வெள்ளி, 11 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 7
கீசு கீசு என்று---
நம் நாட்டில் பேசும் பறவைகள் இரண்டு வகையாகும். அவை கிளியும் பூவையுமாகும். பூவையென்பது நாகணவாய்ப்புள் என்று செந்தமிழிலும் நார்த்தாம்பிள்ளையென்று நாட்டுப்புறப் பேச்சிலும் வழங்கப்படும் ஒரு பறவையாகும். அது கருப்பு மஞ்சள் நிறங்களையுடைய இறக்கைகளை
யுடையது. குருவியைக் காட்டிலும் சிறிது பெரிதாயிருக்கும். விடியற்காலையில் கீச் என்னும் சப்தத்தைச் செய்வது. இதையே ஆனைச்சாத்தன் என்று ஆண்டாள் இங்கு கூறுகிறாள். கீச் என்பதை கீசு என்கிறள். கீசு என்னும் சொல்லை க+ஈசு என்று பிரித்து ஈசாவாஸ்ய உபநிஷத்தால் ஈசன் என்று கூறப்படுபவன் க: யார் என்று பறவைகள் கேட்பதாகவும், இக்கேள்விக்கு முந்தைய [6வது பாசுரத்தில்] ஹரி என்று முனிவர்களும் யோகிகளும் பதில் கூறுகிறார்களெனவும் பொருள் கொள்ளவேண்டு மென்றும் பெரியோர் கூறுவர். [ஈசாவாஸ்ய உபநிஷத் ஆரம்பத்திலேயே ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் யாத் கிஞ்ச ஜத்யாம் ஜகத் என்று ஈச்வரன் என்பவன் யார் என்பதைக் கூறுகிறது. உலகில் அறிவுள்ள பொருள் அறிவில்லாத பொருளென்று என்னென்ன உண்டோ அத்தனை பொருள்களும் ஈச்வரன் என்பவனால் வ்யாபிக்கப்பட்டுள்ளது என்கிறது. எனவே சித், அசித் எனப்படும்(ஈச்வர தத்வம் தவிர மற்ற இரு தத்வங்களிலும் )அனைத்துப் பொருள்களிலும் வ்யாபித்திருப்பவனே ஈச்வரன் எனப்படுபவன் என்பது தெளிவாகிறது. க: யார், ஈசு -ஈச்வரன் என்பது புணரும்போது கீசு என்றாகிறது. ]

இந்தப் பாட்டிலும் இப்புள்ளின் சப்தம், ஆய்ச்சியர் தயிர் கடையும் சப்தம், மற்றவர்கள் ஏற்கனவே துயிலெழுந்து பகவானுடைய வடிவழகையும் பெருமைகளையும் பாடுவது, அவன் திவ்ய நாமங்களைச் சொல்லி பஜனை செய்வது ஆகிய ஓசைகளையெல்லாம் கேட்டும் நீ விழித்துக்கொண்டே படுத்துக் கொண்டிருக்கிறாயோ என்று கூறுகிறாள். திருக்குறளில் புல்லறிவாண்மை என்னும் 85வது அதிகாரத்தின் கடைசிக் குறளாகிய ‘உலகத்தார் ‘ எனத் தொடங்கும் குறளின் கருத்தை இது ஒத்ததாய் உள்ளது.  பரிமேலழகர் தன் உரையில் ‘உயர்ந்தவர்கள் உண்டு என்று சொல்லும் விஷயங்களை [உதாரணமாக கடவுள் மறுபிறவி, வினைப் பயன் போன்ற விஷயங்களை] இல்லையென்று தன் புல்லறிவால் மறுப்பவர்கள் வையத்தில் காணப்படும் பேய் என்று கருதப்படுவர் என்று கூறுகிறார்.

இந்தக் குறளின் பொருளையே தன் சொல்லில் அடக்கிப் பேய்ப் பெண்ணே என்று விளிக்கிறாள். இதன் பொருள் மனிதர்க்கு விடியற்கலையில் எழுந்து பகவானைப் பஜிப்பது நன்மை தரும், மேலும் மார்கழி மாதத்தில் இது இன்னும் விசேஷமானது என்று உலகத்தாரும், முனிவர்களும் யோகிகளும் கூட பகவானைப் பஜித்தலாகிய இக்காரியத்தைச் செய்யும் பொழுது நீ இப்படிப் படுத்துக் கிடப்பது இவைகளையெல்லாம் இல்லை என்று சொல்லும் பேய் என்றல்லவோ உன்னைகருதவைக்கும் என்கிறாள். பறவைகளும் மனிதர்களும் எழுந்திருந்து அவரவர் தொழிலையும் பகவத் பஜனையையும் செய்யும்போது நீ ஏன் இப்படி கண் விழித்த பின்னும் படுத்துக் கிடக்கிறாய். உன் அழகையும் அறிவையும் வைத்து உன்னை எங்கள் நாயகப் பெண்பிள்ளை, தலைவி என்று கருதினோமே நீ பேய்ப் பெண்ணாகலாமா என்கிறாள்.

நாராயணன் மூர்த்தியைப் பாடுவது என்பது பகவானின் குண நலன்களையும் நற்செயல்களையும் பாடுதல். கேசவனைப் பாடுதல் என்பது கேசவன் முதலான திருநாமங்களைப் பாடி பஜனை செய்தல். இவையெல்லாம் செய்யவேண்டிய தகுந்த நேரம் இதுவாகும் என்கிறாள்.

தொடரும்

புதன், 9 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 6
புள்ளும் சிலம்பினகாண்---

ஐந்து பாடல்களுடன் பாயிரம் முடிந்து ஆறு முதல் பதினைந்து வரையுள்ள பத்துப் பாடல்களும் பகவானை நினைக்காமல் உறங்கிக்கொண்டிருக்கும் ஜீவர்களை எழுப்புவதாக அமைந்துள்ளன.

“ப்ராஹ்மே முஹூர்த்தே உத்தாய” என்று ஆஹ்நிகம் என்னும் நூலில் “மக்கள் ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளவேண்டுமென்று கூறுகிறது.  [ஆஹ்நிகம் என்பது நாம் தினமும் செய்யவேண்டியவையென சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ள செயல்களைக் கூறும் நூல். ] ஹோரை என்பது ஒருமணி நேர காலம் . சூர்யோதயத்திற்கு முந்தைய இரண்டு ஹோரை அதாவது இரண்டு மணி நேரத்துக்குப் ப்ராஹ்ம முஹூர்த்தம் என்று பெயர். அந்த நேரம் வந்துவிட்டது என்று கூறி அதற்கு மூன்று அடையாளங்களையும் காட்டுகிறாள்.

 1. பறவைகளின் ஒலி
2. கோவிலிலிருந்து வரும் ஒலிகள்
3. முனிவர்களின் குரலொலிகள்

பறவைகள் தங்கள் இயல்பான சக்தியைக் கொண்டு பொழுதை உணர்கின்றன. கோழி கூவுவதும் பறவைகள் சத்தமிடுவதும் பொழுது புலர்வதைக் காட்டும் இயற்கை தரும் அடையாளங்கள். கோவிலில் விடியற்காலையில் ஆராதனம் தொடங்கும் போது சங்கு ஊதுவதும் திருச்சின்னம் போன்ற வாத்தியங்களை முழக்குவதும் உலகம் அறிந்த அடையாளங்கள். முனிவர், யோகி என்று இருவகையானவர்களை இங்கு காட்டுகிறாள். பகவானை எப்பொழுதும் மனதில் இடைவிடாது த்யானம் செய்து கொண்டிருப்பவர்களை மனன சீலர்கள் என்றும் முனிவர்கள் என்றும் கூறுவர். யோகிகள் என்பார் இங்ஙனம் மனனம் செய்து செய்து அதில் வெற்றி பெற்றவர்கள். அதாவது சித்தி பெற்றவர்கள். இவர்களெல்லாரும் எப்பொழுதும் எம்பெருமானின் குணங்களையும் அற்புதமான செயல்களையும் மனதில் எண்ணிக்கொண்டே அவற்றை அனுபவித்துக் கொண்டே காலத்தைக் கழிப்பவர்கள் . ஆஹ்நிகம் கூறும் விதிப்படி அதிகாலையில் துயிலெழுந்து ஹரி நாமத்தை இவர்கள் உச்சரிப்பதாகக் கூறுகிறாள்.

’வித்து’ என்னும் சொல்லுக்கு ’விதை’ என்பது பொருளாகும். படைப்பிற்கு மூல காரணமான பொருளாக விளங்குபவரும், ஹரியென்னும் பெயரை உடையவரும், ஓம் எனப்படும் ப்ரணவத்தின் பொருளானவருமான பரமாத்மாவை வித்து எனக் குறிப்பிடுகிறாள்.

பகவத் கீதை 7-10ல் ‘பீஜம் மாம் ஸர்வபூதானாம்’ என்றும் கீதை 14-4ல் ’அஹம் பீஜ ப்ரத: பிதா’ என்றும் பகவான் கூறியுள்ளதைக் காண்க. ‘இப்படைப்பில் காணப்படும் பொருள்களுக்கெல்லாம் நானே வித்தாவேன்’ என்பதும் ‘நானே விதைகளைக் கொடுப்பவனும் ப்ரபுவுமாவேன் என்பதும் இவற்றின் பொருள். இந்த வித்தே ஸத்வ, ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களுக்கும் ஆகாயம், நிலம், நீர், தீ காற்று எனப்படும் ஐம்பெரும் பூதங்களுக்கும் மூல காரணமானதாகும். இவ்வித்து தான் பாற்கடலில் முளைத்து வளர்ந்தது என்று கூறுகிறாள். உலகில் நாம் காணும் விதைகள் முளைத்து செடியாக மரமாக வளர்கிறது, பின் அழிகிறது. ஆனால் இந்த விதைக்கு அதுபோன்ற மாற்றங்கள் எதுவும் கிடையா. இது நித்யமானது, அழிவற்றது. உலகில் நாம் காணும் சித், அசித் எனப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் எம்பெருமானே மூல காரணமாக இருப்பதால் இங்கு அவனை வித்து என்று குறிப்பிடுகிறாள்.

இவ்வுலக வாழ்வில் பல்வேறு கவலைகளால் ஏற்படும் துன்பங்களால் கொதித்திருக்கும் மனித உள்ளங்கள். இப்பனிக்காலத்தில் விடியற்காலையில் உள்ள குளிர்ச்சியினால் உடல்மட்டுமின்றி உள்ளமும் குளிரட்டும் என்கிறாள்.  அதற்கு பகவானின் நாமங்களைச் சொல்வதும், கேட்பதும், அவனது குண, செயல்களை நினைப்பதும் உள்ளம் குளிர வகை செய்யும் எனவே அத்தகு செயல்களைச் செய்யாமல் படுத்திருக்கலாமா என்கிறாள். ஹரியென்ற பேரரவம் கேட்டு உள்ளம் குளிரவில்லையா என்று கேட்கிறாள்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 6 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.