புதன், 20 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 11
கற்றுக் கறவை---

கன்று, கறவை என்னும் இரு சொற்களும் சேரும்போது இலக்கணப்படி மென் தொடர் [கன்று] வன் தொடராக [கற்று] மாறி கற்றுக்கறவை என்று ஆயிற்று.

கன்றுகளுடன் கூடின கறவை மாடுகளின் கூட்டங்கள் நிறைந்தது ஆய்ப்பாடி. அங்கே இடையர்கள் பசுக்களையும் எருமைகளையும் தினம் இரண்டு வேளை கறக்கும் தொழிலுடையவர்கள். அவைகளைக் கறக்கும்போது கன்றுகளை மனதிற்கொண்டு இரக்கம் மிகுந்தவர்களாகி அவைகளுக்குப் போதுமான பாலை விட்டுக் கொஞ்சம் கறந்ததும் நிறுத்திவிடுவார்கள். அவர்கள் இவைகளைக் கூட்டம் கூட்டமாகக் கறப்பதால் அவர்களுக்கு ஏராளமான பால் கிடைக்கிறது. கன்றுகளுக்கும் நிறைய பால் கிடைக்கிறது. [இங்கு கறவை என்றது பசு, எருமை இரண்டுக்கும் பொதுவான சொல்லாகும்] இவ்வாறு கோவலர் மனத்திலுள்ள இரக்கம், தயை, பண்பாடு ஆகியவை பற்றி இங்கு கூறலாயிற்று.

அடுத்து இவர்கள் வீரத்தைப் பற்றிப் பேசுகிறாள். இவர்களுடைய செல்வத்தில் பொறாமைப்பட்டு அவைகளைக் கவர்ந்து கொள்வதற்காக இவர்கள் மேல் படையெடுத்து வருபவர்களை இவர்கள் எதிர்த்துப் போர் செய்யும் திறமையைச் சொல்கிறாள். அப்படி படையெடுத்து வந்தவர்களை அவர்களுடைய வல்லமையெல்லாம் முற்றிலும் அழிந்து போய்விடும்படி இக்கோவலர்கள் வீரத்துடன் போரிட்டு வென்றுவிடுகிறார்கள். இனி இவர்கள் இருக்கும் திசையைக் கூட நினைக்கவும் பார்க்கவும் இயலாதபடி அவர்களை விரட்டிவிடுகிறார்கள் என்பதாக இவர்கள் வீரத்தின் பெருமைகளை ‘செற்றார் திறலழியச் சென்று செறுச் செய்யும்’ என்று கூறுகிறாள்.

பிறர் பொருளைக் கவர அவர் மேல் படையெடுத்துச் செல்வதை ’வெட்சித்திணை’ என்றும் எதிர்த்துப் போர் செய்தலை ’வஞ்சித்திணை’ என்றும் வென்றவர் வாகை மாலையை வெற்றிமாலையாக அணிவதை ’வாகைத் திணை’யென்றும் ஐயன் ஆரிதனார் இயற்றிய ’புறப் பொருள் வெண்பா மாலை’ கூறும்.

’எற்றுக்குறங்கும் பொருள்’ என்பது இத்தகைய கருணையும் வீரமும் உள்ள குலத்தில் பிறந்த உனக்கு உன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுமென வந்திருக்கும் எங்களிடம் கருணை உண்டாகவில்லையா? நோன்பை நோற்க வேண்டுமென்கிற வீரம் இல்லையா? குலத்தின் பெருமையுடன் அழகிய இடையும் மயில் போன்ற சாயலையும் பெற்று அழகியவளாகவும் இருக்கிறாய். நீ எங்களுக்கு ஒரு சிறந்த தோழியல்லவா? உன் உறக்கமென்பது கருணையினாலா, வீரத்தினாலா என்னும் பொருள்பட எற்றுக்குறங்கும் பொருள் என வினவுகிறாள்.

பொருள் என்ற சொல்லுக்கு ப்ரயோஜனம் என்பது அர்த்தமாகும். உனக்குக் கருணையும் வீரமும் இல்லையேல் உன் தூக்கத்துக்கு என்ன பயன்? நாங்கள் அழைப்பதால் உனக்கு ஏதாவது பலன் உண்டு என்றால் அதற்கு அடையாளமாக உன் உடலையாவது கொஞ்சம் புரட்டிக் காட்டலாகாதா? என்று ஆண்டாள் சொல்வது மிக முக்கியமாக கவனிக்கவேண்டியதாகும். சோம்பலை ஒழித்து பகவானின் ஆராதனத்தில் ஈடுபடுவதற்கு ஆர்த்தியும், ப்ரதிபத்தியும் [நல்லபடியாகச் செய்யவேண்டுமே என்னும் கவலையும்,ஈடுபாடும்]வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறும் இந்த அடையாளங்களை உறுதிப் படுத்துவதற்காக நீ உன் உடம்பைக்கூட சிறிதும் அசைத்துக் கொடுக்கமாட்டேன் என்கிறாயே? எங்கள் காரியத்திற்காக உன்னை ஒன்றும் செய்யச் சொல்லவில்லை. முகில் வண்ணன் பேர்படுவது உன் ஆத்மாவுக்கும் உன் வாழ்க்கைகும் உயர்வையே தரும் என்று கூறி இந்தத் தூக்கமும் சோம்பேறித்தனமும் அவ்வுயர்வினைத் தருமா? என்று இடித்துக் கூறுகிறாள். எற்றுக்குறங்கும் பொருள் என்பதைத் தனித்துப்பொருள் கொண்டு ’நமக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்யாமல் தூங்குவது அனைத்து நற்பயன்களையும் அழித்துவிடுமல்லவா? நாங்களெல்லோரும் வந்து அழைக்கும்போது கூட நீ இன்னும் அதிலிருந்து விடுபடாமல் இருக்கிறாயே என்று வற்புறுத்துவதாகவும் பொருள் கொள்ளலாம்.

கன்றுக்குத் தேவையான பாலை விட்டுவிட்டு மீதமுள்ள பாலைக் கறப்பது குற்றமாகாது. தங்களைக் கொன்றோ அல்லது சிறைபிடித்தோ தங்கள் செல்வத்தைக் கவர வரும் எதிரிகளின் பலத்தை அழித்து அவர்களைக் கொல்வதும் தற்காப்பிற்காகவே செய்வதால் அதுவும் குற்றமாகாது. எனவே இச்செயல்களைச் செய்யும் அவர்களை சிறிதும் குற்றமற்றவர்கள் என்று பொருள்பட குற்றமொன்றில்லாத என்று கூறுகிறாள்.

இங்கே பொற்கொடியென்றது பொன்போல் இருப்பவளே, பணிப்பொன்னாக, அதாவது ஆபரணமாக மாறி உயர்ந்த மக்களுக்கு அழகைக் கொடுக்கக் கூடியதான பணிப்பொன் போன்றவளே என்று கூறுகிறாள்.

பெரியோர் ‘சேஷத்வம் என்பது கட்டிப் பொன் போல், பாரதந்த்ரியம் என்பது, பணிப் பொன் போல் இருக்கும்’ என்று கூறுவர். அக்காலத்தில் மக்களுக்குத் தெரிந்த உலோகங்களில் எல்லாவற்றையும் விட உயர்ந்தது தங்கம். அதுபோல் பகவானுக்குத் ’தான் தாஸ பூதன், சேஷன்’ என்னும் உணர்ச்சியானது ஆத்மாவின் மற்ற உணர்ச்சிகளைக் காட்டிலும் மிக உயர்ந்தது. இந்த உணர்ச்சி ஏற்பட்டவர்கள் உயர்ந்ததான கட்டித் தங்கத்திற்கு ஒப்பாவார்கள்.  அதுவே பிறர்க்குப் பயன்படும் பொழுது பணிப் பொன்னாக [ஆபரணத் தங்கமாக] மாறுகிறது. இந்த ஆத்மா பகவத், பாகவத கைங்கர்யங்களில் ஈடுபடும் பொழுது ‘இவை அவன் இட்டக் கட்டளை’ என்று பாரதந்த்ரிய [பிறர்க்கு அடிமைப்பட்ட] உணர்ச்சியோடு செயல்படுகிறது. அப்படிப்பட்ட புண்ணியமான ஆத்மாவை உடையவளேஎன்னும் பொருளில் பொற்கொடியே என்று அழைக்கிறாள். உயர்ந்த பொருட்களெல்லாம் பகவானுக்கே அர்ப்பணமாக வேண்டும் . அதுபோல் பொற்கொடியான, உயர்ந்தவளான நீயும் இந்த நோன்பில் ‘இது sஎம்பெருமானுக்காவே’ என்னும் எண்ணத்துடன் கலந்து கொண்டு இதை அனுஷ்டிக்கவேண்டுமல்லவா என்கிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக