வெள்ளி, 29 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

12ம் பாசுரம் தொடர்ச்சி

கனைத்திளம் கற்றெருமை----


மனதால் செய்யக்கூடிய த்யானம், உபாஸனம் [பூஜித்தல்] ஆகியவறிற்கு உகந்ததான மூர்த்தியை[ திருவுருவம்] உடையவன் ராமன் என்பதால் அவனை மனத்துக்கினியான் என்கிறாள். இத்துடன் கண்ணனின் புகழ் நாவுக்கும், அவனுடைய திருமேனி இவள் திருமேனிக்கும் இனியது என்று கூறுவதாகவும் இங்கு பொருள் கொள்ளலாம். கண்ணனையே பாடினால் மட்டும் போதாது, ராமனையும் பாடவேண்டும் என்று கருதுகிறாள். இவள் தந்தை பெரியாழ்வாரும் இப்படிப் பாடியுள்ளதை இவளும் பின்பற்றுகிறாள்.
உயிர்களிடம் எல்லையற்ற கருணையுடையவன் பகவான். ‘ஸ்ரீபாகவதத்தில் ‘வ்யாமோஹயந் லீலயா’ என்று கண்ணனின் லீலைகளெல்லாம் அவன் நம் மேல் கொண்டுள்ள அன்பினாலும் கருணையாலும் செய்தவையே என்கிறது. ராமாவதாரத்திலும் காணப்படும் சோகம் வீரம் முதலியவைகளெல்லாம் அவனுக்கு லீலைகள்[விளையாட்டுகளே] கருணைதான் பகவானின் உண்மையான குணம் என்பதை விளக்கி ஸ்வாமி தேசிகன் தம் தசாவதார ஸ்தோத்திரத்தின் இறுதியில் ராமனை கருணா காகுஸ்தன் என்று கூறுகிறார். ஜீவன்களிடத்தில் பகவானுக்குள்ள இந்தக் கருணைதான் இப்பாட்டில் எருமைகள் பொழியும் பாலாகவும் ஆண்டாள் அதற்கு மேற்கோள்காட்டும் மேகம் பொழியும் மழையாகவும் காட்டப்படுகிறது. சினத்தினால் மாண்ட ராவணனையும் கருணையே வடிவான ராமனையும் அடியார்கள் பிரித்து அறியும் பொருட்டு கோபத்தையும் கருணையையையும் இரண்டு எதிரெதிர் தட்டுக்களில் வைத்துப் பாடிக்காட்டுகிறாள். அந்தச் சினம் ராமனிடம் இருந்தால் அவன் மனத்துக்கினியனாக மாட்டான். மேலும் முதல் பாட்டில் சொன்னபடி இதுவும் ஒரு காக்கும் செயலேயாகும். அதாவது சினம் மிகுதியால் மென்மேலும் பாபங்களைச் சேர்த்துக் கொள்ளும் ராவணனின் ஆத்மாவைக் காப்பாற்றுவதற்காகவே அவனை முடிந்து போகும் படி செய்தது எம்பெருமானின் கருணையின் காரணமேயாகும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

வழக்கத்திலுள்ள கடைவாசல் என்னும் சொல் வாசற்கடை என்றாயிற்று. வாசற்கடை என்னும் சொல்லில் உள்ள கடை என்பதற்கு ஏழாம் வேற்றுமை உருபாகிய ’இல்’ என்று பொருள் கொண்டு வாசலில் என்றும் இடப் பொருளாகக் பொருள் கொள்ளலாம்.

முன்பாட்டிலே கற்றுக் கறவை கணங்கள் என்று பாடும் பொழுதே எருமைக் கூட்டங்களை மழை பொழியும் கருத்த மேகங்களுக்கு ஒப்பிட்டுப் பாடினாள். மழை பெய்யப் போவதை எச்சரித்து இடி இடிக்கும். அதைக்கேட்டு பாம்புகளெல்லாம் பயந்து புற்றுக்குள் சென்று ஒடுங்கிவிடும். மாறாக மயில்கள் மகிழ்வுடன் தோகை விரித்து ஆடும். இதையே சென்ற பாட்டில் புற்றவல்குல் புனமயிலே என்று குறிப்பால் உணர்த்தினாள். இதை இவ்விரண்டு பாட்டுக்களுக்கும் பொதுப் பொருளாகக் கொள்ளவேண்டும். மேகம் மழை பொழிவது போல் எருமைகள் பாலைப் பொழிகின்றன. இச்சமயத்தில் பாம்பு போன்ற சோம்பல் முதலிய தீய குணங்களெல்லாம் ஒழிந்துபோய் மயில் போல் ஆட வேண்டிய உயர்ந்த தலைவிகளான நீங்கள் தூங்குகின்றீர்களே என்ற கருத்தை இங்கு கொள்ளவேண்டும். மயில் பாம்பைக் கண்டால் உடனே அதைக் கொத்திக் கிழித்துக் கொன்றுவிடும் அதுபோல் நீங்கள் எங்களோடு நீராட வந்தால் உங்களுடைய சோம்பலும், கெடுதல் உண்டாகக் காரணமான பிற குணங்களும் [போய பிழையும் புகுதருவான் நின்றனவும்] எல்லாம் ஒழிந்துவிடும் என்னும் பொருளும் இங்கே அமைந்துள்ளது.

    

வியாழன், 28 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

12ம் பாசுரம் தொடர்ச்சி

கனைத்திளம் கற்றெருமை----

’சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான்’ என்னும் தொடருக்கு அடுத்து நாம் விளக்கம் காணவேண்டும். இவ்விடத்தில் ஸ்ரீ என் ஆர் கே ஸ்வாமியின் விரிவுரையைப் பற்றிக் கூறுவது அவசியமாகும். மிகவும் அற்புதமாக விவரித்துள்ளார்.அதைச் சற்றே விரிவாகக் காண்போம்.                                                        ‘சீதையைக் கவர்ந்து சென்றதால் ராமனுக்கு ராவணன் மேல் கோபம் உண்டாகி , அதனால் இலங்கை சென்று போர் புரிந்து அவனைக் கொன்றவன் மனத்துக்கினியனாகிய ராமன்’ என்றுதான் நாம் பொருள் கொள்வோம். இங்கு நம் உரையாசிரியர்கள் ”சக்ரவர்த்தித் திருமகனுக்கும் சினமுண்டோ” என்று கேட்டு அதற்கு பதிலாக “அடியார்களின் எதிரிகள் இவர்க்கும் எதிரிகள்’ அவர்களைத் துன்புறுத்தினால் இவர்க்குச் சீற்றம் உண்டாகும்” என்றும் அருளிச் செய்துள்ளனர். ஆனால் ஸ்வாமியின் விரிவுரை வேறுவிதமாக மிகவும் புதிய கோணத்தில், அதே சமயத்தில் மிகப் பொருத்தமாகவும் அமைந்துள்ளது அறிந்து இன்புறவேண்டிய ஒன்றாகும்.

சினத்தினால் என்ற சொல்லை ராமனுக்குச் சேர்க்காமல் ராவணனுக்கு இணைத்துப் பொருள் கூறுகிறார். தான் வஞ்சகத்தால் கவர்ந்து வந்த சீதையை ராமன் அழைத்துச் சென்று விடுவானோ என்று நினைத்து அவன் மேல் சினம் கொள்கிறான் ராவணன். இவ்விதம் அவனுக்குண்டான சினமே தன் வினைத் தன்னைச் சுடும் என்ற முதுமொழிக்கிணங்க அவனைக் கொன்றதென்கிறார்.

 ‘மிகை செய்வார் வினைகட்கெல்லாம் மேற்செய்யும் வினையம் வல்லான்’ என்று ராமனைப் பற்றி கம்பன் இரணியவதைப் படலம் 147ம் பாட்டில் சொல்கிறார். இதன் பொருளாவது- சாஸ்திரங்களில் கூறிய நல்வழிகளில் நடப்பதற்கு மாறாக கெட்ட வழிகளில் நடப்பவர்களை அவர்கள் நடக்கும் அக்கெட்டவழிகளே அவர்களைக் கொல்லும் படி செய்யவல்லவன் ராமன் என்கிறார். கம்பனின் இக்கருத்தை ஆதாரமாகக் கொண்டே, தான் சென்ற கெட்டவழி, தான் கொண்ட சினம் இவை காரணமாகவே ராவணன் முடிந்தானென்று விளக்கமளித்துள்ளார் . திருவள்ளுவரும்”தன்னைத் தான் காக்கின் சினம் காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்’ என்று கூறியுள்ளார். ஒருவர் கெட்டவழியில் சென்றால் அக்கெட்டவழிகளே அவர்களது அழிவுக்குக் காரணமாகும் என்பது கம்பனின் கருத்து. சினத்தை அடக்காதவனுடைய சினமே அவனை அழித்துவிடும் என்பது வள்ளுவரின் கருத்து. இவ்விரண்டுமே ராவணனுக்குப் பொருந்தும். எனவே சினத்தினால்------என்னும் பாடற் பகுதிக்கு மேற்கண்ட விளக்கத்தை ஸ்வாமி கொடுத்திருப்பது மிகவும் நயமானதாகும். இங்ஙனம் தான் கூறுவதற்கு மேலும் சில மேற்கோள்களையும் எடுத்துக் காட்டுகிறார். கும்பகரணன் வதைப் படலம் 17வது பாட்டில் முதல் நாள் போரில் ராமன் தன்னை எப்படி வென்றான் என்பதை ராவணன் மாலியவானிடம் [17 முதல் 25வது பாடல் வரை] கூறுகையில் ராமன் பெரும் போர் புரிந்த போது கூட அவனுடைய முகத்திலோ மற்ற அவயவங்களிலோ கோபம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவனுக்கு என்னிடத்தில் ஒரு சிறிது கோபம் கூட இருப்பதாக ‘சினம் உண்மை தெரிந்ததில்லை’ என்று கூறுகிறான். ராமனுக்குத் தன்னிடம் சினம் ஏற்படவில்லை என்று ராவணனே கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருவர் நம்மைக் கோபிக்கும் போது நாம் அமைதியாக இருந்தால் அவர்கள் கோபம் மேலும் அதிகரிக்கும். ராமன் தன் மீது கோபப்படாததால் ராவணன் மேலும் மேலும் சினத்தை அதிகரித்துக் கொண்டு அதன் காரணமாகவே இறந்தான். எனவே சினத்தினால் என்ற சொல்லை ராமனுக்குச் சேர்க்காமல் ராவணனுக்குச் சேர்த்து பொருள் கொள்வதே நன்கு பொருந்தும் என்று ஸ்வாமி விவரிப்பதை நாம் அறியலாம். மேலும் ’செற்ற’ என்ற சொல்லுக்கு ’கொன்ற’ என்று பொருள் கூறி ராவணன் இவ்வாறு தம் நடத்தையாலும் , சினத்தினாலும் தானே அழிந்துபோக ராமனுடைய அம்பு சிறிது உதவிற்று என்றும் முடிந்த பொருளாகக் கூறியுள்ளார். உலகில் பொதுவாக கோபமே இல்லாமல் எப்பொழுதும் சாந்தமாக இருப்பவர்களையே அனைவரும் விரும்புவர். சாந்த மூர்த்தியான ராமனுக்குச் சினம் என்பது உண்டு என்று கொண்டால் அவன் எப்படி அனைவருக்கும் ‘மனத்துக்கினியான்’ ஆக முடியும்?

தொடரும்