வெள்ளி, 29 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

12ம் பாசுரம் தொடர்ச்சி

கனைத்திளம் கற்றெருமை----


மனதால் செய்யக்கூடிய த்யானம், உபாஸனம் [பூஜித்தல்] ஆகியவறிற்கு உகந்ததான மூர்த்தியை[ திருவுருவம்] உடையவன் ராமன் என்பதால் அவனை மனத்துக்கினியான் என்கிறாள். இத்துடன் கண்ணனின் புகழ் நாவுக்கும், அவனுடைய திருமேனி இவள் திருமேனிக்கும் இனியது என்று கூறுவதாகவும் இங்கு பொருள் கொள்ளலாம். கண்ணனையே பாடினால் மட்டும் போதாது, ராமனையும் பாடவேண்டும் என்று கருதுகிறாள். இவள் தந்தை பெரியாழ்வாரும் இப்படிப் பாடியுள்ளதை இவளும் பின்பற்றுகிறாள்.
உயிர்களிடம் எல்லையற்ற கருணையுடையவன் பகவான். ‘ஸ்ரீபாகவதத்தில் ‘வ்யாமோஹயந் லீலயா’ என்று கண்ணனின் லீலைகளெல்லாம் அவன் நம் மேல் கொண்டுள்ள அன்பினாலும் கருணையாலும் செய்தவையே என்கிறது. ராமாவதாரத்திலும் காணப்படும் சோகம் வீரம் முதலியவைகளெல்லாம் அவனுக்கு லீலைகள்[விளையாட்டுகளே] கருணைதான் பகவானின் உண்மையான குணம் என்பதை விளக்கி ஸ்வாமி தேசிகன் தம் தசாவதார ஸ்தோத்திரத்தின் இறுதியில் ராமனை கருணா காகுஸ்தன் என்று கூறுகிறார். ஜீவன்களிடத்தில் பகவானுக்குள்ள இந்தக் கருணைதான் இப்பாட்டில் எருமைகள் பொழியும் பாலாகவும் ஆண்டாள் அதற்கு மேற்கோள்காட்டும் மேகம் பொழியும் மழையாகவும் காட்டப்படுகிறது. சினத்தினால் மாண்ட ராவணனையும் கருணையே வடிவான ராமனையும் அடியார்கள் பிரித்து அறியும் பொருட்டு கோபத்தையும் கருணையையையும் இரண்டு எதிரெதிர் தட்டுக்களில் வைத்துப் பாடிக்காட்டுகிறாள். அந்தச் சினம் ராமனிடம் இருந்தால் அவன் மனத்துக்கினியனாக மாட்டான். மேலும் முதல் பாட்டில் சொன்னபடி இதுவும் ஒரு காக்கும் செயலேயாகும். அதாவது சினம் மிகுதியால் மென்மேலும் பாபங்களைச் சேர்த்துக் கொள்ளும் ராவணனின் ஆத்மாவைக் காப்பாற்றுவதற்காகவே அவனை முடிந்து போகும் படி செய்தது எம்பெருமானின் கருணையின் காரணமேயாகும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

வழக்கத்திலுள்ள கடைவாசல் என்னும் சொல் வாசற்கடை என்றாயிற்று. வாசற்கடை என்னும் சொல்லில் உள்ள கடை என்பதற்கு ஏழாம் வேற்றுமை உருபாகிய ’இல்’ என்று பொருள் கொண்டு வாசலில் என்றும் இடப் பொருளாகக் பொருள் கொள்ளலாம்.

முன்பாட்டிலே கற்றுக் கறவை கணங்கள் என்று பாடும் பொழுதே எருமைக் கூட்டங்களை மழை பொழியும் கருத்த மேகங்களுக்கு ஒப்பிட்டுப் பாடினாள். மழை பெய்யப் போவதை எச்சரித்து இடி இடிக்கும். அதைக்கேட்டு பாம்புகளெல்லாம் பயந்து புற்றுக்குள் சென்று ஒடுங்கிவிடும். மாறாக மயில்கள் மகிழ்வுடன் தோகை விரித்து ஆடும். இதையே சென்ற பாட்டில் புற்றவல்குல் புனமயிலே என்று குறிப்பால் உணர்த்தினாள். இதை இவ்விரண்டு பாட்டுக்களுக்கும் பொதுப் பொருளாகக் கொள்ளவேண்டும். மேகம் மழை பொழிவது போல் எருமைகள் பாலைப் பொழிகின்றன. இச்சமயத்தில் பாம்பு போன்ற சோம்பல் முதலிய தீய குணங்களெல்லாம் ஒழிந்துபோய் மயில் போல் ஆட வேண்டிய உயர்ந்த தலைவிகளான நீங்கள் தூங்குகின்றீர்களே என்ற கருத்தை இங்கு கொள்ளவேண்டும். மயில் பாம்பைக் கண்டால் உடனே அதைக் கொத்திக் கிழித்துக் கொன்றுவிடும் அதுபோல் நீங்கள் எங்களோடு நீராட வந்தால் உங்களுடைய சோம்பலும், கெடுதல் உண்டாகக் காரணமான பிற குணங்களும் [போய பிழையும் புகுதருவான் நின்றனவும்] எல்லாம் ஒழிந்துவிடும் என்னும் பொருளும் இங்கே அமைந்துள்ளது.

    

வியாழன், 28 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

12ம் பாசுரம் தொடர்ச்சி

கனைத்திளம் கற்றெருமை----

’சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான்’ என்னும் தொடருக்கு அடுத்து நாம் விளக்கம் காணவேண்டும். இவ்விடத்தில் ஸ்ரீ என் ஆர் கே ஸ்வாமியின் விரிவுரையைப் பற்றிக் கூறுவது அவசியமாகும். மிகவும் அற்புதமாக விவரித்துள்ளார்.அதைச் சற்றே விரிவாகக் காண்போம்.                                                        ‘சீதையைக் கவர்ந்து சென்றதால் ராமனுக்கு ராவணன் மேல் கோபம் உண்டாகி , அதனால் இலங்கை சென்று போர் புரிந்து அவனைக் கொன்றவன் மனத்துக்கினியனாகிய ராமன்’ என்றுதான் நாம் பொருள் கொள்வோம். இங்கு நம் உரையாசிரியர்கள் ”சக்ரவர்த்தித் திருமகனுக்கும் சினமுண்டோ” என்று கேட்டு அதற்கு பதிலாக “அடியார்களின் எதிரிகள் இவர்க்கும் எதிரிகள்’ அவர்களைத் துன்புறுத்தினால் இவர்க்குச் சீற்றம் உண்டாகும்” என்றும் அருளிச் செய்துள்ளனர். ஆனால் ஸ்வாமியின் விரிவுரை வேறுவிதமாக மிகவும் புதிய கோணத்தில், அதே சமயத்தில் மிகப் பொருத்தமாகவும் அமைந்துள்ளது அறிந்து இன்புறவேண்டிய ஒன்றாகும்.

சினத்தினால் என்ற சொல்லை ராமனுக்குச் சேர்க்காமல் ராவணனுக்கு இணைத்துப் பொருள் கூறுகிறார். தான் வஞ்சகத்தால் கவர்ந்து வந்த சீதையை ராமன் அழைத்துச் சென்று விடுவானோ என்று நினைத்து அவன் மேல் சினம் கொள்கிறான் ராவணன். இவ்விதம் அவனுக்குண்டான சினமே தன் வினைத் தன்னைச் சுடும் என்ற முதுமொழிக்கிணங்க அவனைக் கொன்றதென்கிறார்.

 ‘மிகை செய்வார் வினைகட்கெல்லாம் மேற்செய்யும் வினையம் வல்லான்’ என்று ராமனைப் பற்றி கம்பன் இரணியவதைப் படலம் 147ம் பாட்டில் சொல்கிறார். இதன் பொருளாவது- சாஸ்திரங்களில் கூறிய நல்வழிகளில் நடப்பதற்கு மாறாக கெட்ட வழிகளில் நடப்பவர்களை அவர்கள் நடக்கும் அக்கெட்டவழிகளே அவர்களைக் கொல்லும் படி செய்யவல்லவன் ராமன் என்கிறார். கம்பனின் இக்கருத்தை ஆதாரமாகக் கொண்டே, தான் சென்ற கெட்டவழி, தான் கொண்ட சினம் இவை காரணமாகவே ராவணன் முடிந்தானென்று விளக்கமளித்துள்ளார் . திருவள்ளுவரும்”தன்னைத் தான் காக்கின் சினம் காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்’ என்று கூறியுள்ளார். ஒருவர் கெட்டவழியில் சென்றால் அக்கெட்டவழிகளே அவர்களது அழிவுக்குக் காரணமாகும் என்பது கம்பனின் கருத்து. சினத்தை அடக்காதவனுடைய சினமே அவனை அழித்துவிடும் என்பது வள்ளுவரின் கருத்து. இவ்விரண்டுமே ராவணனுக்குப் பொருந்தும். எனவே சினத்தினால்------என்னும் பாடற் பகுதிக்கு மேற்கண்ட விளக்கத்தை ஸ்வாமி கொடுத்திருப்பது மிகவும் நயமானதாகும். இங்ஙனம் தான் கூறுவதற்கு மேலும் சில மேற்கோள்களையும் எடுத்துக் காட்டுகிறார். கும்பகரணன் வதைப் படலம் 17வது பாட்டில் முதல் நாள் போரில் ராமன் தன்னை எப்படி வென்றான் என்பதை ராவணன் மாலியவானிடம் [17 முதல் 25வது பாடல் வரை] கூறுகையில் ராமன் பெரும் போர் புரிந்த போது கூட அவனுடைய முகத்திலோ மற்ற அவயவங்களிலோ கோபம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவனுக்கு என்னிடத்தில் ஒரு சிறிது கோபம் கூட இருப்பதாக ‘சினம் உண்மை தெரிந்ததில்லை’ என்று கூறுகிறான். ராமனுக்குத் தன்னிடம் சினம் ஏற்படவில்லை என்று ராவணனே கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருவர் நம்மைக் கோபிக்கும் போது நாம் அமைதியாக இருந்தால் அவர்கள் கோபம் மேலும் அதிகரிக்கும். ராமன் தன் மீது கோபப்படாததால் ராவணன் மேலும் மேலும் சினத்தை அதிகரித்துக் கொண்டு அதன் காரணமாகவே இறந்தான். எனவே சினத்தினால் என்ற சொல்லை ராமனுக்குச் சேர்க்காமல் ராவணனுக்குச் சேர்த்து பொருள் கொள்வதே நன்கு பொருந்தும் என்று ஸ்வாமி விவரிப்பதை நாம் அறியலாம். மேலும் ’செற்ற’ என்ற சொல்லுக்கு ’கொன்ற’ என்று பொருள் கூறி ராவணன் இவ்வாறு தம் நடத்தையாலும் , சினத்தினாலும் தானே அழிந்துபோக ராமனுடைய அம்பு சிறிது உதவிற்று என்றும் முடிந்த பொருளாகக் கூறியுள்ளார். உலகில் பொதுவாக கோபமே இல்லாமல் எப்பொழுதும் சாந்தமாக இருப்பவர்களையே அனைவரும் விரும்புவர். சாந்த மூர்த்தியான ராமனுக்குச் சினம் என்பது உண்டு என்று கொண்டால் அவன் எப்படி அனைவருக்கும் ‘மனத்துக்கினியான்’ ஆக முடியும்?

தொடரும்

வியாழன், 21 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி---

ஆழிமழைக் கண்ணா எனத் தொடங்கும் நான்காம் பாசுரத்தில் ‘ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து ‘ என்று கறுத்த மேகத்துக்கு பகவானை மேற்கோளாகக் காட்டியவள் இப்பாட்டில் கறுத்த எருமைக் கூட்டத்திற்கு மேகத்தை மேற்கோளாகக் காட்டுகிறாள்.

பசுக்களும் எருமைகளும் ஒருங்கே நிறைந்து விளங்கும் இடைச்சேரி ஆய்ப்பாடி. பசுக்களின் பால், தயிர், வெண்ணை, நெய் முதலியவை அக்னி ஹோத்ரம், யாகம், யக்ஞம் இவற்றில் ஆஹூதிகளாகக் கொடுக்கப் பயன்படுகின்றன. இவை தேவதைகளுக்கு [தெய்வங்களுக்கு] மனிதர்கள் செய்யும் ஆராதனங்கள். இவற்றைப் பெற்றுக்கொள்ளும் அத்தேவதைகள் இதற்குப் பதிலாக மனிதர்கள் நன்கு ஆரோக்யத்துடனும், வலிமையுடனும் வாழ பால், தயிர், வெண்ணை, நெய் ஆகியவைகளை எருமைகள் மூலமாகக் கொடுக்கிறார்கள்.  இந்த வைதிகமான பண்ட மாற்று ஸ்ரீமத் பகவத் கீதையில் 3ம் அத்யாயம் 10 முதல் 16 வரையிலான ச்லோகங்களில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது.
இளங்கற்றெருமை, கன்றுக்கிரங்கி, கனைத்து, நின்று பால் சோர்ந்து, இல்லம் சேறாக்கும் என்னும் இச்சொற்கள் உள்ள இடங்களில் ’தாம் வாழ தேவதைகளின் தயவை நாடியிருக்கும் மனிதர்களைக் கன்றுகள்’ என்று குறிப்பிடுவதாகப் பொருள் கொள்வது பொருந்தும். உலகிலுள்ள மக்களுக்கு தேவதைகளானவர்கள் நன்மை செய்யக் கருதி இடி இடித்து மழை பெய்து பூமியைச் சேறாக்கி அதனால் சகல தானியங்களும் விளையும்படி செய்து ப்ரதியுபகாரம் செய்ததற்கு அடையாளமாகக் கொள்ளலாம். இந்த மழை நீரைப் பற்றி வள்ளுவரும் ‘வான் நின்று உலகம்----’ எனத் தொடங்கும் குறளில் [ 2-1] கூறியுள்ளதற்கு பரிமேலழகரும் “மனிதர்கள் ஒவ்வொருவரும் பிறந்து பிறந்து இறந்தாலும் மேகம் மழை பொழியும் சிறப்பினால் விளையும் அன்னங்களை உண்டு மனித வர்கம் சாகாமல் என்றும் நின்று நிலவுவதால் இந்த மழையும் அதன் நீரும் அமிர்தம் என்று சொல்லத் தகுந்தனவாகும்” என்று பொருள் உரைக்கிறார். தனி மனிதன் தன் ஆயுட்காலம் முடிந்த பின் இறக்கிறான். ஆனால் மனித இனம் என்பது இறப்பதில்லை. இம்மனித இனம் வாழ்வதற்கு மழையே முக்கிய காரணமானதால் அதை மனித இனத்தைச் சாகாமல் காக்கும் அமிர்தம் என்கிறார்.

அடுத்து ’துப்பார்க்குத் துப்பாய---- [2-2] எனத் தொடங்கும் குறளில் “மழையானது மனிதர்களுக்குத் தானே உணவாகிறது, மேலும் தன்னால் விளையும் உணவுப் பொருள்களையும் உணவாக்கி மனிதர்களுக்கு உதவி செய்கிறது” என்கிறார்.”

முன் எட்டாம் பாட்டில் ’எருமைச் சிறுவீடு மேய்வான்’ என்று எருமை புல் மேய்வதைச் சொன்னாள். இங்கு அவை பால் சொரிவதைச் சொல்வதால் புல்லையும், அதைத் தின்று எருமைச் சொரியும் பாலையும் தேவதைகள் மனிதர்களுக்குத் தரும் பொருள்களாகக் கூறுகிறாள். அவர்கள் தங்களைக் குறித்துச் செய்த யாகம் முதலியவற்றிற்கு ப்ரதியுபகாரமாக [கைமாறாக] இப்பொருள்களை அவர்கள் தருவதாகக் கூறுகிறார். இக்கருத்து பகவத் கீதை 3-11 ச்லோகத்தின் பொருளை ஒட்டியதாகும். ”தேவாந் பாவயதாநேந” என்னும் இந்த ச்லோகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் “யஜ்ஞாதி கர்மங்களைச் செய்து தேவர்களை த்ருப்தியடையச் செய்யுங்கள் உங்களுடைய யாகாதிகளால் த்ருப்தியடைந்த தேவர்கள் உங்களுக்கு வேண்டிய மழை முதலிய நன்மைகளை உண்டாக்குவார்கள் இவ்விதம் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியடையக் கூடிய செயல்களைச் செய்து மிக்க நன்மையை [மோக்ஷத்தை] அடையுங்கள்” என்று அருளியுள்ளார்.

மழை நீரானது ஆறுகள் , ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவற்றில் நிரம்பி, உயிர்களுக்கெல்லாம் குடிக்கவும், குளிக்கவும், எல்லாப் பயிர்களும் மரம், செடி, கொடிகளும் வளரவும் உதவுகிறது. இவைகளுக்கு உதவாத மீதமுள்ள நீர் கடலில் போய் கலக்கிறது. அதை மனதில் கொண்டே கன்றுகளுக்கும் கோவலர்களுக்கும் உதவாத பால் மண்ணில் சேர்ந்து சேறாக்குகிறது என்கிறாள்.

நற்செல்வன் என்பவன் தர்மமான வழியில் செல்வங்களையீட்டி செல்வந்தனாக இருப்பவன். இத்தனை செல்வமுடைய போதிலும் தர்ம வழிமாறாமல் நடப்பவன். நல் என்னும் அடை மொழிக்கு அவனுடைய வரவும் செலவும் சாஸ்திரத்திற்குட்பட்டவை என்று பொருள் எனவே இவனை நற்செல்வன் என்றாள்.

முன் பாட்டில் கன்று, கறவை என்பவை இணைந்து கற்றுக் கறவை ஆனது போல் இங்கு கன்று எருமை இரண்டும் கலந்து கற்றெருமையாயிற்று. மனிதர்களுக்குள்ள எரிச்சலையும் [வெப்பம்] , நீர் வேட்கையையும் [தாகம்] உணர்ந்து மழைக்குரிய [பர்ஜன்ய] தேவதை மழையைப் பொழிகிறது என்பதைத் தெரிவிக்க இரங்கி [இரக்கப்பட்டு] என்கிறாள். மனிதர்களை உலகின் சக்திகளாய் விளங்கும் தெய்வங்களுக்குக் குழந்தைகள் என்கிறாள். எருமை மேகமாகவும் பால் கறக்கப்படும் அதன் மடியை அம்மேகத்தில் நீர் தங்கும் பாகமாகவும் காம்புகளை அம்மேகத்தின் மழை பொழியும் கண்களாகவும் கூறுகிறாள்.

இங்கே நங்காய் என்றது இவள் உடன் பிறந்தவன் பெருமையை நற்செல்வன் என்று கூறியதால் அண்ணனும் தங்கையும் வழி வழியாக தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதைக் குறிக்கும் [செல்வன் -நடப்பவன்]

இப்பொழுது நன்றாகப் பொழுது விடிந்துவிட்டது. வீட்டின் கூரையில் படிந்திருந்த பனி கொஞ்சம் கொஞ்சமாக உருகி கீழே சொட்ட ஆரம்பித்துவிட்டது என்பதை ‘பனித்தலை வீழ’ என்று குறிப்பிடுகி
றாள்.
தொடரும்

புதன், 20 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 11
கற்றுக் கறவை---

கன்று, கறவை என்னும் இரு சொற்களும் சேரும்போது இலக்கணப்படி மென் தொடர் [கன்று] வன் தொடராக [கற்று] மாறி கற்றுக்கறவை என்று ஆயிற்று.

கன்றுகளுடன் கூடின கறவை மாடுகளின் கூட்டங்கள் நிறைந்தது ஆய்ப்பாடி. அங்கே இடையர்கள் பசுக்களையும் எருமைகளையும் தினம் இரண்டு வேளை கறக்கும் தொழிலுடையவர்கள். அவைகளைக் கறக்கும்போது கன்றுகளை மனதிற்கொண்டு இரக்கம் மிகுந்தவர்களாகி அவைகளுக்குப் போதுமான பாலை விட்டுக் கொஞ்சம் கறந்ததும் நிறுத்திவிடுவார்கள். அவர்கள் இவைகளைக் கூட்டம் கூட்டமாகக் கறப்பதால் அவர்களுக்கு ஏராளமான பால் கிடைக்கிறது. கன்றுகளுக்கும் நிறைய பால் கிடைக்கிறது. [இங்கு கறவை என்றது பசு, எருமை இரண்டுக்கும் பொதுவான சொல்லாகும்] இவ்வாறு கோவலர் மனத்திலுள்ள இரக்கம், தயை, பண்பாடு ஆகியவை பற்றி இங்கு கூறலாயிற்று.

அடுத்து இவர்கள் வீரத்தைப் பற்றிப் பேசுகிறாள். இவர்களுடைய செல்வத்தில் பொறாமைப்பட்டு அவைகளைக் கவர்ந்து கொள்வதற்காக இவர்கள் மேல் படையெடுத்து வருபவர்களை இவர்கள் எதிர்த்துப் போர் செய்யும் திறமையைச் சொல்கிறாள். அப்படி படையெடுத்து வந்தவர்களை அவர்களுடைய வல்லமையெல்லாம் முற்றிலும் அழிந்து போய்விடும்படி இக்கோவலர்கள் வீரத்துடன் போரிட்டு வென்றுவிடுகிறார்கள். இனி இவர்கள் இருக்கும் திசையைக் கூட நினைக்கவும் பார்க்கவும் இயலாதபடி அவர்களை விரட்டிவிடுகிறார்கள் என்பதாக இவர்கள் வீரத்தின் பெருமைகளை ‘செற்றார் திறலழியச் சென்று செறுச் செய்யும்’ என்று கூறுகிறாள்.

பிறர் பொருளைக் கவர அவர் மேல் படையெடுத்துச் செல்வதை ’வெட்சித்திணை’ என்றும் எதிர்த்துப் போர் செய்தலை ’வஞ்சித்திணை’ என்றும் வென்றவர் வாகை மாலையை வெற்றிமாலையாக அணிவதை ’வாகைத் திணை’யென்றும் ஐயன் ஆரிதனார் இயற்றிய ’புறப் பொருள் வெண்பா மாலை’ கூறும்.

’எற்றுக்குறங்கும் பொருள்’ என்பது இத்தகைய கருணையும் வீரமும் உள்ள குலத்தில் பிறந்த உனக்கு உன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுமென வந்திருக்கும் எங்களிடம் கருணை உண்டாகவில்லையா? நோன்பை நோற்க வேண்டுமென்கிற வீரம் இல்லையா? குலத்தின் பெருமையுடன் அழகிய இடையும் மயில் போன்ற சாயலையும் பெற்று அழகியவளாகவும் இருக்கிறாய். நீ எங்களுக்கு ஒரு சிறந்த தோழியல்லவா? உன் உறக்கமென்பது கருணையினாலா, வீரத்தினாலா என்னும் பொருள்பட எற்றுக்குறங்கும் பொருள் என வினவுகிறாள்.

பொருள் என்ற சொல்லுக்கு ப்ரயோஜனம் என்பது அர்த்தமாகும். உனக்குக் கருணையும் வீரமும் இல்லையேல் உன் தூக்கத்துக்கு என்ன பயன்? நாங்கள் அழைப்பதால் உனக்கு ஏதாவது பலன் உண்டு என்றால் அதற்கு அடையாளமாக உன் உடலையாவது கொஞ்சம் புரட்டிக் காட்டலாகாதா? என்று ஆண்டாள் சொல்வது மிக முக்கியமாக கவனிக்கவேண்டியதாகும். சோம்பலை ஒழித்து பகவானின் ஆராதனத்தில் ஈடுபடுவதற்கு ஆர்த்தியும், ப்ரதிபத்தியும் [நல்லபடியாகச் செய்யவேண்டுமே என்னும் கவலையும்,ஈடுபாடும்]வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறும் இந்த அடையாளங்களை உறுதிப் படுத்துவதற்காக நீ உன் உடம்பைக்கூட சிறிதும் அசைத்துக் கொடுக்கமாட்டேன் என்கிறாயே? எங்கள் காரியத்திற்காக உன்னை ஒன்றும் செய்யச் சொல்லவில்லை. முகில் வண்ணன் பேர்படுவது உன் ஆத்மாவுக்கும் உன் வாழ்க்கைகும் உயர்வையே தரும் என்று கூறி இந்தத் தூக்கமும் சோம்பேறித்தனமும் அவ்வுயர்வினைத் தருமா? என்று இடித்துக் கூறுகிறாள். எற்றுக்குறங்கும் பொருள் என்பதைத் தனித்துப்பொருள் கொண்டு ’நமக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்யாமல் தூங்குவது அனைத்து நற்பயன்களையும் அழித்துவிடுமல்லவா? நாங்களெல்லோரும் வந்து அழைக்கும்போது கூட நீ இன்னும் அதிலிருந்து விடுபடாமல் இருக்கிறாயே என்று வற்புறுத்துவதாகவும் பொருள் கொள்ளலாம்.

கன்றுக்குத் தேவையான பாலை விட்டுவிட்டு மீதமுள்ள பாலைக் கறப்பது குற்றமாகாது. தங்களைக் கொன்றோ அல்லது சிறைபிடித்தோ தங்கள் செல்வத்தைக் கவர வரும் எதிரிகளின் பலத்தை அழித்து அவர்களைக் கொல்வதும் தற்காப்பிற்காகவே செய்வதால் அதுவும் குற்றமாகாது. எனவே இச்செயல்களைச் செய்யும் அவர்களை சிறிதும் குற்றமற்றவர்கள் என்று பொருள்பட குற்றமொன்றில்லாத என்று கூறுகிறாள்.

இங்கே பொற்கொடியென்றது பொன்போல் இருப்பவளே, பணிப்பொன்னாக, அதாவது ஆபரணமாக மாறி உயர்ந்த மக்களுக்கு அழகைக் கொடுக்கக் கூடியதான பணிப்பொன் போன்றவளே என்று கூறுகிறாள்.

பெரியோர் ‘சேஷத்வம் என்பது கட்டிப் பொன் போல், பாரதந்த்ரியம் என்பது, பணிப் பொன் போல் இருக்கும்’ என்று கூறுவர். அக்காலத்தில் மக்களுக்குத் தெரிந்த உலோகங்களில் எல்லாவற்றையும் விட உயர்ந்தது தங்கம். அதுபோல் பகவானுக்குத் ’தான் தாஸ பூதன், சேஷன்’ என்னும் உணர்ச்சியானது ஆத்மாவின் மற்ற உணர்ச்சிகளைக் காட்டிலும் மிக உயர்ந்தது. இந்த உணர்ச்சி ஏற்பட்டவர்கள் உயர்ந்ததான கட்டித் தங்கத்திற்கு ஒப்பாவார்கள்.  அதுவே பிறர்க்குப் பயன்படும் பொழுது பணிப் பொன்னாக [ஆபரணத் தங்கமாக] மாறுகிறது. இந்த ஆத்மா பகவத், பாகவத கைங்கர்யங்களில் ஈடுபடும் பொழுது ‘இவை அவன் இட்டக் கட்டளை’ என்று பாரதந்த்ரிய [பிறர்க்கு அடிமைப்பட்ட] உணர்ச்சியோடு செயல்படுகிறது. அப்படிப்பட்ட புண்ணியமான ஆத்மாவை உடையவளேஎன்னும் பொருளில் பொற்கொடியே என்று அழைக்கிறாள். உயர்ந்த பொருட்களெல்லாம் பகவானுக்கே அர்ப்பணமாக வேண்டும் . அதுபோல் பொற்கொடியான, உயர்ந்தவளான நீயும் இந்த நோன்பில் ‘இது sஎம்பெருமானுக்காவே’ என்னும் எண்ணத்துடன் கலந்து கொண்டு இதை அனுஷ்டிக்கவேண்டுமல்லவா என்கிறாள்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


பாசுரம்-10 தொடர்ச்சி

யோகாப்யாஸத்தினால் புலன்களை அடக்கி வென்றவர்களைக்கூட மயக்க வல்லது மாயை (ப்ரமாதம் யமினாம் மதி:) என்று ஸ்ரீபாகவதம் கூறுகிறது. இம்மாயைக்கு வசப்பட்டவளான இப்பெண் உயர்ந்த பலனைத் தரவல்ல நாராயண பஜனத்தை விட்டு வேறு வழியில் முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். இதை மனதில் கொண்டதால் ஆண்டாள் இவள் செய்யும் முயற்சி கும்பகர்ணன் தூக்கம் போன்ற பெருந்தூக்கம் என்று அறிவுறுத்தி, அதை விட்டுவிட்டு, அந்த மயக்கத்தையும் ஒழித்துவிட்டு நாராயணனைப் பஜிப்பதற்கு வாவென் றழைக்கிறாள். இதுவரை நீ செய்துவந்த அனுஷ்டானங்களாலும் உனக்கு ஒன்றும் குறையில்லை. அவை உன்னை இந்த மார்கழி நோன்பிற்குத் தகுதியானவளாக்கி விட்டன என்றும் போற்றுகிறாள்.
      
நாராயணன் என்பதற்கு ’நாற்றத்துழாய்முடி’ என்னும் அடைமொழி தந்திருப்பதற்கு நோக்கம் திருத்துழாயால் அலங்கரிக்கப் பெற்றுள்ள திருவடி முதல் திருமுடி வரை நாராயணனுடைய ஒவ்வொரு அங்கமும் அடியார்களுக்கு ஸேவிக்க, அனுபவிக்கத் தகுந்தனவாய் உள்ளன’ என்பதைக் காட்டுவதற்காகவே. எம்பெருமானின் திருவடிகளின் பெருமைகளை த்ரிவிக்ரமாவதாரத்தில் காணலாம். இதுபோல் மற்ற 15 பெருமைகளையும் ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ தேசிக ப்ரபந்தம். அதிகார ஸங்க்ரஹத்தில்’ உறுசகடமுடைய எனத் தொடங்கும் 51 வது பாசுரத்திலும், நவமணி மாலையில் ‘ஒருமதியன்பர்’ எனத் தொடங்கும் முதல் பாசுரத்திலும் காணலாம். பாண் பெருமாள் [திருப்பாணாழ்வார்] அருளிச் செய்த அமலனாதிபிரானில் பெருமாளின் திருவடி முதல் திருமுடி வரை எல்லா அங்கங்களையும் அவர் வர்ணித்து அனுபவித்திருக்கும் திறன் காண்க.

மாற்றமும் தாராரோ என்று இவளைச் சொல்லிவிட்டு போற்றப்பறை தரும் புண்ணியன் என்று பெருமாளைச் சொல்லியிருப்பது மிகவும் அழகு. இவ்விரண்டையும் இணைத்துப் பொருள் கொள்ளவேண்டும். யோக சாஸ்திரம் யமம், ப்ரத்யாகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஞானேந்த்ரிய, கர்மேந்த்ரியங்களை அடக்குவதற்கு பல வழிகளையும் யோசனைகளையும் கூறுகின்றன. அவைகளை வைதீக மதத்தைப் பின்பற்றும் அனைத்து ஸாதுக்களும் உகந்ததென ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ‘மெளன விரதம் ‘ என்பதை அனுஷ்டிப்பவர்களுக்கும் கூட வாயைத் திறந்து நாராயண’ பஜனம் பண்ணுவது அவசியம் என்கிறார்.

மெளனமாயிராமல் வாயைத்திறந்து பெருமாளைப் போற்றுவதும் அவர் குணங்களைப் பாடுவதும் மிகவும் அவசியமானது என்று நம் ஸம்ப்ரதாயத்தில் பலவிடங்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது.

‘நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை’ என்று திருமாலை முதற்பாட்டிலும், ‘சொல்லினால் தொடர்ச்சி நீ’ என்று திருச்சந்த விருத்தம் 71வது பாட்டிலும், ‘துஞ்சும் போதழைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்’ என்று பெரிய திருமொழி [1-10] பாசுரத்திலும், ஸ்நானம், ஸந்த்யா, ஜபம், ஹோமம் என்று ஆஹ்னிகத்தில் [தினமும் காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கப்போகும் வரை சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி செய்ய வேண்டியவைகளைக் கூறும் நூல்.] ஜபம் என்பதை சேர்த்துக் கூறியதும், பாவின் இன்னிசை பாடித்திரிவனே என்ற மதுர கவிகளின் வாக்கிலும், மற்றும் இதுபோல் பல ப்ரமாணங்களாலும் வாயைத்திறந்து பகவத் குணங்களைப் பாடுவது எவ்வளவு அவசியமானது என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. 

எனவே மாற்றமும் தாராரோ என்று இதை வலியுறுத்தியவள் அங்ஙனம் தன்னைப் போற்றுபவர்களுக்கு போற்றப் பறை தரும் புண்ணியனான அவனும் வேண்டிய நல்லனவெல்லாம் தருவான் என்னும் அழகிய பொருள் விளங்குமாறு பாடியுள்ளாள். மெளனமாக, பேசாதிருத்தல் என்பது பகவானை விடுத்து மற்ற லெளகீக விஷயங்களில் புத்தி சென்று அதைப் பேசியும் கேட்டும் இந்திரிய சக்தியை வீணாக்காமல் இருப்பதற்காகவே ஆகும். அதே சமயம் வாயை மூடிக்கொண்டிருந்தால் நம்மை அறியாமல் நம் மனமும் அறிவும் லெளகீக விஷயங்களில் செல்லக்கூடும். அதை தடுப்பதற்கு வழியாக
சரண்யனுடைய குண சேஷ்டிதங்களை வாயைத் திறந்து பாடியும் சொல்லியும் அனுபவித்தால் மனம் உலக விஷயங்களில் செல்லாமல் சரண்யனிடமே ஈடுபடும். மேலும் மனதை அடக்குவதற்கு யோக சாஸ்திரம் கூறும் ’மெளனம்’ என்பதன் நோக்கமும் நிறைவேறும், பகவானைப் பாடுவதால் அவனும் மகிழ்வான். எனவே இங்ஙனம் அவன் புகழ் பாடுதல் என்பதை ’மஹா மெளனம்’ என்றே சொல்லத்தகும், சொல்லலாம். மேலும் சாஸ்திரங்கள் அறுதியிட்ட முடிந்த பொருளான எம்பெருமானைப் பாடும் செயலாகையால்  ’வாய் திறப்பது’ என்பது இன்னும் தூய்மை பெறுகிறது. நாற்றத் துழாய் முடி நாராயணன் உன்னால் பாடப் பெறும் போது உன்னுடைய மெளன விரதமும் கெடாமல் மஹா மெளனம் ஆகிவிடும்.

அதுபோல் அவன் புகழை நாங்கள் பாடி நீ கேட்கும் பொழுது காதுகளின் கேட்கும் சக்தியை அடக்கிக் கொண்டு காது கேளாதது போல் இருக்கிறாயே அந்த உன்னுடைய நிஷ்டையின் [திறமை] பெருமையும் பகவத் கீர்த்தனங்களைக் கேட்கும் போது அதிகரிக்கும்.

தேற்றமாய் வந்து என்றதனால் இந்த பஜனைக்கு நீ எங்களோடு வந்து சேர்ந்தால் அப்பொழுது உன் மனம் மயக்கமற்றுத் தெளிவடையும். நீ ஸமாதி நிலையில் இருந்து பகவானை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு இந்த பஜனத்தில் கலந்து கொள். அப்பொழுது நீயே அதைக்காட்டிலும் இது எவ்வளவு உயர்ந்தது என்பதை உணர்வாய். மேலும் தன் மந்திர சக்தியால் யாரேனும் உன்னை மயக்கியிருந்தாலும் அந்த க்ஷுத்ர [தாழ்ந்த] சக்திகளெல்லாம் எங்களுடன் வந்து கலந்து கொள்ளவேணுமென்று நீ நினைக்கும் பொழுதே உன்னை விட்டு விலகிவிடும். பெருமாளின் பெருமைகளைக் கேட்பதும் பாடுவதும், நாராயணனுடைய ஆராதனத்திற்கான ஒன்பது வழிகளில் முதலிரண்டு வழிகளாக ’ச்ரவணம், கீர்த்தனம் விஷ்ணோ:’ என்ற ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் கேட்பதையும் பாடுவதையும் நீ விலக்கக் கூடாது என்பதை வலியுறுத்த ஊமையோ, செவிடோ என்று கேட்கிறாள்.

ஆக இந்த நோன்பினால் உடலின் சக்தி அதிகரிக்குமென்றும், இதர தேவதைகளைக் கொண்டாடும் பழக்கமுடையோருக்கும் நாராயாண பஜனத்துக்குத் தேவையான நல்ல தகுதியும் அமையும் என்றும், ஏற்கனவே கொண்டிருக்கும் அந்தந்த அனுஷ்டானங்களுக்கும் [பழக்க வழக்கங்களையும்] எவ்விதத் தடையும் ஏற்படுத்தாமல்,மாறாக இது மேம்படுத்திச் சிறக்கச் செய்யும் என்றும், மேலும் இந்த நோன்பில் கலந்துகொண்டு பயன் கண்டவுடன் இதுவே மிக உயர்ந்ததான வழி என்பது வெளியாகும் என்றும், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக வேறு வழியில் நடப்பவர்களுக்கும் எடுத்துக் காட்டி வற்புறுத்துகிறாள்.

ஸ்வர்கத்தின் அனுபவங்களின் பெருமைகளை பெரிய திருமடல் 19 முதல் 37 கண்ணிகளில் கண்டுகொள்க. ஜீவர்கள் பலவகைப்பட்ட பெரியோர்களால் விதிக்கப் பட்ட மார்க்கங்களில் எது மிகச் சிறந்தது, எது நல்லோர்களால் கைக்கொள்ளத்தக்கது என்று தேர்ந்தெடுத்து அந்த மார்க்கத்தைக் கைக்கொள்ளவேண்டும். அதற்கு அவனுடைய அறிவு முதலில் உதவவேண்டும். தன்னுடைய அறிவு மாறன் சடகோபனுடைய திருவடிகளில் படிந்து அதனால் தான் உஜ்ஜீவித்ததாய் [உயர்வடைந்ததாய்] பாடியருளிய மதுரகவிகளின் ‘கண்ணிநுண்சிறுத்தாம்பும்’, சடகோபரந்தாதியில் ‘அறிவே உன்னைத் தொழுதேன்’ என்று கம்பன் பாடியுள்ள பாடலும் இங்கு கருதத்தக்கது.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


பாசுரம்-10
நோற்று சுவர்க்கம்----

இதுவரை நான்கு பாட்டுக்களாலும் தங்களைப் பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் பெண்களை நாராயணனைப் போற்றிப் பாடுவதாகிய இந்த நோன்பினைக் கைக் கொள்ள அழைத்தாள். இப்பாட்டில் எழுப்பப்படுபவள் தாந்த்ரீகமான சில முறைகளைக் கையாளுபவள்.

இவள்பிற தேவதைகளைப் பூஜிப்பவள். ஸ்வர்கம் முதலான சில இன்பங்களை உயர்வாக மதிப்பவள். அவைகளை அடைவதற்கு வேண்டிய வழிகளில் சென்று கொண்டிருப்பவள். இவள் தூங்குகிறாள் என்று சொல்வதற்குப் பொருள் வேறு விதமானது. அதாவது பெருமாளைப் பற்றி நினைக்காமல் அஷ்டாங்க யோகம், ஹடயோகம் முதலான யோகாப்யாஸங்களைச் செய்து தன் மனம், அறிவு, சக்தி ஆகியவைகளை வளர்த்துக் கொள்பவள். அதைக் கொண்டு நாராயணனை நினையாமல் பிற தெய்வங்களை த்யானிப்பதற்கு மிகவும் பாடுபடுபவள்.
இவ்விதம் சக்திகளை வளர்த்துக் கொண்டவளாதலால் இவளை ‘அம்மனாய்’ என்று மரியாதை தோற்ற அழைத்து ’இவ்விதம் சொர்காதி இன்பங்களை அடைவதற்கு நீங்கள் விரதம் பூண்டு நோற்கிறீர்கள் அல்லவா என்று பாட்டைத் தொடங்குகிறாள்.

‘மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்’ என்றது’ நீங்கள் வாயில் கதவுகளைத் திறக்காவிட்டாலும் வாய் திறந்தாவது பதில் சொல்லக்கூடாதா என்று கேட்கிறாள். அம்மனாய் என்று முதலில் அழைத்த அப்பெண்ணைப் பின்னர் ‘நன்கலனே’ என்று அழைக்கிறாள். நன்கலம் என்பதற்கு ‘ஸத்பாத்ரம்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம், அதாவது ‘தகுதியை உடையவள்’என்பது பொருளாகும். இதுவரை இவள் செய்துவந்த யோகங்கள், அனுஷ்டானங்கள் இவற்றால் நோன்புகள் நோற்கும் சக்தியைக் கைவரப் பெற்றுள்ளாள். எனவே அந்தத் திறனைக்கொண்டு நாராயணனைப் பாடி பஜனம் செய்து இந்த மார்கழிநோன்பினையும் நோற்க’நீ தகுந்த பாத்திரமாயிற்றே’ என்று கூறி அவளை அழைக்கிறாள்.

அடுத்து திருத்துழாய் மாலையைத் திருமுடியில் அணிந்தவராகிய  ஸ்ரீமந்நாராயணன் நாம் வாயைத் திறந்து அவனைத் துதித்தால் நம்மை நிச்சயமாக காப்பாற்றுவான் என்பதை அவளுக்கு வற்புறுத்துகிறாள். பகவான் உலகத்துக்கு எல்லாவிதமான புண்ணியத்தையும் கொடுப்பவன்,மேலும் நம்மையெல்லாம் காப்பாற்றி அதனால் தானும் புண்ணியத்தை அடைபவன் என்று இரண்டுவிதமாகவும் பொருள் கொள்ளும்வண்ணம் ‘புண்ணியனால்’ என்று கூறியுள்ளாள்.

தொடரும்          

வியாழன், 31 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 9
தூமணி மாடம்---

இப்பாட்டின் தலைவி ஒரு பெரும் செல்வந்தருடைய பெண் என்பதை அவள் உறங்கும் அறையின் வருணனை காட்டுகிறது. இவள் முன்பே கண்ணனின் ஆசை விளையாட்டுகளில் ஈடுபட்டவள். அதனால் உற்சாகத்துடன் இந்த மார்கழி நீராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடியவள். பொழுது புலர்ந்தும் கூட இவள் இன்னும் உறங்குகிறாள்.

இங்கே ஊமையோ என்பதற்கு மெளன விரதம் இருக்கின்றாளோ என்றும் பொருள் கூறலாம். செவிடோ என்பது கேட்கும் சக்தியை உள்ளடக்கி இருக்கிறாளோ என்றும் கூறலாம். [யோக சாஸ்திரத்தில் ப்ரத்யாகாரம் என்னும் ஒரு நிலையுண்டு. அவ்வமயம் காதுகளின் கேட்கும் சக்தியைக் கூட அடக்கிக் கொண்டு வெளியில் ஒலிக்கும் ஒலிகள் எதுவும் காதில் புகாதபடி செய்யவியலும் நிலையாகும். ]

அடுத்து அனந்தல் என்பது ஒருவித மயக்க நிலையைக் கூறும் சொல். ஒருவர் தன் ஆத்மாவை மட்டுமே மனதில் நிறுத்தி அந்த தியானத்தில் உலகையே மறந்திருக்கும் ஒரு நிலையாகும். இதை நம்மாழ்வாரும், கீதையில் கண்ணனும் [3-17] கூறியுள்ளனர். மந்திரப்பட்டாளோ என்றது தன் வசம் இழந்து பிறர் வசப்பட்டிருத்தலாகும். ஒருவன் தன்னுடைய வலிமையான ஆத்ம சக்தியைக் கொண்டு வலிமையற்ற ஆத்ம சக்தியுடைய ஒருவரைத் தன் வசப் படுத்திக்கொள்வான். அப்போழுது வசப்பட்டவர் தமக்கென்று ஒரு நினைவும், செயலும் இன்றி அவன் சொன்னபடி ஆடுவான். [இதைப் பிறரை வசப்படுத்துதல் என்பர்]

மாமாயன் என்றது பகவானை. அவன் மாயையால் மயங்கியவள் இவள் என்பதால் அங்ஙனம் கூறுகிறாள். மேலும் மாதவன் [திருமகள் கேள்வன்] வைகுந்தன் [வைகுண்டத்திலிருக்கும் நாராயணன்] என்று அவனுடைய பல்வேறு நாமங்களையும் சொல்லியாவது அவளை எழுப்புங்கள் என்கிறாள் ஆண்டாள்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 9  'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

வியாழன், 24 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 8 கீழ்வானம்----
தொடர்ச்சி

ஆண்டாள் கண்ணனிடம் நிலையான பக்தி கொண்டவள். எனவே திருப்பாவை முழுவதிலும் கண்ணனுடைய பல லீலைகளையும் அவள் பாடியுள்ளதைக் காணலாம். பெரியாழ்வாரும் தம் திருமொழியில் கண்ணனுக்கே பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். எனவே கண்ணன் இவளுக்குத் தந்தைவழி சொத்துமாவான்.கீதையில் தன்னை ‘தேவாதிதேவன்’ என்று கண்ணன்  பலவிடங்களில் கூறியிருப்பதைக் கொண்டு இவளும் அவனைத் தேவாதிதேவன் என்கிறாள். அவனை ஸேவிக்கச் செல்லும் நாம் அவன் குண, ரூப, லீலைகளைப் பாடி அவனுடைய பெருமைகளை அறிந்துகொண்டபிறகு அவனை ஸேவிப்போம் என்கிறாள்.

இங்கு நிறைந்த பக்தியும், மனப்பக்குவமும் பெறுவதற்குண்டான செயல்களை முதலில் செய்துவிட்டுப் பின்னர் அவனை நாம் சென்று வணங்கலாம் என்கிறாள். இப்படி தூய பக்தியும்,தேவையான மனப்பக்குவமும் பெறுவதற்கு முதலில் நமக்கு அனுஷ்டானம் தேவை என்றுகூறி, மனம், செயல் இரண்டாலும் நம்மைத் தகுந்தவர்களாக்கிக் கொண்ட பின்னரே பகவானை வழிபடுதல் தகுந்த முறை என்பதை வரிசைப்படுத்திக் காட்டுகிறாள்.
ஆ! ஆ!  என்பது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தும் சொல். இவ்வாறு தம்மைப் பற்றிப் பாடியும் ‘அடைந்தவரைக் காப்பேன்’ என்னும் தம் உறுதிப்பாட்டை மனதில் கொண்டும் வரும் இவர்களைச் சரண்யனான பகவான் எதிர்பார்த்துக் காத்திருப்பான். இவர்கள் சென்று ஸேவித்ததும் அவனும் ஆச்சர்யமடைந்து அருள் புரிவான் என்பது பொருள்.

ஆராய்ந்து அருள் புரிவது என்பது நாம் மனம், மொழி, செயல்களால் தூய பக்தர்களாக, அவனையன்றி நமக்கு வேறு தெய்வமில்லை என்னும் திடமான நம்பிக்கையுடன் இருக்கும் நம்முடைய நிலையைச் சரண்யன் உணர்ந்து கொள்ளுதலாகும்.       

புதன், 23 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 8
கீழ்வானம்----

இப்பாட்டில் இன்னும் கொஞ்சம் பொழுது விடிந்து கிழக்கு வெளுத்து விட்டதைச் சொல்கிறாள். எருமைகளெல்லாம் அவிழ்த்துவிடப்பட்டு புல் தரையில் மேய்கின்றன. சிறுமிகள் பலர் நீராட்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர். நாங்களும் போகாமல், அவர்களையும் நிறுத்திவைத்துவிட்டு, உன்னை அழைத்துப் போவதற்காக வந்து கூப்பிடுகிறோம். ஏனெனில் நீ உற்சாகம் உள்ளவள். இதில் கலந்து கொள்வாய் என்பதால் உன்னை அழைக்கிறோம் என்கிறாள்.

முதல் நாள் மாடுகள் மேய்ந்த புல் தரையில் இரவில் புதிய தளிர் உண்டாகி விடியற்காலையில் அதை மீண்டும் மாடுகள் மேயும். அங்ஙனம் புதிதாய் தோன்றிய தளிர் ‘விட்ட தளிர்’ எனப்படும். அதைச் சுருக்கி ’வீடு’ என்கிறாள். பெரியாழ்வார் ’ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்’ என்று பாடினார். ஆத்மா தனக்கு ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு பூமியில் பிறக்கின்றது. இதை எடுத்த சரீரமென்று சொல்லவந்தவர் சுருக்கி ’ஏடு’ என்கிறார். ’எடு’ என்னும் பகுதியடியாக ’ஏடு’ என்றது போல் இவளும் இங்கு விட்ட தளிரை ’விடு’ என்னும் பகுதியடியாக ’வீடு ’என்று பாடுகிறாள்.

[பூர்வாசார்யார்களின் விளக்கம் சிறுவீடு என்பதற்கு விடியற்காலையில் சிறிது நேரம் என்று உள்ளது. பனிப்புல் மேய்வதற்காக விடியற்காலையில் சிறிது நேரம் வீட்டின் அருகிலே மேய விட்டு பின்னர் மேய்ச்சலுக்குத் தொலைதூரம் இட்டுச் செல்வதை குறிப்பதாகக் காட்டுகின்றனர். ஸ்ரீ என் ஆர் கே ஸ்வாமி வீடு என்பதற்கு விட்ட தளிர் என்று பொருள் கூறியதுடன் அதற்கு இலக்கணப்படியான விளக்கமும் , பெரியாழ்வாரின் பாடலை உதாரணமாகவும் காட்டி விளக்கியுள்ளதை உணர்ந்து இன்புறலாம்]

குதூகலம் என்னும் வடமொழிச் சொல் சிதைந்து கோதுகலம் எனப்பட்டது. பதுமைகளுக்குப் பாவைகள் என்று பெயர்.  [பதுமைஎன்பது சிலை, பொம்மை ஆகியவற்றைக் கூறும் சொல். பாவை என்பது பெண்சிலை, பெண் பொம்மை . ’பாவை விளக்கு’ என்பதை நாம் அறிவோம். ] இப்பதுமை செய்பவர்கள் அவைகளை மிகுந்த அழகுடையவைகளாகச் செய்வர். எனவே அழகுடைய பெண்களை பதுமை போல் இருப்பதாகச் சொல்வது தமிழ் மரபு. அதையொட்டி குதூகலமும் அழகும் நிறைந்த இப்பெண்ணை கோதுகலமுடைய பாவாய் என்றழைக்கிறாள் ஆண்டாள்.

தொடரும்---


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 8 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

திங்கள், 14 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

கீசு கீசு----
பாசுரம் 7 தொடர்ச்சி

காசும் பிறப்பும்-காசு என்றது பொன்னாலான அணிகளை. பிறப்பு என்றது சிப்பிகளில் தானாக விளையும் முத்துக்களையும்,கடலில் செடிபோல் உண்டாகும் பவளங்களையும், மலைகளிலும் சுரங்கங்களிலும் தானாக விளையும் ரத்தினங்கள், வைரம் , வைடூர்யம், கோமேதகம், பச்சை முதலான இயற்கைப் பொருள்களைக் கொண்டு செய்த ஆபரணங்கள். அவை இன்றும் தமிழகத்தில் வழக்கத்திலுள்ளன.

[காசு பிறப்பு என்பதற்கு ஸ்வாமி இங்கு அளிக்கும் விளக்கம் புதுமையானது. பூர்வாசார்யர்கள் கூறாதது. மிகவும் அருமையான விளக்கமுமாகும். பிறப்பு என்பது இயற்கையிலேயே பிறந்தவை அல்லது விளைந்தவையான. முத்து பவளம் மற்றும் ரத்தினக்கற்கள் வைரம் முதலான கற்களும் ஆகும் இவைகொண்டு செய்யப்பட்ட அணிகலங்களைப் பிறப்பு என்று கூறுகிறார். காசு என்பது மனிதனால் செய்யப்பட்டது. தங்கம் வெள்ளி முதலிய உலோகங்களை கழுத்தில் அணியத்தக்கவாறு அச்சில் வார்த்து செய்யப்பட்ட தங்கக் காசு போன்றவற்றைக்குறிக்கும். இந்த வழக்கம் தமிழ்நாட்டில் பழங்காலத்திலும் சங்க காலத்திலும் பெண்டிர் இவ்விருவிதமான நகைகளையும் அணிந்திருந்தனர் என்பதைக் கொண்டு ‘சங்கத் தமிழில்’ இவ்விளக்கத்தை ஸ்வாமி காட்டியுள்ளார் என்பதை உணரலாம்]
ஆய்ச்சியர் கூந்தலின் நறுமணமானது அவர்களது செல்வச் செழிப்பையும் நல்லொழுக்கத்தையும் குறிக்கும்.

[செல்வமும் ஒழுக்கமும் உடையவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் முறை தவறாமல் குளித்தல் பூச்சூடல் போன்ற செயல்களால் தங்கள் கூந்தல் உட்பட உடலை நன்கு பேணி வளர்க்கவியலும். மாறாக இவ்விரண்டும் இல்லாதவர்களுக்கு இது இயலாததாகும் எனவே ஆய்ச்சியர் கூந்தலின் நறுமணம் அவர்களது செல்வச் செழிப்பையும் நல்லொழுக்கத்தையும் காட்டுவதாகக் கூறுகிறார்]

தயிர் கடையும் பொழுது எழும் ஓசையும் ‘கீசு,கீசு’ என்பது போலவே இருக்கும் எனவே முதலில் சொன்ன கீசு என்றதின் விளக்கத்தை இதற்கும் கொள்ளலாம்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம்7 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளி, 11 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 7
கீசு கீசு என்று---
நம் நாட்டில் பேசும் பறவைகள் இரண்டு வகையாகும். அவை கிளியும் பூவையுமாகும். பூவையென்பது நாகணவாய்ப்புள் என்று செந்தமிழிலும் நார்த்தாம்பிள்ளையென்று நாட்டுப்புறப் பேச்சிலும் வழங்கப்படும் ஒரு பறவையாகும். அது கருப்பு மஞ்சள் நிறங்களையுடைய இறக்கைகளை
யுடையது. குருவியைக் காட்டிலும் சிறிது பெரிதாயிருக்கும். விடியற்காலையில் கீச் என்னும் சப்தத்தைச் செய்வது. இதையே ஆனைச்சாத்தன் என்று ஆண்டாள் இங்கு கூறுகிறாள். கீச் என்பதை கீசு என்கிறள். கீசு என்னும் சொல்லை க+ஈசு என்று பிரித்து ஈசாவாஸ்ய உபநிஷத்தால் ஈசன் என்று கூறப்படுபவன் க: யார் என்று பறவைகள் கேட்பதாகவும், இக்கேள்விக்கு முந்தைய [6வது பாசுரத்தில்] ஹரி என்று முனிவர்களும் யோகிகளும் பதில் கூறுகிறார்களெனவும் பொருள் கொள்ளவேண்டு மென்றும் பெரியோர் கூறுவர். [ஈசாவாஸ்ய உபநிஷத் ஆரம்பத்திலேயே ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் யாத் கிஞ்ச ஜத்யாம் ஜகத் என்று ஈச்வரன் என்பவன் யார் என்பதைக் கூறுகிறது. உலகில் அறிவுள்ள பொருள் அறிவில்லாத பொருளென்று என்னென்ன உண்டோ அத்தனை பொருள்களும் ஈச்வரன் என்பவனால் வ்யாபிக்கப்பட்டுள்ளது என்கிறது. எனவே சித், அசித் எனப்படும்(ஈச்வர தத்வம் தவிர மற்ற இரு தத்வங்களிலும் )அனைத்துப் பொருள்களிலும் வ்யாபித்திருப்பவனே ஈச்வரன் எனப்படுபவன் என்பது தெளிவாகிறது. க: யார், ஈசு -ஈச்வரன் என்பது புணரும்போது கீசு என்றாகிறது. ]

இந்தப் பாட்டிலும் இப்புள்ளின் சப்தம், ஆய்ச்சியர் தயிர் கடையும் சப்தம், மற்றவர்கள் ஏற்கனவே துயிலெழுந்து பகவானுடைய வடிவழகையும் பெருமைகளையும் பாடுவது, அவன் திவ்ய நாமங்களைச் சொல்லி பஜனை செய்வது ஆகிய ஓசைகளையெல்லாம் கேட்டும் நீ விழித்துக்கொண்டே படுத்துக் கொண்டிருக்கிறாயோ என்று கூறுகிறாள். திருக்குறளில் புல்லறிவாண்மை என்னும் 85வது அதிகாரத்தின் கடைசிக் குறளாகிய ‘உலகத்தார் ‘ எனத் தொடங்கும் குறளின் கருத்தை இது ஒத்ததாய் உள்ளது.  பரிமேலழகர் தன் உரையில் ‘உயர்ந்தவர்கள் உண்டு என்று சொல்லும் விஷயங்களை [உதாரணமாக கடவுள் மறுபிறவி, வினைப் பயன் போன்ற விஷயங்களை] இல்லையென்று தன் புல்லறிவால் மறுப்பவர்கள் வையத்தில் காணப்படும் பேய் என்று கருதப்படுவர் என்று கூறுகிறார்.

இந்தக் குறளின் பொருளையே தன் சொல்லில் அடக்கிப் பேய்ப் பெண்ணே என்று விளிக்கிறாள். இதன் பொருள் மனிதர்க்கு விடியற்கலையில் எழுந்து பகவானைப் பஜிப்பது நன்மை தரும், மேலும் மார்கழி மாதத்தில் இது இன்னும் விசேஷமானது என்று உலகத்தாரும், முனிவர்களும் யோகிகளும் கூட பகவானைப் பஜித்தலாகிய இக்காரியத்தைச் செய்யும் பொழுது நீ இப்படிப் படுத்துக் கிடப்பது இவைகளையெல்லாம் இல்லை என்று சொல்லும் பேய் என்றல்லவோ உன்னைகருதவைக்கும் என்கிறாள். பறவைகளும் மனிதர்களும் எழுந்திருந்து அவரவர் தொழிலையும் பகவத் பஜனையையும் செய்யும்போது நீ ஏன் இப்படி கண் விழித்த பின்னும் படுத்துக் கிடக்கிறாய். உன் அழகையும் அறிவையும் வைத்து உன்னை எங்கள் நாயகப் பெண்பிள்ளை, தலைவி என்று கருதினோமே நீ பேய்ப் பெண்ணாகலாமா என்கிறாள்.

நாராயணன் மூர்த்தியைப் பாடுவது என்பது பகவானின் குண நலன்களையும் நற்செயல்களையும் பாடுதல். கேசவனைப் பாடுதல் என்பது கேசவன் முதலான திருநாமங்களைப் பாடி பஜனை செய்தல். இவையெல்லாம் செய்யவேண்டிய தகுந்த நேரம் இதுவாகும் என்கிறாள்.

தொடரும்

புதன், 9 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 6
புள்ளும் சிலம்பினகாண்---

ஐந்து பாடல்களுடன் பாயிரம் முடிந்து ஆறு முதல் பதினைந்து வரையுள்ள பத்துப் பாடல்களும் பகவானை நினைக்காமல் உறங்கிக்கொண்டிருக்கும் ஜீவர்களை எழுப்புவதாக அமைந்துள்ளன.

“ப்ராஹ்மே முஹூர்த்தே உத்தாய” என்று ஆஹ்நிகம் என்னும் நூலில் “மக்கள் ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளவேண்டுமென்று கூறுகிறது.  [ஆஹ்நிகம் என்பது நாம் தினமும் செய்யவேண்டியவையென சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ள செயல்களைக் கூறும் நூல். ] ஹோரை என்பது ஒருமணி நேர காலம் . சூர்யோதயத்திற்கு முந்தைய இரண்டு ஹோரை அதாவது இரண்டு மணி நேரத்துக்குப் ப்ராஹ்ம முஹூர்த்தம் என்று பெயர். அந்த நேரம் வந்துவிட்டது என்று கூறி அதற்கு மூன்று அடையாளங்களையும் காட்டுகிறாள்.

 1. பறவைகளின் ஒலி
2. கோவிலிலிருந்து வரும் ஒலிகள்
3. முனிவர்களின் குரலொலிகள்

பறவைகள் தங்கள் இயல்பான சக்தியைக் கொண்டு பொழுதை உணர்கின்றன. கோழி கூவுவதும் பறவைகள் சத்தமிடுவதும் பொழுது புலர்வதைக் காட்டும் இயற்கை தரும் அடையாளங்கள். கோவிலில் விடியற்காலையில் ஆராதனம் தொடங்கும் போது சங்கு ஊதுவதும் திருச்சின்னம் போன்ற வாத்தியங்களை முழக்குவதும் உலகம் அறிந்த அடையாளங்கள். முனிவர், யோகி என்று இருவகையானவர்களை இங்கு காட்டுகிறாள். பகவானை எப்பொழுதும் மனதில் இடைவிடாது த்யானம் செய்து கொண்டிருப்பவர்களை மனன சீலர்கள் என்றும் முனிவர்கள் என்றும் கூறுவர். யோகிகள் என்பார் இங்ஙனம் மனனம் செய்து செய்து அதில் வெற்றி பெற்றவர்கள். அதாவது சித்தி பெற்றவர்கள். இவர்களெல்லாரும் எப்பொழுதும் எம்பெருமானின் குணங்களையும் அற்புதமான செயல்களையும் மனதில் எண்ணிக்கொண்டே அவற்றை அனுபவித்துக் கொண்டே காலத்தைக் கழிப்பவர்கள் . ஆஹ்நிகம் கூறும் விதிப்படி அதிகாலையில் துயிலெழுந்து ஹரி நாமத்தை இவர்கள் உச்சரிப்பதாகக் கூறுகிறாள்.

’வித்து’ என்னும் சொல்லுக்கு ’விதை’ என்பது பொருளாகும். படைப்பிற்கு மூல காரணமான பொருளாக விளங்குபவரும், ஹரியென்னும் பெயரை உடையவரும், ஓம் எனப்படும் ப்ரணவத்தின் பொருளானவருமான பரமாத்மாவை வித்து எனக் குறிப்பிடுகிறாள்.

பகவத் கீதை 7-10ல் ‘பீஜம் மாம் ஸர்வபூதானாம்’ என்றும் கீதை 14-4ல் ’அஹம் பீஜ ப்ரத: பிதா’ என்றும் பகவான் கூறியுள்ளதைக் காண்க. ‘இப்படைப்பில் காணப்படும் பொருள்களுக்கெல்லாம் நானே வித்தாவேன்’ என்பதும் ‘நானே விதைகளைக் கொடுப்பவனும் ப்ரபுவுமாவேன் என்பதும் இவற்றின் பொருள். இந்த வித்தே ஸத்வ, ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களுக்கும் ஆகாயம், நிலம், நீர், தீ காற்று எனப்படும் ஐம்பெரும் பூதங்களுக்கும் மூல காரணமானதாகும். இவ்வித்து தான் பாற்கடலில் முளைத்து வளர்ந்தது என்று கூறுகிறாள். உலகில் நாம் காணும் விதைகள் முளைத்து செடியாக மரமாக வளர்கிறது, பின் அழிகிறது. ஆனால் இந்த விதைக்கு அதுபோன்ற மாற்றங்கள் எதுவும் கிடையா. இது நித்யமானது, அழிவற்றது. உலகில் நாம் காணும் சித், அசித் எனப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் எம்பெருமானே மூல காரணமாக இருப்பதால் இங்கு அவனை வித்து என்று குறிப்பிடுகிறாள்.

இவ்வுலக வாழ்வில் பல்வேறு கவலைகளால் ஏற்படும் துன்பங்களால் கொதித்திருக்கும் மனித உள்ளங்கள். இப்பனிக்காலத்தில் விடியற்காலையில் உள்ள குளிர்ச்சியினால் உடல்மட்டுமின்றி உள்ளமும் குளிரட்டும் என்கிறாள்.  அதற்கு பகவானின் நாமங்களைச் சொல்வதும், கேட்பதும், அவனது குண, செயல்களை நினைப்பதும் உள்ளம் குளிர வகை செய்யும் எனவே அத்தகு செயல்களைச் செய்யாமல் படுத்திருக்கலாமா என்கிறாள். ஹரியென்ற பேரரவம் கேட்டு உள்ளம் குளிரவில்லையா என்று கேட்கிறாள்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 6 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

வியாழன், 3 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

5ம் பாசுரம் தொடர்ச்சி

இனி கடைசியாக இந்த தெய்வம் தாயைக்குடல் விளக்கம் செய்தது என்கிறாள். அவதரிக்க ஒரு தாய் வேண்டும். அவள் குடல் இவனைப்பெற்றதால் பெருமை பெரும். இவனும் நல்ல அறத்துடன் வாழும் நல்ல மனை மாட்சியுள்ள இடத்தில்தான் அவதரிப்பான். இப்படி ஒரு மனை மாட்சி அமைய, இல்லறம் நடத்த ஒரு வீடு தேவை. வீட்டின் முக்கியமான பொருள் தூணாகும். தூண் இல்லையேல் உத்திரமும் கூரையும் நிற்காது. அப்படிப்பட்ட தூணின் பெருமையைக் காட்டவே அதைத் தன் தாயாக்கிக் கொண்டு முன்பு அதில் அவதரித்தவன் இவன். தாயைக் குடல் விளக்கம் செய்த செயல் இதுவும் தான். வெகுகாலம் பிள்ளைப்பேறின்றி வருந்திய கெளசல்யையின் வயிற்றில் பிறந்தான் ராமன். மன்னு புகழ் கோசலைதன் மணி வயிறு வாய்த்தவனே என்பதையும் நோக்குக. 

இந்த கிருஷ்ணாவதாரத்தில் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தான். இப்படி இரண்டு தாய்களின் குடல்களையும் விளங்கச் செய்தான். இவனைப் பெற்றதாய் முதல் ஆறு குழந்தைகளைப் பறி கொடுத்தவள். ஏழாவது கர்ப்பமும் சிதைந்தது. எட்டாவதான இக்குழந்தைதான் பிறந்து உயிருடனும் இருந்தது. அதனால் அப்பொழுது தான் இத்தாயின் குடலும் விளங்கியது. யசோதைக்கும் குழந்தையில்லாமல் வயது ஏறிக்கொண்டிருந்தது. குழந்தையை மாற்றி இவனுடைய இடத்தில் வைப்பதற்காக மாயை இவள் வயிற்றில் பிறந்தாள். எனினும் குழந்தை மாறிய செய்தியறியாத இத்தாய் இவனையே ஏழு வயது வரை தனக்குப் பிறந்த குழந்தையாகவே எண்ணி வளர்த்தாள். இப்படி இவள் குடலும் விளங்கிற்று. ஆனால் இவ்வளவையும் செய்துவிட்டு அந்த யசோதையும் மற்ற இடைச்சிமாரும் இவன் வயிற்றில் கயிறுகளைக் கட்ட ஒன்றும் அறியாதவன் போல் கட்டுவதையும் தடுக்காமல் தன்னையே கட்டுண்ணப் பண்ணிக் கொண்டு பொறுத்திருந்தான் என்று அவனுடைய செளஸீல்யத்தையும், செளலப்யத்தையும் குறிக்கும் வண்ணமாக தாமோதரன் என்று அவனைச்  சொல்லி இத்துணை எளியவனை நாம் சிறிதும் பயமில்லாமல் அணுகி அவனை அண்டி வாழலாம், அவன் நிச்சயமாக நம்மைக் காப்பாற்றுவான் என்னும் பொருள்பட பாடுகிறாள். 

இனி அவ்வெம்பெருமானை ஆராதிக்கும் முறையைக் கூறிப் பாட்டை முடிக்கிறாள். இங்கு தூயோம் என்றதற்கு ‘மனம், மொழி, செயல்களின் பரிசுத்தம்’ என்பது சாஸ்திரங்கள் கூறுவது. “தஸ்மாத் சாஸ்த்ரம்----- “ எனத் தொடங்கும் கீதை [16-24] ச்லோகத்தை இங்கு பொருத்திப் பார்க்க. மேலும் நம்முடைய சிந்தனையும் வாயினால் பாடுவதும் தொழுவதும் எல்லாம் எப்படி இருக்கவேண்டுமென்பதற்கு ஆண்டாள் கூறும் சூத்திரம் இது. இந்த சூத்திரத்திற்கு விரிவுரையாக மனம் மொழி செயல் மூன்றையும் வரிசைப் படுத்தி பெரிய திருமொழி 1-6ல் 7,8,9 பாசுரங்களில்* முறையே திருமங்கை மன்னன் கூறியிருப்பதையும் காணலாம். மரம் செடி கொடிகளில் பூக்கும் மலர்கள் பெருமாளுக்கு கைகளால் தூவும் மலர்கள். வாயினால் பாடும் வாக்கியங்கள் பகவானையே எப்பொழுது ம் சிந்திருத்திருந்த நம் முன்னோர்களின் ஸ்தோத்திரங்களாக இருக்கவேண்டுமென்பதைக் குறிப்பிட்டு பாவினால் இன்சொல் பன்மலர் கொண்டு என்று வாயினால் சமர்ப்பிக்கும் மலர் அதுவே என்று 8ம் பாசுரத்தில் குறிப்பிடுவதைக் காண்க. இவற்றை ஆராய்ந்தால் இன்னும் பெருகும் என்பதால் இத்துடன் அமைகிறேன்.

* [நைமிசாரண்ய பதிகத்தில் திருமங்கையாழ்வார் ‘நீதியல்லாதன நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் ,செய்தும்”முதலில் வாழ்ந்தவர் மனம் திருந்தி “அஞ்சிநான் வந்துன் திருவடியடைந்தேன்” என்று பின்னர் செய்ததைச் சொல்கிறார். ”பாவினால் இன்சொல் பன்மலர் கொண்டு உன் பாதமே பரவி” என்கிறார். இவ்வாறு தாம் முதலில் செய்யத்தகாதவற்றைச் செய்ததாகக் கூறி பின்னர் மனம் திருந்தி ”உந்தன் சரணமே சரணமென்றிருந்தேன்’ என்கிறார். மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் செய்யவேண்டியவைகளை இங்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார் என்று NRK ஸ்வாமி காட்டுகிறார்.]

5ம் பாசுரம் நிறைவுற்றது.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 5 தொடர்ச்சி

மேலும் இல்வாழ்க்கையிலிருப்பவர்களுக்கு இந்த ஸம்ஸாரமானது ஒரு ’அர்ணவம்’, ’ஸாகரமெ’ன்று ஒரு பெருங்கடலாக நூல்கள் குறிப்பிடுகின்றன. அவைகளுக்குச் சரியான தமிழ்சொல் ’பெருநீர்’ என்பதாகும். மற்ற ஆழ்வார்கள், ஆசார்யர்கள் எல்லோரும் பெண்டிரோடு நடத்தும் குடும்ப வாழ்க்கையை வெறுத்தும் ஒதுக்கியும் ‘அவ்வாழ்க்கை பகவானிடம் தாம் கொண்டிருந்த ஈடுபாட்டைக் கெடுத்துவிட்டது’ என்றும் பாடி வருந்த, மாறாக இவள் ஒருத்திதான் ‘இல் வாழ்க்கையை பரிசுத்தமானது’ என்று காட்டுகிறாள். ‘ப்ரஜாயாஹிப் புருஷ: பூர்ண:” என்னும் வேத வாக்கியத்தையும், “தர்ம ப்ரஜா அபிவ்ருத்யர்தம் விவாஹம் விதினா குரு” என்னும் மனு வாக்கியத்தையும், “மங்கலமென்ப மனைமாட்சி; மற்றதன் நன்கலம் மக்கட்பேறு” என்னும் திருக்குறளையும், “வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே” என்னும் ஆண்டாள் அருளிச் செயலையும் நோக்குக.இவளுடைய அருளிச்செயலில் நன்மக்கட்பேறு என்பது மனைமாட்சிக்கு நல்ல ஆபரணம் [நன்கலம்]  என்பதை அடியொற்றி இவள் நன்மக்களைப் பெற்று என்று பாடியிருப்பது நோக்கத்தக்கது. இதிலுள்ள மகிழ்ச்சி ஒவ்வொரு கிருஹஸ்தனுக்கும் [இல்லறத்தில் இருப்பவனுக்கும்] நன்மக்கள் பிறந்தவுடன் வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள, தொன்றுதொட்டு அவர்கள் குலத்தில் கைக்கொண்டிருந்த தர்மங்களும் இனியும் தொடரும், நிலைத்து நிற்கும் என்னும் பெருமிதமாகும். இஃது இல்லாவிட்டால் குலத்திற்கு குறைவு உண்டாகும். ‘குலக்ஷயே ப்ரணஸ்யந்தி’ எனத் தொடங்கும் கீதை [1-40] ச்லோகத்திலும் அர்ஜுனனின் கவலையாக இது காட்டப் பெறுகிறது, ’தூய’ என்னும் ஒரு சொல்லில் இந்த தெய்வக்கவி இவ்வளவையும் அடக்குகிறாள். இன்னும் உள்ளவைகளை நல்ல அறிஞர்கள் உய்த்துணர்வார்களாக.

நீரோட்டம் அல்லது நீர் நிலைக்குப் பக்கத்திலிருந்து அக்கரை போக வேண்டியவர்களை படகில் ஏற்றிக் கடத்தி வைப்பவன் ‘துறைவன்’ . இந்த ஒரு சொல்லில் சரம ச்லோகத்தின் அர்த்தத்தை முற்றிலுமாக உணர்த்துகிறாள். அங்கே ’மோக்ஷயிஷ்யாமி’ என்னும் சொல்லில் ’விடுவிக்கிறேன்’ என்னும் பொருளை மட்டுமின்றி ’தாரயிஷ்யாமி’ ’கடத்தி வைக்கிறேன்’ என்னும் பொருளையும் சேர்த்துக் காட்டி வராஹ சரமச்லோகத்தில் ’நயாமி பரமாங் கதிம்’ என்று முன்பு பூமிப்பிராட்டியாகிய இவளுக்குச் செய்துகொடுத்த வாக்குறுதியையும் கண்ணனுக்கு ஞாபகப்படுத்தித் ‘துறைவன்’ என்று அவனைக் குறிப்பிடுகிறாள். இச்சொல்லினால் பிரபத்தியும் அதன் பயனாக மோக்ஷம் கிடைத்தலும் சொல்லப்பட்டது.

நாலாவதாக ”ஆயர் குலத்தினில் தோன்று மணிவிளக்கு” என்று உத்தரக்ருத்யாதிகாரம் [ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் பிரபத்திக்குப்பின் ஒரு பிரபன்னன் தம் வாழ்வில் செய்யவேண்டிய, கடைப்பிடிக்கவேண்டியவைகளை விளக்கும் அதிகாரம்] கூறும் பொருளை விளக்குகிறாள். இப்பொருள் திருப்பாவை 28ம் பாசுரத்தில் நன்கு விளக்கப் பட்டுள்ளது. எனவே அதுவே இதற்கு வியாக்யானம் என்று கொள்க. இங்கு மணி விளக்கு என்று கூறியது விசேஷம். “வெய்யோன் ஒளி தன் மேனியில் விரிசோதியின் மறைய” [கம்ப ராமாயணம் -கங்கைப் படலம்- 6.1] என்பதுபோல் ஸ்வயம் ப்ரகாசத்தால் [தன்னிடமே இயல்பாகஅமைந்துள்ள ஒளியால்] வழிகாட்டும் விளக்கு இது. எனவே மாணிக்கச்சுடர் என்னும் பொருள்பட மணி விளக்கு என்றாள். இது கலங்கரை விளக்கு. ஸம்ஸாரப் பெருங்கடலில் காற்றினாலும் அலைகளாலும் அலைக்கப்பட்டுத் தவிக்கும் சிறு படகுகள் இந்த விளக்கையே குறிக்கோளாகக் கொண்டு அதை நோக்கியே படகைச் செலுத்தி அதன் பக்கத்தில் ஒதுங்கித்திருவடிநிழலில்வாழவேண்டுமென்பதைக்குறிப்பிடுகிறாள். இந்த விளக்கிற்கும் [தகழியும்] நெய்யும் வேண்டும் என்று முதல் ஆழ்வார்கள் இருவரும் உபாயத்தைச் சொன்னதையும் ஏற்றுக் கொள்கிறாள். மேலும் இதனால் நாம் அடையவிருக்கும் பயனாகிய உபேயமானது இவை இரண்டையும் [தகழி, நெய்] வேண்டாத [தேவைப்படாத] மாணிக்கச் சுடர் என்று காட்டும் அழகு ரசிக்கத்தக்கது.

(இங்கு ஸ்ரீNRK ஸ்வாமியின் விளக்கம் சற்றே விவரிக்க வேண்டியுள்ளது. முதலாழ்வார்களில் முதல் இருவரும் முறையேவையத்தை தகழி(அகல்)வார்கடலை நெய்யாகவும், அன்பைத்தகழி,ஆர்வத்தை நெய்யாகவும் கொண்டு விளக்கு ஏற்ற, இருளகன்று அவ்வொளியில் மூன்று ஆழ்வார்களும் பெருமாளைக் கண்டனர்.இவ்விதம் இங்கு உபாயம், உபேயம் இரண்டும் சொல்லப்பட்டன.ஸம்ஸாரக்கடலில் மனிதனுக்கு படகு,துடுப்பு,முதலிய சாதனங்களும், கலங்கரைவிளக்கு என எல்லாம் (உபாயங்கள்) தேவைப்ப்படும் அதேவேளையில் மோக்ஷமாகியகரையில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் எம்பெருமானாகிய விளக்கைக் காண வேறு ஒரு விளக்கின் தேவையில்லை;ஏனெனில் அது ஸ்வயம் ப்ரகாச்மான விளக்கு என்பதை குறிக்கும் வண்ணம் ‘மணிவிளக்கு’ என்னும் சொல்லைப் பயன்படுதியிருப்பதுஅழகு என்பது ஸ்வாமியின் அபிப்ராயம்)

சனி, 26 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


5-ஆம் பாசுரம்- மாயனை-----

ஆண்டாளுடைய திருப்பாவையில் கருத்துக்கள் இமயமலையினும் உயர்ந்தவை. பசிபிக் மஹா ஸமுத்திரத்திலும் ஆழமானவை.முப்பது பாட்டுக்களையும் ஆறு ஐந்துகளாகப் பிரிப்பர் பெரியோர். “ஐயைந்தும் ஐந்தும்” என்பதை நோக்குக.அவைகளில் முதல் ஐந்து பாடல்களும் இந்நூலுக்குப் பாயிரங்களாகும். அப்பாயிரங்களுள் இது கடைசிப் பாட்டு.
முதல் பாட்டில் ”நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று பரத்வத்தையும்,
“ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்” என்று கண்ணனின் ஸெளலப்யத்தையும், ந்ருஸிம்ஹன் வடிவமான தன் இதயத்தின் வழிபடு தெய்வமாகிய அந்தர்யாமியையும்,சொன்னாள். இரண்டாவது பாட்டில்  பாற்கடலில் பையத்துயின்ற பரமன் ” என்று வ்யூஹ மூர்த்தியைச் சொன்னாள்.
மூன்றாவது பாட்டில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று வாமனனாய் வந்து த்ரிவிக்ரமனாய் நீண்ட விபவ மூர்த்தியைச் சொன்னாள்.நாலாம் பாட்டில் அர்ச்சாமூர்த்தியை மேகத்தில் காட்டிக் கொடுக்கிறாள். இவற்றுள் பரம், வ்யூஹம் என்ற இரு மூர்த்திகளும் நம்மால் காணவியலாத இடங்களில் இருப்பவை. விபவம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே தோன்றி மறைபவை.அந்தர்யாமி அகக் கண்ணுக்கு மட்டுமே தோன்றும். புறக்(வெளி)கண்களுக்குப் புலப்படாதது.எனவே இந்நாலு மூர்த்திகளையும் வேறுபடுத்திக் காட்டி அர்ச்சையை உயர்வாக இப்பாட்டில் காட்டுகிறாள்.
கடல் நீரில் இருக்கும் உப்பு, கைப்பு, துவர்ப்புகளைப்போல இந்நான்கு மூர்த்திகளிலும் சில குறைகள் [மேலே சொன்னபடி] இருக்கின்றன என்றும் அந்த கடலிலிருந்து சுத்தமான ஜலத்தைப் பிரித்து எடுத்து அதைக் குன்றின்மேல் மழையாகப் பெய்து அந்த மழை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்து விதமான நிலங்களிலும் ஓடி அனைத்து உயிர்களையும் வாழவைப்பது போல் அர்ச்சாமூர்த்தியும் தம் அருள் புரியும் திறத்தினால் அவ்விதம் விளங்குகிறது என்பதும் ஆண்டாள் திருவுள்ளம். அதனால் அர்ச்சையை மேகம் போன்றது என்று ‘ஆழிமழைக் கண்ணா’ என்று விளித்துத் தொடங்குகிறாள்.

1.உப்பினால் ஒன்றுக்கும் உதவாத கடல்நீர் அனைத்துலகுக்கும் உயிரளிக்கும் மழை நீராக மாறுவதற்கு கண்- இடமாகவுள்ள ஏ! மேகமே! [கண்ணா] என்றழைக்கிறாள். இந்த ஐந்து மூர்த்திகளையும் வழிபடும் முறையை அங்கங்கே கற்றுக் கொடுத்தவள் இங்கு பகவானை ஆராதிக்கும் முறையை எவ்வித மன மொழி செயல்களோடு செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறாள். நம்முடைய ஆராதிக்கும் தெய்வம் கண்ணன் என்கிறாள். அவனுடைய தன்மையை ஐந்து விதமாக வருணிக்கிறாள்.
மாயனை- கண்ணன் பரப்ரஹ்மம். மாயை அவனுக்கு அவசியமானது; அடங்கி நடப்பது. இதை ‘தைவீ ஹ்யேஷா-----’ என்னும் [கீதை 7.14] ச்லோகத்தில் காணலாம். ‘ஹே அர்ஜுனா ஸத்வ, ரஜஸ்,தமஸ் ஆகிய முக்குணங்களின் மயமாக உள்ள இந்த என்னுடைய மாயை உங்களால் கடக்க முடியாதவள். என்னையே யார் வந்து அடைகிறார்களோ அவர்கள் மட்டுமே இதைத் தாண்டுகிறார்கள் என்கிறார் பகவான். மாயயைக் கடந்து பகவானின் திருவடிகளை அடைவதற்கு பகவான் ஒருவனே உபாயம். [வழி] அவனைத் தவிர வேறு உபாயம் கிடையாது என்கிற வேத சாஸ்த்ரங்கள் கூ றும் முடிவை இங்கே ’மாயனை’ என்னும் ஒரு சொல்லால் குறிப்பிட்டாள். அதைத் தாண்டச் செய்யவல்ல இந்த தெய்வமே எல்லோருக்கும் வழிபடத்தக்கதான தெய்வம்
என்று சுட்டிக்காட்டுகிறாள்.

2.அடுத்து ‘மன்னு வட மதுரை மைந்தன்’ என்று கூறி கண்ணனே நம் பக்திக்குரியவன் , மோக்ஷத்திற்கு உபாயமாகிய பக்தியை அந்தக் கண்ணனிடத்தில் பண்ணவேண்டும் என்கிறாள். கண்ணன் இயற்கையில் அழகு நிறைந்தவன். அத்துடன் வட மதுரைக்கு வந்த போது கம்ஸனுடைய அரண்மனைக்குச் செல்லும் வழியில் வந்த வண்ணானிடமிருந்து கம்ஸனுடைய உயர்ந்த ஆடைகளையும், மாலாகாரனிடமிருந்து [பூக்காரர்] புஷ்பங்களையும், கூனியாகிய குப்ஜையை நேரே நிமிர்த்தி அவளிடமிருந்து மணமிகு சந்தனத்தையும் இப்படி எல்லாவற்றையும் வாங்கி அணிந்துகொண்டு செயற்கையழகும் நிரம்பி மணமகனாக விளங்கியிருப்பவனை மனத்தினால் சிந்திக்க வேண்டுமென்று கூறி பக்தி செய்வதற்கு அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹமே [திருமேனி] நமக்கு நோக்கமாயிருப்பது [லக்ஷியமானது] என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். வால்மீகி ஸ்ரீராமனை ‘குணவான், வீர்யவான்’ என்று அடுத்தடுத்து எடுத்தாற்போல் இவளும் ’இங்கு இவன் மணமகன் போன்ற அழகியவன்’ என்றும் பல வீரச் செயல்களைச் செய்தமையால் ‘பெரியவன்’ என்றும் குறிப்பதற்கு ‘மைந்தனை’ என்கிறாள். ‘மைந்தே வலிமை’ என்னும் தொல்காப்பிய பொருளாதார சூத்திரத்தைக் காண்க.

3. அடுத்து பிரபத்தி உபாயத்தையும் அதன் பயனையும் அருளிச் செய்கிறாள். ‘பெருநீர் யமுனை’ என்றது கடல்போல் அகன்று ஆழ்ந்து நீண்டிருக்கும் யமுனை என்று பொருள். இதற்குத் தூய என்னும் அடைமொழி உப்பு துவர்ப்பு முதலான கடல்நீரின் கெட்ட குணங்கள் ஏதும் இல்லாதது என்பதைக் குறிப்பிட்டு அதன்மூலம் வேதம் காட்டும் மத்வாதி 32 வித்யைகளிலும் உள்ளது போல் உடலை வருத்திக் கொள்ளல், விரதம் இருத்தல் முதலிய துன்பங்கள் ஏதுமில்லாமல் சுகமாகவும் இனிதாகவுமுள்ள நம்மால் எளிதில் செய்யவல்ல பிரபத்தியை இங்கே குறிப்பிடுகிறாள்.

தொடரும்

என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 5 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.


  

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 4 தொடர்ச்சி

ஆழிமழைக்கண்ணா-----

பகவானுடைய பஞ்சாயுதங்கள் எனப்படும் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என்னும் ஐந்து ஆயுதங்களும் அவனடியார்கள் அவனை வணங்கும்பொழுது அவனுக்கு ஆபரணங்களாகவும், அசுர ராக்ஷஸர்களை எதிர்த்து அழிக்கையில் அவனுக்கு ஆயுதங்களாகவும் விளங்குகின்றன. ‘பாழியந்தோளுடை’ என்று அவனை அடையாளம் காட்டியது ‘அவன் அசுர ராக்ஷஸர்களை வெல்லச் செயல் புரிபவன் என்றும் அச்சமயத்தில் ஆபரணமாக இருந்த சக்கரம் ப்ரயோக [செலுத்தப்பட்ட] சக்கரமாகி நிமிர்ந்து கிளம்பும் என்றும் அப்பொழுது அது தன் முழுமையான ஒளியுடன் திகழும் என்றும் காட்டவே. மின்னலின் ஒளியும் இந்த ப்ரயோகச் சக்கரத்தின் ஒளியை ஒத்திருப்பதாக மின்னலுக்கு சக்கரத்தை உவமையாகக் காட்டுகிறாள்.

வலம்புரி போல் நின்றதிர்ந்து என்பதின் பொருளை ‘ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே’ என்று 26வது பாடலில் கூறுகிறாள். [அச்சங்கின் ஒலி திருதராஷ்டிரன் முதலியோரின் இதயங்களை நடுங்கச் செய்தது என்னும் பகவத்கீதையின் ச்லோகத்தையும் [1-19] இங்கு நினைவில் கொள்க.]

சார்ங்கமுதைத்த சரமழைபோல் என்று வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளைப் போல் பெய்யவேண்டும் என்றதோடு உவமையை நிறுத்திக்கொண்டு அதன் பயனை மாற்றிப் பேசுகிறாள். அம்பு மழை எதிரிகளை சாய்ப்பதற்கு பெய்வது. நீ அங்ஙனமின்றி நாங்கள் வாழ்வதற்குப் பெய்யவேண்டும் என்கிறாள். இப்படி வாழப் பெய்யும் இந்த மழை நீரும் இங்குள்ள எச்சில் , அழுக்கு முதலான அசுத்தங்களைக் கழுவிவிட்டு இவ்விடங்களைப் பரிசுத்தமாக்குவதால் தீய சக்திகளை அழிக்கும் எம்பெருமானின் ஆயுதங்களைப் போல் நற்காரியங்களைச் செய்வதுடன் மக்களுக்கு இன்றியமையாத பயிர்களையும் நன்கு விளையும்படி செய்கிறது. இவை இரண்டையும் அதாவது அநிஷ்ட நிவாரணம் எனப்படும் தீமை விலகுதல் , இஷ்டப் ப்ராப்தி எனப்படும் நன்மை பெறுதல் என்னும் இரண்டும் உண்டாகிறது என்னும் பொருள்பட ‘வாழ’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறாள்.
நான்காம் பாசுரம் நிறைவுற்றது.                



\-

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 4

ஆழி மழைக் கண்ணா-----

முதல் மூன்று பாட்டுக்களில் பரம், வ்யூகம், விபவம் ஆகிய நிலைகளிலிருக்கும் சரண்யனை [ அனைவராலும் சரணமாகப் பற்றத் தகுந்தவன்] பாடுகிறாள். உலகம் உய்வடைவதற்காக. இவை அவள் பாடிய கடவுள் வாழ்வதாகும். தமிழ் கவிகள் பலகாலமாக கடவுள் வாழ்த்து பாடியதும் தொடர்ந்து வான் சிறப்பைப் பாடும் மரபினைக் கொண்டுள்ளனர். அதையொட்டி வான் சிறப்பாக நான்காவதான இப்பாசுரத்தை வைத்தாள். தம் கவி பாடும் திறமையினால் அந்த மேகத்தையே நாராயணனாகப் பாடுகிறாள். நான்காவது நிலையான அர்ச்சையையும் பாடுகிறாள்.

பகவான் தம்மை அடியார்கள் விரும்பித்தொழும் உருவத்துடன் அவர்கள் விரும்பிய இடங்களிலெல்லாம் கோவில் கொண்டு எழுந்தருளியிருப்பது  போல் இந்த மேகமும் தாகத்துடன் நீர் வேண்டுமிடங்களிலெல்லாம் என்று மழையாகப் பெய்கிறது.

அர்ச்சையிலுள்ள பெருமாளின் மேன்மையைக் கூறி இந்த மேகத்தினிடத்திலும் பெருமாளின் அதே இயல்புகள் உள்ளன என்பதையும் எடுத்துக்காட்டி மேகம் தன்னைப் போன்றவர்களுக்கு எல்லாம் எப்படி மழை பொழிந்து எல்லா நற்பயன்களையும் பெறச் செய்கிறதோ அதுபோல் பெருமாளும் அர்ச்சாமூர்த்தியாக எழுந்தருளியிருந்து அருள்புரியக் காத்திருக்கிறான் என்கிறார்.

தமருகந்தட்ட்தெவ்வுருவம் அவ்வுருவம்தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர்,-தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்திமையாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்.(முதல் திருவந்தாதி-44)

நாமும் அந்த மேகம் பொழிந்த மழை நீரில் குளித்து உடலை சுத்தம் செய்துகொண்டு அவனுடைய நீமையில் [நீராடப் போதுவீர் என்று முதலில் அழைத்ததற்கிணங்க] முழுகித் திளைத்து அதனால் ஆத்மாவையும் சுத்தம் செய்து கொள்வோம் என்றுபாடி தலைக்கட்டுகிறாள். [முடிக்கிறள்]

இங்கே

புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்.(துருக்குறள்-30.8)
குறளின் பொருள் ஆராயத்தக்கது. வடமொழியில் ஸத்யம், செளசம் என்று திரும்பத் திரும்பச் சொல்லுவர். ஸத்யம் என்பது அகத் தூய்மை. செளசம் என்பது புறத் தூய்மை. மழை நீரால் உடல் தூய்மையும் மனத் தூய்மைக்கு மனத்துக்கண் மாசிலனாகி அவனை ஆராதித்தலுமேயாகும். அவனது குணங்களை எண்ணி அதில் திளைத்திருப்பதால் மனம் மாசு நீங்கி சுத்தமாகும் என்கிறாள்.

மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்
ஆகுல நீற பிற.(குறள்-4.4)

இந்த ஒரு பாசுரத்தில் ஐந்து காரியங்களைக் கூறுவது இவளுடைய கவிபாடும் திறனைக் காட்டுகிறது. அவையாவன

1. வான் சிறப்பு, 2. அர்ச்சாமூர்த்தி, 3. அது மேகத்திலுள்ளதென்பது 4. அதை வணங்க வேண்டுமென்பது, 5. அதனால் அனைத்து நலன்களும் உண்டாகும் என்பது.

ஆழிமழை- இச்சொற்களில் உள்ள சினையாகிய நீரைக் குறிப்பதால் இவை ‘முதல் ஆகு பெயரில் வந்தது. கண், இடம், ஒன்று-சிறிது, கை-செயல், கரத்தல்- ஒளித்தல். கைகரவேல்- ஒளிக்காமல் செய்.

இங்கு இந்திரனுடைய காரியமான மழை பெய்தலை நீ தவறாமல் செய். என்னும் வேத வாக்கியத்தை நினைவூட்டுகிறாள். ஆர்த்தல்- கட்டுதல். தன்னிடமுள்ள மின்னல் என்னும் சக்தியைக் கொண்டு ஆவியாக இருக்கும் நீரைத் தான் கட்டி எடுத்துக் கொண்டு மேல் எழுகிறது [செல்லுகிறது] என்ற விஞ்ஞான ஆராச்சியாளர்கள் கண்டுள்ள உண்மையை ஆர்த்தல் [கட்டுதல்] என்னும் சொல்லால் விளக்குகிறாள். ஏறி- பலவிடங்களுக்கும் செல்வதற்காக மேலே செல்லுதல். பகவான் திருவுள்ளம் குளிர்ந்து அருள் பொழிவதை இங்கு மேகம் நன்கு கறுத்து மழை பொழிதலுக்கு உவமை யாக்கினாள் என்பதை ’போல்’ என்னும் உவமையுருபு [உவமைச் சொல்] காட்டுகிறது. ஆண்டாள் ஊழிமுதல்வனாகிய பெருமாளின் அருகில் இருப்பவள் அவனை அதிகம் அறிந்தவள் அதலால் அவளுக்கு மேகம், பெருமாள் இருவருக்குமிடையிலான நிற ஒற்றுமை மனதில் உண்டாகிறது.

’ஊழி முதல்வன்’ என்பதை ஊழியான், முதல்வன் என்று வைத்துப் பொருள்கொள்ளல் வேண்டும். ஊழியான்- அழிப்பவன் [ஸம்ஹாரம்]. முதல்வன்- படைப்பவன். இவ்விரண்டு செயலுக்கும் உடையவன் இவனே என்பதை ‘அன்’ விகுதி காட்டுகிறது. நிக்ரஹம் [தண்டித்தல்] அனுக்ரஹம் [அருள்புரிதல்] இரண்டையும் செய்வது வலக்கையாதலால் பாழியந்தோள் என்று அதைக் கூறினாள். பற்பநாபன் என்பதை ‘முதல்வன்’ என்றதோடு கூட்டி பொருள்கொள்ளவேண்டும். அவனுடைய நாபியில் மலர்ந்த தாமரையில் படைக்கும் தொழிலைச் செய்யும் ப்ரம்மா தோன்றியதைக் குறிப்பால் உணர்த்துகிறாள். ஒரு விதை முளைத்து வளர்வதற்கு முன் இருக்கும் நிலையை ‘முதல்’ என்னும் பெயரால் குறிப்பிடுகிறோம். எனவே ஸ்ருஷ்டி என்னும் பயிர் வளர காரணமான வித்தினுடைய ‘முதல்’ என்னும் நிலை இவனே.  இவனே பின்னர் ‘வித்தாகி, ஸ்ருஷ்டியும் இவனிடமிருந்தே உண்டாகிறது.
கையில் என்பதற்குச் செயலில் என்றும் பொருள் கொள்ளவேண்டும். [அனைத்தும் இவன் கையில்’ என்பதாக.]

தொடரும்---

என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 


பாசுரம் 4 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

































          

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

அத்யாத்மசாஸ்த்ரம்

இடுகை 6

பக்தி என்றால் என்ன? அன்பு என்றால் என்ன?இரண்டிற்குமுள்ள வேறுபாடு என்ன?இதற்குத் தம் ‘ந்யாய ஸித்தாஞ்ஜனம்’ என்னும் நூலில் ஸ்வாமி தேசிகன் விடையளிக்கிறார். “மஹனீயர்களிடத்தில் உண்டாகும் ப்ரீதியே பக்தியாகும்” என்கிறார்.எனவே நம்மைவிட உயர்ந்தவர்கள், பெரியவர்கள், நம் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்கள் ஆகியோரிடத்தில் ஏற்படும் அன்பை பக்தி என்றும் நம்மைவிடச் சிறியவர்களிடத்தில் ஏற்படும் ப்ரீதி,ஆசையே அன்பு என்றும் கூறப்படுகிறது.பகவானிடம் ,பெற்றோர்களிடம், ஆசார்யர்களிடம்நமக்கு உண்டாவது பக்தி; நம் குழந்தைகளிடம் உண்டாவது அன்பு.(கணவன் மனைவி விஷயத்தில்? அது உங்கள் சிந்தனைக்கு!).
’ஸ்ரீ ராமசந்திர சுக்ல’ என்னும் ஒரு ஹிந்தி எழுத்தாளர் இதற்கு “பக்திக்கு இடமாவது மனித மனமே. ஒரு விஷயத்தைக் குறித்து மதிப்பும் (மரியாதையும்), அன்பும் மனதில் சேரும் பொழுது அங்கு பக்திஉதயமாகிறது.” என்று அழகாக விளக்கம் அளிக்கிறார்.

மனிதனின் மனம் பரமாத்மாவிடம் பல மதிப்பிற்குரிய விஷயங்களைக் கண்டதும் அவன்பால் ஈர்க்கப்படுகிறது. எல்லையற்ற அழகு, குணநலன்கள், சக்தி, வள்ளன்மை இவைகளின் மொத்த உருவமாக அவன் பரமாத்மவைக் கருதி அவரைத் தன் உள்ளத்தில் நிறைத்துக் கொள்கிறான். எங்கும் நிறைந்தவன், எல்லாம் நிறைந்தவனாகிய இந்தபகவானை நினைக்கும்தோறும் இவன் மனம் தழுதழுக்கிறது. அவனைக் காணவும் ,அதற்குக் காரணமாக அமையும் அவன் காட்டிய பாதையில் நடக்கவும் ஆசை உண்டாகிறது.அன்பினால் நிறைந்த அவன் மனம் எல்லையில்லா ஆனந்தத்தை அனுபவிக்கிறது. எனவே பக்தி என்பது உள்ளத்தில் தோன்றுவது. புத்தியில் (அறிவினால்) தோன்றுவதல்ல. புத்தியைக் கொண்டு பக்தி செய்வது மூக்கினால் சாப்பிடுவதும், காதினால் வாசனையை முகர்வதற்கும் ஒப்பாகும் என்கிறார் மேலேகண்ட ஹிந்தி எழுத்தாளர்.

இத்தகு பக்தியையே நம் விசிஷ்டாத்வைதம் வற்புறுத்துகிறது. ‘ஞானத்தால் மோக்ஷம்’ என்பதை மறுத்து ’பக்தியுடன் கூடிய ஞானமே மோக்ஷத்துக்குச் சிறந்த வழி’ என்று காட்டியவர் ஸ்ரீ ராமாநுஜரே.

இந்த பக்தியைச் செய்வது எப்படி? இதை ஒரேவிதமாகச் செய்வதா? அல்லது பலவிதமான பக்திகள் உண்டா?

வியாழன், 17 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


திருப்பாவை 3ம் பாசுரத் தொடர்ச்சி

பேர்பாடி
ஸ்ரீமத் பகவத்கீதை ச்லோகம் [11.36]
’ஸ்தானே ஹ்ருஷீகேஸ’ எனத் தொடங்கும் இந்த ச்லோகத்துக்கு
” ஹ்ருஷீகேஸம் எனப்படும் ‘ஹ்ருதய குகரத்தின் ஈசனே, உலகம் உன்னுடைய நாமத்தைப் பாடினால் அவ்விடத்தில் சந்தோஷம் ஏற்படுகிறது. நல்ல சக்திகளெல்லாம் அங்கு இழுக்கப் படுகிறது. தீய சக்திகளெல்லாம் பயந்து பத்து திசைகளிலும் ஓடிவிடுகின்றன. நித்ய சூரிகள் கூட்டமாய் அங்கு வந்து நமஸ்கரிக்கின்றனர். அனைத்துத் தீமைகளும் அங்கிருந்து விலகி எல்லா மங்களங்களும் அங்கு வந்து சேர்கின்றன” என்பது பொருள். இதற்கிணங்க பேர்பாடி யென்பதை காரணமாகவும் [cause] தீங்கின்றியென்பதை அதன் காரியமாகவும் [effect] கொள்ளவேண்டும்.

அசுர, ராக்ஷஸர்கள் தொலைந்துபோய் பூமி பரிசுத்தப்பட்டது என்று சொல்வது பகவான் எப்பொழுதும் வசிக்குமிடமான அடியார்களின் திருவுள்ளத்துக்கும் பொருந்தும். பூமியில் மழை பெய்வதுபோல் இவர்கள் திருவுள்ளத்தில் அவனுடைய அருள்மழை பொழிந்தால் அங்கு செந்நெல் விளைவதுபோல்  பக்தி, ப்ரபத்தி எனப்படும் [ பகவானைச் சென்றடையும்] உபாயங்கள் [வழிமுறைகள்] இங்கும் விளையும். இந்த ஆராதனமும் இதயத்தில் வசிக்கும் இதய தெய்வத்திற்கே.

ஊடு கயலுகள என்றது பூமியின் நீர் வளத்தினால் மீன்கள் பயிர்களுக்கிடையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பதுபோல் பகவனுடைய ஸ்வரூப, ரூப, குண சேஷ்டிதங்கள் [இயல்பு, அழகிய தோற்றம், நற்குண நற்செயல்கள்] அனைத்தும் இவர்கள் மனத்திலும் ஓடிக்கொண்டு ஒளிவீசிக்கொண்டிருப்பன என்பதாகும்.

குவளைப் போது- மலராத மனது

பொறி வண்டு- கோயிற்பொறியை [சங்கு, சக்கர இலச்சினைகளை] தங்கள் தோள்களில் பொறித்துக்கொண்டுள்ள ஆசார்யர்கள். இவர்கள் சிஷ்யர்களின் மனம் மலர்ந்தவுடன் [கேட்கும் ஆவல் தோன்றியதும்] உபதேசம் செய்யவேண்டும் எனக் காத்திருப்பதை ’கண்படுப்ப’ என்றாள். ஆசார்யர்களையே பசுக்கள் என்று ஆண்டாள் கூறுகிறாள். ஞானம் அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம் பெற்றுள்ள இவ்வாசாரியரிடம் உலகத்தாரை ஞானம் பெறச் செய்து காப்பாற்றவேண்டும் என்னும் கருணையும் நிறைந்திருக்கும். சிஷ்யன் தன்னிடம் வந்து திருவடியைப் பற்றியதுமே அவனுக்கு அனைத்து சாஸ்த்ரார்த்தங்களையும் அர்த்த பஞ்சக ஞானம் முதலியவற்றையும் அவன் வாங்க வாங்க மேன்மேலும் பொழிகின்றனர். மேலும் சரணாகதியையும் பண்ணிவைத்து அவர்களைப் பெருமாளின் திருவடிகளில் சேர்ப்பிக்கின்றனர்.

இப்படி ஆசார்யர்களால் நாம் பெரும் செல்வமே நீங்காத செல்வமாகும். இது மற்ற செல்வங்களைப் போல் இவ்வுலகத்தோடு நின்றுவிடாமல் நம் ஆத்மாவில் சேர்ந்து மோக்ஷத்திற்கும் நம்மோடு கூட வரும் என்பதால் நீங்காத செல்வம் என்றாள். பசுக்கள் இந்த உலகச் செல்வங்கள். உடல் விழுந்ததும் அவையும் பிரிந்துவிடும். ஆனால் இது உயிர்ச்செல்வம். ஆத்மாவைவிட்டு என்றும் நீங்காது.

தேங்காதே= தயங்காமல். மோக்ஷம் அடைவது கடினமென்பதைக் கருதி தயங்காமல் ஆசார்யர்களைத் தேடிச் செல்லுங்கள் என்று ஆற்றுப்படுத்துகிறாள். [வழிப்படுத்துகிறாள்]

புக்கு, இருந்து- பெண், பொன் என்று இவ்வுலக ஆசைகளில் புகுந்து வாழ்வதை விடுத்து அத்யாத்ம பூசையில் [பகவானைப் பூஜிப்பதில்] புகுங்கள் என்பதைப் புக்கு என்கிறாள். அப்படிப் புகுந்தபின் மீண்டும் பழைய ஞாபகம் வந்து திரும்பிச் சென்றுவிடாமல் அங்கேயே நிலைத்திருங்கள் என்பதை இருந்து என்று குறிக்கிறாள். இந்த ஆசார்யர்களுடைய கருணையே பசுவின் முலையாகும். கருணை பொழிய எப்பொழுதும் காத்திருப்பதால் அது சீர்த்த முலை எனப்பட்டது.

பற்றியென்றது அவர்களின் திருவடிகளைப் பற்றுவதால் அவர்கள் கொடுக்க இவன் பெறுவது. இவனுடைய கிரகித்துக் கொள்ளும் சக்தியையே குடம் என்றது. அதை அவர்கள் தம் வள்ளன்மையினால் நிறைத்துவிடுகிறார்கள். இவனுடைய வாங்கிகொள்ளும் வேகத்துக்கு ஏற்றபடி அவர்களும் கருணையுடன் ஞானத்தைப் பொழிய பல குடங்கள் நிரம்பிவிடுகின்றன. இப்படி ஞான அனுஷ்டான வைராக்கியங்கள் நீங்காத செல்வங்களாக இவனை வந்து அடைகின்றன,

இப்பாட்டின் இந்தப் பொருளையே ஸ்வாமி தேசிகன்

பரக்கும் புகழ் வரும் பைம்பொருள் வாய்த்திடும் பத்தர்களாய்
இரக்கிறவர்க்கு இவையீந்தால் அறம் உளது என்றியம்பார்
கரக்குங் கருத்துடை தேசிகர் கன்றென நமையெண்ணிச்
சுரக்கும் சுரபிகள் போல் சொரிகின்றனர் சொல்லமுதே 

என்று அம்ருதாஸ்வாதினி 14வது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.
இனி பேர்பாடியென்பதை ’நாம சங்கீர்த்தனம் செய்ய’ என்றும் ’அவன் குண நலன்களையும் நற்செயல்களையும் பாடி’ என்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம் இந்நூல் முழுவதிலுமே ’அவனைப் பாடுதல்’ என்பதற்கு இவ்விரண்டு விதத்திலுமே பொருள் கொள்ளலாம்.

புதன், 9 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

திருப்பாவை பாசுரம் 3
ஓங்கி--

இது எம்பெருமானைக் குறித்துச் செய்யப்படும் நோன்பு என்பதால் இப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் முதலில் பெருமாளைப்பற்றியும், தொடர்ந்து சிறுமிகளாகிய இவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் சேர்த்து சேர்த்துக் கூறுகிறாள்.

முதல் பாட்டில் பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி எனப்படும் பகவானின் ஐந்து நிலைகளுள் முதலாவதான ’பரம்’ எனப்படும் நாராயணனையும் அவன் பெருமைகளையும் சொன்னாள். சிறுமிகளை நோன்பிற்கு அழைத்தாள். இரண்டாவது பாட்டில் வ்யூஹ நிலையிலான பாற்கடலில் பையத்துயின்றவனைச் சொல்லி விரதத்தின் தன்மையைப் பற்றிச் சொன்னாள். இம்மூன்றாம் பாட்டில் விபவ நிலையிலான வாமனன், த்ரிவிக்ரமனாகி மஹாபலியிடமிருந்து உலகை மீட்டுத் தன்னதாக்கிக் கொண்டு அதை ரக்ஷிக்கின்ற அவனுடைய ஆற்றலைச் சொல்லுகிறாள். எல்லா நிலைகளிலும் உள்ள பெருமானின் எல்லா மூர்த்திகளையும் எல்லா படிகளிலும் ஆராதித்து அந்த ஆராதனங்கள் எல்லாவற்றையும் அவரவர் தாங்கள் ஆராதிக்கும் தம் இதய தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்து இந்த விரதத்தையும் வைதிக [வேதம் காட்டும்] வழிப்படி கடைபிடித்துச் செய்யவேண்டும் என்கிறாள்.

ஓங்கி- பருத்து, அகன்று, உயர்ந்த
‘உலகு அளந்த’ என்றது வேற்றுமைத் தொகை. இதை முதல் மற்றும் இரண்டாம் வேற்றுமையில் இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம்.

முதல் வேற்றுமை- உலகு அவனை அளந்தது என்பது பொருள். உலகம் தான் ஒர் அளவுகோலாகி அவனை அளந்தது. தான் பெரிது என்று நினைத்துக் கொண்டிருந்த உலகு அவன் தன்னைக்காட்டிலும் எவ்வளவு பெரியவன் என்று உணர்ந்து கொண்டது. என்பது பொருள்.

 இரண்டாம் வேற்றுமை- ’உலகை அளந்த’. பலிச்சக்ரவர்த்தி இவனுக்குத் தானமாகக் கொடுத்ததை இவன் எடுத்துக் கொள்வதற்காக அளந்தான் என்பது பொருள். இவ்விரண்டு பொருள்களில் உலகை இவன் அளந்தான் என்னும் 2ம் வேற்றுமையைவிட உலகு இவனை அளந்தது என்னும் முதலாம் வேற்றுமையில் கொள்ளும் பொருள் நயம் மிக்கது.

உத்தமன் - பரத்வம் உடையவன் எல்லாவிதமான வல்லமை பொருந்தியவன். ஒன்றை உண்டாக்கவும், அழிக்கவும், ஒன்றை மற்றொன்றாகச் செய்யவல்ல [கர்த்தும், அகர்த்தும், அன்யதாகர்த்தும்] சக்தியுடையவன் என இவ்வளவு திறமைகளையுடையவன் இவ்வனைத்துத் திறமைகளையும் மறைத்துக்கொண்டு தன்னுடைய ஸெளலப்ய, ஸெளஸீல்யத்தை [எளிமை, நீர்மையை] உலகத்துக்குக் காட்டினாலாவது ஜீவர்கள் தன்னிடம் வந்தடைவார்களா என்னும் கருணையினால் மனிதர்கள் நடுவே தானும் ஒரு மனிதனாக ராமன், கிருஷ்ணன் முதலிய அவதாரங்களையெடுத்தான். சாதாரண மனிதர்கள் படும் துன்பங்களைத் தானும் பட்டான். தர்மத்தையும் நம்மையும் காக்கவும் அஸுர, ராக்ஷஸ சக்திகளை அழிக்கவும் இப்படி வேடம் பூண்டு பாடுபடுகிறான். எனவேதான் அவனை உத்தமன் [மிக உயர்ந்தவன்] என்று அழைக்கிறாள்.

ஆண்டாளுக்கு கண்ணபிரானிடம் ஈடுபாடு அதிகம். எனவேதான் பரத்வமாகிய நாராயணனையும் வ்யூஹ மூர்த்தியாகிய பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளையும் விட விபவமாகிய அவதாரங்களையெல்லாம் உயர்வாகப் பேசுகிறள். பர, வ்யூஹங்களை நாம் காண இயலாது. யோகிகளுக்கு மட்டுமே காணவியலும். ஆனால் கிருஷ்ணன் விபவத்தில் வந்து அவதரித்தபோது கன்று மேய்க்கும் இளங்சிறுவர்களுக்கிணையாகத் தானும் அவர்களுடன் கலந்து  மேய்த்த இந்த ஸெளலப்யமும் செளசீல்யமுமே இவனை மற்றவர்களைக் காட்டிலும் மேலாக்கியது.  


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி பாசுரம் 3'  ‘பக்கங்கள்’ பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது..

























செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அத்யாத்ம சாஸ்த்ரம்


இடுகை5

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

என்கிறார் வள்ளுவர். மேற்கூறிய தத்வ ஹித புருஷார்த்தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. கற்றபடி செயலாற்றவும் வேண்டுமன்றோ?

புருஷார்த்தம் என்றால் என்ன?
தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என நான்காகக் கூறுவர். இதில் சிறந்தது நான்காவதாகிய மோக்ஷம். இதுவே நாம் பெற வேண்டிய உயர்ந்த பலன். இப்பலன் வெறும் ஞானத்தினால் மட்டும் வருவதில்லை. ஆதிசங்கரர், புநரபி ஜனனம்,  புநரபி மரணம் என்கிறார். இவ்வுலகில் மாறி மாறி பல பிறப்புகளை எடுப்பதே துன்பம் என்றும் இதிலிருந்து விடுபடுதலை மோக்ஷம் என்றும் கூறுகிறார். மேலே சொன்ன ஞானத்தைப் பெறுவதே மோக்ஷம் அதாவது ‘ஞானாத் மோக்ஷம்’ என்கிறார். விசிஷ்டாத்வைதம் கூறும் மோக்ஷம் இதிலிருந்து முற்றிலும் மாறானது. இதை அடைய இந்த ஞானம் மட்டுமே போதா, ’பக்திரூபாபன்ன ஞானம்’ வேண்டுமென்கிறார் ஸ்ரீ ராமானுஜர்.  பக்தியுடன் கூடிய ஞானமே மோக்ஷத்தைத் தரவல்லது என்கிறார்.

எனவே முதலில் ஞானத்தைப் பெறவேண்டும். அந்த ஞானத்தைப் பெறும்போது சாஸ்திரங்களில் கூறியுள்ள செய்யவேண்டிய, செய்யக்கூடாதவைகளை அறிந்து வாழ்வில். அவற்றைக் கடைப்பிடித்து தம் செயல்பாடுகளைசெய்தல் [ இதை அனுஷ்டானம் என்பர்] வருகிறது. இந்த அனுஷ்டானம் சரிவர கைவரும்போது பக்தி உண்டாகிறது. இந்த பக்தி பகவானைக் குறித்து ஏற்படும் அன்பே. இந்த பக்தியின் முதிர்ந்த நிலையே ஆழ்வார்களிடம் நாம் காண்பது.

பக்தி என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? இரண்டிற்கும் வேறுபாடு உண்டா? 

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 2 தொடர்ச்சி

வையத்து---

பாடுதல்- பகவானின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றி அது நம்மைக் காப்பாற்றுவதையும் அதன் சக்தியையும் எண்ணிவியத்தலே பாடுதலாகும். இதற்காக செய்யவேண்டிய நான்கு, விடவேண்டிய நான்கு செயல்களைச் சொல்லி பாட்டை நிறைவு செய்கிறாள். இதைக்கூறும் விதமும் சிறப்பானது. விரதம் பயன் தர செய்யக்கூடாதவற்றை விடுவது அவசியமாதலால் நெய், பால், மை, மலர் இவற்றை உபயோகிக்காமலும் ,பொய் முதலியவை பேசாதிருத்தலுமாகிய ஆறு விஷயங்களை ‘செய்யேல்’ என்று எதிர்மறையில் பேசுகிறாள். செய்யவேண்டிய நான்கையும் உடன்பாட்டில் [poitive] பேசுகிறாள்.

ஒருவர் தினமும் விதிப்படி கட்டாயமாகச் செய்ய வேண்டிய நித்ய கர்மாக்களிலும் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக குறிப்பிட்ட தினங்களில் [ கிரஹ சாந்தி,சிரார்த்தம் போன்ற] செய்யவேண்டிய காரியங்களிலும் அந்தந்த காரியங்களுக்காக தானமாக கொடுக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிற அன்னம், தானியங்கள், துணிகள் முதலியவற்றை பிறருக்குக் கொடுப்பது ஐயம் என்பதாகும். இவற்றைக் கொடுக்காவிட்டால் பாபம் ஏற்படும்.

பிச்சை- எவ்வித கட்டாயமுமின்றி தம் விருப்பப்படி கொடுப்பதாகும். இப்படி கொடுக்கமுடியாவிடில் குற்றம் ஒன்றுமில்லை, பாபம் நேராது.
தனை- இது ’அளவு’ என்பதாகும். ஆந்தனை என்பது அவரவரால் இயன்ற அளவு கொடுத்தல். ஆந்தனையும் என்னும் இச்சொல்லைச் கொண்டு அவரவரால் தம் சக்திக்கேற்ற அளவே கொடுக்கவேண்டுமென தானத்துக்கும் ஒரு எல்லை வகுக்கிறாள்
.
கை- இச்சொல்லுக்கு ‘செயல்’ என்ற பொருள் உண்டு.
காட்டுதல்- செய்தல். ஐயமும் பிச்சையும் என்று சொல்லப்பட்ட ’பிறருக்குக் கொடுப்பதாகிய’ இச்செயலை இயன்றவரை செயலில் கொண்டு வந்து செய்து [இப்படி இயன்றவரை பிறருக்குக் கொடுத்தல் என்பதும் இவ்விரதத்திற்கு ஒரு அடையாளம் என்பதால்] அதையும் நம் ஹார்த விக்ரஹத்துக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்கிறாள். அடுத்த பாட்டில் ’நம் பாவைக்கு சாற்றி’ என்று கூறியிருப்பதை இவ்விரதத்தில் செய்யும் அனைத்து காரியங்களையும் பகவானுக்கே அர்ப்பணிக்கவேண்டும் என்று கூறியிருப்பதை இங்கும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் சொல்வதைக் ’கோள் சொல்லுதல்’, ’குறளை சொல்லுதல்’ என்று இருவகையாகப் பிரிப்பர். ஒருவரிடம் தாம் உண்மையாகக் கண்ட விஷயத்தைப் பிறரிடம் சொல்வது ‘கோள்’. ஒருவரைப்பற்றிப் பொய்யாகத் தாமே கற்பனைசெய்து புனைந்து பிறரிடம் கூறுவது குறளையெனப்படும். இச்சொல் தீமையானது, நல்லதல்ல என்பதைக் காட்ட ’தீக்குறளை’ என்கிறாள். திருவள்ளுவரும் ‘யாதொன்றும் தீமையிலாது சொல்லைச் சொல்வதே வாய்மை’ [திருக்குறள் 30-1]. எனவே பிறரிடமுள்ள கெட்ட எண்ணங்களையும் செயல்களையும் சொல்வதே தீமை பயக்கும்’ என்கிறார். ஒருவரும் தாம் உண்மையாகக் கண்ட, கேட்ட கெட்ட சொல், செயல்களைக் பிறரிடம் கூறுவது கோள் சொல்லுதல் என்றாலும் அவையும் தீமை பயக்கும் என்பதால் அவற்றைச் சொல்லுவது குறளை என்றாகும் என்று ஆண்டாள் கருதுகிறாள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

’நாட்காலே’ என்றது ஒரு உயர்ந்ததான கவிதை சொல்லாட்சி. இரவின் இருள் விலகி பொழுது புலரும் வேளை. அன்றைய நாளானது இருளில் புதைந்திருக்கும் தன்னுடைய காலை எடுத்து வெளிச்சத்தில் வைத்திடும் வேளையென்று அருமையாகத் தன் கவிபாடும் புலமை தோன்றச் சொல்கிறாள்.

 வெளியூர் செல்வதால் அடுத்த வெளியீடு 08-02-2011ல் தொடரும்







வெள்ளி, 28 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம்2

வையத்து--------

வையம் என்னும் சொல்லுக்கு ‘மிக உயர்ந்த வண்டி’ என்பது பொருளாகும்.ஆத்மாக்கள் யாத்திரை செய்யும் வண்டியாக விளங்குவது அவற்றின் உடல்களாகும். பல்லாயிரக்கணக்கான ஆத்மாக்களுள் ஆறறிவுடன் கூடிய மனிதன் உயர்ந்தவன். இவ்வுயர்ந்தவன் பயணம் செய்யும் வண்டியாதலின் மனித சரீரத்தை ‘மிக உயர்ந்த வண்டி ‘என்னும் பொருள்பட வையம் என்கிறாள். இம் மனித சரீரத்தில் வாழும் ஆத்மாக்களையே ‘வையத்து வாழ்வீர்காள்!’ என்று கூவி அழைக்கிறாள். இதனால் சரீரங்களில் எந்தவித வேறுபாடும் பார்க்காமல் எல்லா ஜீவாத்மாக்களும் உய்வடைவதற்கு
வேண்டிய பாடத்தை இந்நூல் போதிக்கிறது என்பது பொருள். ‘வாழ்வீர்காள்’ என்ற சொல் “வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொள்வீர், கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்”என்ற திருப்பல்லாண்டு வாக்கியத்தைப் பின்பற்றி வந்தது. ‘வாழ்’ என்பதால் ஆத்மாவின் உய்வும், ‘கூழ்’ என்பதால் செல்வமும் காட்டப்பட்டுகிறது. கூழ் என்ற சொல்லுக்கு ‘உணவுக்கு ஏதுவாகிய பொருள்’ என்பது பரிமேலழகர் உரை. இதன்படி ஆத்மாவை மறந்துவிட்டு உடலுக்குத் தேவையான பொருள்களுக்காகப் பாடுபட்டுத் தன் ஆயுளைக் கழிப்பவர்கள் என்பது பொருள். முந்தின பாட்டில் இவளுடைய பரம கருணையைக் காட்ட ,’போதுவீர் போதுமின்’ என்று “வருபவர்கள் எல்லாரும் வாருங்கள்” என்று கூப்பிட்டாள்.

வையம்- உயர்ந்த வண்டி என்பது பரிபாடல் மூன்று இடங்களிலும் பெருங்காதையில் 12 இடங்களிலும் காணலாம். பரிபாடல் ‘பொன்னும் துகிரும் முத்துமல்லது, மரன் ஒன்றறியா மாணமை வையம்’ என்று பேசுகிறார். அந்த உயர்ந்த வண்டி தங்கத்தாலே அமைத்து பவழத் தூண்களும் ஆரக்கால்களும் நுகத்தடி முதலியவற்றையுடையதாய் முத்துக்களால் அலங்கரிக்கப் பெற்றது’ என்று பேசுகிறாள். மற்றவையும் படித்தறிக.

பெருங்காதையில் ‘பூணியின்றிப் பொறியின் இயங்கும் மாணமை வையம்’ என்கிறார். இங்கே பூணியென்பது பூட்டப்படும் மிருகங்களாகிய மாடு, குதிரை, யானை, ஒட்டகம் முதலியவற்றைக் கூறும்.பூணியின்றி என்பதால் அந்த வண்டியில் எந்த மிருகமும் பூட்டப்படவில்லை என்கிறார். பொறியின்_ இயந்திர சக்தியால் , இங்கும்- ஓடும், மாண் அமை- மாண்பு, பெருமை அமைந்த உயர்ந்த வண்டி என்பதாகும்.

சைவ சித்தாந்தத்தில் கூறும் சரியை, கிரியை, ஞானம், யோகம் என்னும் நான்கினுள் இரண்டாவதான கிரியை என்பதை இங்கு கிரிசை என்கிறாள் ஆண்டாள். காரணம் கேட்காமல் செய்யும் செயல்கள் [அனுஷ்டானம்] சரியை என்றும் ஒரு பயனை எதிர்பார்த்துச் செய்யும் செயலை கிரியை என்றும் கூறுவர். இந்த விவரங்களை மெய்கண்ட தேவர் எழுதியுள்ள சிவஞான போதத்தின் பாடியத்திலும், அருணந்தி சிவாசாரியார் எழுதியுள்ள சிவஞான சித்தியாரிலும் பரக்கக் காண்க. இங்கே ’பையத்துயின்ற’ என்பது ’விழிதுயில்’ என்பதாகும். இதைக் காளிதாஸன் ‘ஸ்வபதோ ஜாகரூகஸ்ய’ அதாவது ‘உன்னைப் போல் விழித்துக்கொண்டு தூங்குகிறவன்’ கிடையாது என்கிறார்.

பரமன்- ‘நைவ கச்சித் வ்யபாச்ரய: ‘ ‘மனிதர்களும் தேவர்களும் அடைக்கலமாயடைய இவனைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை. என்கிறது ஸ்ரீபாகவதம் [6.17] சித்ரகேது உபாக்யானத்தில் பரமேஸ்வரன் பார்வதிக்கு இங்ஙனம் உபதேசிக்கிறான். பரமனடி- அவனைத் தஞ்சமடைபவர்கள் அடையவேண்டிய இடம் பகவானுடைய திருவடி என்பதை த்வயத்தின் அர்த்தத்திலும் , கீதை [18-66] சரமச்லோகத்திலும் கண்டு கொள்க.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி பாசுரம் 2 'பக்கங்கள்’ பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது. படித்து இன்புறுக.









வியாழன், 27 ஜனவரி, 2011

அத்யாத்ம சாஸ்த்ரம்



தத்வ விசாரம்- இது நமக்குத் தேவைதானா?
ஒருவன் தன்னைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள இவை தேவையே. இந்த அறிவே உண்மையான அறிவாகும். திருவள்ளுவர் தம் நூலில் ‘அறிவுடைமை’ என்னும் அதிகாரத்தில் ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்கிறார். ஒருவன் பெற்ற அறிவே அவனைக் காக்கும் ஆயுதமாகும். அது பிறராலும் பகைவராலும் கூட அழிக்க முடியாத கருவி என்கிறார். எனவே தன்னைக் காத்துக்கொள்ள தேவையான இந்த அறிவை ஒருவன் பெறவேண்டும் என்பது அவசியமாகிறது. 

இந்த அறிவை எப்படி ஈட்டுவது? நம் ஸம்ப்ரதாயம் இதற்கு வழிகாட்டுகிறது. வேதங்கள், உபநிஷத்துக்கள் ஸ்ம்ருதிகள் புராணங்கள் இதிஹாஸங்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் ஆசார்யர்கள் மற்றும் நம் ஆன்றோர்களின் அரும்படைப்புகள் இவையனைத்துமே நமக்கு இவ்வறிவினைப் போதிக்கவல்லவை. இவை தத்வ, ஹித, புருஷார்த்தங்கள் என்னும் மூன்று தலைப்புகளில் அறிய வேண்டியவை.

இவைகளைச் சுருக்கமாகக் கூறினால்

தத்வம்-  நம்மைப் பற்றிய அறிவு
ஹிதம்-  நமக்கு நல்லவை எவை என்பதைப் பற்றிய அறிவு
புருஷார்த்தம்-  நாம் அடைய வேண்டிய இலக்கு, நமக்குக் கிடைக்கும் பலன்பற்றிய அறிவு
.
நம்மைப் பற்றி, நமக்குநல்லவைகளைப்பற்றி,நமக்குண்டான நல் வழிகள், அவ்வழியில் செல்வதனால் நாம் பெறவிருக்கும் நற்பலன்கள் இவைகளைப்
பற்றிய அறிவைப் பெறுதலே போதுமா? பலனைப் பெற்றுவிடலாமா?
இக்கேள்விக்கு விடை திருக்குறளில்! 





புதன், 26 ஜனவரி, 2011


NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 1

மார்கழித்திங்கள்----- தொடர்ச்சி




இனி தாம் பூஜிக்கும் தெய்வத்தை நாராயணன் என்று கூறி அவனுடைய லக்ஷணங்களை [அடையாளங்களை] அக்குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுகிறாள். கூர்வேல் கொடுந்தொழிலன்- இங்கே வேல் என்னும் சொல் வெல் என்னும் பதத்திலிருந்து வந்தது. இது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் கடைசி நாமமாகிய ”ஸர்வ ப்ரஹணாயுத:” என்பதற்குப் பொருளாகிய பகையை வெல்வதற்குச் சாதனமாக உள்ள பொருளைக் குறிக்கும் ’கொடும்’ என்னும் சொல் வடமொழி தாதுவாகிய ’குட் கெளடில்யே’ என்பதிலிருந்து வருவது. இந்த தாது வளைந்திருக்கும் தன்மையைக் குறிக்கும். குடை, குடம், கோடு [தந்தம்] முதலிய சொற்கள் அங்ஙனம் வந்தவை. இவையனைத்தும் வளைந்திருப்பவை.

நாராயணனுடைய இயல்பு [ஸ்வரூபம்] காத்தலாகும். உடலை அழிக்காமல் ஒருவனுடைய ஆத்மாவைக் காப்பாற்றமுடியாது என்னும் நிலைமை வரும்பொழுது அந்த ஆத்மா இருக்கும் உடலை இவன் வெட்டிப் பிளந்து அழித்து ஆத்மாவைக் காபாற்றுகிறான். நாராயணனுடைய இந்த’ கொல்வது’ என்பது ஆத்மாவைக் காப்பாற்றுவதே என்பது ஆழ்வார் கூற்று. முதல் திருவந்தாதி 5வது பாடலில் பொய்கையாழ்வார் “கருமம், அழிப்பு, அளிப்பு கையது வேல் நேமி” என்று சிவன், நாராயணன் இவ்விருவரின் செயல்கள் [கருமம்] அழிப்பு, அளிப்பு [காப்பாற்றுதல்] எனவும் அவர்களுக்கு அதற்காக உதவும் ஆயுதங்களாக வேலையும், சக்கரத்தையும் அவர்கள் வைத்திருப்பதாகக் கூறுகிறார். நாராயணன் சக்ராயுதத்தை அழிப்பதற்காக அல்லாமல் காக்கும் தொழில் செய்வதற்காக வைத்திருப்பதாய் கூறுகிறார். க்ருஷ்ணாவதாரத்தில் பூதனை முதலிய அசுர , ராக்ஷஸர்களைக் கொன்றது அவர்களின் ஆத்மாவைக் காப்பாற்றுவதற்காகவே. காக்கும் செயலை நேராகச் செய்யாமல் கொல்வதுபோல் தோன்றும் வளைந்த காரியத்தைச் செய்வதால் ’கொடுந்தொழிலன்’ என்கிறாள். [நேரடியாக ஆத்மாவைக் காப்பாற்றாமல் உடலைக் கொன்று அதன் மூலம் காப்பாற்றுவதை சுற்றி வளைத்துச் செய்வது என்கிறார்.] நல்லாட்சி செய்வதைச் செங்கோல் என்றும் நேராக இல்லாத வளைந்த ஆட்சியை கொடுங்கோல் என்பதையும் நோக்குக.]

இனி நந்தகோபன் குமரன் என்றது கண்ணன் ஒளித்து வளர்ந்ததைக் காட்ட. ஆயர் குலத்தையும் தமக்கு அடியவர்களாக்கிக் கொள்ளவென்று  திருவாய்ப்பாடிக்கு வந்து ஒளித்து வளர்ந்த உத்தமன் என்று அவனுடைய ஸெளலப்யத்தை [எளிமை, நீர்மை] மெச்சி அறியாச் சிறுமிகளான நம்மையும் கூட அவன் காப்பாற்றுவான் என்று வற்புறுத்திச் சொல்கிறாள். இவனுடைய அழகைப் பார்த்துப் பார்த்து யசோதையுடைய கண்ணும் அழகு நிறைந்ததாயிற்று என்கிறாள். ஆண்டாளின் இதய தெய்வம் , பூஜிக்கும் தெய்வம் ந்ருஸிம்ஹன். ஆகவே கண்ணனை இங்கே இளஞ்சிங்கம் என்று ந்ருஸிம்ஹனின் உருவிலேயே காண்கிறாள்.

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்- என்பதற்கு வெள்ளியான், கரியான், மணிநிறவண்ணன் என்று திருமங்கையாழ்வார் விளக்கமளிக்கிறார்.-மும்மூர்த்திகளும் சேர்ந்து ஒரே உருவமாக திகழ்பவன் எம்பெருமான் என்று பொருள்.

’நமக்கே’ என்றது இந்த ஆராதனை செய்பவர்களுக்கே என்றதனால் நிச்சயமாகப் பறை தருவான் என்ற பொருள் கிடைக்கிறது. இந்த நோன்பைச் செய்த நமக்கு அவன் நிச்சயமாக அருள் புரிவான் என்றதனால் நம்மைப் பார்த்து மற்றவர்களும் நாராயணனைப் புகழ்வர். அதற்கு நாம் வழிகாட்டியாவோம் என்கிறாள்.

இனி நீராடுதல் என்பது பகவான் தம் நீர்மையாகிற எளிய குணத்தினால் தம் அடியார்களுக்காக அவன் காட்டித்தந்த வழியிலேயே நாம் நடத்தலாகும். "ச்ருதி ஸ்ம்ருதிர் மமைவாக்ஞா யஸ்தான் உல்லங்ய வர்த்ததே1 ஆக்ஞாச்சேத்தீ மமத்ரோஹி மத்பக்தோபி நவைஷ்ணவ:" என்னும் விஷ்ணு தர்ம ஸ்லோகப்படி ச்ருதி ஸ்ம்ருதிகளில் காணப்படும் என்னுடைய கட்டளைகளை மீறிநடப்பவன் எனக்கு விரோதி என்கிறார். எனவே அவ்வழியில் மீறாமல் நடத்தலே நீர்மையில் ஆடுதல் -நீராடுதல் ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டே செல்வச் சிறுமீர்காள் என்று, பக்தியாகிற செல்வம் இள வயதிலேயே உங்களில் அமைந்திருக்கிறது என்கிறாள். நீராடப் போதுவீர் என்பதற்கு பகவானின் குணங்களாகிய நீர்மையில் அவன் வகுத்த விதிகளின் படி எளிமையுடன் நடந்து கொள்ள வாருங்கள் என்று பொருள்.

நேரிழையீர் [நேர்- நேர்மை]  இவர்கள் நேர்மையுடையவை என்று வேத சாஸ்திரங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகளில் நடப்பவர்கள்.[இழைதல்-நடத்தல்] நீங்கள் ஏற்கனவே இவ்விதம் நடந்து கொண்டிருப்பவர்கள். தேவதாந்திரங்களை [நாராயணனைத் தவிர மற்ற தெய்வங்களை] பூஜிப்பதால் கிடைக்கும் அல்பமான [தாழ்ந்த] பலன்களை மதியாமல் பகவானின் குணங்களில் ஆழ்ந்து இந்த விரதத்தைச் செய்வோம். அதுவே நமக்குப் பெரிய பலனைத் தரும். என்பதை அழுத்தமாகக் காட்டவே தேவரும் மூவரும் இவன் ஒருவன்தான் என்று குறிப்பிடுகிறாள். படிந்து என்பது பரமைகாந்தியாய் [இதர தெய்வங்களை வணங்காமல் ஸ்ரீமந் நாராயணனை மட்டுமே வணங்கியிருத்தல்] இருப்பதைக் காட்டும். மறந்தும் புறம் தொழா மாந்தராய், ’சுத்தாந்த சித்தாந்தி’களாய் [அந்தபுரத்து மாந்தர்போல் மாறாத கற்புடையவர், பிற ஆடவரை மனதாலும் நினையாதவர்- ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம்,புருஷார்த்த காஷ்டாதிகாரம்] நாராயணனுடைய குண ரூப சேஷ்டிதங்களில் [  செயல்களில்] மட்டுமே ஈடுபடுங்கள் என்று கட்டளையிடுகிறாள்.

ஏல் ஓர் எம்பாவாய்- என்று முப்பது பாசுரங்களின் முடிவிலும் கூறித் தங்கள் நோன்பினை ’உணர்ந்து ஏற்றுக்கொள்வாயாக’ [ஏல் ஓர்] என்று ஹார்த விக்ரஹத்துக்கு அர்ப்பணிப்பதைக் காட்டுகிறாள்.
[முதற் பாசுர விளக்கம் முற்றுப் பெற்றது]





செவ்வாய், 25 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 1

மார்கழித்திங்கள்-----

பாவை நோன்பு என்பது தம் இதயத்தில் வீற்றிருக்கும் தெய்வத்திற்குச் செய்யும் வழிபாடு, ஆராதனமாகும். தாம் வழிபடும் தெய்வத்தின் உருவத்தை ராமனாகவோ, க்ருஷ்ணனாகவோ, ந்ருஸிம்ஹனாகவோ இப்படி எந்த உருவத்திலும் இதயத்தில் வைத்து வழிபடலாம். இதை ஹார்த விக்ரஹம் என்பர். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் இந்த ஹார்த விக்ரஹத்தை பாவ:[Bhaava] என்று ஏழாவது நாமத்தால் சொல்கிறோம். இந்த நோன்பில் தம் மனம் மொழி செயல் மூன்றினாலும் தாம் செய்யும் அனைத்தையும் இந்த ஹார்த விக்ரஹத்துக்கே சமர்பிக்கவேண்டும் அவ்விதம் செய்தால் செய்பவர்களுக்கு அனைத்து நற் பலன்களையும் அந்த ஹார்த விக்ரஹம் கொடுக்கும்.

பாசுரத்தின் முதலில் நோன்பிற்குரிய காலத்தையும் இடத்தையும் கூறுகிறாள். ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்க வேண்டிய நோன்பாதலால் மார்கழித் திங்கள் என்று மாதத்தைக் குறிப்பிடுகிறாள். பெளர்ணமி சமயத்தில் இரவு நேரமும் பகல் போல் வெளிச்சமாக இருக்கும். இருள் இருக்காது. இந்த பூமியே ஸ்ரீவைகுண்டம் போல் இருளற்று ஒளியுடன் திகழ்கிறது. ஆகவே அந்த நாளில் இந்த நோன்பை ஸ்ரீவைகுண்டத்தில் நோற்கிறோம் என்னும் நினைவுடன் நோற்கவேண்டும். ஸ்ரீமத் பகவத் கீதையில் [10.35] ‘மாஸானாம் மார்க்க ஸீர்ஷோஹம்’ என்று பகவான் கூறியபடி மார்கழி மாதமே அவனுடைய ஸ்வரூபமாகத் திகழ்கிறது. பகலும் இரவும் வெளிச்சமாய் இருப்பதால் திருவாய்ப்பாடி ஸ்ரீவைகுண்டமாகிறது. இப்படி காலமும் இடமும் காட்டியாயிற்று. ஆல் என்பது கார்த்திகை நக்ஷத்திரத்தைக் குறிக்கும் சொல். மதி நிறைந்த நன்னாள் ஆல் என்றதால் அன்று வளர் பிறையின் த்ரயோதசி [13ம் நாள்] என்று விளங்குகிறது. அன்று இரவு சந்திரனுக்கு 13 கலைகள் [பிறைகள்] நிறைந்து இரவின் முப்பது நாழிகைப் பொழுதில் 26 நாழிகை வெளிச்சமுடையதாய் இருக்கும். மீதமுள்ள நாலு நாழிகையும் மறுநாளின் உஷக் காலத்தில் [விடியற்காலை] சேர்ந்துவிடும் எனவே அன்று ’இரவு முழுதும் வெளிச்சம்’ என்பது பொருந்துகிறது.    த்ரயோதசி, சதுர்தசி, பெளர்ணமி என்னும் சந்திரனின் ஒளி மிகுதியாய் விளங்கும் இந்த மூன்று தினங்களில் இந்த நோன்பை நோற்பதற்காக மூன்று பதிகங்களை ஆண்டாள் பாடிக் கொடுத்தாள்.
இப்படி இந்த ஆல் என்னும் கார்த்திகை நக்ஷத்திரத்தால் திதி த்ரயோதசி என்பது நமக்கு கிடைக்கிறது.

அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரை திருவாய்ப்பாடியாகக் கொள்கிறாள். இங்கு பகவான் அவதரித்துவிட்டான். ஆகவே இது ஸ்ரீவைகுண்டமாகிவிட்டது. அங்கு நித்ய ஸூரிகள் “ ஸாம காயந் ஆஸ்தே’” என்னும்படி ஸாமகானங்களால் அவனைப் பாடிக்கொண்டு அவன் திருவுள்ளம் உகக்கும்படி அனைத்துக் கைங்கர்யங்களையும் பண்ணிக்கொண்டிருப்பர். அதுபோல் இங்கும் இந்த மார்கழி நோன்பை பகவான் திருவுள்ளம் உகக்கும்படி அவன் உகப்புக்காகவே நோற்கவேண்டியது இங்குள்ள கன்னியரின் கடமை. அங்ஙனம் செய்தால் இந்த ஆய்ப்பாடியின் மேன்மை [சீர்] வைகுண்டத்தின் மேன்மையைக் காட்டிலும் பெருகும் [மல்கும்] வைகுண்டம் ரஜஸ், தமஸ் கலப்பில்லாத சுத்த ஸத்வமே திகழும் இடம். அங்கிருக்கும் நித்ய ஸூரிகள் , முக்தர்கள் ஆகியோரின் உள்ளங்களும் தூய்மையுடன் பரிசுத்த ஆத்மாக்களாக விளங்குகின்றன. அவர்கள் தங்கள் ஸ்வரூபத்திற்கு [இயல்பு, தன்மை] ஏற்ற கைங்கர்யங்களைப் பெருமாளுக்குச் செய்கின்றனர். ஆனால் அவ்விடத்திற்கு மாறான இப்பூமியில் மாடுமேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துள்ள இடக்கை வலக்கை அறியாத பெண்களாகிய நாம் இந்த நோன்பை நோற்று அதை பகவானுக்கு அர்ப்பணித்தால் பகவானும் முன்னதைக்காட்டிலும் பன்மடங்கு உகப்பை அடைவான். ஏற்கனவே பகவான் அவதரித்தது முதல் ஆய்ப்பாடியில் பசு, செல்வம் இவை நிறைந்துள்ளன. எனவே செல்வம் நிறைந்துள்ள இங்குள்ள சிறுமிகளைச் செல்வச் சிறுமீர்காள் என்று அழைக்கிறார். இதற்கு மேலும் வேதம் உணர்த்தும் செல்வமும் [வைதீகஸ்ரீ] நம் ஆத்மாக்களின் உயர்வுக்கான செல்வமும் நோன்பென்னும் இந்த ஆராதனத்தினால் மல்கும் என்கிறாள். [சிறுமீர்காள் என்று அழைத்ததின் பொருள் 29வது பாசுரத்தின் விளக்கவுரையில் காணலாம்.]
[1ம் பாசுர விளக்கத்தின் தொடர்ச்சி அடுத்த இடுகையில்]

என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி [பாசுரம் 1 வரை] 'பக்கங்கள்’ பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது. படித்து இன்புறுக.










திங்கள், 24 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சிந்தனைப் பெட்டகம்


[வாசலில் சிறு குழந்தைகள் கீழ்காணும் பாட்டைப் பாடிக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சற்றே சிந்தித்த பொழுது பாட்டின் பொருள் விளங்கியது! பொருளற்ற பாடல் என்பதே கிடையாதே!]

1.  "தட்டாமாலே தாமரப்பூவே
சுத்தி சுத்தி சுண்ணாம்பே"

தட்டாமாலே தாமரப் பூவே
சுத்தம் சுத்தம் சுண்ணாம்பே
என்பது பாடுகையில் மேற்கண்டவாறு திரிந்துள்ளது
.
[இதன் பொருள்]
தட்டா- ஒருவர் மனத்திலும் தென்படாத
மாலே- மயக்கமே
தாமரம்- தாமிரம் என்னும் உலோகம்
பூவே- தங்கமே
சுத்தம் சுத்தம்- அந்தத் தாமிரத்தை களிப்பறச் சுத்தமாக்கித் தங்கமாக்குவது
சுண்ணாம்பே- வேறொரு உலோகத்தின் சுன்னமாகும்
தாமரத்தை வேறொரு உலோகத்தின் சுன்னத்தோடு சேர்த்துப் புடம் வைத்தால் அது தங்கமாகிவிடும் என்ற ரஸவாதத்தைச் சொல்லுகிறது இப்பாடல்!


2.  தம் திறமையினால் பிறரை ஏமாற்றித்திரிவோரைக் குறித்துப் பொதுவாக நாம் வழங்கும் சொற்றொடர் இது 

 "ஆட்டைத் தூக்கி மாட்டிலே போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டிலே போட்டு”  
இதன் பொருளாவது_  ஆடு= மூச்சுக் காற்று; மாடு= உடல்.
ஆட்டை= ஆடிக்கொண்டிருக்கும் மூச்சுக் காற்றை அடக்கி அதனாற் கிடைத்த ஸித்திகளின் பயனை
மாட்டிலே போடுவது= சரீரத்தின் ஸெளகர்யங்களுக்கு உபயோகிப்பது
மாட்டைத் தூக்கி= சரீரத்தில் வேஷங்களைத் தரித்துக்கொண்டு அதன் பயனை
ஆட்டிலே போடுவது= தான் பெரிய யோகி போலவும் ஸித்தன் போலவும் நடந்து ஜனங்களை ஏமாற்றுவது

3. ஒரு விடுகதை

"முன்னங்கால் நனையாமல் தண்ணீர் குடிக்கிறவனே
ஒத்தைக் கையன் வரான் ஓடிப்போ
உனக்காரடா சொன்னான் தலையில்லாதவனே
உயிரில்லாதவன் சொல்லக்கேட்டேன்.
[விடை] 
ஆடு, யானை, நண்டு, மணி [BELL] இவற்றை ஒவ்வொரு வரியும் குறிக்கும்.

4. வேடிக்கைப் பாட்டு.

‘கடைக்காரர் சொன்னதை நம்பி வாங்கிய புடவை சாயம் போய்விட்டதென்று புலம்பிய மனைவியிடம் ஒரு தமிழ் புலவர் பாடிய பாடல்

”பூசாரி பொய்யும் புலவோர் உரைத்த பொய்யும்  
காசாசை வேசியர்கள் கற்ற பொய்யும் _ கூசாமல்
தட்டான் உரைத்த பொய்யும் ஜவுளிக் கடைப் பொய்க்குக்
கட்டாது கால் வரிசை காண்.”