சங்கத் தமிழ் மாலை-புத்தகம்

NRK ஸ்வாமியின் சங்கத் தமிழ்மாலை புத்தகத்தின் பிரதி


முதல் பாசுரம் வரை- பதிவு நாள் 25-01-11


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

முன்னுரை

உள்ளமும், உயிரும் உயர்ந்த திறத்தனவாவதற்கு நோன்புகள் மிகப்பழமையாக நோற்கப்பெறுவன. வினை செய்யும் வகையில் ஒருவர் ஏற்றமுடையராவதற்கு இத்திறத்தின் உயர்வு இன்றியமையாதது. மனித உலகு முழுதும் நெடுங்காலமாக எல்லா தேயத்திலும் எல்லாப் பகுதியாரிடையும் நோன்புகள் பலபடியாக வழங்கி வருகின்றன என்பதும், அவைகளால் பெறும் பயன்களாகக் கருதப்படுவனவும், இந்த நோன்பின் பெருமைக்குச் சான்றாவன.

இவ்வித நோன்புகளை நோற்றலும் கல்வி கற்றலைப்போலப் பல பிறப்பிலும் உயிர்த்துணையாய் நிற்கும் செல்வத்தை ஈட்டுவதாகும் என்பது குறளுடைத் தேவரின் கொள்கை:
"ஒருமைக்கட்டான் கற்ற கல்வி ஒருவற்கு
 எழுமையும் ஏமாப்புடைத்து."
என்பதையும்

"இலர்பலராகிய காரணம் நோற்பார்
 சிலர் பலர் நோலாதவர்"

என்பதையும் உற்றுநோக்குமிடத்துக் கல்வி உயிர்ச்செல்வமாகிப் பின்னேழ் பிறப்புகளுக்கும் உதவுவதே போல் முற்பிறப்புகளில் முயன்று முற்றிய நோன்புகள் இப்பிறப்பில் உயிர்த் துணையாகி உதவுகின்றன என்பதைத் தோற்றுவித்துக் காணும் உலகில் நோன்புகளைக் கைக்கொண்டு தலைகட்டுவார் சிலரும், அஃதில்லாதார் பலரும் இருத்தலை எடுத்துக்காட்டி ஆதலான் நோன்பும் உயிர்ச்செல்வம் என்பதை தேவர் தன் குறளில் தலைக் கட்டுகிறார். "தவம்" என்னும் அதிகாரத்திற்கு இக்குறள் தலையணியாய் நிற்பது. அத்தவத்தின் உருவத்தை
"உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
 அற்றே தவத்திற் குரு"

என்றுரைத்து, இத்
"தவமும் தவமுடையார்க்காகும்"

என்று அறுதியிடுதலின், இதற்கு விதையாக முற்றவமிருந்த முளைத்தாலன்றி நற்றவ முயலுதலும் கைகூடுதலும் அரிது என்பதைத் தெளியக்காட்டுகிறார். ஆதலின், வாழ்க்கையில் ஈட்டும் செல்வங்களில் கல்வி நோன்பு இவைகளின் வழி எய்தும் உயிர்ச்செல்வங்கள் மற்றெல்லாச் செல்வங்களிலும் ஏற்றமுடையன என்பது வள்ளுவர் வாய்மொழி வழிப் பெற்றாம். இந்நோன்புகளின் வகைகளும் படிகளும் பலவாய் பரந்து விரிந்துள்ளன. பலகலை நூல்கள் இவகளைப் பரக்கக் கூறுவன. ஆதலின் அவரவர் கருதும் பயனுக்கேற்ப நோற்பது நோக்கி அவ்வன்நோன்பைத் தக்க பெரியாரிடம் தெரிந்து கையாளுதல் மரபு.

பெரியாழ்வார் திருமகளாய் வளர்ந்த ஆண்டாள் பெருமாள் தனக்கு நாயகனாக வேண்டும் என்னும் உறுதி கொண்டாள். அதை நிறைவேற்றுவதற்கேற்ற நோன்பைத் தெளிந்தாள். கொளுத்தக் கொண்டு, கொண்டது விடாத பேதைப் பிராயத்துப் பெண்தான் ஆதலின், தன்னையொத்த பேதைப்பெண்டிர் நோற்றவகை ஏதேனும் உண்டா என்று தேடினாள். ஸ்ரீ பாகவத புராணம் 10 வது ஸ்கந்தம் 22 வது அத்யாயத்தில் 'காத்யாயனீ வ்ரதம்' என்று பெயர் வழங்கிய ஒரு நோன்பைக் கண்ணனைத்  தங்களுக்குப் புருஷனாக அடைதற்பொருட்டு அறிவிலா இடைச்சிறுமியர்கள் நோற்று அவனை அடைந்தார்கள் என்பதைத் தெரிந்தாள். அது வைதிக மத ஸம்மதமான நோன்பு. அதில் வழிபடு தெய்வம் காத்யாயனீ  என்னும் நாமமுடைய பார்வதி தேவியாவாள். இப்பெயரின் பெருமை என்னையோவெனின், 'கதி' , 'அயன' என்னும் இரண்டு பதங்களால் மோக்ஷமார்க்கங்கள் எவையென்று  விசாரிக்கிறவர்களின் கூடஸ்தரான கத்யயனர் என்னும் ரிஷியின் குலத்தில் பிறந்தவள் காத்யாயனீ. ஆதலின் அதற்கேற்ப பகவத் ஸ்வரூபத்தை முற்றிலும் விசாரித்த பெரியாழ்வார் திருமகளாகிய இவள் மற்றொறு வழிபடு தெய்வதைக்கருதாது அந்தக் கண்ணனையே அவனை அடைவதற்கு உபாயமாய்க் கொண்டு அவனை அடைய நோற்கிறாள். ஆதலின், வைதிக மதத்தின் போக்கைப் பின்பற்றி கண்ணன் ஒருவனையே ஆறும் பயனுமாக உடைய ஆழ்வார்கள் உறுதிப்பாட்டைத் தலைக்கட்டும் வகையில் இவள் நோற்ற நோன்பும் அதன் பயனும் திருப்பாவை 30 பாக்களில் பொதிந்துள்ளன.

முதலாழ்வார் தொடக்கத்தாய் ஆழ்வார், எம்பெருமானார் ஸம்பிரதாயம் என்று நாட்டில் நலம் பெற்று வழங்கும் ஒரு கூட்டத்தாரின் கொள்கைக்கு இத் திருப்பாவை முதல் நூலாகவும், 143 செய்யுள்கள் கொண்ட நாச்சியார் திருமொழி இதன் குறிப்புரையாகவும், மாறன் சடகோபன் ஆக்கித்தந்துள்ள 4 நூல்களும் இவைகளின் விரிவுரையகவும், மங்கையர்கோன் 6 நூல்களும் இவற்றின் விருத்தியுரையாகவும் அமைந்துள்ளன. மற்றைய ஆழ்வார்களுடைய அருளிச்செயல்களும் இராமனுச நூற்றந்தாதியும் மேற்கண்டவைகளில் அவரவர் கண்டு தொகுத்த மாணிக்கக் குவியல்களாகவும் மிளிர்வது நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தின் தனிச்சிறப்பு எனினும் அமையும்.

இத்திருப்பாவைக்கு உரை கண்டார் ஐவராவர். நால்வர் புறவுரையும் ஒருவர் அகவுரையும் வரைந்துள்ளார். மற்றைய ஆழ்வார்கள் அருளிச்செயல்களையும், வேத சாஸ்த்ர வசனங்களையும் அவ்வுரையாசிரியர்கள் தொகுத்துக்கூறும் திறத்தை நோக்குங்கால் அவரவர் கல்வி, அறிவு, ஆற்றல்களின் மேம்பாடு யாரும் வியக்கத்தக்கதே. தன் நூல் 'சங்கத்தமிழ்மாலை முப்பது' என்ற குறிப்பைப் பிற்காலத்தார் உணர்ந்து உரை கொள்ளவேண்டும் என்பது ஆண்டாள் அன்பின் பணி ஆதலின் அவ்வழி சற்று முயலுதலும் முறையேயாகும்.

தனியன்கள்

நீளாதுங்க ஸ்தநகரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸதஸிரஸ்ஸித்த மத்யாபயந்தீ,
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகிளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதாதஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய:

பதவுரை:
நீளா- நப்பின்னைப் பிராட்டியுடைய;
துங்க-உயரமான;
ஸ்தநகிரி-முலையாகிய மலையின்;
தடீ- தாழ்வாரத்தில்
ஸுப்தம்-தூங்குகின்றவனான;
க்ருஷ்ணம்-கண்ணனை;
உத்ப்போத்ய-நன்றாக எழுப்பி;
சத-நூற்றுக்கணக்கான;
ச்ருதிசிரஸ்-வேதாந்தங்களில்;
ஸித்தம்-முடிந்தபொருளாகச் சொல்லியிருக்கிற;
ஸ்வம்-தன்னுடைய;
பாரார்த்யம்-பரத்வத்தை;
அத்யாபயந்தி-சொல்லிக்காட்டுகிறவளும்;
ஸ்வ-தன்னுடைய;
உச்சிஷ்டாயாம்-சூடிக்களைந்ததான;
ஸ்ரஜி-மாலையில்;
நிகிளிதம்-நன்றாகக்கட்டுப்பட்டவனா யிருக்கின்ற அந்தக்கண்ணனை
யா-எவள்;
பலாத்க்ருத்ய-பலவந்தப்படுத்தி;
புங்க்தே-அவனுடைய குணங்கள், செயல்களை அனுபவிக்கிறாளோ (அப்படிப்பட்ட)
கோதா-கோதை யென்று ப்ரஸித்தமான;
தஸ்யை-அவள்பொருட்டு;
இதம் இதம் நம- இத்தகைய படிகளில் நமஸ்கரிக்கிறேன்;
பூய ஏயவாஸ்து பூய-இவ்விதமே மறுபடியும் நமஸ்கரிக்கின்றேன்.

கருத்துரை:
நீளாதுங்கஸ்தனகிரிதடிஸுப்தம் என்னும் முதல் வாக்யம் "மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்" என்னும் 23-வது பாடலின் கருத்தையும், "கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா" என்னும் 19-வது பாடலின் கருத்தையும் பின்பற்றுகிறது. ஆச்ருதர்களுடைய ,வளர்ந்து, பருத்து, உயர்ந்து, நிமிர்ந்து நிற்கும் பக்தியே மலர் போன்ற முலையாக இங்கே உத்ப்ரேக்ஷிக்கப்பெறுகிறது.  பகவான் ஒருவனே தனக்கு சேஷியென்றும், தன்னைச் சேஷனாகவும், நன்கறிந்து பக்தியிலீடுபட்டு வர்த்திக்கும் ஸாதுக்களான ஆச்ருதர்களைப் பெண்களாகவும், பெண்களின் அங்கங்களிலெல்லாம் உத்தம அங்கமாகிய ஸ்தனமே இந்த ஆச்ருதர்களின் பக்திப்பெருக்கின் அதிசயம் ஆகும் என்றும் கூறுவது திருவிருத்தம் முதலான நூல்களில் ஆழ்வார்களுடைய மதமாகும்.

23-வது பாசுரத்தின் புதை பொருளில், மாரியென்பது, ஆண்டாள் மாலை சூடிக்களைந்த கூந்தலும், மலையென்பது அவளுடைய ஸ்தனமும், முழைஞ்சு, அந்த மலையின் குகை என்பது அவளுடைய ஹ்ருதயகுஹரமுமாவன. அவள் அந்த ஹ்ருதயகுஹரத்தில் ஸ்தாபித்து உபாஸித்து வந்த தெய்வம், அதாவது ஹார்த்த விக்ரஹம், " யசோதை இளஞ்சிங்கம் " என்று அவள் முதற் பாடலில் சொல்லுகிற நாரயணனுடைய ந்ருசிம்ஹகுட்டியாகும். இதே சிங்கம் தான் நப்பின்னை போன்ற ஆச்ருதர்களின் பக்தியாகிய மலையின் அடிவாரத்தில் தன்னுடைய மலர்ந்த மார்பை வைத்துப் படுத்துறங்குகிறது என்கிறாள். இந்த பாவங்களைச் சேர்த்து முதலாவது வாக்கியத்தை ஸ்ரீ பராசர பட்டர் அமைத்துள்ளார். இவனுடைய தூக்கம் ஒரு பாவனை. இதைப் பையத்துயின்ற என்று இரண்டாம் பாசுரத்தில் விளக்குகிறாள். ஆனதால் இந்த எழுப்புதல் பாபமாகாது. மேலும் விசேஷ பக்திக்குப் பரவசனாகி அற்பபக்தி செய்யும் மற்ற சாதுஜனங்களுக்கு விமுகனாய் நிற்பவனை எழுப்பும் இவர்களுடைய பாரதந்திரியம் உபநிஷத்துக்களில்  ப்ரஸித்தி. அதனால் அவன் இவர்களுக்கும் ஸுமுகனாகி, இவர்களுடைய பக்தியை வளர்க்க வேண்டும் என்று அவன் கடமையை வற்புறுத்த எழுப்புதலானபடியால், இந்த எழுப்புதல் ஆச்ருதலோகத்துக்கும், சரண்யனுக்குமே உபகாரமாகும். பெரியோர்களிடத்தில் ஆச்ருதர்கள் பெரியோர் கடமையை விஞ்ஞாபனம் பண்ணும் போது "க்ஞாபயே நது சிக்ஷயே" - 'நினைவூட்டுகிறேன், கண்டிக்கிறேன் இல்லை' யென்னும் மரியாதை வாக்கியத்தை அத்யாபயந்தீயென்று இந்த ச்லோகத்தில் பேசுகிறார். 
அவனையெழுப்பத் தனக்கு அவனிடத்தில் ஒரு பாத்யமுண்டாகும்படி பூமிப்பிராட்டியாகிய தன்னுடைய திருமேனியில் சூடியதனால் பலமடங்கு மணம் அதிகப் பட்ட மாலைகளை அவன் சூடும்படி செய்து, அதனால் அவனைத் தன்னிடத்தில் ப்ரேமையுள்ளவனாக ஆக்கிக் கொண்டாள் என்றும், அவ்விதம் ப்ரேமபூதனாக இருக்கும் சரண்யனுடைய சகலகுணவைபவங்களையும் இவள் நிர்ப்பந்தித்து அனுபவித்தாள் என்றும், இவளுக்கு வந்த துணிச்சலுக்குக் காரணம் காட்டுகிறார். அந்தக் கோதையை இதம் இதம் என்று இரண்டுதரமும், பூய ஏவாஸ்து பூய: என்று இன்னும் இரண்டுதரமுமாக நாலுதரம் சேவித்துக் கைகூப்பி நிற்கிறார் பட்டர். இந்த நாலு தரம் சேவித்தது கோதைக்கென்றாலும் தகும். இந்த ச்லோகத்திலுள்ள நாலு தத்வங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஸேவையாகத் தனித்தனியே சேவித்தார் என்றாலும் பொருந்தும்.

அன்ன வயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்-இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

பதவுரை:
அன்னவயல்-நீர்ப்பெருக்கினால் ஹம்ஸங்கள் விளையாடிக்கொண்டிருக்கின்ற,நன்செய் வயல்களையுடைய
புதுவை-ஸ்ரீவில்லிபுத்துரில் அவதரித்த, ஆண்டாள்,
அரங்கற்கு, பன்னு-அந்த அரங்கரின் குணசேஷ்டிதங்களை யெல்லாம் விரித்துப் பேசும்
பல்-பல பாட்டுக்களையுடையதும்
பதியம்-பதிகங்களாய் அமைந்ததுமான
நற்பாமாலை-உயர்ந்த பொருள்களை வைத்து அமைந்துள்ள பாடல்களாலான வரிசை
திருப்பாவை-திருப்பாவையென்னும் நூலை
இன்னிசையால்-இனிமையான இசைத்தமிழ்ப் பாட்டுக்களால்
பாடி-செய்து,ஆக்கி
கொடுத்தாள்-அர்ப்பணம் செய்தாள், சமர்ப்பித்தாள்
மாலை-பெரியாழ்வார் தொடுத்தமாலைகளில் உள்ள
பூ-புஷ்பங்கள்(பல மடங்கு அதிக மணமுடையவைகளாவதன் பொருட்டு)
சூடிக்கொடுத்தாளை-தன் திருமேனியிலேற்றி வாசனையூட்டிக் கொடுத்தவளை
சொல்லு-ஜபி.


கருத்துரை:
இந்தப்பாடல் அகாரவாச்யனான எம்பெருமானையே தன் பர்த்தாவாக வரித்து, அடைந்த ஆண்டாளைச் சொல்லுவதால் "அ" என்னும் எழுத்தில் தொடங்குகிறது. அடுத்த "ஆ" என்னும் எழுத்து லக்ஷ்மி வசனம் என்று வடமொழியிலக்கணத் துணிபும், வேதப்ரயோகமுமாகும். ஆண்டாளென்னும் பெயரும் இதில் தொடங்குகிறது.

இங்கே "அன்ன வயல்" என்றது சரீரத்தை வளர்க்கும் நெல் முதலான தானியங்கள் வளரும் இடத்தையும், ஆத்மாவை வளர்க்கும் உத்தமமான நினைவுகள் முளைத்துதெழுந்து வளரும் மனத்தையும் ஒருங்கே குறிக்கிறது. அன்னம் நீரைப்பிரித்து பாலை மட்டும் பருகும் குணமுடையதாதலின் நினைவிலும்,சொல்லிலும்,செயலிலும் அஸாரமான(ஸாரமில்லாத) பொருள்களை நீக்கி ஸாரதமமான(உயர்ந்த ஸாரத்தையுடைய) பொருள்களையே   கொள்ளவேண்டும் என்னும் பெரியோர்கள் துணிபை விளக்குகிறது.

வேதசாஸ்த்ரங்களில் பகவத்ப்ராப்திஹேதுவாக மத்வாதி 32 வித்தைகள் சொல்லப்பட்டுள்ளன. இவை பரதக்கண்டம் முழுதிலும் ப்ரஸித்தியாயும், பல பெரியோர்களால் அனுஷ்டேயமுமாயிருக்க, தமிழ்நாட்டில் கன்னியர்கள் நல்ல மழைபெய்ய வேண்டுமென்றும், தத்தமக்குத் தீர்க்காயுஸோடும், தங்களை யெந்நாளும் அன்போடு பரிபாலிப்பவருமாகிய பர்த்தாக்கள் வாய்க்க வேண்டுமென்றும்,பல்லாயிரமாண்டுகளாக அனுஷ்டித்து வந்த மார்கழி நீராட்டமாகிய நோன்பை ஒவ்வொருதரம் நோற்குங்காலும் பகவத் ப்ரீதிகரமும், பகவத்முகஉல்லாஸமும் உடையதாய்,மோக்ஷப்ராப்தி பர்யந்தமான ச்ரேயஸ்ஸைக் கொடுக்கும்  33-வது வித்யையாக இந்த திருப்பாவையும் ஒரு மோக்ஷவித்யை. ஆனதால் இது ஆண்டாள் அமைத்த ஒரு புது வித்யை என்பதைக் குறிக்கிறது. "அஸ்யே சானா ஜகதோ விஷ்ணு பத்னீ " என்று வேதம் சொல்லுகிறபடி தன் குழந்தைகளாகிய ஆச்ரிதர்களுக்கு இப்படியொரு 33-வது வித்யையை ஆக்கித்தந்து அவர்களை நல்வழிப்படுத்தப் பூரணமான அதிகாரி இவள் என்பதையும், மனதில் கொள்ளவேண்டும்.

இங்கே அன்னவயல் என்பது இவளுடைய கிருபைக்கு அடைமொழியாகும். க்ருத யுகமுதலான முந்தின மூன்று யுகங்களில் வேத வித்யைகளில் அந்வயிக்கப் பூரணமான ஆயுளும், அரோஹதிடகாத்ரமும் யோகாதிகளால் அபிவிருத்தி செய்யப்பட்ட கர்மேந்திரிய, ஞானேந்திரியங்களில் உயர்ந்த சக்தியும் செயல்களும், பூர்ணமான செல்வத்தினால் எல்ல உபகரணங்களும் உடையவர்களாக வேத மத ஆச்ருதர்களான பெரியோர்கள் விளங்கினார்கள். கலியுகத்திலோவென்றால் அற்ப ஆயுளும்,பிணி,பசி,மூப்பு துன்பம் முதலான சரீர அவஸ்தைகளும் உடையவர்களாகவும், தூக்கம்,சோம்பல் முதலான அவகுணங்களால் பீடிக்கபட்டவர்களாகவும்,தரித்திரர்களாயும் இருப்பதால், சொல்பகால அனுஷ்டானத்தில், யாதொரு பொருட்செலவும் இ¢ல்லாததாய், பகவத்ப்ரீதிகரமாயிருந்து, இந்த உலகத்தில் நல்வாழ்வும் பின்னால் மோக்ஷபர்யந்தமான பயனையும் உண்டாக்கும்படியான ஒரு வித்யையாகிய இதனை, பரிபாடல் முதலான சங்கநூல்களிலுள்ள மற்றப்பொருள்களை விட்டுப் பிரித்து எடுத்து இந்த 33-வது வித்யையை, இவள் ஆக்கித்தந்தாளென்பதுபொருள். இது புதிது. பல வித்யைகள் அடங்கிய சங்கத்தமிழிலிருந்து எடுக்கப்பட்டது.(இதை 30-வது பட்டில் சங்கத்தமிழ்மாலையென்று வருவதையொட்டியுணர்க) இவைகளை நன்குணர பரிபாடல்,நற்றிணை முதலிய சங்கநூல்களிற் காண்க.  இது பகவதர்பணமானால்தான் ஒரு வேதவித்யையாகுமாதலால் இதை அரங்கற்குக் கொடுத்தாள். இன்னிசையால் என்றதனால் இயற்றமிழால் ஆக்கப்பட்டதுபோல் காணப்படும் இந்த நூல் ஜபிக்கத்தக்கதாயும், எழுத்துக்களின் சக்தியால் உத்தமமான சித்திகளைக் கொடுக்கும் மந்திரங்களாலும் இந்த நூல் ஆகியிருக்கிறது என்பதை விளக்கும். அதுவே இசைத்தமிழ்.

இங்கே "பல்"என்ற சொல்லுக்கு வடமொழியில் பகுவசனம் ஆரம்பிக்கும் மூன்று என்று பொருள். மூன்று பதிகம், முப்பது பாட்டு என்று பொருள். இங்கே"பூ" என்றது அதன் வட மொழிப் பெயராகிய ஸுமனஸ், நற்சித்தம் என்னும் பொருளிலும் கொள்ளக்கிடக்கிறது. இவள் சூடிக்கொடுத்த பூமாலையில் பூமிக்குரிய மணங்கள் வீசுவன. அவை க்ராணேந்திரியத்துக்கு இன்பம் கொடுப்பன. இவள் பாடிக்கொடுத்த பாமாலையில் ஸகல வேத சாஸ்த்ரங்களின் முடிவுகளான உண்மைப் பொருள்களாய மணங்கள் வீசி, ஞானானுஷ்டான அபிவிருத்திக்கும்,மோக்ஷப்ராப்தி பர்யந்தமான ஆத்மஸுகத்துக்கும் ஹேதுவாவன என்றபடி. அவள் தாயினுடைய ஸ்தானமானதால், ஆத்மாக்களெல்லாம் குழந்தைகளாக, எதற்கும் தாயாரையே சொல்லுமாதலின் சூடிக்கொடுத்தாளைச் சொல்லு என்று முடித்தார். இது இரண்டாம் வேற்றுமைப் ப்ரயோகமாகஇருந்தபோதிலும் 4,7 வேற்றுமைப் பொருள்களும் கொள்ளத்தக்கது. ஏனெனில்," பொருள் சேர் மருங்கின் வேற்றுமை சாரும்.",பொருள் போகும் வழியில் வேற்றுமையை மாற்றிக்கொள்ளலாமாதலின்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே ! தொல்பாவை,
பாடி யருளவல்ல பல்வளையாய்,- நாடிநீ
வேங்கடவற் கென்னை விதி' என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

பதவுரை:
சூடிக்கொடுத்த- மலர்மாலையைத் தான்சூடிப் பின்னர் பகவான் மனமுவந்து அணிய ஸமர்ப்பித்த,
சுடர்க்கொடியே- தேஜோராசியாகிய கோதையே,
தொல்பாவை- பழமையான பாவைப்பாட்டை,
பாடியருள- பிற்காலத்தவர்க்கு விளங்கும்படி ஆக்கியருள் புரிய,
வல்ல-ஸங்கல்பித்த,
பல்வளையாய்- நித்யமான ஸெளமாங்கல்யஸ்ரீயோடு கூடியவளே,
நாடி-ஆராய்ந்து,
நீ- நீ,
என்னை வேங்கடவற்கு விதி- என்னை ஸ்ரீனிவாசனுக்குப் பத்தினியாக்கு என்றுரைத்த,
இம்மாற்றம்- இந்தச் சொல்லை,
நாம்- உன்னுடைய அடியவர்களாகிய நாங்கள்,
கடவாவண்ணம்- மீறாதவிதமாக,
நல்கு-செய்.

கருத்துரை:
"அநந்யா ராகவேணாஹம்,பாஸ்கரேண ப்ரபாயதா" என்று ராவணனைப் பார்த்து சீதை சொல்லுகிறாள். வெளிச்சமில்லாவிட்டால் சூரியன் தோசைக்கல்லு. ஒருவர் கண்ணிலும் புலப்படான். பிராட்டியில்லாவிட்டால் பெருமாளும் அதுபோல்தான்.பேயாழ்வார்,"திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் "என்று லக்ஷ்மியைக்கண்டு பெருமாளை நிர்தேசிக்கிறார். இவைகளை திருவுள்ளதிற்கொண்டு சுடர்க்கொடியேயென்று பாடினார். கோதையின் வெளிச்சத்தால் ரங்கமன்னாரை சேவித்தபடி.

பாவையைத் தொல்பாவையென்றது  பெண்கள் அனுஷ்ட்டானத்தைச் சொல்லிவரும் பிங்கல நிகண்டு, கன்னிப் பெண்களுக்கு, "பனி நீர் தோய்த்தலும் பாவையாடலும்" என்று விதிக்கிறது. மேலும் இந்த பனிநீர் தோயும் மார்கழி நோன்பு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழ்நாட்டுக் கன்னிமார்கள் அனுஷ்டித்து வந்த நோன்பென்பது பரிபாடலால் தெரிகிறது. இந்த நோன்பில் பாடும் பல பாவைப் பாட்டுக்கள் நெடுகிலும் இருந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. ஜைனர்களும் ஒரு தமிழ்த் திருப்பாவைப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு இந்த நோன்பை நோற்றார்கள் என்றும் தெரிகிறது. ஆனதால் இது மிகப்பழைமையான அனுஷ்டானம் என்பதைக்காட்ட "தொல்" என்றார். நாச்சியார் திருமொழி 1ந் திருமொழி 3ஆம் பாட்டில் தன்னை வேங்கடவனுக்குக்கு உய்க்கும்படி ஆண்டாள் பாடுகிறாள். அவளுடைய திருவடியைப் பிடிக்கும் நாமெல்லாம் அவளுடைய அனுஷ்ட்டானத்தையே பின்பற்றி அந்த வேங்கடவனைப் பக்தி பண்ணக்கடவோம். அந்த பக்தி ஸித்திக்க அவளுடைய திருவடிகளைப் பிரார்த்திக்கறார். (நல்குதல்-மகிழ்ந்து கொடுத்தல்.)

குறிப்பு:
முப்பது பாட்டுக்களோடு கூடின இந்தப் பாவை நூலுக்கு முதல் ஐந்து பாட்டுக்கள் பாயிரமாக அமைந்துள்ளன. முதல் மூன்று பாட்டுக்களால் பர,வ்யூக,விபவங்களின் சொரூபங்களைக் கடவுள் வாழ்த்தாகப்பாடி, இந்த நோன்பு அதன் அங்கங்கள், அதன் அனுஷ்டானம், பயன் இவைகளையும் சொல்லி நாலாவது பாடலில் வான் சிறப்பையும், அர்ச்சாவதரத்தின் பெருமையையும் எடுத்துரைத்து, ஐந்தாவது பாடலில் இந்த நான்கு பாட்டுக்களின் பொருள்களையும் ஸங்க்ரஹித்து, இந்த அனுஷ்டானத்துடையவும், அதில் செய்யும் பல காரியங்களுடையவும் பயனை எடுத்துக்கூறிப் பாயிரம் முடிவடைகிறது.


பாசுரங்கள்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்,
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்,
கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்,
நாரா யணனே நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். [1]

அந்வயம்:
சீர்மல்கும்- ஆய்பாடிச் செல்வச்சிறுமீர்காள்-நேரிழையீர்-மார்கழித்திங்கள் மதிநிறைந்த ஆல்-நன்னாளால்-படிந்து நீராடப் போதுவீர் போதுமினோ-கூர்வேல் கொடுந்தொழிலன்-நந்தகோபன்குமரன் -ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம்- கார்மேனிச்செங்கண் கதிர் மதியம்போல்முகத்தான்- பாரோர்புகழ- நாராயணனே நமக்கே பறை தருவான் -ஏல் ஓர் எம்பாவாய்.

பதவுரை:
சீர்மல்கும்-மேன்மை பெருகும்
ஆய்பாடி-ஆய்பாடியில்
செல்வச்சிறுமீர்காள்-சகல செல்வங்களும் நிறைந்த இளம்பெண்களே
நேரிழையீர்-அந்தந்த அங்கத்துக்குத் தகுதியான ஆபரணங்களை அணிந்தவர்களே
மார்கழித்திங்கள்- மார்கழிமாதம்
மதிநிறைந்த- சந்திரன் பூர்ணமாயிருக்கின்ற
ஆல்-கார்த்திகை நக்ஷத்திரம் கூடின
நன்னாள்-இன்று சுபதினம்
படிந்து-நன்றாக மூழ்கி
நீராட-மார்கழிநீராட்டத்தைச் செய்ய
போதுவீர்-வர இஷ்டமுடையவர்கள்
போதுமினோ-வாருங்கள்
கூர்வேல்-கூர்மையான ஆயுதங்களால்
கொடும்-வெளிப்பார்வைக்குக் கோணலாகக் காணப்படும்
தொழிலன்-செயலையுடையவன்
நந்தகோபன் குமரன்-நம்மாயர்பாடிக்குத் தலைவரான நந்தகோபனுடைய மகன்
ஏர்-அழகு
ஆர்ந்த-நிரம்பிய
கண்ணி -கண்களையுடையவளான யசோதையின்
இளஞ்சிங்கம் -குழந்தை நரஸிம்ஹன்
கார்மேனி-மேகம்போன்ற சரீரத்தையுடையவன்
செங்கண்-சிவந்த கண்ணையுடையவன்
கதிர்- சூரியனைப்போல் ஒளியும்
மதியம்-சந்திரனைப்போல் குளுமையுமுடைய
முகத்தான் - முகத்தையுடையவன்
பாரோர்புகழ-அவனை ஆச்ரயித்தவர்கள் எப்போதும் உஜ்ஜீவிப்பார்கள் என்று பகவானை உலகத்தார் எல்லாரும் துதிக்குமாறு
நமக்கே- இந்த நீராட்டத்தில் அந்வயிக்கும் நமக்கு
பறை- தன்னுடைய ரக்ஷணத்தை
தருவான் -கொடுப்பான்
ஏல்- ஏற்றுக்கொள்
ஓர்-உணர்
எம்பாவாய்-என்னுடைய ஹார்தவிக்ரஹமே.

கருத்துரை:
பாவை நோன்பென்பது அவரவர் வழிபடும் கடவுளுருவத்தைத் தத்தம் மனத்த்¢ல் பாவித்துக்கொண்டு அதன் ஆராதனமாக நோற்கும் நோன்பாகும். அந்த ஹார்த்த விக்ரஹம் ந்ருஸிம்ஹனோ ராமனோ க்ருஷ்ணனோ ஆதியம் பரம்பொருளுடைய எந்த உருவமாகவும் இருக்கலாம். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் இந்த ஹார்த்த விக்ரஹத்தை "பாவ:" என்று 7 வது நாமத்தால் சொல்லுகிறோம். இந்ந நோன்பில் செய்யும் மனமொழி செயல்களால் ஆகும் யாவற்றையும் இந்த ஹார்த்த விக்ரஹத்துக்கே நிவேதனம் செய்து அர்ப்பணம் செய்யவேண்டும். அவ்விதம் செய்தால் இதையநுஷ்டிப்பவர்களுக்கு எல்லா ஸ்ரீயையும் அந்த ஹார்தவிக்ரஹம் கொடுக்கும்.

இந்தப் பாசுரத்தின் தொடக்கத்தில் காலத்தையும் இடத்தையும் நிர்ணயிக்கிறாள். ஒவ்வொரு வருஷமும் அனுஷ்டிக்கவேண்டிய நோன்பாதலால் மார்கழித்திங்கள் என்று மாதத்தை மட்டில் குறிப்பிட்டாள்.
சந்திரன் பூர்ணமாயிருக்கும் காலத்தில் பகலும் இரவும் ஒருபடியாக வெளிச்சம் உடையதாக வைகுண்டம் போல் காண்கிறது. பூமியில் இந்த நோன்பை நோற்பது வைகுண்டத்தில் நோற்கும் நினைவோடு நோற்கவேண்டும். ஸ்ரீமத் பகவத்கீதை(10-49) "மாஸானாம் மார்க்கசீர்ஷோஹம்" என்று சரண்யன் பணிக்கிறான். ஆதலால் மார்கழி மாதமே சரண்யனுடைய ஸ்வரூபமாகும். அதுகாலமாய் நிற்க, இடத்தில் பகலும் இரவும் வெளிச்சமாய் இருப்பதால் ஆய்ப்பாடி வைகுண்டமாகிறது. மதிநிறைந்ததின் அளவைக் காட்ட "ஆல்" என்று குறிப்பிடுகிறாள். ஆல் என்பது கார்த்திகை நக்ஷத்திரம். ஆதலால் அன்று சுக்லபக்ஷ த்ரயோதசி என்பது வ்யக்க்தமாகிறது. அன்று இரவு சந்திரனுக்குப் பதிமூன்றுகலைகள் நிறைந்து இரவு 26 நாழிகை வெளிச்சமுடையதாகும். மீத நாலு நாழிகை மறுநாளின் உஷ: காலத்தில் சேர்ந்ததாதலால் அன்று இரவு முழுவதும் வெளிச்சம் என்று பொருந்துகிறது. ஆனதால் இந்த த்ரயோதசி,சதுர்த்தசி, பெளர்ணமி இந்த மூன்று தினங்களில் இந்த நோன்பை நோற்பதற்காக மூன்று பதிகங்களை ஆண்டாள் பாடிக்கொடுத்தாள். ஆல் என்னும் கார்த்திகை நக்ஷத்திரத்தால் திதி த்ரயோதசி என்று கிடைக்கிறது.

இனி ஸ்ரீவில்லிபுத்தூரைத் திருவாய்ப்பாடியாக நிர்த்தேசிக்கிறாள். பகவான் அங்கே அவதரித்துவிட்டபடியால் அது வைகுண்டமாகி விட்டது. நித்ய சூரிகள் "ஸாமகாயந் ஆஸ்தே" என்ற ஸாமங்களால் அவனைப்பாடிக் கொண்டு அவன் திருவுள்ளம் உகந்த சகல கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டு நிற்பதுபோல், இந்த மார்கழி நோன்பை பகவத் ப்ரீதிக்காக அனுஷ்டிக்க வேண்டியது கன்னியர்களின் கடமை. அவ்விதம் செய்தால் ஆய்ப்பாடியின் சீர் வைகுந்தத்தின் சீரைக்காட்டிலும் மல்கும். அங்கே சுத்த சித்தர்களான பரிசுத்தாத்மாக்கள் தங்கள் ஸ்வரூபமான கைங்கர்யதைச் செய்கிறார்கள். பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த, இடக்கை வலக்கை அறியாத பெண்களாகிய நாம், இந்த நோன்பை நோற்று ஆயனுக்கு அர்ப்பித்தோமானால், அதைக்காட்டிலும் பன்மடங்கு உகப்பாகும் என்கிறாள். ஏற்கனவே பகவான் அவதரித்ததுமுதல் ஆய்ப்பாடி பசு செல்வம் இவற்றின் ஸம்ருத்தி நிறைந்துள்ளது. அதைச் செல்வச்சிறுமீர்காள் என்று குறிப்பிட்டாள். இதற்கு வைதீகஸ்ரீயும் நாம் ஆத்மோத்கர்ஷத்தை யடையும் ஸ்ரீயும் இவ்வாராதனத்தால் மல்கும் என்று குறிப்பிடுகிறாள். சிறுமீர்காள் என்று விளித்ததின் பொருள் 'சிற்றஞ்சிறுகாலே' யென்ற 29வது பாசுரத்தின் வ்யாக்யானத்தில் கண்டு கொள்க. இனி நாம் உபாஸிக்கும் தெய்வத்தை நாராயணன் என்று பெயர் கூறி அவனுடைய லக்ஷணங்களைஅக்குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுகிறாள்.
கூர்வேல் கொடுந்தொழிலன் - இங்கே 'வேல்' என்னும் சொல் 'வெல்' என்னும் பகுதியடியாக, பகை வெல்வதற்குச்சாதனமாக உள்ள ஸர்வப்ரஹரணாயுத: என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் கடைசி நாமத்தின் பொருளைக் குறிக்கும். கொடும் என்னும் பதம் 'குட் கெளடில்யே' என்னும் வடமொழி தாதுவிலிருந்து வருகிறது. வளைந்திருக்கும் தன்மையைக்குறிக்கும் தாது அது. குடை,குடம்,கோடு எல்லாம் அதிலிருந்து வருவன. நாராயணனுடைய ஸ்வரூபம் காப்பாற்றுதல். உடலையழிக்காமல் உயிரைக் காப்பாற்ற முடியாது என்கிற நிர்பந்தம் வந்தபோது அந்த ஆத்மா இருக்கும் உடலை இவன் வெட்டிப் பிளந்து, அழித்து ஆத்மாவைக் காப்பாற்றுகிறான். இந்த நாராயணனுடைய கொல்லுதல் எல்லாம் காப்பாற்றுதலே யென்பது ஆழ்வாரின் நிர்வாஹம். முதல் திருவந்தாதி 5வது பாடலில் பொய்கையாழ்வார்" கருமம், அழிப்பு, அளிப்பு கையது வேல் நேமி "என்று சிவனுடையவும், நாராயணனுடையவும் கர்மாக்களையும், அவைகளுக்கு உதவும் ஆயுதங்களையும் பேசுகிறார். சிவன் அழிப்பதற்காக வேலைக் கொண்டிருக்கிறான்.  நாராயணன் காப்பதற்காகச் சக்கரத்தைக் கொண்டிருக்கிறான். கண்ணனாகிய அவதாரத்தில் பூதநாதி அசுர, ராக்ஷஸர்களைக் கொன்றது அவர்களின் ஆத்மாவைக் காப்பாற்றுவதற்காகவே. நேரான ரக்ஷண கார்யத்தைச் செய்பவன், கொல்வது போல் தோன்றும் வளைந்த கார்யத்தைச் செய்வதால் கூர்வேல் கொடுந்தொழிலன் என்றாள். நேரே நடக்கும் செங்கோல் வளைந்து நடக்குங்கால் கொடுங்கோல் எனப்படுவதையும் நோக்குக.

இனி நந்தகோபன் குமரன் என்றது கண்ணன் ஒளித்து வளர்ந்ததைக்காட்ட. ஆயர்குலத்தை பகவததீதனமாக்கத் திருவாய்ப்பாடியில் ஒளித்து வளர்ந்த  உத்தமன் என்று அவன் ஸொலப்யத்தை மெச்சி, அறியாத சிறுமியர்களான நம்மையும் அவன் காப்பாற்றுவான் என்று வற்புறுத்துகிறாள்.  இவன் அழகைப் பார்த்துப் பார்த்து யசோதையின் கண்ணும் அழகு நிறைந்தது என்கிறாள். இவளுக்கு உபாஸனா தெய்வம் ந்ருஸிம்ஹன் . ஆகவே கண்ணனை இளஞ்சிங்கம் என்கிறாள்.

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகந்தான் என்பதற்கு"வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணன்'" என்று திருமங்கைமன்னன் வ்யாக்யானம் செய்து கொடுக்கிறார். மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாக விளங்குபவன் என்று பொருள்.
(நமக்கே- இந்த ஆராதநத்தில் இழிபவர்க்கே.  ஏ- தேற்றம், பிரிநிலையுமாம். நிச்சயமமாக பறை தருவான். என்றபடி.) இந்த ஆராதனதைச்செய்த நமக்கு அவன் நிச்சயமாக ரக்ஷணத்தைத் தருவதால் நம்மைப் பார்த்து மற்றவர்களும் நாராயணனைப் புகழ நாம் வழிகாட்டிகளாவோம் என்கிறாள்.   

இனி, நீராடுதல் என்பது பகவான் வகுத்த நீர்மையாகிற பாகவத அனுஷ்டேய மார்கத்தில் வர்த்தித்தலாகும். "ச்ருதி ஸ்ம்ருதிர் மமைவாக்ஞா யஸ்தான் உல்லங்ய வர்த்ததே1 ஆக்ஞாச்சேத்தீ மமத்ரோஹி மத்பக்தோபி நவைஷ்ணவ:" இது விஷ்ணு தர்ம ச்லோகம். எத்தகைய சுருதி ஸ்மிருதி விஹிதமான கர்மாக்களையும் அனுஷ்டித்தாலும், பகவந்நியமிதமும் பாகவதனுஷ்டேயமுமான வழிதவறி அனுஷ்டிக்கலாகாது. அவ்விதம் வழி தவறாது அனுஷ்டித்தலே நீர்மையில் ஆடுதல்,நீராடுதல் ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு செல்வச்சிறுமீர்காள் என்பதற்குப் பக்தியாகிற செல்வம் இளவயதிலேயே உங்களுக்கு அமைந்திருக்கிறது என்றும், நீராடப்போதுவீர் என்பதற்கு பகவத்குணங்களாகிய பொருள்களில் விதி தவறாத நீர்மையோடு சரிக்க(நடக்க) வாருங்கள் என்று பொருள்.

நேரிழையீர்- (நேர்- நேர்மை). வேதசாஸ்த்ரங்கள் நேர்மையுடையனவாக ஒப்புக்கொண்ட வழிகளில். (இழைதல்) நடத்தல். நீங்கள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறவர்கள். தேவதாந்த்ர உபாஸனத்தால் கிடைக்கும் அற்ப பலன்களை மதியாமல் பகவத் குணங்களில் இழிந்தவர்களாய் நாம் விரதானுஷ்டானம் செய்வோம். அது பெரும் பயனைத்தரும் என்பதை உறுதிப்படுத்த முதல் தேவரும் மூவரும் இவன் ஒருவன் தான் என்று குறிப்பிடுகிறாள். படிந்து என்பது பரமைகாந்தித்வத்தைக் குறிக்கிறது. மறந்தும் புறம் தொழா மாந்தராய் சுத்தாந்த ஸித்தாந்திகளாய் நாராயணனுடைய குண ரூப சேஷ்டிதங்களில் மட்டுமே ஈடுபடுங்கள் என்று ஆக்ஞையிடுகிறாள்.

இரண்டாம் பாசுரம் பதிவு நாள் 28-01-11

வையத்து வாழ்வீர்காள் ! நாமும்நம் பாவைக்குச்,
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்,
செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,
உய்யுமா றெண்ணி யுகந்தேலோ ரெம்பாவாய். [2]

அந்வயம்:
வையத்து வாழ்வீர்காள்! நாமும் உய்யுமா றெண்ணி நம்பாவைக்குகந்து செய்யும் கிரிசைகள் கேளீர். நாட்காலே நீராடி, பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடி,ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம், செய்யாதனசெய்யோம்
தீக்குறளைச்சென்றோதோம்,ஏல் ஓர் எம்பாவாய்.

பதவுரை:
வையத்து-பூமியில்,மனித சரீரத்தில்
வாழ்வீர்காள்-இகத்திலும் பரத்திலும் ச்ரேயஸ்ஸையடைய வாழ்கிறவர்களே
நாமும்- இந்த கோஷ்டியினராகிய நாம்
உய்யும்-உஜ்ஜீவிக்கும்
ஆறு- மார்கத்தை
எண்ணி-மனத்தில்கொண்டு
நம்பாவைக்கு-நம்மனத்தில் ஹார்த்த விக்ரஹமாக பாவித்துக்கொண்டிருக்கும் மூர்த்தி விசேஷத்திற்கு
உகந்து-ஸந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் கூடியவர்களாய்
செய்யும்- ஆசரிக்கும்
கிரிசைகள்- செயல்கள்,அனுஷ்டானங்களை
கேளீர்-கேட்பீர்களாக
நாட்காலே-பொழுது புலரும் வேளையில்
நீராடி-தண்ணீரில் குளித்து முழுகி
பாற்கடலுள்-வியூகமூர்த்தியாக திருப்பாற்கடலில்
பையத்துயின்ற- விழித்துக்கொண்டே தூங்குவதுபோல் பாவனை செய்கிற
பரமன் -எல்லாவற்றுக்கும் மேம்பட்டவனான
அடி- அடைந்தவர்களை உஜ்ஜீவிப்பிக்கும் நாராயணனுடைய திருவடிகளை
பாடி-பாடி
ஐயமும்-விதி வழி கொடுக்கவேண்டியவைகளையும்
பிச்சையும் - இச்சைவழி கொடுக்க விரும்புகிறவைகளையும்
ஆம்தனையும்- தனக்குள்ள பொருளளவில், சக்தியுள்ளமட்டில்
கைகாட்டி-செயலில் அனுஷ்ட்டித்து
நெய்-உடம்புக்கு மஸ்தைக் கொடுக்கும் நெய்யையும்
பால்- தாபத்தை தணிக்கும் பாலையும்
உண்ணோம்-உட்கொள்ளாதவர்களாகவும்
மையிட்டெழுதோம் மலரிட்டுநாம் முடியோம்- உடலுக்கு அழகையும் மணத்தையும் தரக்கூடிய மையிட்டுக்கொள்ளாதவர்களாயும், மலர்முடித்துக்கொள்ளாதவர்களாயும்
செய்யாதன செய்யோம்- வேத சாஸ்த்திரங்களில் நிஷேதிக்கப்பட்ட(விலக்கப்பட்ட) கர்மாக்களை செய்யாதவர்களாகவும்
தீ-குற்றமான
குறளை- பொய்யாகவும், கட்டுமானமுமான வார்த்தைகளை
சென்று-ஒருவரைப்பற்றி மற்றொருவரிடம்போய்
ஓதோம்-உண்மைபோல் சொல்லவும்மாட்டோம்
ஏல்-ஏற்றுக்கொள்
ஓர்-உணர்
எம்பாவாய்-நான் பாவித்துக்கொண்டிருக்கிற ஹார்த்த விக்ரஹமே

கருத்துரை:
வையமென்னும் சொல்லுக்கு மிக உயர்ந்த வண்டியென்னும் சொற்பொருள். ஆத்மாக்கள் யாத்திரைசெய்யும் பல்லாயிரக்கணக்கான சரீரங்களாகிய வண்டிகளுள் ஆறாவது அறிவோடு கூடிய மனித சரீரம் மிக உயர்ந்த வண்டியாதலால் அதை வையம் என்று குறித்து அதில் வாழ்கின்றவர்களாகிய ஆத்மாக்களைக் கூவியழைக்கிறாள். அதனால் சரீரத்தையிட்டு உண்டான பேத புத்தியே இல்லாமல் ஆத்மாக்கள் உஜ்ஜீவிக்கும் வித்தையை இந்த நூல் போதிக்கின்றது என்பது பொருள். "வாழ்வீர்காள்" என்ற சொல் "வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொண்மின், கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் " என்ற திருப்பல்லாண்டு வாக்கியத்தை அனுவர்த்திக்கிறது. வாழ் என்பதால் செல்வப்பொருளின் சம்பந்தமும் குறிக்கப்படுகிறது. கூழ் என்னும் சொல்லுக்கு " உணவுக்கு ஏதுவாகிய பொருள்" என்பது பரிமேலழகர் உரை. கூழாட்பட்டு நின்றீர்- செல்வப்பொருளுக்குத் தொண்டுபட்டு ஆயுட்காலத்தை நடத்துகின்றவர்கள் என்பது பொருள். முந்தின பாட்டில் இவளுடைய பரம தயையைக் காட்ட 'போதுவீர் போதுமின்' என்று வருபவர்கள் எல்லோரும் வாருங்கள் என்று கூப்பிட்டாள்.வையம் உயர்ந்தவண்டி என்பது பரிபாடலில் மூன்று இடங்களிலும், பெருங்காதையில் 12இடங்களிலும் ப்ரயோகம். பரிபாடலில்  " பொன்னும் துகிரும் முத்துமல்லது, மரன் ஒன்றறியா மாணமை வையம்" என்று பேசுகிறார். அந்த உயர்ந்த வண்டி தங்கத்தாலே அமைந்து பவழத்தூண்களும் ஆரக்கால்களும் நுகத்தடி முதலியவற்றை யுடையதாய் முத்துக்களால் அலங்கரிக்கப் பெற்றது என்று பேசுகிறார். மற்றவையும் படித்தறிக.
பெருங்காதையில் " பூணியின்றிப் பொறியின் இயங்கும் மாணமை வையம் " என்கிறார். இங்கே பூணி என்பது பூட்டப்படும் மிருகமாகிய மாடு, குதிரை,யானை,ஒட்டகம் முதலியவற்றைக் கூறும். அந்த வண்டியில் இது ஒன்றும் பூட்டவில்லை யென்கிறார். பொறியின்- இயந்திர சக்தியால் இயங்கும், ஓடும். மாண்அமை-மாண்பு, பெருமை அமைந்த உயர்ந்த வண்டி. கிரிசை என்பது சைவ சித்தாந்தத்தில் சரியை, கிரியை, ஞானம், யோகம் என்ற நான்கில் குறிக்கப்பட்டுள்ள இரண்டவதான கிரியையென்பது. காரணம் கேட்காமல் செய்யும் அனுஷ்டானத்துக்கு சரியையென்றும், பயனை மனத்திற்கொண்டு அது ஸித்திக்கும் பொருட்டுச் செய்யும் காரியத்தைக் கிரியையென்றும் கூறுவர். இவைகளின் விபரங்களை மெய்கண்ட தேவர் எழுதியுள்ள சிவஞான போதத்தின் பாடியத்திலும், அருணந்தி சிவாசாரியார் எழுதியுள்ள சிவஞான சித்தியாரிலும் பரக்கக் கண்டுகொள்க. இங்கே பையத்துயின்ற என்பது விழிதுயில். இதை காளிதாசன் " ஸ்வபதோ ஜாகரூகஸ்ய " , " உன்னைப்போல் விழித்துக்கொண்டு தூங்குகிறவன் கிடையாது " என்றான்.     

பரமன் -நைவ கச்சித்வய பாச்ரய: மனிதர்களூம் தேவர்களூம் ஆச்ரயிக்க இவனைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை என்று ஸ்ரீபாகவதம்(6-வது ஸ்கந்தம், 17-வது அத்யாயம்) சித்ரகேது உபாக்யானத்தில் பரமேச்வரனால் பார்வதிக்கு உபதேசிக்கப்பெற்றவன் என்று பொருள்.
ஆச்ருதர்கள் இழியவேண்டிய இடம் பகவானுடைய திருவடி என்பதை த்வயத்தின் அர்த்தத்திலும் கண்டுகொள்க. கீதை-18-66 சரம ச்லோகத்திலும் கண்டுகொள்க. பாடுதல்-அதனிடத்தில் இழிந்து, அதுவே ஆச்ரயமாக இழிந்து அதன் ரக்ஷண சாமர்த்யத்தையும் சக்தியையும் வியத்தல். நாலு விதிகளையும் ஆறு நிஷேதங்களையும் சொல்லி பாடலைத் தலைக்கட்டுகிறாள். நிஷேதங்களினின்று விலகவேண்டியது, விரதம் பயன்தருவதற்கு அவசியமாதலால் அந்த ஆறையும்  எதிர்மறையாலே பேசுகிறாள். நாலு விதிகளையும் உடன்பாட்டில் பேசுகிறாள்.

ஐயம் என்பது நித்யானுஷ்டேயமான வைச்வதேவாதி கர்மாக்களிலும், நைமித்திகமாக தின சாந்தி, நக்ஷத்ர சாந்தி, கிரஹ சாந்தி, ச்ராத்தாதி கர்மாக்களில், இவற்றுக்குக் கொடுக்கும் தானியங்கள், வஸ்த்ரங்கள், அன்னம், பொருள் இவற்றைக் குறிக்கும். இவையே விதிவழி கொடுப்பன. இவைக¨ளைக் கொடாமலிருத்தல் தோஷமாகும். பிச்சை என்பது நம்மிஷ்டப்படி, விருப்பம் இருந்தால் கொடுக்கலாம். கொடாவிட்டால் அதனால் தோஷமில்லை. தனை- அளவு. ஆம் தனையும்- அவரவர்க்குச்சக்தியுள்ள அளவே கொடுக்கவென்று விதி வழி கொடுத்தலுக்கும் எல்லை கட்டுகிறாள். கை என்னும் சொல்லுக்கே செயல் என்று பொருள். காட்டுதல்- அனுஷ்டித்தல். இவைகளைப் பாவைக்கு சாற்றவேண்டும் என்று 3-வது பாட்டில் சொல்லுவதால் இந்த விரதத்தின் லக்ஷணங்களையும் தன் ஹார்த்த விக்ரஹத்துக்கு அர்ப்பணிக்கிறாள்.

ஒருவரைப்பற்றி மற்றொறுவரிடத்தில் சொல்லும் பேச்சு கோள் என்றும் குறளை என்றும் இருவகைப்படும். இன்னவரிடத்திலிருந்தோ, அவரைப்பற்றியோ தான் உண்மையாகக் கண்ட பொருள்களை மற்றவரிடம் கூறுவது கோள் கூறுவது. இன்னவரைப்பற்றிப் பொய்யாக  மற்றொருவரிடம் புனைந்து கூறுவது குறளை. அது தீமை என்பதைக்காட்ட தீக்குறளை என்றாள். "வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமையிலாத சொலல்", என்று சொல்லுக்கு இலக்கணம் திருவள்ளுவர் கூறினார். இன்னொருவரைப்பற்றித் தான் அறிந்த கெட்ட குணங்களும், கெட்ட செயல்களுமே கோளாவன என்று கொண்டாலும் அவைகளும் தீமை பயக்கும் ஆதலின் இன்னொருவரிடத்தில் சொல்லுங்கால் அவையும் குறளையாகுமென்று ஆண்டாள் திருவுள்ளம் கொள்ளக் கிடக்கிறது. 'நாட்காலே' யென்றது ஒரு உத்க்ருஷ்டமான கவிதா ப்ரயோகம். இருட்டை விரட்டும் கதிரவன் ஒளி சிறிது சிறிதாகப் பாய, இருட்டு விலகிப் பகல் பொழுது புலரும் ஸமயத்தை இந்த வெளிச்சத்தின் 'கால்' இருட்டில் புதைந்திருப்பதாக ஒரு கவித்வ உத்ப்ரேக்ஷை.

 மூன்றாம் பாசுரம் பதிவு நாள் 08-02-2011

ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி,
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து,
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகளப்,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக், குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்,
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். [3]

பதவுரை:
ஓங்கி-குட்டையாக இருந்ந வாமனன் மிகப்பெரிய உருவமாக வளர்ந்து:
உலகளந்த - பூமியை திருவடியால் அளந்த;
உத்தமன் வேதப்ரதிபாத்யங்களான எல்லா தெய்வங்களிலும் மேற்பட்டவன்;
பேர்- நாமத்தை;
பாடி- நாமும் கேட்பவரும் அவனும் ரஸிக்கும் படியாகக் கானம் செய்து,
நம் பாவைக்கு- நம் ஹார்த விக்ரஹர்த்துக்கு;
சாற்றி-நிவேதித்து, அர்ப்பணம் செய்து;
நீராடினால்- தண்ணீரில் குளித்தால், நீர்மையில் இழிந்தால்,
தீங்கின்றி- உலகத்திலுள்ள தீய சக்திகளெல்லாம் தொலைந்துபோய்;
நாடெல்லாம்- தேசங்களெல்லாம் புனிதமாகி அந்தப் புனித பூமியில்;
திங்கள் மும்மாரி பெய்து- மாதம் மும்மாரி பெய்து, அம்மாரியால்;
ஓங்கு- வளரும்;
பெரும்- உயர்ந்த;
செந்நெல்- உத்தமமான நெல்;
ஊடு- இடையே;
கயல் உகள- மீன்கள் நேரிலும் புரண்டும் ஓட;
பூம்- அழகிய;
குவளைப்போதில்- குவளை மொட்டுக்களில்;
பொறி-புள்ளிகளோடு கூடின;
வண்டு- வண்டுகள்;
கண்படுப்ப- தூங்க;
தேங்காதே- தயங்குதலின்றி;
புக்கு- கொட்டிலில் புகுந்து;
இருந்து- மாட்டருகில் உட்கார்ந்து;
சீர்த்த- கறப்பதற்கு சுரந்திருக்கிற;
முலை-முலையை; பற்றி- தொட்டு;
வாங்க- ஏந்த;
குடம் நிறைக்கும்- தானாகவே கொட்டிக் குடங்களை நிறைக்கும்;
வள்ளல்- வள்ளன்மையோடு கூடின;
பெரும் பசுக்கள்- பெரிய பசுக்கள் இருத்தலால்;
நிறைந்து- மேன்மேலும் கொட்டில் பெருகி;
செல்வம் நீங்காத- தன்னுடைய செல்வம் என்னாளும் தன்னை விட்டுப் பிரியாததாக இந்த ஆயர்பாடி ஆகும்.
ஏல் ஓர் எம்பவாய்.



கருத்துரை:
முதல் பாட்டில் பரமாகிய நாராயணனையும், அவன் பெருமையையும் சொல்லி சிறுமியர்களையழைத்தாள். இரண்டாவது பாட்டில் வ்யூஹமூர்த்தியாகிய பாற்கடலில் பையத்துயின்றவனைச்சொல்லி விரதத்தின் ஸ்வரூபத்தைச் சொன்னாள். இந்தப் பாட்டில் வ்யூஹ மூர்த்தியாகிய வாமனன், திரிவிக்ரமனாகி மஹாபலியிடமிருந்து ஜகத்தை தன்னதாக்கிக்கொண்டு அதை ரக்ஷிக்கும் அவனுடைய ஆற்றலைச் சொல்கிறாள். எல்லா முர்த்திகளையும் எல்லாப்படிகளாலும் ஆராதித்து அந்த ஆராதனங்கள் எல்லாவற்றையும் அவரவர் உபாஸனாமூர்தியாகிய ஹார்த விக்ரஹத்துக்கு அர்ப்பணம் செய்து இந்த விரதத்தை வைதீகமுறையில் அனுஷ்டிக்கவேண்டும் என்கிறாள். ஓங்கி- பருத்து,அகன்று,உயர்ந்து. உலகு அளந்த என்பது வேற்றுமைத் தொகை. முதல் வேற்றுமையாகக் கொண்டால் உலகு ஓர் அடிக்கோலாக இருந்து அவனை அளந்து தான் பெரிதென்று நினைத்துக்கொண்டிருந்த உலகு, அவன் தன்னைக்காட்டிலும் எவ்வளவோ பெரியவன் என்று உணர்ந்தது என்பது பொருள். உலகையளந்த என்ற 2ம் வேற்றுமையாகக்கொண்டால் பலிச்சக்கரவர்த்தியின் தான வாக்கியப்படி இவன் கொள்ளுதற்குலகளந்தான். இவன் அளக்கும்போது உலகும் அவனை அளந்து அவன் பெருமையைத் தெரிந்துகொண்டது என்ற நயம் வேற்றுமைத்தொகையில் விளங்குகிறது. உத்தமன் தன் பரத்வத்தையும், சகல சக்தனாக இருக்கும் நிலையயும், ஆஞ்ஞாமாத்திரத்தினாலே ஒன்றையுண்டாக்கவும், அழிக்கவும், ஒன்றை மற்றொன்றாகச் செய்யவும் (கர்த்தும்,அகர்த்தும்,அந்யதாகர்த்தும் ) சக்தனாயிருந்துகொண்டே தன்னுடைய சர்வ சக்தியையும் மறைத்துக்கொண்டே தன்னுடைய ஸெளலப்யத்தையும், ஸெளசீல்யத்தையும் உலகத்துக்குக் காட்டினாலாவது ஜீவன்கள் தன்னிடத்தில் வந்தடையுமா என்கிற க்ருபையினாலே மனிதர் நடுவே மனிதனாக ராமக்ருஷ்ணாதி அவாதாரங்களை எடுத்து ஸாதாரண மனிதர் படும் இடர்ப்பாடுகள் அவ்வளவும் தானும் பட்டு தர்மத்தையும் நம்மையும் ரக்ஷிக்கவும், அசுர ராக்ஷஸ சக்திகளை அழிக்கவும் வேஷந்தரித்தும் பாடுபடுகிரானானதால் அவனை உத்தமன் என்று அழைத்தாள். கண்ணனிடத்தில் இவளுக்கு உள்ள ஈடுபாடு வ்யூகத்துக்கும் பரத்துக்கும் மேல் விபவம் உயர்ந்து  நிற்கிறது. யோகிகளுக்கல்லது அவையிரண்டும் புலப்படா. கன்றுக்குட்டி மேய்க்கும் இடைப்பையன்களைத் தனக்கு சரிசமமாகக்கொண்டு இவனும் போய் கூட மேய்த்த ஸெளலப்யமும்,ஸெளசீல்யமும்  இவனை எல்லாவற்றிற்கும் மேலாக்கியது.

"பேர்பாடி"யென்பதைக் காரணமாகவும் "தீங்கின்றி"  யென்பதை காரியமாகவும் பொருத்தி பொருள் கொள்ளவேண்டும். ஸ்ரீமத் பகவத்கீதை 11 ம் அத்யாயம் 36 வது ச்லோகார்த்தத்தை இது உட்கொண்டது.

"ஸ்தானே ஹ்ருஷீ கேச தவப்ரகீர்த்யா, ஜகத் ப்ரஹ்ருஷ்யத்யநுகஜ்ஜ தேசரிக்ஷாம்ஸி பீதானி கோத்ர வந்தி ஸர்வே நம ஸ்யந்திச ஸித்த ஸ்ங்கா:"

ஹ்ருதய குஹரமாகியஹ்ருஷீகத்துக்கு ஈசனே, உன்னுடைய நாமத்தைப்பாடுதலினால் அப்படிப் பாடப்பெரும் இடத்தில் ஜகத்து சந்தோஷப்படுகிறது. நல்ல சக்திகளையெல்லாம் அங்கே இழுக்கிறது. தீயசக்திகளெல்லாம் பயந்து பத்துதிக்குகளிலும் ஓடுகின்றன. நித்யசூரிகளின் கூட்டங்களெல்லாம் அங்கே வந்து நமஸ்கரிக்கின்றனர். விபவத்தின் நாமங்களான ராமக்ருஷ்ணாதி சப்தங்களை பாடுமிடத்தை விட்டு ஸகல தீமைகளும் விலகுவன. எல்லா மங்களங்களும் அங்கே வந்து பொருந்துவன என்ற பொருளை அந்வர்த்தித்து, 'பேர் பாடி தீங்கின்றி' என்கிறாள். அசுர, ராக்ஷஸ வர்க்கங்கள் தொலைந்துபோய் பரிசுத்தப்படுத்தப்பட்ட பூமி என்று சொல்வது  லக்ஷணையாய், பகவான் நித்யவாஸம் செய்யும் ஆச்ருதர்கள் திருவுள்ளத்திற்கும் ஆகும். இந்த பூமியில் மழைபெய்வதுபோல் அவர்கள் திருவுள்ளத்தில் இவனுடைய அருள் பொழிந்தால் அங்கே செந்நெல் விளைவதுபோல் பக்தி, ப்ரபத்தியாகிய உபாயங்கள் இங்கே விளைவன. இந்த ஆராதனமும் ஹ்ருஷீகேசனாகிய  ஹார்த்த விக்ரஹத்துக்கே.  இங்கே ஊடுகயலுகள என்றது பூமியின் நீர்வளத்தினால் மீன்களின் வர்க்கங்கள் விளையும் பயிர்களுக்கிடையே ஓடிக்கொண்டிருப்பதுபோல, பகவானுடைய சொரூப ரூப குண சேஷ்டிதங்கள் இவர்கள் மனதிலும் ஓடிக்கொண்டு ஒளி வீசிக்கொண்டிருப்பன என்கிறாள்.

குவளைப்போது- மலராத மனது. பொறி வண்டு- கோயிற்பொறி ஒற்றிக்கொண்ட ஆசார்யார். சிஷ்யன் மனது மலர்ந்தவுடன் தாங்கள் உபதேசம் செய்ய வேண்டுமென்று காத்திருப்பதைக் கண்படுப்ப என்றாள். ஆசார்ய கோஷ்டியைப் பசுக்கள் என்றே ஆண்டாள் நிர்வாஹம். அவர்களுக்கு ஞான அனுஷ்டான வைராக்யங்களும் நிறைந்து உலகத்தாரையே உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய க்ருபையும் சுரந்து சிஷ்யன் போய்த்திருவடியைப் பற்றியவுடன் சகல சாஸ்த்ரார்த்தங்களையும் பொழிந்து அர்தபஞ்சக ஞானத்தையும் இவன் வாங்க வாங்கக் கறந்து உபாயானுஷ்டானத்தைப் பண்ணி வைத்து உபேயமான பகவத் பாதரவிந்தத்தில் கொண்டு சேர்ப்பவர்கள். இந்த செல்வம் ஆத்மாவில் அந்வயித்து  ஐஹிகமான பொருட்செல்வம் போல் பூமியில் தங்கி விடாது மோக்ஷபர்யந்தமாகக் கூட வரும் என்பதை அதை நீங்காத செல்வம் என்று முடிவு கட்டினாள். கொட்டில் பசுக்களால் வரும் உலகச்செல்வங்கள் உடல் விழுந்தவுடன் கழல்வன. இது உயிர்ச்செல்வம். ஆத்மாவை விட்டு நீங்காது என்கிறாள். தேங்காதே- மோஷச்செல்வத்தை அடைவது மிகக்கடினமாயிற்றே. அதற்கு வேண்டிய சாதனங்கள் நமக்கு சித்திக்குமா என்று கவலைப்படவேண்டாம். தகுந்த அதிகாரிகளான் ஆசார்யர்களைத் தேடிப் போங்கள் என்ற் ஆறு படுத்துகிறாள்.புக்கு என்பது ஐஹிக வியாபாரங்களில் புகுந்து பொன்னும் பெண்ணும் இன்பம் தருவன என்று இருக்கும் நீங்கள் இதை விட்டு அத்யாத்ம பூசையில் புகுங்கள் என்று அழைக்கிறாள். இருந்து என்பது பழைய ஞாபகம் வந்து திரும்பிவிடாதீர்கள். அங்கேயே நிலைத்து நில்லுங்கள் என்று சொல்லிக்கொடுக்கிறாள். இந்த ஆசாரியர்களுடைய க்ருபையையே முலை என்கிறாள். அது எப்போதும் பால் கொடுக்கத்தயாராகச் சுரந்து இருப்பதால் சீர்த்த என்கிறாள். இங்கே பற்றுதல் என்பது அன்வயித்தல் கேவலம் ஸதாசார்யாள் திருவடி சம்பந்தப்படலே என்னும் பொருள் கொள்ளத்தக்கது. பற்றுதல் இவனுடைய விசுவாஸத்திற்கு அளவாகும் இவனுடைய கார்யம் வாங்க வேண்டியதுதான் என்பது தோன்ற பற்றி வாங்க என்றாள். இவன் க்ரகிக்கும் சக்தி குடமாகும். அதை ஆசார்யக்ருபை வெகு சீக்கிரத்தில் நிறைத்துவிடும் என்கிறாள். அதற்கு ஹேது அந்த ஆசாரியரிடத்தில் இருக்கும் வள்ளன்மை என்று பாடுகிறாள். இவ்விதம் உயிரை விட்டு நீங்காத ஞான, அனுஷ்ட்டான,வைராக்கிய செல்வங்கள் இந்த ஜீவனுக்கு சித்திக்கும் என்று தலைக்கட்டுகிறாள். இந்த பாட்டின் மேற்க்கண்ட புதை பொருளை ஸ்ரீ நிகமாந்த மஹா  தேசிகன்

“பரக்கும் புகழ் வரும் பைம்பொருள் வாய்த்திடும் பக்தர்களால்
இரக்கின்றவர்கிவை ஈந்தாலறமுளதென்றுயியம்பார்
சுரக்கும் கருத்துடைத் தேசிகர் கன்றென நம்மையெண்ணிச்
சுரக்கும் சுரபிகள் போல் சொரிகின்றனர் சொல்லமுதே”

என்று அம்ருதாசுவாதனி 14 வது பாசுரத்தில் விரித்துரைக்கும் பெருமையும் கண்டறியக்கிடக்கிறது.

இனி பேர்பாடி என்பதில், பேர் என்பதை பெயர் என்னும் சொல்லின் திரிபாகக்கொண்டால், நாம சங்கீர்த்தனம் செய்ய என்றும் ,பேர்-கீர்த்தி என்னும் பொருள் கொண்டால் அவன் குண சேஷ்டிதங்களைப் பாட என்றும் பொருளாகும் ஆதலால் , இவ்விரண்டு பொருள்களிலும் நூல் முழுவதிலும் ப்ரயோகம்.

4வது பாசுரம் பதிவு நாள்  21-02-2011

ஆழி மழைக்கண்ணா ! ஒன்றுநீ கைகரவேல்,
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து,
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்,
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்,
வாழ வுலகினிற் பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். [4]

பதவுரை:
ஆழி-கடல் நீரானது
மழை- நீராக மாறுவதற்கு
கண்ணா- இடமாக உள்ள மேகமே ;
நீ, ஒன்றும் - ஒறு சிறிதும் ;
கை - உன்னுடைய செயலில் ;
கரவேல்-ஒளிக்காதே;
ஆழியுட்புக்கு -சமுத்திரத்திலிறங்கி;
முகந்து கொடு-நீரை மொண்டுகொண்டு;
ஆர்த்து- முகந்த நீரை உன்னிடத்தில் கட்டிப் பிடித்துக்கொண்டு ;
ஏறி-மேலே கிளம்பி ;
ஊழி- நெடுங் காலத்துக்கு;
முதல்வன் -ச்ருஷ்டிக்கும் ஆதியம்பொருளாயிருக்கும் நாராயணனுடைய
உருவம் போல் - தோற்றம் போல்;
மெய் கறுத்து-சரீரம் கறுப்பு நிறமாகி;
பாழி-வலிமையுடைய ;
அம்-அழகிய
தோளூடை-தோளையுடைய ;
பத்மனாபன் -ச்ருஷ்டிகர்த்தாவான நாராயணனின் ;
கையில்-வலக்கையில்;
ஆழிபோல்-சக்ராயுதத்தைப்போல்;
மின்னி-ஒளிவீசி;
வலம்புரிபோல்-இடக்கையிலுள்ள பாஞ்சசன்னியத்தைப் போல;
நின்றதிர்ந்து-பெரும் ஓசையைக் கிளப்பி;
தாழாதே- சிறிதும் குறைவில்லாமல்;
சார்ங்கமுதைத்த- அவன் கை வில் தெறித்த;
சரமழைபோல்- அம்புகளின் மழைபோல;
வாழ- உலகத்தார் வாழ்வடையும் பொருட்டும்;
நாங்களும்- இந்த நோன்பை நோற்கும் சிறுமியர்களும்;
மகிழ்ந்து- சந்தோஷத்தையுடைவர்களாகி;
மார்கழி நீராட- மர்கழி நீராட்டத்தைச் செய்ய;
உலகினில் பெய்திடாய்- பூமியில் பெய்யக்கடவை.
ஏல்,ஓர்,எம்பாவாய்.




கருத்துரை:
முதல் மூன்று பாட்டுக்களில் பரம்,வ்யூஹம்,விபவம் ஆகிய நிலைகளிலிருக்கும் லோகோஜ்ஜீவன ஹேதுவாக சரண்யனைப் பாடிக் கடவுள் வாழ்த்துச் சொன்னாள். அநாதிகாலமாக தமிழ் கவிகளின் மரபு கடவுள் வாழ்த்தைப் பாடியவுடன் வான் சிறப்பைப் பாடுவர். ஆனால் இவள் கவிதா சாமர்த்தியத்தால் அந்த மேகமே நாராயணன் என்று பாடுகிறாள். அவன் ஆச்ரிதர் விரும்பித்தொழும் மூர்த்திகளாக விரும்பியவிடமெல்லாம் திருக்கோவில் கொண்டு எழுந்தருளியிருப்பதுபோல் இந்த மேகமும் நீர் வேட்கையுள்ள எல்லாவிடங்களிலும் போய்ப்பெய்கிறது என்கிறாள். அர்ச்சாவிக்ரஹங்களின் மேன்மையைச் சேதநர்களுக்கு வற்புறுத்தி இந்த மேகத்தினிடத்தில் அவனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யங்களெல்லாம் இருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டி மேகம் அதைப் போற்றுபவர்களுக்கு மழை பொழிந்து எல்லா நற்பயனையும் விளைவிப்பதுபோல அர்ச்சையும் அருள்புரியக் காத்திருக்கிறது என்கிறாள்.

"தமருகந்த தெவ்வுருவ மவ்வுருவந்தானே
 தமருகந்த தெப்பேர் மற்றபேர், தமருகந்த
 தெவ்வண்ணஞ் சிந்தித்திமையாதிருப்பேரே
 யவ்வண்ணம் ஆழியானாம்."
                   - முதல் திருவந்தாதி 44.

நாமும் அந்த மேகம் பொழிந்த மழை நீரில் குளித்து முழுகி உடலை சுத்தி செய்து கொண்டு இவனுடைய நீர்மையில் ஆடுதலால் ஆத்ம சுத்தியை அடைவோமாக என்று பாசுரத்தைத் தலைக்கட்டுகிறாள். இங்கே,

"புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
 வாய்மையாற் காணப்படும்."

என்ற குறளின் பொருள் ஆராயத்தக்கது. வடமொழி நூலுடையார் ஸத்யம்,செளசம் என்று திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். ஸத்யம்- அகந்தூய்மை, செளசம்- புறந்தூய்மை. மேகம் பொழிந்த நீரால் புறந்தூய்மையமையும். மனத்துக்கண் மாசிலனாகி அவனை ஆராதித்தல் என்பது பகவத் குணமான நீர்மையில் ஆடுதல். (அவகாஹித்தல்)

"மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்
 ஆகுல நீர பிற." 

ஒரு பாசுரத்தால் ஐந்து கார்யங்களைச் சாதித்தது-வான் சிறப்பு, அர்ச்சாமுர்த்தி- அது மேகத்திளுள்ளது என்பது- அதை சேவிக்க வேண்டும் - அதனால் சகல ச்ரேயஸும் உண்டாகும் என்பன- அவள் கவித்வத்தின் திறம்.
ஆழி,மழை என்னும் முதற் பொருள்களின் பெயரால் அவ்வவற்றிலுள்ள சினையாகிய நீரைக்குறித்தது முதல் ஆகு பெயர்.(முதல் சினைக்குறித்தது) கண்-இடம். ஒன்று-சிறிது; கை-செயல். கரத்தல்- ஒளித்தல் -கைகரவேல்- செயலில் ஒளிக்காதே என்று சொன்னது இந்திரனுடைய கார்யமான மழை பெய்தலை நீ தவறாதே என்ற வேத வாக்கியத்தை அவனுக்கு நினைவூட்டியவாறு. ஆர்த்தல்- கட்டுதல். தன்னிடத்திலுள்ள வித்யுத்சக்தியால் ஆவி ரூபமாக இருக்கும் நீரைத் தான் கட்டி எடுத்துக்கொண்டு மேலே எழுகிறதுஎன்ற விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ள உண்மையை, 'கட்டுதல்' என்னும் பொருளூள்ள ஆர்த்தல் என்ற சொல்லால் விளக்குகிறாள்.ஏறி-பல தேசங்களில் ஸஞ்சாரம்  செய்யும் பொருட்டு மேலே செல்லுதல். பகவான் திரூவுள்ளம் குளிர்ந்து அருள் பொழிதலை மேகம்  நன்றாகக் கறுத்து மழை பொழிதலுக்குஉவமையாக்கினாள் என்பதை "போல்" என்னும் உவமையுருபு காட்டுகிறது.ஊழிமுதல்வன் உருவத்தில்நெருங்கியும்,அதிகமும் பரிச்சயமானதால் ஆண்டாளுக்கு இந்த நிறஸாம்யம் மனத்திலெழுகிறது.

உபஸம்ஹாரத்துக்கும் ,ஸ்ருஷ்டிக்கும் ஹேதுவாகத் தான் முதலாக நிற்பதற்குரியவன் என்பது ஊழிமுதல்வன் என்று காட்டப்படுகிறது.இரண்டுக்கும் உடையவன் என்பதை அன் என்னும் விகுதியால் குறிப்பிட்டாள். ''ஊழியான்','முதல்வன்'",என்று  பொருள் கொள்ள வேண்டும். நிக்ரஹம், அனுக்ரஹம் இரண்டையும் செய்வது வலக்கையாதலால் பாழியந்தோள் என்று அதைக் கூறினாள். பற்பனாபன் என்பதை முதல்வனோடு கூட்டிப்பொருள் கொள்க.  நாபீ பத்மத்தில் பிரம்மா தோன்றியதை குறிப்பால் உணர்த்துகிறாள். விதை முளைத்து வளர்வதற்கு முன் உள்ள நிலையை நாம் 'முதல்' என்னும் பெயரால் குறிப்பிடுகிறோம். கையில் என்பதற்குச் செயலில் என்றும் பொருள் கொள்ள வேண்டும் பகவானுடைய பஞ்சாயுதங்கள் ஆச்ருதர்கள் ஸேவிக்குங்கால் ஆபரணங்களாகவும், சரண்யன் அசுர ராக்ஷஸர்களைப் பொருது அழிக்குங்கால் ஆயுதங்களாகவும் விளங்குகின்றன. பாழியந்தோளுடைஎன்னும் லக்ஷணத்தால் அவன் உத்யுத்தனாகி அசுர ராக்ஷஸர்களை வெல்லச் செயல் புரிபவன் என்பதும், அவ்விதம் செயல் புரியும்போது ஆபரணமாகிய சக்ரம் ப்ரயோக சக்ரமாகி நிமிரும், அப்போது அதனுடய பூர்ண ப்ரகாசமும் விளங்கும், மின்னல் அந்த ப்ரகாசத்தைப்போலிருக்கிறது என்று மின்னலுக்கு  ப்ரயோகச்சக்ரத்தை உவமை கூறுகிறாள் "வலம்புரிபோல் நின்றதிர்ந்து" என்பதின் பொருளை" ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பான்சசன்னியம் போல் " என்று 26-வது பாடலில் கூறுகிறாள். "ஸகோஷோதார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாணி வ்யதாரயத்"(பகவத்கீதை1-19) "நப சப்ருதிவீம் சைவதுமுலோப்யநுநாதயந்" என்று இதிகாஹாசத்தையும் கண்டு கொள்க. சார்ங்கமுதைத்த மட்டில் உவமையை நிறுத்திக்கொண்டு அது சாகப் பெய்வது போல் பெய்யாமல் நீ உன் நீர்த்துளிகளாகியமழையை வாழப் பெய் என்று பயனை மாற்றிப் பேசுகிறாள். இங்கே இந்த வாழப்பெய்யும் மழைநீரும் எச்சில், துப்பல் முதலான அசுத்தங்களைக் கழுவிவிட்டு ஸ்தலங்களைப் பரிசுத்தமாக்குதலால் அஸுர ராக்ஷஸ சக்திகளைச் சாகச் செய்யும் அஸ்த்ரசஸ்த்ரங்களின் கார்யங்களைச் செய்து, உயிர்களுக்கெல்லாம் உபஜீவ்யமான கதிர்களையும் விளைவிக்கிறது. இவை இரண்டையும் அநிஷ்ட நிவாரணம், இஷ்டப்ப்ராப்தி என்ற பொருள்பட "வாழ" என்று குறிப்பிடுகிறாள்.


ஐந்தாம் பாசுரம் பதிவு நாள் 22-02-11

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்,
தாயைக் குடல்விளக்கஞ் செய்ததா மோதரனைத்,
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது,
வாயினாற் பாடி மனத்தினாற் சிந்திக்கப்,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய். [5]

பதவுரை:
மாயனை- மாயையைத் தன் சொத்தாகவும் அதீனமாகவும் உடையவனை,
வடமதுரை- வடமதுரையில்;
மன்னு-வந்து பொருந்திய;
மைந்தனை-பல பராக்ரமங்கள் வுடையவனை;
தூய- பரிசுத்தமான;
பெருநீர்-அகன்ற,ஆழ்ந்த, நீளமான ஓட்டத்தையுடைய, நீரையுடைய கடல் போன்ற;
யமுனை- யமுனை நதியின்;
துறைவனை-வெள்ளத்தைக் கடத்தி அக்கரையில் சேர்ப்பவனை;
ஆயர் குலத்தில்- இடையர் வகுப்பில்; தோன்றும்- அவதரிக்கும்;
மணிவிளக்கை-மாணிக்க(அழகிய ப்ரகாசத்தையுடைய) தீபத்தை;
தாயை-தேவகியை(யசோதையையும் கூட);
குடல்விளக்கஞ் செய்த- குடலை சத்தையுடையதாகச் செய்த;
தாமோதரனை-வயிற்றில் கயிற்றினால் கட்டுண்டவனை;
நாம்-மார்கழி நோன்பை நோற்கும் நாம்;
தூயோமாய் வந்து-மன மொழி செயல்களால் பரிசுத்தர்களாக வந்து;
தூமலர்-பரிசுத்தமான பூக்களை;
தூவி- சொரிந்து;
தொழுது-வழிபட்டு;
வாயினால்-பகவானுக்கு ஏற்பனவுஞ், சத்தியமுமான பதங்களால்;
பாடி-கானஞ்செய்து;
மனதினால் சிந்திக்க-மனசு புத்திகளினால் நினைக்கவும்,சாக்ஷாத்கரிக்கவும்;
போயபிழையும்- பல ஜன்மங்களில் செய்த பாபமூட்டைகளும்;
புகுதருவான் நின்றனவும்- எதிர்காலத்தில் நம்மை வந்தடையும் பொருட்டு காத்திருப்பவைகளான பாபங்களும்;
தீயினில்- நெருப்பில்;
தூசு-ஒரு தூசியாக;
ஆகும்- ஆவன;
எம்பாவாய்-என்னுடைய ஹ்ருதயத்திலிருக்கிற உபாஸனா தெய்வமே;
செப்பு-சொல்;
ஏல்-ஏற்றுக்கொள்;
ஓர்-உணர்.







கருத்துரை:
ஆண்டாளுடைய திருப்பாவை அபிப்ராயங்களின் உயர்வில் இமயமலையினும் மேலானதும், பொருள்களின் ஆழத்தில் பசிபிக் மஹாசமுத்ரத்தினும் ஆழமாக அமைந்துள்ளது. முப்பது பாட்டுக்களையும் ஆறைந்துகளாகப் பெரியோர் பிரித்துள்ளார். " ஐயைந்துமைந்து" மென்பதை நோக்குக. அவைகளில் முதல் ஐந்து பாடல்கள் இந்த நூலுக்குப் பாயிரமாவன. இப்போது எடுத்துக்கொண்ட பாடல் பாயிரத்தின் கடைசிப்பாட்டு

முதற்பாட்டில் "நாராயணனே நமக்கே பறைதருவான்" என்று பரத்வத்தையும்," ஏரார்ந்த கண்ணி யசோதையிளஞ்சிங்கம்' என்று கண்ணனின்  செளலப்யத்தையும், ந்ருஸிம்ஹன் வடிவமான தன் ஹ்ருதயத்தில் உபாஸனா தெய்வமாகக் கிடைக்கும் ஹார்த்த விக்ரஹத்தையும் சொன்னாள். இரண்டாவது பாட்டில் 'பாற்கடலில் பையத்துயின்ற' வ்யூஹ மூர்த்தியைச் சொன்னாள். மூன்றாம் பாட்டில்    'ஓங்கியுலகளந்த உத்தமன்" என்று, வாமனனாய் வந்து த்ரிவிக்ரமனாய் நீண்ட விபவ மூர்த்தியைச் சொன்னாள். நாலாம் பாட்டில் அர்ச்சாமூர்த்தியை மேகத்தில் காட்டிக் கொடுக்கிறாள். பரம், வ்யூகம் என்ற மூர்த்திகள் தேச வேறுபாட்டால் இந்திரியங்களுக்குப் புலப்படாமலும், விபவம் ஒரு குறிப்பிட்டகாலத்தில் மட்டும் தோன்றி மறைந்தும், ஹார்த்தமூர்த்தி மனக்கண்ணுக்கு மட்டுமேயன்றி உடற்கண்ணுக்குப் புலப்படாமையாலும், இந்த நாலு மூர்த்திகளையும் வ்யாவர்த்தி செய்து, கடல் நீரில் இருக்கும் உப்பு, கைப்பு, துவர்ப்புகளைப் போல் இந்த நாலு மூர்த்திகளிலும் தோஷங்கள் இருக்கின்றனவென்றும் அந்தக்கடலிலிருந்து சுத்த ஜலத்தைப் பிரித்தெடுத்துக் குன்றில் பெய்து அது ஐந்து நிலங்களிலும் ஓடி சர்வ ஜீவன்களுக்கும் உபஜீவியாய் விளங்குவதுபோல் அர்ச்சை அனுக்ரஹசாமர்த்யத்தில் அவ்விதம் விளங்குகிறது என்பது ஆண்டாளுடைய திருவுள்ளம். அதனால் அர்ச்சை மேகம் போன்றது என்று "ஆழிமழைக்கண்ணா' யென்று தொடங்குகிறாள். உப்பினால் ஒன்றுக்குமுதவாத கடல்நீர், சர்வ ஜகத்துக்கும் ஜீவனைக் கொடுக்கும்படியான மழை நீராக மாறுதலுக்கு, கண்- இடமாகவுள்ள, ஏ! மேகமே! என்றழைக்கிறாள். இந்த ஐந்து மூர்த்திகளுக்கும் அங்கங்கே வழிப்பாட்டுக்ரமங்களைக் கற்பித்தவள், இந்த ஐந்தாவது பாசுரத்தில் பகவதாராதனக்ரமத்தை எவ்வித மனமொழி செயல்களோடு அனுஷ்டிக்கவேண்டுமென்பதைச் சொல்லிக்கொடுக்கிறாள். நம்முடைய ஆராதனீயமான தெய்வம் கண்ணன் என்கிறாள். அவனுடைய லக்ஷணத்தை ஐந்து படியாக வர்ணிக்கிறாள்.

1) மாயனை- கண்ணன் பரப்ரம்மமானதால் அவனுக்கு அவசியமானதும்,அடங்கிநடப்பதாகவுமுள்ளது மாயை

 "தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா!
  மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே " (கீதை 7-14)

'ஹே! அர்ஜுனா! ஸத்வ ரஜஸ் தமோ குணங்களின் மயமாக உள்ள என்னுடையதான மாயை கடக்கமுடியாதவள். என்னையே யார் வந்து அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்.' மாயையைக் கடந்து பகவான் திருவடியை அடைவதற்கு பகவான் ஒருவனே உபாயம். அவனைத்தவிர வேறு உபாயம் கிடையாது என்கிற வேத சாஸ்த்ரங்களின் முடிவை மாயனை என்னும் ஒரு பதத்தால் குறிப்பிட்டாள். அதைத் தாண்டுவிக்கும் தெய்வமே எல்லோருக்கும் உபாஸனீயமான தெய்வம் என்று சுட்டிக்காட்டுகிறாள்.

[2] அடுத்த வாக்கியத்தில் அந்தக் கண்ணனே நம் பக்திக்குரியவனென்று மோக்ஷ உபாயமாகிய பக்தியை கண்ணனிடத்தில் பண்ணவேண்டும் என்கிறாள். அவன் இயற்கையழகு நிரம்பியவனாயிருத்தலோடு வடமதுரைக்கு வந்து கம்ஸனுடைய அரண்மனைக்குப் போகும்போது வழியிலே வந்த ரஜகன் கொண்டு வந்த கம்ஸனுடைய உயர்ந்த ஆடைகளையும், மாலாகாரன் கம்ஸனுக்காக கொண்டுபோன மாலைகள்,புஷ்பங்களையும்,குப்ஜையை நேரே நிமிர்த்து அவள் கொண்டு போன மணமிகுந்த சந்தனத்தையும், எல்லாவற்றையும் வாங்கியணிந்துகொண்டு செயற்கையழகும் நிரம்பி மணமகனாக விளங்கியிருப்பவனை மனத்தினாற் சிந்திக்கவேணுமென்று பக்திக்கு அவனது திவ்யமங்கள விக்ரஹமே லக்ஷியம் என்று சுட்டிக்காட்டுகிறாள். வால்மீகி ராமனை குணவான், வீர்யவான் என்று அடுத்தடுத்து எடுத்தாற்போல இந்த மணமகன் போன்ற அழகியவனும், பல பராக்ரமங்களால் பெரியவனென்பதைக் குறிக்க மைந்தனையென்கிறாள்."மைந்தேவலிமை" என்னும் தொல்காப்பியப் பொருளதிகார சூத்ரத்தை நோக்குக.

[3] மூன்றாவது வாக்கியத்தில் ப்ரபத்தி உபாயத்தையும், அதன் பயனையும் அருளிச்செய்கிறாள். பெருநீ£ர் யமுனையென்றது கடல் போன்று அகழ்ந்து, அகன்று நீண்டிருக்கும் யமுனையென்று பொருள். இதற்குத் தூயவென்னும் அடைமொழி உப்பு, துவர்ப்பு, முதலான கடல்நீரின் துர்க்குணங்கள் இல்லாதது என்பதைக் குறிப்பிட்டு லக்ஷணையாக வேதம் குறிப்பிடும் மத்வாதி 32 வித்யைகளிலுள்ள காயக்லேசம்,     வ்ரதானுஷ்டானம் முதலிய துன்பங்களொன்றும் கலக்காமல், சுகமாகவும்,ஸ்வாதுவாகவும் அனுஷ்டிக்கத்தக்க ப்ரபத்தியைக் குறிப்பிடுகிறாள். மேலும், இல்வாழ்கையிலிருப்பவர்களுக்கு சம்சாரத்தை அர்ணவமென்றும், சாகரமென்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன. அவைகளுக்குச் சரியான தமிழ்ச்சொல் பெருநீர் என்பது. மற்ற ஆழ்வார்கள், ஆச்சார்யர்களெல்லாரும் பெண்டிரோடு நடத்தும் குடும்ப வாழ்க்கையை நிஷேதித்தும், நிந்தித்தும் அது 'தன் பகவன் நிஷ்டையைக் கெடுத்துவிட்டது' என்றும் பாடி வருந்த, இவள் ஒருத்திதான் இல்வாழ்க்கை பரிசுத்தமானதென்று குறிப்பிட்டுக் காட்டுகிறாள். "ப்ரஜையாஹிப் புருஷப் பூர்ண:" என்னும் வேத வாக்கியத்தையும், தர்மப்ப்ரஜாபிவ்ருத்யர்த்தம் விவாஹம் விதினாகுரு" என்னும் மனு வாக்யத்தையும், " மங்கலமென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட்பேறு" என்னும் திருக்குறளையும்", "வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வாரே" என்ற ஆண்டாள் அருளிச்செயலையும் நோக்குக. இவளுடைய அருளிச்செயலில் நன்மக்கட்பேறு மனைமாட்சிக்கு நல்லவாபரணம் [நன்கலம்] என்பதை அடியொற்றி இவள் நன்மக்களை பெற்று என்று பாடியிருப்பதை நோக்குக. இதிலுள்ள மகிழ்சி ஒவ்வொரு க்ருஹஸ்தனும் நன்மக்கள் பிறந்தவுடன் வேத சாஸ்த்ர விஹிதங்களாகவும், அனாதியாக அவரவர் குலத்தில் அனுஷ்டிக்கத் தக்க தர்மங்களும் இனியும் நிலைத்து நிற்பன என்னும் பெருமிதமாகும். இஃதில்லாவிட்டால் குலக்ஷயம் ஏற்படும்.

"குலக்ஷயேப்ரணச்யந்தி குலதர்மாஸ் ஸனாதனா: தர்மேநஷ்டே குலம் க்ருதஸ்னம்,அதர்மோபிவ வத்யுதா"      .[பகவத்கீதை 1-40]
        
என்னும் அர்ஜுன விஷாதமும் நோக்கத்தக்கதுதூயவென்னும் சொல்லில் இந்த தெய்வகவி இவ்வளவையும் அடக்குகிறாள். இன்னுமுள்ளவைகளை அபிக்ஞர்கள் உய்த்துணர்க. 

நீரோட்டம் அல்லது நீர்நிலைக்குப் பக்கத்திலிருந்து அக்கரை போகவேண்டியவர்களைப் படகிலேற்றிக் கடத்தி வைப்பவன் 'துறைவன்'. இந்த ஒரு சொல்லில் சரம ச்லோகத்தின் அர்த்தத்தை முற்றிலும் க்ரஹிக்கிறாள். அங்கே "மோக்ஷயிஷ்யாமி" என்னும் பதத்தில், 'விடுவிக்கிறேனெ'ன்னும் பொருளை, ஸங்கல்பமட்டில் போதாது"தாரயிஷ்யாமி" 'கடத்தி வைக்கிறேனெ'ன்னும் ஸங்கல்பமுமுண்டு என்று திருத்தியமைத்துக் காட்டி, வராஹ சரமச்லோகத்தில்,"நயாமி பரமாம் கதிம்" என்றிவளுக்குச் செய்து கொடுத்த வாக்குறுதியையும் கண்ணனுக்கு ஞாபகப்படுத்தித் துறைவனென்று அவனை குறிப்பிடுகிறாள். இந்தச் சொல்லினால் ப்ரபத்தியும் அதன் பயனாகிய மோக்ஷப்ராப்தியும் சொல்லப்பெற்றது.

[4]நாலாவது வாக்கியத்தில் உத்தரக்ருத்யாதிகாரத்தின் பொருளை விளக்குகிறாள். இப்பொருள் திருப்பாவை 28 வது பாசுரத்தில் நன்கு விளக்கப்பட்டுள்ளதாதலின், அதுவே இதற்கு வ்யாக்யானமாகும். இங்கே மணிவிளக்கென்பது விசேஷம். "வெய்யோனொளிதன்மேனியன் விரிசோதியின் மறைய" வென்பதுபோல் ஸ்வயம் ப்ரகாசத்தால் வழிகாட்டும் விளக்கு இதுவானதால் மாணிக்கச்சுடர் என்னும் பொருள்பட மணிவிளக்கென்றாள். இது கலங்கரை விளக்கு. சம்சார அர்ணவத்தில் காற்றினாலும், அலைகளாலும், அலைக்கப்பட்டுத் தவிக்கும் சிறு படகுகள் இந்த விளக்கையே குறிக்கோளாகக்கொண்டு அதை நோக்கியே படகைச்செலுத்தி அதன் பக்கல் ஒதுங்கித் திருவடி நிழலில் வர்த்திக்கவேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறாள்  இந்த விளக்குத் தகழியும் நெய்யும் வேண்டுமென்று முதல் ஆழ்வார்கள் இருவரும் உபாயத்தைச்சொன்னதையும் ஒத்துக்கொண்டு அதனால் அடையும் உபேயமானது இவை இரண்டையும் வேண்டாத மாணிக்கச்சுடர் என்று காட்டும் அழகு ரசிக்கத்தக்கது.

[5] இனி கடைசியாக இந்த தெய்வம் தாயைக்குடல் விளக்கம் செய்ததென்கிறாள். அவதார தசையில் ஒரு தாய் வேண்டும். அந்த தாயின் குடல் இவனைப் பெற்றதனால் விளங்கும். மனை மாட்சியுள்ள இடத்தில் தான் இவனும் அவதரிப்பான். தூணில்லாமல் உத்திரமும் கூரையும் இல்லையாதலின் வீடுமில்லை, மனைமாட்சியுமில்லை. எனவே அந்தத்தூணின் பெருமையைக் குறித்துக்காட்ட அதையே தன் தாயாகிக்கொண்டு அதில் அவதரித்தான். நெடுங்காலம் குழந்தையில்லாத கெளஸல்யை வயிறு வாய்த்தான். "மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே" என்பதையும் நோக்குக. இந்த அவதாரத்தில் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்  ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தான். இரண்டு தாய்மார்கள் குடலினையும் விளங்கச்செய்தான். பெற்ற தாய் முதல் ஆறு குழந்தைகளைப் பறிகொடுத்து ஏழாவது கர்ப்பம் விச்சின்னமாகப் போனவள். இந்தக் குழந்தை தான் அவளுக்குத் தக்கி அவள் குடல் விளங்கிற்று. யசோதைக்குக் குழந்தையேயில்லாமல் கிழ வயது ஆயிற்று. இவனுக்குப் பதில் போவதற்காக மாயை அவள் வயிற்றில் பிறந்தாலும், இவனே தன் மகன் என்று அவள் ஏழு வயதுவரை வளர்த்ததாலும் அவள் குடலும் விளங்கிற்று. ஆனால் இவ்வளவையும் செய்துவிட்டு அந்த யசோதையும் மற்ற இடைச்சிமாரும் இவன் வயிற்றில் கயிறுகளைக்கட்ட ஒன்றும் ஆக்ஷேபிக்காமல் அதையும் பொறுத்திருந்தான் என்று அவனுடைய செளலப்யத்தையும், செளசீல்யத்தையும் குறித்துக்காட்டி தாமோதரன் என்று அவனைக் குறிப்பிட்டு, நாம் சிறிதும் பயமில்லாமல் அவனை அண்டி வாழலாம், அவன் நிச்சயம் காப்பாற்றுவான் என்று பொருள் படப் பாடுகிறாள்.

இனி இத்தகைய லக்ஷணங்களால் அலங்க்ருதனான அந்த மஹாபுருஷனை எவ்விதம் ஆராதிக்கவேண்டும் என்பதைக் குறிப்பிட்டு மற்றொரு பாட்டை முடிக்கிறாள். இங்கே தூயோம் என்றதற்கு 'மனம், மொழி,செயல்களின் பரிசுத்தம்'என்று சாஸ்த்ரங்கள் திட்டமிட்டவை.

"தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்திதெள
ஞாத்வாசாஸ்த்ர விதானோத்தும் கர்மகர்த்தும் இஹார்ஹஸி"   - கீதை 16-24
ச்லோகத்தை இங்கே அன்வயித்துக்கொள்க. இதுவும் போதாதென்று நம்முடைய சிந்தனையும், வாயினாற்பாடுவதும், தொழுதலும், மலர்சூடுதலுமெல்லாம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு ஆண்டாளுடைய சூத்திரம் இது. இந்த சூத்திரத்திற்கு வ்யாக்யானமாக மன, மொழி, செயல்களை வரிசைப்படுத்தி பெரியதிருமொழி 1-6-வது பதிகமாகிய நைமிசாரண்ய பதிகத்தில் 7,8,9 பாசுரங்களில் முறையே திருமங்கைமன்னன் சாதித்திருப்பதையும் காணலாம். அதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது மரம், செடி, கொடிகளில் பூக்கும் மலர்கள் காயிகமான செயலில் தூவும் மலர்களாயிருக்க, வாயினால் பாடும் வாக்கியங்களும் ப்ரம்ம நிஷ்டர்களாகிய பூர்வ சூரிகளுடைய ஸ்தோத்ரபாடல்களாய் இருக்கவேண்டும் என்பதைக் குறிப்பிட்டு " பர்வினார் இன் சொல் பன் மலர் கொண்டு" என்று பூர்வசூரிகளுடைய ஸ்தோத்ரசொற்களை வாசிகமான மலர்[சுமனஸ்] என்று 8 ஆம் பாசுரத்தில் குறி¢ப்பிடுவதை நோக்குக. இவற்றை இன்னும் ஆராய்ந்தால் மிகமிகப் பெருகுமாதலின் இத்துடன் விரமிக்கப் ப்ராப்தம்.


ஆறாம் பாசுரம் பதிவு நாள் 08-03-2011



புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்,

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ,
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,
மெள்ள வெழுந் தரியென்ற பேரரவம்,
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். [6]

பதவுரை:
புள்ளும் -பறவைகளும்;
சிலம்பின-சப்தித்தன;
காண்-அறிவாய்;
புள்ளரையன்-கருடனுக்கு மன்னனான பெருமாளுடைய;
கோயில்-கோயிலில்;
வெள்ளை-வெண்ணிறமானதும்,
விளி-உறக்கக் கூவுவதுமான
சங்கின் -சங்கத்தின்;
பேரரவம்-பெரிய சப்தத்தை;
கேட்டிலையோ- நீகேட்கவில்லையோ;
முனிவர்களும் - மனன சீ£லர்களும்; 
யோகிகளும்-சித்தி பெற்றவர்களும்;
பேய்முலை நஞ்சுண்டு-பூதனை விஷத்தைப் பூசிக்கொண்டு
வந்த முலையின் பாலையுண்டு ;
சகடம்-சகடாசுரனுடைய;
கள்ளக்கலக்கு-வஞ்சனையோடு கூடிய ஓட்டம்;
அழிய-அழியும்படி;
காலோச்சி-காலாலுதைத்து;
வெள்ளத்து-திருப்பாற்கடலில்;
அரவில்-ஆதிசேஷன் மேல்;
துயில்-தூங்குபவன் போல்;
அமர்ந்து-சயனித்திருக்கும்;
வித்தினை தன்னிடத்திலிருந்து ப்ரம்மாவும்,சகல ஜகத்தும் முளைத்தெழுவதற்கு ஆதி விதையாக உள்ள சரண்யனை;
மெள்ளஎழுந்து-தங்கள் நித்திரையை விட்டு
ஸாவதானமாக எழுந்து உட்கார்ந்து;
ஹரியென்ற-ஸ்ரீ ஹரி:ஸ்ரீ ஹரி:ஸ்ரீஹரி: என்று ஆஹ்நிஹங்கள் நியமித்த
ப்ரகாரம் ஒலித்த;
பேரரவம்-பெரிய ஓசை;
உள்ளம் புகுந்து குளிர்ந்து-உன்னுடைய மனத்திலும் புகுந்து,
மனம் முதலியன சாந்தியடைந்து;
பிள்ளாய்-குழந்தையே;
எழுந்திராய்-எழுந்திருக்கக்கடவை
ஏல் ஓர் எம்பாவாய்.

கருத்துரை:     
ஐந்து பாடல்களோடு பாயிரம் முடிய, ஆறு முதல் பதினைந்து முடிய பத்துப்பாட்டுக்களால், பகவானை நினையாமல் ப்ரக்ருதி வசப்பட்டிருக்கும் சேதனர்களை அவர்கள் தூக்கத்திலிருந்து எழுப்புகிறாள்.

"ப்ராஹ்மே முகூர்த்தே உத்தாப்யா". சேதனர்கள் ப்ராஹ்ம முகூர்த்ததில் தூக்கத்தை விட்டு எழுந்திருக்கவேண்டும் என்று ஆஹ்நிகம் விதிக்கிறது. சூர்யோதயத்திற்கு முந்திய 2 ஹோரை 5 நாழிகைப் பொழுதுக்குப் ப்ராஹ்ம முகூர்த்தம் என்று பெயர். அந்தப் பொழுது வந்து விட்டது என்பதற்கு மூன்று சாக்ஷிகள் காட்டுகிறாள்.

பறவைகளெல்லாம் தங்கள் பிறப்பின் பயனாகவே பொழுதுகளை உணர்கின்றன. கோழி கூவி பொழுது விடிகிறது என்பதும், புலரும் பொழுதைப் புள்ளோசை காட்டுவதும் இயற்கையின் சாக்ஷியம். அதைப் பறவைகள் சப்தித்தனவென்றாள். கோயிலில் ஆராதனம் தொடக்கமாகுங்காலத்தில் சங்கு ஊதுவதும், திருச்சின்னமூதுவதும் உலகப்ரசித்தமான சாக்ஷி. அந்த ஒலியுன் காதில் விழவில்லையாவென்று இரண்டாவது சாக்ஷியத்தைக் கூறுகிறாள். முனிவர்கள் மனன சீலர்களாய் ஸாதன,ஸாத்ய பாதங்களில் இருப்பவர்கள். யோகியர்கள் ஸித்த பாதத்தில் தலைக்கட்டி விளங்குபவர்கள். இவர்களெல்லாருமே பகவத் குண சேஷ்டிதங்களை மனத்தில் கொண்டு, அவைகளையனுபவித்தே காலத்தைப் போக்குகிறவர்கள். அவர்கள் ஆஹ்நிகம் ப்ரகாரம் உஷக்காலத்தில் துயிலுணர்ந்து எழுந்ததை மூன்றாவது சாக்ஷியாகக்காட்டுகிறாள்.             "வித்து" என்னும் சொல்லினால் ஆதிகாரண வஸ்துவாகிய ஹரியென்ற நாமமும், ஓம் என்னும் வ்யாஹ்ருதிக்குத் தெய்வமாகவும் உள்ள பரமாத்மாவைக் குறிப்பிடுகிறாள்."பீஜம்மாம் ஸர்வ பூதானாம் வித்தி பார்த்த ஸனாதனம், அகம்பீஜப்ரதப்ரபு" என்ற கீதா வாக்கியங்களையும் நோக்குக. "காணப்படுவனவான ச்ருஷ்டிப் பொருள்களுக்கெல்லாம் என்னையே நித்யமான விதை என்று அர்ச்சுனா நீ அறி. நானே விதைகளைக் கொடுப்பவனும் ப்ரபுவுமாவேன்". என்னும் பொருளன. இந்த வித்து முக்குணங்களும், ஐம்பெரும் பூதங்களும் தன்னைத்தாங்கும் விதையாக பாற்கடலில் முளைத்து வளர்ந்தது என்று உத்ப்ரேக்ஷிக்கிறாள். இது பரிணாமமின்றி முளைப்பது, அது நித்ய வஸ்துவாயிருப்பதால் ஸம்சாரக்கவலைகளில் துன்பம் விளைந்து கொதித்திருக்கும் உள்ளங்கள், உடல் குளிர்ந்திருக்கும் பனி நாளில் விடியற்காலத்தில் பகவான் நாமாக்களைச் சொன்னாலும், கேட்டாலும் பகவத் சேஷ்டிதங்களை நினைத்தாலும், அத்தகைய கொதித்த உள்ளங்களும் குளிர்வனவானதால் பகவானை பஜிப்போம். உன் உள்ளமும் ஹரியென்ற பேரரவம் கேட்டுக்குளிந்திருக்குமே, எழிந்திரு என்கிறாள்.


ஏழாம் பாசுரம் பதிவு நாள் 14-03-11



கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன், கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே,
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து,
வாச நறுங்குழ லாய்ச்சியர், மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ,
நாயகப் பெண்பிள்ளாய் ! நாரா யணன்மூர்த்தி,
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ,
தேசமுடையாய் ! திறவேலோ ரெம்பாவாய். [7]

பதவுரை:
பேய்ப்பெண்ணே-சேதனவர்கத்தில் சேராமல் பேயைப்போல் விலகி நிற்கும் பெண்ணே:
கீசு கீசென்று- கீசு கீசென்னும் ஒலியைச்செய்துகொண்டு:
ஆனைச்சாத்தன்-பூவைகள்:
கலந்து-ஓசைகள் ஒன்றோடொன்று கலக்கும்படியாய்:
பேசின- சொற்களைச்சொன்ன:
எங்கும்-எல்லவிடங்களிலும் பரவியிருக்கும்:
பேச்சரவம்- சொற்களின் ஒலி:
கேட்டிலையோ-நீ கேட்கவில்லையா:
காசும்- பொன்னணிகளும்:
பிறப்பும்- தானாகவே விளைந்த முத்து, பவளம், நவரத்னங்களால் ஆன ஆபரணங்களும்:
கலகலப்பு- ஒன்றோடொன்று உராய்ந்து ஒலிக்க:
கைபேர்த்து-கையை முன்னும் பின்னுமாக நீட்டியும் சுருக்கியும்:
வாச நறுங்குழல்-நன் மணத்தையுடைய கூந்தலையுடையவர்களான,
ஆய்ச்சியர்- இடைச்சியர்:
ஓசைப்படுத்த- ஒலி செய்த:
தயிரரவம்-தயிர் கடையும் சப்தத்தை:
கேட்டிலையோ-கேட்கவில்லையோ:
நாயகப்பெண்பிள்ளாய்- முதன்மையான ஸ்த்ரீ லக்ஷணங்களையுடயவளே: நாராயணன் மூர்த்தி- நாராயணனெடுத்த பலவித ஸ்வரூபங்களையும்:
கேசவனை- கேசவன் முதலான நாமங்களையும்:
பாடவும்- பிறர் பாடிக்கொண்டிருக்கும் போதும்:
கேட்டே கிடத்தியோ- கேட்டுக்கொண்டும் இன்னும் படுத்திருப்பாயோ:
தேசம்- தேஜஸை:
உடையாய்- உடையவளே:
திற- வீட்டைத் திறந்து வெளியே வா.
ஏல் ஓர் எம்பாவாய்.

கருத்துரை:
தமிழ்நாட்டில் பேசும் பறவைகள் இரண்டு வகையாகும். அவை கிளியும், பூவையுமாகும். பூவை என்பது நாகணவாய்ப்புள்ளென்று செந்தமிழ்ச்சொல்லிலும், நார்த்தாம்பிள்ளையென்று நாட்டுப்பேச்சிலும் வழங்குவது. அது கறுப்பும் மஞ்சளும் உள்ள இறக்கைகள் உடையதாய் குருவிகளைக்காட்டிலும் பெரிதாய் விடியற்காலத்தில் கீச் என்னும் சப்தத்தைச் செய்வது. அதனை ஆனைச்சாத்தன் என்று ஆண்டாள் கூறுகிறாள். கீச்சென்பது இந்த சப்தம். அதைக் கீசு என்று ஆண்டாள் நிர்வாஹம். கீசு என்னும் சொல்லை க+ஈசு என்று இரண்டு சொற்களாகப்பிரித்து ஈசாவாஸ்ய உபநிஷத்தால் நிர்ணயிக்கப்படும் தெய்வம் எவன் என்று விடியற்காலை இந்தப்பக்ஷிகள் கேட்பதாகவும், முனிவர்களும் யோகிகளும் ஹரியென்று பதில் சொல்வதாகவும் இந்தப்பாட்டின் கேள்வியையும் முன் பாட்டில் ஹரியென்ற பதிலையும் சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டுமென்று பெரியவர்கள் நிர்வாஹமாகும். வேதங்களின் இலக்கணப்படி, க+ஈசு இரண்டும் புணருங்கால், அ,தொக்கு, கீசு என்று சேருமென்பர். இந்தப்பாடலிலும் இந்தப் புள்ளின் சப்தத்தையும் ஆய்சியர் தயிர் கடையும் ஓசையையும் மற்றவர்கள் ஏற்கனவே எழுந்து பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹங்களின் பெருமைகளைப் பாடுவதையும், நாம பஜனை செய்வதையும், இந்த ஓசைகளையெல்லாம் கேட்டும் நீ விழித்துக்கொண்டே படுத்திருக்கின்றாயோ என்று கூறுகிறாள். இதன் பாவத்தையுணர 850-ம் குறள்  நமக்குதவுகிறது.

 "உலகத்தாருண்டென்பதில்லென்பான் வையத்
  தலகையா வைக்கப்படும் "

இது புல்லறிவாண்மையென்னும் 85 வது அதிகாரத்தின் கடைசிக்குறள். இதன் பரிமேலழகருரை:
பதவுரை: உலகத்தார் உண்டு என்பது இல் என்பான்-உயர்ந்தோர் பலரும் உண்டென்பதோர் பொருளைத் தன் புல்லறிவால் இல்லையென்று சொல்லுவான்;
வையத்து அலகை ஆவைக்கப்படும்-மகனென்று கருதப்படான், வையத்து காணப்படுவதோர் பேயென்று கருதப்படும்.

கருத்து: கடவுளும், மறுபிறப்பும், இரு வினைப்பயனும் முதலாக அவர் உளவென்பன பலவேனுஞ்சாதிபற்றி உண்டென்பதென்றும், தானே வேண்டிய கூறலால், ஒப்பும் வடிவால் ஒவ்வாமையுமுடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல் வல்ல அலகையென்றுங் கூறினார்.

இந்தக் குறளின் பொருள் முழுவதையும் தன் சொல்லிலடக்கிப் பேய்ப் பெண்ணே என்று விளிக்கிறாள். இதன் பொருள் மனிதர்க்கு, விடியற்காலையில் எழுந்து பகவானை பஜிப்பது நன்மை தரத்தக்கது. மேலும் மார்கழி மாதத்தில் இது இன்னும் விசேஷம் என்று  உலகத்தாரும், முனிவர்களும், யோகிகளும் கூட இந்த பஜனையைச் செய்ய, நீ இப்படிப் படுத்துறங்குகிறாயே. இவைகளையெல்லாம் இல்லையென்று சொல்லும் பேயாகவல்லவா உன்னைக்கருதவேணும் என்கிறாள். பக்ஷிகளும் மனிதர்களும் எல்லோரும் எழுந்திருந்து அவரவர் தொழிலையும் பகவத் பஜனையும் செய்யும் போதும் நீ ஏன் இப்படி விழித்துக்கொண்டும் படுத்துக் கிடக்கிறாய். அங்க வைலக்ஷண்யங்களாலும் புத்தி பரிபக்குவத்தாலும் உன்னை நாயகப் பெண்பிள்ளை யென்று நாங்கள் கருதுகிறோமே. நீ பேய்ப்பெண்ணாகலாமா என்கிறாள்.
மூர்த்திகளைப் பாடுதல், பகவத் குண சேஷ்டிதங்களை கான கீர்த்தனம் பண்ணுதல். கேசவனைப் பாடுதல், கேசவன் முதலான நாமங்களால் நாம பஜனை செய்தல்.

தேஜஸ் என்னும் வட சொல் தேசம் என்று தமிழில் மருவி வந்தது. இங்கே திறப்பது வீட்டுக்கதவோடு பகவத் சங்கீர்த்தனத்தின் பொருட்டு இவள் வாயும் ஆகும். இந்தப் பாட்டிலும் மூன்று சப்தங்கள் பேசப் பெறுகின்றன. முன் பாட்டில் சொன்ன சப்தங்களுக்கு அடுத்தபடியாக அநேகர் விழித்துக்கொண்டுவிட்ட பிறகு இந்த சப்தங்கள் எழுவது அறியக்கிடக்கிறது. நாயகப்பெண்பிள்ளையாக நாங்களெல்லாம் நினைத்திருந்த நீ இப்படிப் பேய்ப்பெண்ணாக மாறினையே யென்று அனுதாபம் காட்டுகிறாள்.
காசும் பிறப்பும்-காசு என்றது பொன்னாலான அணிகளை. பிறப்பு என்றது மனிதன் முயற்சியால் கற்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தங்கத்தினால் அல்லாமல், சிப்பிகளில் தானாக விளையும் முத்துக்களையும், கடலில் செடிபோல் உண்டாகும் பவளங்களையும், மலைகளிலும், சுரங்கங்களிலும், தானாக விளையும் ரத்தினங்கள்,வைரம், வைடூரியம், கோமேதகம், பச்சை முதலான இயற்கைப் பொருள்களையும் கொண்டு செய்த ஆபரணங்கள். அவை இன்றும் தமிழ் நாட்டில் வழங்குவன. ஆய்ச்சியர் குழலின் நறுமணம் செல்வ ஸம்ருத்தியையும், ஒழுக்கத்தையும் குறிக்கும். தயிரரவமும் கீசு என்பது போலவே இருக்கும்.



எட்டாம் பாசுரம் பதிவு நாள் 23-03-11




கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு,

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்,
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து, உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கோது கலமுடைய
பாவாய் ! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு,
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய,
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். [8]

பதவுரை:
கீழ்வானம்- வானத்தில் கிழக்குப்பக்கம்;
வெள்ளென்று- வெண்ணிறம் உடையதாகி;
எருமை- எருமை;
சிறுவீடு- அப்போது முளைத்த மென்மையான சிறு புற்களை;
மேய்வான் - மேயும் பொருட்டு;
பரந்தன காண்- நாற்புறமும் பரவி மேய்கின்றன பார்;
மிக்குள்ள பிள்ளைகளும்- நீராட்டத்தில் ஈடுபடும் அதிகமான சிறுமியர்களும்;
போவான் -நீராட்டத்துகுப்போகும் பொருட்டு;
போகின்றாரைப் போகாமல்,
காத்து- தடுத்து;
உன்னை, கூவுவான்-அழைத்துப்போகும் பொருட்டு;
வந்து நின்றோம்- நாங்கள் போவதையும் நிறுத்தி இங்கே வந்தோம்;
கோதுகலமுடைய- இந்த நீராட்டத்தில் மிகுந்த உற்சாகத்தையுடைய;
பாவாய்- பதுமைபோன்ற அழகுடைய பெண்ணே;
எழுந்திராய்;
மாவாய் பிளந்தானை- குதிரை வடிவாய்த் தன்னைக் கொல்லவந்த கேசி என்னும் அசுரனை வாயைப்பிளந்து கொன்றவனாகிய கண்ணனை;
மல்லரை மாட்டிய- சாணூர முஷ்டிகர்களை வதைத்த;
தேவாதி தேவனை- எல்லா தெய்வங்களும் தங்களுக்கே தெய்வமாகப் போற்றப்படுபவனை
நாம்;
பாடி பறை கொண்டு- அவன் ரக்ஷணத்தை வாங்கிக்கொண்டு;
சென்று சேவித்தால் - போய்க் கும்பிட்டால்
ஆ ஆ வென்று- சிறுமியர்க்கு இந்த பக்தி வந்ததே என்று ஆச்சர்யப்பட்டு;
ஆராய்ந்து- நம் பக்தியை நன்கு பரிசீலனை செய்து
அருள்- அருளக்கடவது.
ஏல் ஓர் எம்பாவாய்

கருத்துரை:
இந்த 3 வது பாட்டில் இன்னும் கொஞ்சம் பொழுது புலர்ந்து கிழக்கு வெளுத்துவிட்டதைச் சொல்கிறாள். எருமைகளெல்லாம் கொட்டிலிலிருந்து அவிழ்த்து விடப்பட்டு புற்றரையில் பரவலாக  மேய்கின்றன. இன்னும் அனேக சிறுமியர்களும் நீராட்டத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் நிறுத்தி, நாங்களும் போகாமல் நின்று உன்னை அழைத்துப்போகும்படி கூவுகிறோம். ஏனென்றால் இந்த நோன்பில் நீ மிகவும் உற்சாகமுடையவளாக இருக்கிறாய்.

சிறுவீடு என்னும் சொல் நேற்று மேய்ந்த புல்லில் ராத்திரி அப்போது விட்ட தளிர். பெரியாழ்வார் ஆத்மா 'எடுக்கும்' சரீரத்திற்கு 'ஏடு'(எடு-ஏடு) என்று பெயர் சொல்லி, "ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்" என்று பாடினார். அவர் மகள் அவரை அடியொற்றிப் புல் 'விட்ட' தளிரை (விடு என்னும் பகுதியடியாக விடு-வீடு) வீடு என்று பாடுகிறாள்.

கோதுகலம்-குதூகலம் என்னும் வடமொழியின் சிதைவு. பதுமைகளுக்குப் பாவைகளென்று பெயர். பதுமைகளை அமைப்பவர் அவைகளை மிகுந்த அழகுடையவைகளாகவே அமைப்பார். ஆதலின், அழகுடைய பெண்களை பதுமை போல் இருக்கிறார்கள் என்று சொல்வது தமிழ் மரபு. எனவே குதூகலமும் அழகும் நிறைந்த இப்பெண்ணை 'கோதுகலமுடைய பாவாய்' என்றழைக்கிறாள்.
கண்ணனுடைய பக்தியில் ஆண்டாள் நிலை கொண்டவள். ஆனதால் திருப்பாவை முழுதிலுமே கண்ணனுடைய எல்லா சேஷ்டிதங்களும் நிரம்பியிருத்தல் கருதத் தக்கது. பெரியாழ்வாரும் தன் திருமொழியில் கண்ணனுக்கே பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். ஆனதால் கண்ணன் இவளுக்குப் பிதுரார்ஜித சொத்துமாவான். அவன் 'தான் தேவாதி தேவன்' என்று கீதையில் பல இடங்களிலும் பரக்கப் பேசியிருப்பதை சங்க்ரகித்து இங்கே அவனை தேவாதி தேவன் என்றாள். அவனை சேவிக்கப் போவதற்குமுன் அவனுடைய குண,ரூப சேஷ்டிதங்களைப்பாடி, அவனுடைய லக்ஷணத்தை நாம் அறிந்ததன் பின் அவனை நாம் சென்று சேவிப்போம் என்கிறாள். பக்தியின் பூர்த்திக்கும் மனதின் பரிபக்குவத்திற்கும் ஹேதுவான அனுஷ்டானத்தை முன்னால் அனுஷ்டித்துப், பின்னால் அவனை சேவித்தல் பொருந்தும் என்று வரிசைப் படுத்திக் காட்டுகிறாள்.

 ஆ! ஆ!! என்பது ஆச்சர்யக்குறி. இப்படித் தன்னைப் பாடித் தன்னுடைய ரக்ஷண சங்கல்பத்தை முன்னமே பெற்றுக்கொண்டுவிட்டவர்களை சரண்யனே எதிர்பார்த்திருந்து, இவர்கள் சென்று சேவித்தவுடன் ஆச்சர்யமடைந்து, அருள் புரிவான் என்றவாறு.

அருள்  புரிய ஆராய்தலாவது, நாம் மன, மொழி, செயல்களால் சுத்தர்களாக, அவனையன்றி நமக்குத் தெய்வமில்லை என்ற ஒரே நம்பிக்கையுடன் இருக்கும் நிலையைச் சரண்யன் தேருதல்.



ஒன்பதாம் பாசுரம் பதிவு நாள் 31-03-11

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்,

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்,
மாமான் மகளே ! மணிக்கதவம் தாள்திறவாய்,
மாமீர் ! அவளை யெழுப்பீரோ? உன்மகள்தான்,
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ,
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ,
மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று,
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். [9]

பதவுரை:
தூ- பரிசுத்தமானதும்;
மணி- அழகானதுமான;
மாடத்து- இருக்கையில்;
சுற்றும்- நாற்புறமும்;
விளக்கெரிய- விளக்குகள் எரிந்துகொண்டே இருக்கவும்;
தூபம்- வாசனைத் திரவியங்களாலான புகை;
கமழ- மணம் வீச;
துயில்- தூங்கும்;
அணை மேல்- படுக்கையின் மேல்;
கண் வளரும்- தூங்கிக்கொண்டிருக்கும்;
மாமன் மகளே- இன்னும் மணமாகாத பெண்ணே;
மணிக்கதவம்- மணிகள் கட்டின கதவை;
தாள்- தாழ்ப்பாளை;
திறவாய்- கழற்று;
மாமீர்- அவளுடைய தாய்மார்களே;
அவளை- அவளை;
மாமாயன்- மஹா மாயங்களைச் செய்து நமது ஹ்ருதயங்களையெல்லாம் அபகரித்தவன்;
மாதவன் - லக்ஷ்மிக்குப் பர்த்தாவாக உள்ளவன்;
வைகுந்தன் -வைகுண்ட பதியாகிய நாராயணன்;
என்று- என்று சொல்லியும்;
என்று- இதுபோல் அவனது இதர நாமங்களைச்  சொல்லியும்;
நாமம் பலவும்-இப்படியானவனுடைய எல்லாப் பெயர்களையும்;
நவின்று- சொல்லி;
எழுப்பீரோ- எழுப்பமாட்டீர்களோ;
உம்- உம்முடைய;
மகள் தான் - மகளாகிய இவள்;
ஊமையோ- வாய் பேச முடியாததால் நாங்கள் கூவுதற்குப் பதிலளிக்காமலிருக்கிறாளோ;
அன்றி- இல்லாவிட்டால்;
செவிடோ-காது கேளாதோ;
அனந்தலோ-மயக்கமோ
ஏமப்பெருந்துயில்- யோக சாஸ்த்ரங்களில் மிக உயர்ந்ததாக சொல்லியிருக்கிற         யோகத்தின் 8 வது அங்கமான நிர்விகல்ப சமாதி நிஷ்டையில் இருக்கிறாளோ;
மந்திரப்பட்டாளோ-ஏதேனும் மந்திர சக்தியில் அகப்பட்டுக்கொண்டாளோ; 
ஏல் ஓர் எம்பாவாய்.

கருத்துரை:
இந்த பாட்டின் தலைவி ஒரு பெரிய செல்வந்தனுடைய பெண். இவள் தூங்கும் அறையின் வர்ணனை அதைக் காட்டும். ஏற்கனவே கண்ணனுடைய ஜார்க்ருத்ய வித்யைகளில் ஈடுபட்டவள் இதனால் இவனோடு கூட நாம் செய்யும் மார்கழி நீராட்டத்தில் மிகவும் உத்யுக்தையாகக் கலந்து கொள்ளக்கூடியவள். நன்றாக பொழுது புலர்ந்தும் கூட இவள் இன்னும் தூங்குகிறாள். இங்கே ஊமையோயென்பது மெளன விரதம் இருக்கிறாளோ என்றும் பொருள் கூறத்தக்கது. செவிடோ என்பதும் யோக சாஸ்த்திரத்திலுள்ள ப்ரத்யாஹார க்ரமப்படி சுரோத்திரேந்திரியத்தின் சக்தியை உள்ளடக்கி இருக்கிறாளோ, இங்கே அனந்தல் என்பது " தானே தானே யானாலும்" என்று நம்மாழ்வார் நிர்வாஹித்தபடி" யஸ்த்வாத் மரதிரேவஸ்யாத் ஆத்மத்ருத் பத: சமானவ: ஆத்மந்யேவச ஸந்துஷ்டஹ: தச்ய கார்யம் நவித்யதே: என்று கண்ணன் கீதையில் சொன்னபடி ஆத்மநிஷ்டையாக ஜகத்தை மறந்திருக்கிறாளோ; மந்த்ரப்பட்டாளோ- இது ஒருவருடைய ஆத்மசக்தியின் அதிகதையால் குறைந்த ஆத்ம சக்தியுள்ளவர்களைத் தன் வசப்படுத்தி அப்படி வசப்பட்டவர் தமக்கென்று ஒரு நினைவும் சொல்லும் கர்மாவும் இல்லாதவராக மற்றொருவர் நியமித்தபடியே ஆடுதல். மாமாயன்  -அவன் மாயையாலேயே மயங்கினவள் இவள் என்பதனால் மாமாயன் என்று  திருநாமத்தைச் சொல்லுங்கள். மாதவன்,ஸ்ரீய:பதி என்று நாமம் பலவும், சஹஸ்ரநாமம் சொல்லி அவனை எழுப்புங்கள்.