கு விடியற்காலையில் சிறிது நேரம் என்று உள்ளது. பனிப்புல் மேய்வதற்காக விடியற்காலையில் சிறிது நேரம் வீட்டின் அருகிலே மேய விட்டு பின்னர் மேய்ச்சலுக்குத் தொலைதூரம் இட்டுச் செல்வதை குறிப்பதாகக் காட்டுகின்றனர். ஸ்ரீ என் ஆர் கே ஸ்வாமி வீடு என்பதற்கு விட்ட தளிர் என்று பொருள் கூறியதுடன் அதற்கு இலக்கணப்படியான விளக்கமும் , பெரியாழ்வாரின் பாடலை உதாரணமாகவும் காட்டி விளக்கியுள்ளதை உணர்ந்து இன்புறலாம்]

குதூகலம் என்னும் வடமொழிச் சொல் சிதைந்து கோதுகலம் எனப்பட்டது. பதுமைகளுக்குப் பாவைகள் என்று பெயர்.  [பதுமைஎன்பது சிலை, பொம்மை ஆகியவற்றைக் கூறும் சொல். பாவை என்பது பெண்சிலை, பெண் பொம்மை . ’பாவை விளக்கு’ என்பதை நாம் அறிவோம். ] இப்பதுமை செய்பவர்கள் அவைகளை மிகுந்த அழகுடையவைகளாகச் செய்வர். எனவே அழகுடைய பெண்களை பதுமை போல் இருப்பதாகச் சொல்வது தமிழ் மரபு. அதையொட்டி குதூகலமும் அழகும் நிறைந்த இப்பெண்ணை கோதுகலமுடைய பாவாய் என்றழைக்கிறாள் ஆண்டாள்.

தொடரும்---


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 8 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

திங்கள், 14 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

கீசு கீசு----
பாசுரம் 7 தொடர்ச்சி

காசும் பிறப்பும்-காசு என்றது பொன்னாலான அணிகளை. பிறப்பு என்றது சிப்பிகளில் தானாக விளையும் முத்துக்களையும்,கடலில் செடிபோல் உண்டாகும் பவளங்களையும், மலைகளிலும் சுரங்கங்களிலும் தானாக விளையும் ரத்தினங்கள், வைரம் , வைடூர்யம், கோமேதகம், பச்சை முதலான இயற்கைப் பொருள்களைக் கொண்டு செய்த ஆபரணங்கள். அவை இன்றும் தமிழகத்தில் வழக்கத்திலுள்ளன.

[காசு பிறப்பு என்பதற்கு ஸ்வாமி இங்கு அளிக்கும் விளக்கம் புதுமையானது. பூர்வாசார்யர்கள் கூறாதது. மிகவும் அருமையான விளக்கமுமாகும். பிறப்பு என்பது இயற்கையிலேயே பிறந்தவை அல்லது விளைந்தவையான. முத்து பவளம் மற்றும் ரத்தினக்கற்கள் வைரம் முதலான கற்களும் ஆகும் இவைகொண்டு செய்யப்பட்ட அணிகலங்களைப் பிறப்பு என்று கூறுகிறார். காசு என்பது மனிதனால் செய்யப்பட்டது. தங்கம் வெள்ளி முதலிய உலோகங்களை கழுத்தில் அணியத்தக்கவாறு அச்சில் வார்த்து செய்யப்பட்ட தங்கக் காசு போன்றவற்றைக்குறிக்கும். இந்த வழக்கம் தமிழ்நாட்டில் பழங்காலத்திலும் சங்க காலத்திலும் பெண்டிர் இவ்விருவிதமான நகைகளையும் அணிந்திருந்தனர் என்பதைக் கொண்டு ‘சங்கத் தமிழில்’ இவ்விளக்கத்தை ஸ்வாமி காட்டியுள்ளார் என்பதை உணரலாம்]
ஆய்ச்சியர் கூந்தலின் நறுமணமானது அவர்களது செல்வச் செழிப்பையும் நல்லொழுக்கத்தையும் குறிக்கும்.

[செல்வமும் ஒழுக்கமும் உடையவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் முறை தவறாமல் குளித்தல் பூச்சூடல் போன்ற செயல்களால் தங்கள் கூந்தல் உட்பட உடலை நன்கு பேணி வளர்க்கவியலும். மாறாக இவ்விரண்டும் இல்லாதவர்களுக்கு இது இயலாததாகும் எனவே ஆய்ச்சியர் கூந்தலின் நறுமணம் அவர்களது செல்வச் செழிப்பையும் நல்லொழுக்கத்தையும் காட்டுவதாகக் கூறுகிறார்]

தயிர் கடையும் பொழுது எழும் ஓசையும் ‘கீசு,கீசு’ என்பது போலவே இருக்கும் எனவே முதலில் சொன்ன கீசு என்றதின் விளக்கத்தை இதற்கும் கொள்ளலாம்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம்7 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.