வெள்ளி, 11 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 7
கீசு கீசு என்று---
நம் நாட்டில் பேசும் பறவைகள் இரண்டு வகையாகும். அவை கிளியும் பூவையுமாகும். பூவையென்பது நாகணவாய்ப்புள் என்று செந்தமிழிலும் நார்த்தாம்பிள்ளையென்று நாட்டுப்புறப் பேச்சிலும் வழங்கப்படும் ஒரு பறவையாகும். அது கருப்பு மஞ்சள் நிறங்களையுடைய இறக்கைகளை
யுடையது. குருவியைக் காட்டிலும் சிறிது பெரிதாயிருக்கும். விடியற்காலையில் கீச் என்னும் சப்தத்தைச் செய்வது. இதையே ஆனைச்சாத்தன் என்று ஆண்டாள் இங்கு கூறுகிறாள். கீச் என்பதை கீசு என்கிறள். கீசு என்னும் சொல்லை க+ஈசு என்று பிரித்து ஈசாவாஸ்ய உபநிஷத்தால் ஈசன் என்று கூறப்படுபவன் க: யார் என்று பறவைகள் கேட்பதாகவும், இக்கேள்விக்கு முந்தைய [6வது பாசுரத்தில்] ஹரி என்று முனிவர்களும் யோகிகளும் பதில் கூறுகிறார்களெனவும் பொருள் கொள்ளவேண்டு மென்றும் பெரியோர் கூறுவர். [ஈசாவாஸ்ய உபநிஷத் ஆரம்பத்திலேயே ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் யாத் கிஞ்ச ஜத்யாம் ஜகத் என்று ஈச்வரன் என்பவன் யார் என்பதைக் கூறுகிறது. உலகில் அறிவுள்ள பொருள் அறிவில்லாத பொருளென்று என்னென்ன உண்டோ அத்தனை பொருள்களும் ஈச்வரன் என்பவனால் வ்யாபிக்கப்பட்டுள்ளது என்கிறது. எனவே சித், அசித் எனப்படும்(ஈச்வர தத்வம் தவிர மற்ற இரு தத்வங்களிலும் )அனைத்துப் பொருள்களிலும் வ்யாபித்திருப்பவனே ஈச்வரன் எனப்படுபவன் என்பது தெளிவாகிறது. க: யார், ஈசு -ஈச்வரன் என்பது புணரும்போது கீசு என்றாகிறது. ]

இந்தப் பாட்டிலும் இப்புள்ளின் சப்தம், ஆய்ச்சியர் தயிர் கடையும் சப்தம், மற்றவர்கள் ஏற்கனவே துயிலெழுந்து பகவானுடைய வடிவழகையும் பெருமைகளையும் பாடுவது, அவன் திவ்ய நாமங்களைச் சொல்லி பஜனை செய்வது ஆகிய ஓசைகளையெல்லாம் கேட்டும் நீ விழித்துக்கொண்டே படுத்துக் கொண்டிருக்கிறாயோ என்று கூறுகிறாள். திருக்குறளில் புல்லறிவாண்மை என்னும் 85வது அதிகாரத்தின் கடைசிக் குறளாகிய ‘உலகத்தார் ‘ எனத் தொடங்கும் குறளின் கருத்தை இது ஒத்ததாய் உள்ளது.  பரிமேலழகர் தன் உரையில் ‘உயர்ந்தவர்கள் உண்டு என்று சொல்லும் விஷயங்களை [உதாரணமாக கடவுள் மறுபிறவி, வினைப் பயன் போன்ற விஷயங்களை] இல்லையென்று தன் புல்லறிவால் மறுப்பவர்கள் வையத்தில் காணப்படும் பேய் என்று கருதப்படுவர் என்று கூறுகிறார்.

இந்தக் குறளின் பொருளையே தன் சொல்லில் அடக்கிப் பேய்ப் பெண்ணே என்று விளிக்கிறாள். இதன் பொருள் மனிதர்க்கு விடியற்கலையில் எழுந்து பகவானைப் பஜிப்பது நன்மை தரும், மேலும் மார்கழி மாதத்தில் இது இன்னும் விசேஷமானது என்று உலகத்தாரும், முனிவர்களும் யோகிகளும் கூட பகவானைப் பஜித்தலாகிய இக்காரியத்தைச் செய்யும் பொழுது நீ இப்படிப் படுத்துக் கிடப்பது இவைகளையெல்லாம் இல்லை என்று சொல்லும் பேய் என்றல்லவோ உன்னைகருதவைக்கும் என்கிறாள். பறவைகளும் மனிதர்களும் எழுந்திருந்து அவரவர் தொழிலையும் பகவத் பஜனையையும் செய்யும்போது நீ ஏன் இப்படி கண் விழித்த பின்னும் படுத்துக் கிடக்கிறாய். உன் அழகையும் அறிவையும் வைத்து உன்னை எங்கள் நாயகப் பெண்பிள்ளை, தலைவி என்று கருதினோமே நீ பேய்ப் பெண்ணாகலாமா என்கிறாள்.

நாராயணன் மூர்த்தியைப் பாடுவது என்பது பகவானின் குண நலன்களையும் நற்செயல்களையும் பாடுதல். கேசவனைப் பாடுதல் என்பது கேசவன் முதலான திருநாமங்களைப் பாடி பஜனை செய்தல். இவையெல்லாம் செய்யவேண்டிய தகுந்த நேரம் இதுவாகும் என்கிறாள்.

தொடரும்

புதன், 9 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 6
புள்ளும் சிலம்பினகாண்---

ஐந்து பாடல்களுடன் பாயிரம் முடிந்து ஆறு முதல் பதினைந்து வரையுள்ள பத்துப் பாடல்களும் பகவானை நினைக்காமல் உறங்கிக்கொண்டிருக்கும் ஜீவர்களை எழுப்புவதாக அமைந்துள்ளன.

“ப்ராஹ்மே முஹூர்த்தே உத்தாய” என்று ஆஹ்நிகம் என்னும் நூலில் “மக்கள் ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளவேண்டுமென்று கூறுகிறது.  [ஆஹ்நிகம் என்பது நாம் தினமும் செய்யவேண்டியவையென சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ள செயல்களைக் கூறும் நூல். ] ஹோரை என்பது ஒருமணி நேர காலம் . சூர்யோதயத்திற்கு முந்தைய இரண்டு ஹோரை அதாவது இரண்டு மணி நேரத்துக்குப் ப்ராஹ்ம முஹூர்த்தம் என்று பெயர். அந்த நேரம் வந்துவிட்டது என்று கூறி அதற்கு மூன்று அடையாளங்களையும் காட்டுகிறாள்.

 1. பறவைகளின் ஒலி
2. கோவிலிலிருந்து வரும் ஒலிகள்
3. முனிவர்களின் குரலொலிகள்

பறவைகள் தங்கள் இயல்பான சக்தியைக் கொண்டு பொழுதை உணர்கின்றன. கோழி கூவுவதும் பறவைகள் சத்தமிடுவதும் பொழுது புலர்வதைக் காட்டும் இயற்கை தரும் அடையாளங்கள். கோவிலில் விடியற்காலையில் ஆராதனம் தொடங்கும் போது சங்கு ஊதுவதும் திருச்சின்னம் போன்ற வாத்தியங்களை முழக்குவதும் உலகம் அறிந்த அடையாளங்கள். முனிவர், யோகி என்று இருவகையானவர்களை இங்கு காட்டுகிறாள். பகவானை எப்பொழுதும் மனதில் இடைவிடாது த்யானம் செய்து கொண்டிருப்பவர்களை மனன சீலர்கள் என்றும் முனிவர்கள் என்றும் கூறுவர். யோகிகள் என்பார் இங்ஙனம் மனனம் செய்து செய்து அதில் வெற்றி பெற்றவர்கள். அதாவது சித்தி பெற்றவர்கள். இவர்களெல்லாரும் எப்பொழுதும் எம்பெருமானின் குணங்களையும் அற்புதமான செயல்களையும் மனதில் எண்ணிக்கொண்டே அவற்றை அனுபவித்துக் கொண்டே காலத்தைக் கழிப்பவர்கள் . ஆஹ்நிகம் கூறும் விதிப்படி அதிகாலையில் துயிலெழுந்து ஹரி நாமத்தை இவர்கள் உச்சரிப்பதாகக் கூறுகிறாள்.

’வித்து’ என்னும் சொல்லுக்கு ’விதை’ என்பது பொருளாகும். படைப்பிற்கு மூல காரணமான பொருளாக விளங்குபவரும், ஹரியென்னும் பெயரை உடையவரும், ஓம் எனப்படும் ப்ரணவத்தின் பொருளானவருமான பரமாத்மாவை வித்து எனக் குறிப்பிடுகிறாள்.

பகவத் கீதை 7-10ல் ‘பீஜம் மாம் ஸர்வபூதானாம்’ என்றும் கீதை 14-4ல் ’அஹம் பீஜ ப்ரத: பிதா’ என்றும் பகவான் கூறியுள்ளதைக் காண்க. ‘இப்படைப்பில் காணப்படும் பொருள்களுக்கெல்லாம் நானே வித்தாவேன்’ என்பதும் ‘நானே விதைகளைக் கொடுப்பவனும் ப்ரபுவுமாவேன் என்பதும் இவற்றின் பொருள். இந்த வித்தே ஸத்வ, ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களுக்கும் ஆகாயம், நிலம், நீர், தீ காற்று எனப்படும் ஐம்பெரும் பூதங்களுக்கும் மூல காரணமானதாகும். இவ்வித்து தான் பாற்கடலில் முளைத்து வளர்ந்தது என்று கூறுகிறாள். உலகில் நாம் காணும் விதைகள் முளைத்து செடியாக மரமாக வளர்கிறது, பின் அழிகிறது. ஆனால் இந்த விதைக்கு அதுபோன்ற மாற்றங்கள் எதுவும் கிடையா. இது நித்யமானது, அழிவற்றது. உலகில் நாம் காணும் சித், அசித் எனப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் எம்பெருமானே மூல காரணமாக இருப்பதால் இங்கு அவனை வித்து என்று குறிப்பிடுகிறாள்.

இவ்வுலக வாழ்வில் பல்வேறு கவலைகளால் ஏற்படும் துன்பங்களால் கொதித்திருக்கும் மனித உள்ளங்கள். இப்பனிக்காலத்தில் விடியற்காலையில் உள்ள குளிர்ச்சியினால் உடல்மட்டுமின்றி உள்ளமும் குளிரட்டும் என்கிறாள்.  அதற்கு பகவானின் நாமங்களைச் சொல்வதும், கேட்பதும், அவனது குண, செயல்களை நினைப்பதும் உள்ளம் குளிர வகை செய்யும் எனவே அத்தகு செயல்களைச் செய்யாமல் படுத்திருக்கலாமா என்கிறாள். ஹரியென்ற பேரரவம் கேட்டு உள்ளம் குளிரவில்லையா என்று கேட்கிறாள்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 6 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

வியாழன், 3 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

5ம் பாசுரம் தொடர்ச்சி

இனி கடைசியாக இந்த தெய்வம் தாயைக்குடல் விளக்கம் செய்தது என்கிறாள். அவதரிக்க ஒரு தாய் வேண்டும். அவள் குடல் இவனைப்பெற்றதால் பெருமை பெரும். இவனும் நல்ல அறத்துடன் வாழும் நல்ல மனை மாட்சியுள்ள இடத்தில்தான் அவதரிப்பான். இப்படி ஒரு மனை மாட்சி அமைய, இல்லறம் நடத்த ஒரு வீடு தேவை. வீட்டின் முக்கியமான பொருள் தூணாகும். தூண் இல்லையேல் உத்திரமும் கூரையும் நிற்காது. அப்படிப்பட்ட தூணின் பெருமையைக் காட்டவே அதைத் தன் தாயாக்கிக் கொண்டு முன்பு அதில் அவதரித்தவன் இவன். தாயைக் குடல் விளக்கம் செய்த செயல் இதுவும் தான். வெகுகாலம் பிள்ளைப்பேறின்றி வருந்திய கெளசல்யையின் வயிற்றில் பிறந்தான் ராமன். மன்னு புகழ் கோசலைதன் மணி வயிறு வாய்த்தவனே என்பதையும் நோக்குக. 

இந்த கிருஷ்ணாவதாரத்தில் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தான். இப்படி இரண்டு தாய்களின் குடல்களையும் விளங்கச் செய்தான். இவனைப் பெற்றதாய் முதல் ஆறு குழந்தைகளைப் பறி கொடுத்தவள். ஏழாவது கர்ப்பமும் சிதைந்தது. எட்டாவதான இக்குழந்தைதான் பிறந்து உயிருடனும் இருந்தது. அதனால் அப்பொழுது தான் இத்தாயின் குடலும் விளங்கியது. யசோதைக்கும் குழந்தையில்லாமல் வயது ஏறிக்கொண்டிருந்தது. குழந்தையை மாற்றி இவனுடைய இடத்தில் வைப்பதற்காக மாயை இவள் வயிற்றில் பிறந்தாள். எனினும் குழந்தை மாறிய செய்தியறியாத இத்தாய் இவனையே ஏழு வயது வரை தனக்குப் பிறந்த குழந்தையாகவே எண்ணி வளர்த்தாள். இப்படி இவள் குடலும் விளங்கிற்று. ஆனால் இவ்வளவையும் செய்துவிட்டு அந்த யசோதையும் மற்ற இடைச்சிமாரும் இவன் வயிற்றில் கயிறுகளைக் கட்ட ஒன்றும் அறியாதவன் போல் கட்டுவதையும் தடுக்காமல் தன்னையே கட்டுண்ணப் பண்ணிக் கொண்டு பொறுத்திருந்தான் என்று அவனுடைய செளஸீல்யத்தையும், செளலப்யத்தையும் குறிக்கும் வண்ணமாக தாமோதரன் என்று அவனைச்  சொல்லி இத்துணை எளியவனை நாம் சிறிதும் பயமில்லாமல் அணுகி அவனை அண்டி வாழலாம், அவன் நிச்சயமாக நம்மைக் காப்பாற்றுவான் என்னும் பொருள்பட பாடுகிறாள். 

இனி அவ்வெம்பெருமானை ஆராதிக்கும் முறையைக் கூறிப் பாட்டை முடிக்கிறாள். இங்கு தூயோம் என்றதற்கு ‘மனம், மொழி, செயல்களின் பரிசுத்தம்’ என்பது சாஸ்திரங்கள் கூறுவது. “தஸ்மாத் சாஸ்த்ரம்----- “ எனத் தொடங்கும் கீதை [16-24] ச்லோகத்தை இங்கு பொருத்திப் பார்க்க. மேலும் நம்முடைய சிந்தனையும் வாயினால் பாடுவதும் தொழுவதும் எல்லாம் எப்படி இருக்கவேண்டுமென்பதற்கு ஆண்டாள் கூறும் சூத்திரம் இது. இந்த சூத்திரத்திற்கு விரிவுரையாக மனம் மொழி செயல் மூன்றையும் வரிசைப் படுத்தி பெரிய திருமொழி 1-6ல் 7,8,9 பாசுரங்களில்* முறையே திருமங்கை மன்னன் கூறியிருப்பதையும் காணலாம். மரம் செடி கொடிகளில் பூக்கும் மலர்கள் பெருமாளுக்கு கைகளால் தூவும் மலர்கள். வாயினால் பாடும் வாக்கியங்கள் பகவானையே எப்பொழுது ம் சிந்திருத்திருந்த நம் முன்னோர்களின் ஸ்தோத்திரங்களாக இருக்கவேண்டுமென்பதைக் குறிப்பிட்டு பாவினால் இன்சொல் பன்மலர் கொண்டு என்று வாயினால் சமர்ப்பிக்கும் மலர் அதுவே என்று 8ம் பாசுரத்தில் குறிப்பிடுவதைக் காண்க. இவற்றை ஆராய்ந்தால் இன்னும் பெருகும் என்பதால் இத்துடன் அமைகிறேன்.

* [நைமிசாரண்ய பதிகத்தில் திருமங்கையாழ்வார் ‘நீதியல்லாதன நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் ,செய்தும்”முதலில் வாழ்ந்தவர் மனம் திருந்தி “அஞ்சிநான் வந்துன் திருவடியடைந்தேன்” என்று பின்னர் செய்ததைச் சொல்கிறார். ”பாவினால் இன்சொல் பன்மலர் கொண்டு உன் பாதமே பரவி” என்கிறார். இவ்வாறு தாம் முதலில் செய்யத்தகாதவற்றைச் செய்ததாகக் கூறி பின்னர் மனம் திருந்தி ”உந்தன் சரணமே சரணமென்றிருந்தேன்’ என்கிறார். மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் செய்யவேண்டியவைகளை இங்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார் என்று NRK ஸ்வாமி காட்டுகிறார்.]

5ம் பாசுரம் நிறைவுற்றது.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 5 தொடர்ச்சி

மேலும் இல்வாழ்க்கையிலிருப்பவர்களுக்கு இந்த ஸம்ஸாரமானது ஒரு ’அர்ணவம்’, ’ஸாகரமெ’ன்று ஒரு பெருங்கடலாக நூல்கள் குறிப்பிடுகின்றன. அவைகளுக்குச் சரியான தமிழ்சொல் ’பெருநீர்’ என்பதாகும். மற்ற ஆழ்வார்கள், ஆசார்யர்கள் எல்லோரும் பெண்டிரோடு நடத்தும் குடும்ப வாழ்க்கையை வெறுத்தும் ஒதுக்கியும் ‘அவ்வாழ்க்கை பகவானிடம் தாம் கொண்டிருந்த ஈடுபாட்டைக் கெடுத்துவிட்டது’ என்றும் பாடி வருந்த, மாறாக இவள் ஒருத்திதான் ‘இல் வாழ்க்கையை பரிசுத்தமானது’ என்று காட்டுகிறாள். ‘ப்ரஜாயாஹிப் புருஷ: பூர்ண:” என்னும் வேத வாக்கியத்தையும், “தர்ம ப்ரஜா அபிவ்ருத்யர்தம் விவாஹம் விதினா குரு” என்னும் மனு வாக்கியத்தையும், “மங்கலமென்ப மனைமாட்சி; மற்றதன் நன்கலம் மக்கட்பேறு” என்னும் திருக்குறளையும், “வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே” என்னும் ஆண்டாள் அருளிச் செயலையும் நோக்குக.இவளுடைய அருளிச்செயலில் நன்மக்கட்பேறு என்பது மனைமாட்சிக்கு நல்ல ஆபரணம் [நன்கலம்]  என்பதை அடியொற்றி இவள் நன்மக்களைப் பெற்று என்று பாடியிருப்பது நோக்கத்தக்கது. இதிலுள்ள மகிழ்ச்சி ஒவ்வொரு கிருஹஸ்தனுக்கும் [இல்லறத்தில் இருப்பவனுக்கும்] நன்மக்கள் பிறந்தவுடன் வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள, தொன்றுதொட்டு அவர்கள் குலத்தில் கைக்கொண்டிருந்த தர்மங்களும் இனியும் தொடரும், நிலைத்து நிற்கும் என்னும் பெருமிதமாகும். இஃது இல்லாவிட்டால் குலத்திற்கு குறைவு உண்டாகும். ‘குலக்ஷயே ப்ரணஸ்யந்தி’ எனத் தொடங்கும் கீதை [1-40] ச்லோகத்திலும் அர்ஜுனனின் கவலையாக இது காட்டப் பெறுகிறது, ’தூய’ என்னும் ஒரு சொல்லில் இந்த தெய்வக்கவி இவ்வளவையும் அடக்குகிறாள். இன்னும் உள்ளவைகளை நல்ல அறிஞர்கள் உய்த்துணர்வார்களாக.

நீரோட்டம் அல்லது நீர் நிலைக்குப் பக்கத்திலிருந்து அக்கரை போக வேண்டியவர்களை படகில் ஏற்றிக் கடத்தி வைப்பவன் ‘துறைவன்’ . இந்த ஒரு சொல்லில் சரம ச்லோகத்தின் அர்த்தத்தை முற்றிலுமாக உணர்த்துகிறாள். அங்கே ’மோக்ஷயிஷ்யாமி’ என்னும் சொல்லில் ’விடுவிக்கிறேன்’ என்னும் பொருளை மட்டுமின்றி ’தாரயிஷ்யாமி’ ’கடத்தி வைக்கிறேன்’ என்னும் பொருளையும் சேர்த்துக் காட்டி வராஹ சரமச்லோகத்தில் ’நயாமி பரமாங் கதிம்’ என்று முன்பு பூமிப்பிராட்டியாகிய இவளுக்குச் செய்துகொடுத்த வாக்குறுதியையும் கண்ணனுக்கு ஞாபகப்படுத்தித் ‘துறைவன்’ என்று அவனைக் குறிப்பிடுகிறாள். இச்சொல்லினால் பிரபத்தியும் அதன் பயனாக மோக்ஷம் கிடைத்தலும் சொல்லப்பட்டது.

நாலாவதாக ”ஆயர் குலத்தினில் தோன்று மணிவிளக்கு” என்று உத்தரக்ருத்யாதிகாரம் [ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் பிரபத்திக்குப்பின் ஒரு பிரபன்னன் தம் வாழ்வில் செய்யவேண்டிய, கடைப்பிடிக்கவேண்டியவைகளை விளக்கும் அதிகாரம்] கூறும் பொருளை விளக்குகிறாள். இப்பொருள் திருப்பாவை 28ம் பாசுரத்தில் நன்கு விளக்கப் பட்டுள்ளது. எனவே அதுவே இதற்கு வியாக்யானம் என்று கொள்க. இங்கு மணி விளக்கு என்று கூறியது விசேஷம். “வெய்யோன் ஒளி தன் மேனியில் விரிசோதியின் மறைய” [கம்ப ராமாயணம் -கங்கைப் படலம்- 6.1] என்பதுபோல் ஸ்வயம் ப்ரகாசத்தால் [தன்னிடமே இயல்பாகஅமைந்துள்ள ஒளியால்] வழிகாட்டும் விளக்கு இது. எனவே மாணிக்கச்சுடர் என்னும் பொருள்பட மணி விளக்கு என்றாள். இது கலங்கரை விளக்கு. ஸம்ஸாரப் பெருங்கடலில் காற்றினாலும் அலைகளாலும் அலைக்கப்பட்டுத் தவிக்கும் சிறு படகுகள் இந்த விளக்கையே குறிக்கோளாகக் கொண்டு அதை நோக்கியே படகைச் செலுத்தி அதன் பக்கத்தில் ஒதுங்கித்திருவடிநிழலில்வாழவேண்டுமென்பதைக்குறிப்பிடுகிறாள். இந்த விளக்கிற்கும் [தகழியும்] நெய்யும் வேண்டும் என்று முதல் ஆழ்வார்கள் இருவரும் உபாயத்தைச் சொன்னதையும் ஏற்றுக் கொள்கிறாள். மேலும் இதனால் நாம் அடையவிருக்கும் பயனாகிய உபேயமானது இவை இரண்டையும் [தகழி, நெய்] வேண்டாத [தேவைப்படாத] மாணிக்கச் சுடர் என்று காட்டும் அழகு ரசிக்கத்தக்கது.

(இங்கு ஸ்ரீNRK ஸ்வாமியின் விளக்கம் சற்றே விவரிக்க வேண்டியுள்ளது. முதலாழ்வார்களில் முதல் இருவரும் முறையேவையத்தை தகழி(அகல்)வார்கடலை நெய்யாகவும், அன்பைத்தகழி,ஆர்வத்தை நெய்யாகவும் கொண்டு விளக்கு ஏற்ற, இருளகன்று அவ்வொளியில் மூன்று ஆழ்வார்களும் பெருமாளைக் கண்டனர்.இவ்விதம் இங்கு உபாயம், உபேயம் இரண்டும் சொல்லப்பட்டன.ஸம்ஸாரக்கடலில் மனிதனுக்கு படகு,துடுப்பு,முதலிய சாதனங்களும், கலங்கரைவிளக்கு என எல்லாம் (உபாயங்கள்) தேவைப்ப்படும் அதேவேளையில் மோக்ஷமாகியகரையில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் எம்பெருமானாகிய விளக்கைக் காண வேறு ஒரு விளக்கின் தேவையில்லை;ஏனெனில் அது ஸ்வயம் ப்ரகாச்மான விளக்கு என்பதை குறிக்கும் வண்ணம் ‘மணிவிளக்கு’ என்னும் சொல்லைப் பயன்படுதியிருப்பதுஅழகு என்பது ஸ்வாமியின் அபிப்ராயம்)

சனி, 26 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


5-ஆம் பாசுரம்- மாயனை-----

ஆண்டாளுடைய திருப்பாவையில் கருத்துக்கள் இமயமலையினும் உயர்ந்தவை. பசிபிக் மஹா ஸமுத்திரத்திலும் ஆழமானவை.முப்பது பாட்டுக்களையும் ஆறு ஐந்துகளாகப் பிரிப்பர் பெரியோர். “ஐயைந்தும் ஐந்தும்” என்பதை நோக்குக.அவைகளில் முதல் ஐந்து பாடல்களும் இந்நூலுக்குப் பாயிரங்களாகும். அப்பாயிரங்களுள் இது கடைசிப் பாட்டு.
முதல் பாட்டில் ”நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று பரத்வத்தையும்,
“ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்” என்று கண்ணனின் ஸெளலப்யத்தையும், ந்ருஸிம்ஹன் வடிவமான தன் இதயத்தின் வழிபடு தெய்வமாகிய அந்தர்யாமியையும்,சொன்னாள். இரண்டாவது பாட்டில்  பாற்கடலில் பையத்துயின்ற பரமன் ” என்று வ்யூஹ மூர்த்தியைச் சொன்னாள்.
மூன்றாவது பாட்டில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று வாமனனாய் வந்து த்ரிவிக்ரமனாய் நீண்ட விபவ மூர்த்தியைச் சொன்னாள்.நாலாம் பாட்டில் அர்ச்சாமூர்த்தியை மேகத்தில் காட்டிக் கொடுக்கிறாள். இவற்றுள் பரம், வ்யூஹம் என்ற இரு மூர்த்திகளும் நம்மால் காணவியலாத இடங்களில் இருப்பவை. விபவம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே தோன்றி மறைபவை.அந்தர்யாமி அகக் கண்ணுக்கு மட்டுமே தோன்றும். புறக்(வெளி)கண்களுக்குப் புலப்படாதது.எனவே இந்நாலு மூர்த்திகளையும் வேறுபடுத்திக் காட்டி அர்ச்சையை உயர்வாக இப்பாட்டில் காட்டுகிறாள்.
கடல் நீரில் இருக்கும் உப்பு, கைப்பு, துவர்ப்புகளைப்போல இந்நான்கு மூர்த்திகளிலும் சில குறைகள் [மேலே சொன்னபடி] இருக்கின்றன என்றும் அந்த கடலிலிருந்து சுத்தமான ஜலத்தைப் பிரித்து எடுத்து அதைக் குன்றின்மேல் மழையாகப் பெய்து அந்த மழை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்து விதமான நிலங்களிலும் ஓடி அனைத்து உயிர்களையும் வாழவைப்பது போல் அர்ச்சாமூர்த்தியும் தம் அருள் புரியும் திறத்தினால் அவ்விதம் விளங்குகிறது என்பதும் ஆண்டாள் திருவுள்ளம். அதனால் அர்ச்சையை மேகம் போன்றது என்று ‘ஆழிமழைக் கண்ணா’ என்று விளித்துத் தொடங்குகிறாள்.

1.உப்பினால் ஒன்றுக்கும் உதவாத கடல்நீர் அனைத்துலகுக்கும் உயிரளிக்கும் மழை நீராக மாறுவதற்கு கண்- இடமாகவுள்ள ஏ! மேகமே! [கண்ணா] என்றழைக்கிறாள். இந்த ஐந்து மூர்த்திகளையும் வழிபடும் முறையை அங்கங்கே கற்றுக் கொடுத்தவள் இங்கு பகவானை ஆராதிக்கும் முறையை எவ்வித மன மொழி செயல்களோடு செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறாள். நம்முடைய ஆராதிக்கும் தெய்வம் கண்ணன் என்கிறாள். அவனுடைய தன்மையை ஐந்து விதமாக வருணிக்கிறாள்.
மாயனை- கண்ணன் பரப்ரஹ்மம். மாயை அவனுக்கு அவசியமானது; அடங்கி நடப்பது. இதை ‘தைவீ ஹ்யேஷா-----’ என்னும் [கீதை 7.14] ச்லோகத்தில் காணலாம். ‘ஹே அர்ஜுனா ஸத்வ, ரஜஸ்,தமஸ் ஆகிய முக்குணங்களின் மயமாக உள்ள இந்த என்னுடைய மாயை உங்களால் கடக்க முடியாதவள். என்னையே யார் வந்து அடைகிறார்களோ அவர்கள் மட்டுமே இதைத் தாண்டுகிறார்கள் என்கிறார் பகவான். மாயயைக் கடந்து பகவானின் திருவடிகளை அடைவதற்கு பகவான் ஒருவனே உபாயம். [வழி] அவனைத் தவிர வேறு உபாயம் கிடையாது என்கிற வேத சாஸ்த்ரங்கள் கூ றும் முடிவை இங்கே ’மாயனை’ என்னும் ஒரு சொல்லால் குறிப்பிட்டாள். அதைத் தாண்டச் செய்யவல்ல இந்த தெய்வமே எல்லோருக்கும் வழிபடத்தக்கதான தெய்வம்
என்று சுட்டிக்காட்டுகிறாள்.

2.அடுத்து ‘மன்னு வட மதுரை மைந்தன்’ என்று கூறி கண்ணனே நம் பக்திக்குரியவன் , மோக்ஷத்திற்கு உபாயமாகிய பக்தியை அந்தக் கண்ணனிடத்தில் பண்ணவேண்டும் என்கிறாள். கண்ணன் இயற்கையில் அழகு நிறைந்தவன். அத்துடன் வட மதுரைக்கு வந்த போது கம்ஸனுடைய அரண்மனைக்குச் செல்லும் வழியில் வந்த வண்ணானிடமிருந்து கம்ஸனுடைய உயர்ந்த ஆடைகளையும், மாலாகாரனிடமிருந்து [பூக்காரர்] புஷ்பங்களையும், கூனியாகிய குப்ஜையை நேரே நிமிர்த்தி அவளிடமிருந்து மணமிகு சந்தனத்தையும் இப்படி எல்லாவற்றையும் வாங்கி அணிந்துகொண்டு செயற்கையழகும் நிரம்பி மணமகனாக விளங்கியிருப்பவனை மனத்தினால் சிந்திக்க வேண்டுமென்று கூறி பக்தி செய்வதற்கு அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹமே [திருமேனி] நமக்கு நோக்கமாயிருப்பது [லக்ஷியமானது] என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். வால்மீகி ஸ்ரீராமனை ‘குணவான், வீர்யவான்’ என்று அடுத்தடுத்து எடுத்தாற்போல் இவளும் ’இங்கு இவன் மணமகன் போன்ற அழகியவன்’ என்றும் பல வீரச் செயல்களைச் செய்தமையால் ‘பெரியவன்’ என்றும் குறிப்பதற்கு ‘மைந்தனை’ என்கிறாள். ‘மைந்தே வலிமை’ என்னும் தொல்காப்பிய பொருளாதார சூத்திரத்தைக் காண்க.

3. அடுத்து பிரபத்தி உபாயத்தையும் அதன் பயனையும் அருளிச் செய்கிறாள். ‘பெருநீர் யமுனை’ என்றது கடல்போல் அகன்று ஆழ்ந்து நீண்டிருக்கும் யமுனை என்று பொருள். இதற்குத் தூய என்னும் அடைமொழி உப்பு துவர்ப்பு முதலான கடல்நீரின் கெட்ட குணங்கள் ஏதும் இல்லாதது என்பதைக் குறிப்பிட்டு அதன்மூலம் வேதம் காட்டும் மத்வாதி 32 வித்யைகளிலும் உள்ளது போல் உடலை வருத்திக் கொள்ளல், விரதம் இருத்தல் முதலிய துன்பங்கள் ஏதுமில்லாமல் சுகமாகவும் இனிதாகவுமுள்ள நம்மால் எளிதில் செய்யவல்ல பிரபத்தியை இங்கே குறிப்பிடுகிறாள்.

தொடரும்

என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 5 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.


  

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 4 தொடர்ச்சி

ஆழிமழைக்கண்ணா-----

பகவானுடைய பஞ்சாயுதங்கள் எனப்படும் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என்னும் ஐந்து ஆயுதங்களும் அவனடியார்கள் அவனை வணங்கும்பொழுது அவனுக்கு ஆபரணங்களாகவும், அசுர ராக்ஷஸர்களை எதிர்த்து அழிக்கையில் அவனுக்கு ஆயுதங்களாகவும் விளங்குகின்றன. ‘பாழியந்தோளுடை’ என்று அவனை அடையாளம் காட்டியது ‘அவன் அசுர ராக்ஷஸர்களை வெல்லச் செயல் புரிபவன் என்றும் அச்சமயத்தில் ஆபரணமாக இருந்த சக்கரம் ப்ரயோக [செலுத்தப்பட்ட] சக்கரமாகி நிமிர்ந்து கிளம்பும் என்றும் அப்பொழுது அது தன் முழுமையான ஒளியுடன் திகழும் என்றும் காட்டவே. மின்னலின் ஒளியும் இந்த ப்ரயோகச் சக்கரத்தின் ஒளியை ஒத்திருப்பதாக மின்னலுக்கு சக்கரத்தை உவமையாகக் காட்டுகிறாள்.

வலம்புரி போல் நின்றதிர்ந்து என்பதின் பொருளை ‘ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே’ என்று 26வது பாடலில் கூறுகிறாள். [அச்சங்கின் ஒலி திருதராஷ்டிரன் முதலியோரின் இதயங்களை நடுங்கச் செய்தது என்னும் பகவத்கீதையின் ச்லோகத்தையும் [1-19] இங்கு நினைவில் கொள்க.]

சார்ங்கமுதைத்த சரமழைபோல் என்று வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளைப் போல் பெய்யவேண்டும் என்றதோடு உவமையை நிறுத்திக்கொண்டு அதன் பயனை மாற்றிப் பேசுகிறாள். அம்பு மழை எதிரிகளை சாய்ப்பதற்கு பெய்வது. நீ அங்ஙனமின்றி நாங்கள் வாழ்வதற்குப் பெய்யவேண்டும் என்கிறாள். இப்படி வாழப் பெய்யும் இந்த மழை நீரும் இங்குள்ள எச்சில் , அழுக்கு முதலான அசுத்தங்களைக் கழுவிவிட்டு இவ்விடங்களைப் பரிசுத்தமாக்குவதால் தீய சக்திகளை அழிக்கும் எம்பெருமானின் ஆயுதங்களைப் போல் நற்காரியங்களைச் செய்வதுடன் மக்களுக்கு இன்றியமையாத பயிர்களையும் நன்கு விளையும்படி செய்கிறது. இவை இரண்டையும் அதாவது அநிஷ்ட நிவாரணம் எனப்படும் தீமை விலகுதல் , இஷ்டப் ப்ராப்தி எனப்படும் நன்மை பெறுதல் என்னும் இரண்டும் உண்டாகிறது என்னும் பொருள்பட ‘வாழ’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறாள்.
நான்காம் பாசுரம் நிறைவுற்றது.                



\-

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 4

ஆழி மழைக் கண்ணா-----

முதல் மூன்று பாட்டுக்களில் பரம், வ்யூகம், விபவம் ஆகிய நிலைகளிலிருக்கும் சரண்யனை [ அனைவராலும் சரணமாகப் பற்றத் தகுந்தவன்] பாடுகிறாள். உலகம் உய்வடைவதற்காக. இவை அவள் பாடிய கடவுள் வாழ்வதாகும். தமிழ் கவிகள் பலகாலமாக கடவுள் வாழ்த்து பாடியதும் தொடர்ந்து வான் சிறப்பைப் பாடும் மரபினைக் கொண்டுள்ளனர். அதையொட்டி வான் சிறப்பாக நான்காவதான இப்பாசுரத்தை வைத்தாள். தம் கவி பாடும் திறமையினால் அந்த மேகத்தையே நாராயணனாகப் பாடுகிறாள். நான்காவது நிலையான அர்ச்சையையும் பாடுகிறாள்.

பகவான் தம்மை அடியார்கள் விரும்பித்தொழும் உருவத்துடன் அவர்கள் விரும்பிய இடங்களிலெல்லாம் கோவில் கொண்டு எழுந்தருளியிருப்பது  போல் இந்த மேகமும் தாகத்துடன் நீர் வேண்டுமிடங்களிலெல்லாம் என்று மழையாகப் பெய்கிறது.

அர்ச்சையிலுள்ள பெருமாளின் மேன்மையைக் கூறி இந்த மேகத்தினிடத்திலும் பெருமாளின் அதே இயல்புகள் உள்ளன என்பதையும் எடுத்துக்காட்டி மேகம் தன்னைப் போன்றவர்களுக்கு எல்லாம் எப்படி மழை பொழிந்து எல்லா நற்பயன்களையும் பெறச் செய்கிறதோ அதுபோல் பெருமாளும் அர்ச்சாமூர்த்தியாக எழுந்தருளியிருந்து அருள்புரியக் காத்திருக்கிறான் என்கிறார்.

தமருகந்தட்ட்தெவ்வுருவம் அவ்வுருவம்தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர்,-தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்திமையாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்.(முதல் திருவந்தாதி-44)

நாமும் அந்த மேகம் பொழிந்த மழை நீரில் குளித்து உடலை சுத்தம் செய்துகொண்டு அவனுடைய நீமையில் [நீராடப் போதுவீர் என்று முதலில் அழைத்ததற்கிணங்க] முழுகித் திளைத்து அதனால் ஆத்மாவையும் சுத்தம் செய்து கொள்வோம் என்றுபாடி தலைக்கட்டுகிறாள். [முடிக்கிறள்]

இங்கே

புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்.(துருக்குறள்-30.8)
குறளின் பொருள் ஆராயத்தக்கது. வடமொழியில் ஸத்யம், செளசம் என்று திரும்பத் திரும்பச் சொல்லுவர். ஸத்யம் என்பது அகத் தூய்மை. செளசம் என்பது புறத் தூய்மை. மழை நீரால் உடல் தூய்மையும் மனத் தூய்மைக்கு மனத்துக்கண் மாசிலனாகி அவனை ஆராதித்தலுமேயாகும். அவனது குணங்களை எண்ணி அதில் திளைத்திருப்பதால் மனம் மாசு நீங்கி சுத்தமாகும் என்கிறாள்.

மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்
ஆகுல நீற பிற.(குறள்-4.4)

இந்த ஒரு பாசுரத்தில் ஐந்து காரியங்களைக் கூறுவது இவளுடைய கவிபாடும் திறனைக் காட்டுகிறது. அவையாவன

1. வான் சிறப்பு, 2. அர்ச்சாமூர்த்தி, 3. அது மேகத்திலுள்ளதென்பது 4. அதை வணங்க வேண்டுமென்பது, 5. அதனால் அனைத்து நலன்களும் உண்டாகும் என்பது.

ஆழிமழை- இச்சொற்களில் உள்ள சினையாகிய நீரைக் குறிப்பதால் இவை ‘முதல் ஆகு பெயரில் வந்தது. கண், இடம், ஒன்று-சிறிது, கை-செயல், கரத்தல்- ஒளித்தல். கைகரவேல்- ஒளிக்காமல் செய்.

இங்கு இந்திரனுடைய காரியமான மழை பெய்தலை நீ தவறாமல் செய். என்னும் வேத வாக்கியத்தை நினைவூட்டுகிறாள். ஆர்த்தல்- கட்டுதல். தன்னிடமுள்ள மின்னல் என்னும் சக்தியைக் கொண்டு ஆவியாக இருக்கும் நீரைத் தான் கட்டி எடுத்துக் கொண்டு மேல் எழுகிறது [செல்லுகிறது] என்ற விஞ்ஞான ஆராச்சியாளர்கள் கண்டுள்ள உண்மையை ஆர்த்தல் [கட்டுதல்] என்னும் சொல்லால் விளக்குகிறாள். ஏறி- பலவிடங்களுக்கும் செல்வதற்காக மேலே செல்லுதல். பகவான் திருவுள்ளம் குளிர்ந்து அருள் பொழிவதை இங்கு மேகம் நன்கு கறுத்து மழை பொழிதலுக்கு உவமை யாக்கினாள் என்பதை ’போல்’ என்னும் உவமையுருபு [உவமைச் சொல்] காட்டுகிறது. ஆண்டாள் ஊழிமுதல்வனாகிய பெருமாளின் அருகில் இருப்பவள் அவனை அதிகம் அறிந்தவள் அதலால் அவளுக்கு மேகம், பெருமாள் இருவருக்குமிடையிலான நிற ஒற்றுமை மனதில் உண்டாகிறது.

’ஊழி முதல்வன்’ என்பதை ஊழியான், முதல்வன் என்று வைத்துப் பொருள்கொள்ளல் வேண்டும். ஊழியான்- அழிப்பவன் [ஸம்ஹாரம்]. முதல்வன்- படைப்பவன். இவ்விரண்டு செயலுக்கும் உடையவன் இவனே என்பதை ‘அன்’ விகுதி காட்டுகிறது. நிக்ரஹம் [தண்டித்தல்] அனுக்ரஹம் [அருள்புரிதல்] இரண்டையும் செய்வது வலக்கையாதலால் பாழியந்தோள் என்று அதைக் கூறினாள். பற்பநாபன் என்பதை ‘முதல்வன்’ என்றதோடு கூட்டி பொருள்கொள்ளவேண்டும். அவனுடைய நாபியில் மலர்ந்த தாமரையில் படைக்கும் தொழிலைச் செய்யும் ப்ரம்மா தோன்றியதைக் குறிப்பால் உணர்த்துகிறாள். ஒரு விதை முளைத்து வளர்வதற்கு முன் இருக்கும் நிலையை ‘முதல்’ என்னும் பெயரால் குறிப்பிடுகிறோம். எனவே ஸ்ருஷ்டி என்னும் பயிர் வளர காரணமான வித்தினுடைய ‘முதல்’ என்னும் நிலை இவனே.  இவனே பின்னர் ‘வித்தாகி, ஸ்ருஷ்டியும் இவனிடமிருந்தே உண்டாகிறது.
கையில் என்பதற்குச் செயலில் என்றும் பொருள் கொள்ளவேண்டும். [அனைத்தும் இவன் கையில்’ என்பதாக.]

தொடரும்---

என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 


பாசுரம் 4 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.