சனி, 15 ஜனவரி, 2011

ஆசார்யர் பெருமை


ஆசார்யரே நாம் கண்ணெதிரில் காணும் தெய்வம் என்கிறார் ஸ்ரீ ராம பிரான். ஆசார்யரைப் பெறாத ஒருவனது வாழ்க்கை வீணாகிறது. அது பழமற்ற மரம்போல, விளக்கற்ற வீதிபோல, நீரில்லாத குளம் போல, பூச்சூடாத பெண்போல, நெற்றிக்கிடாத முகம் போல, ஒளியில்லாத வானம் போல, ஸ்வரம் இல்லாத சங்கீதம் போல, தந்தியில்லாத வீணை போல,
ஸாரதியில்லாத ரதம் போல என்பர் பெரியோர்
.
செல்லும் வழி, சேருமிடம் தெரியாமல் வாழும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்பவர்கள் ஆசார்யர்கள்.எண்ணை தேய்த்துக் குளிப்பதற்காக ஒரு பெண் தன் நகைகளைக் கழற்றி ஒரு சிகப்புப் பட்டுத் துணியில் முடிந்து வைக்கிறாள். குளித்துவிட்டு வந்தபின் வைத்த இடத்தை மறந்ததால் அதை மிகுந்த கவலையுடன் வெகு நேரம் வீடு முழுவதும் தேடுகிறாள். நெடு நேரம் கழித்து அச்சிவப்புப் பட்டுத்துணி கண்ணில் பட்டதுமே கவலையெல்லாம் நொடியில் மறந்து ஆறுதல் அடைகிறாள். அப்பட்டுத்துணி கண்ணில் பாட்டாலே போதும் நகை கிடைத்த மகிழ்ச்சி! அதுபோல் ஸதாசார்யரைப் பெற்றுவிட்டாலே போதும். நம் வாழ்வெனும் ஓடம் கரை சேர்ந்துவிடும் என்று கவலையின்றி நிம்மதியாக இருக்கலாம்.


NRK ஸ்வாமி பக்கம் - சிந்தனைப் பெட்டகம்


NRK ஸ்வாமிஎழுதிய நாள்-20.12.1948


1] 12 ராசிகளை நினைவில் வைத்துக்கொள்ள ஒரு எளிய பாடல் [சொற்றொடர்]


ஆடு மாடு இரட்டை நண்டு
 அரி சிறுமி தூக்கும் தேளும் 
விற்பெருமீன் குடமும்
 மீனும் ராசியாவன


2] ஏழை, இடையன், இளிச்சவாயர் என்கிறார் இடைக்காடர் என்னும் தமிழ் புலவர் ராமன், கிருஷ்ணன், ந்ருஸிம்ஹன் என்னும் தெய்வங்களை!

வெள்ளி, 14 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலைதனியன்-1


நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்த மத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதாதஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய:


பரமாத்மாவாகிய ஸ்ரீமந் நாராயணன் ஒருவனே புருஷன்.[புருஷனைப்பற்றிச் சொல்லும் ஸூக்தம் புருஷ ஸூக்தம்] ஜீவாத்மாக்கள் அனைவரும் ஸ்த்ரீகள் என்பது நம் ஸம்ப்ரதாயம். இதன்படி ஜீவர்கள் அனைவரும் தம் புருஷனாகிய பரமாத்மாவைச் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கமாகி விடுகிறது. நாம் அவனது அடியார்கள் என்னும் ஞானம் உண்டாகி, தொடர்ந்து அவன்பால் பக்தி ஏற்பட்டு அது வளர்ந்துவிட்ட நிலையில் அவர்கள் இதயக் குகையிலே பகவான் தானே வந்து அமர்கிறான். [’அகம்படி வந்து புகுந்து ----- பள்ளி கொள்கின்ற பிரானை’- பெரியாழ்வார் திருமொழி 5-2-10].  பெண்களின் மார்பகங்களைக் கூறுவதன் உள்ளுறைப் பொருள் ‘பக்தி’யாகும் என்பது ஆழ்வார்களின் பாசுரங்களைக் கொண்டு அறியலாம். நப்பின்னையின் மார்பின் மேல் படுத்துறங்கும் என்னும் இத்தனியனும், மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் என்னும் 23வது பாடல் சொற்றொடரும் ஒரே பொருளுடையவை. இங்கே அந்தர்யாமியாய் விளங்கும் எம்பெருமானைத் துயிலெழுப்புகிறாள் ஆண்டாள். யசோதை இளங்சிங்கம் என்று முதல் பாட்டிலும் 23வது பாடலில் அவ்விளஞ்சிங்கம் வளர்ந்த சிங்கமாகக் காட்டப்படுவதையும் கொண்டு ஆண்டாளின் இதயத்தில் வீற்றிருக்கும் தெய்வம் ஸ்ரீ ந்ருஸிம்ஹன் என்பதை உணரலாம். இத்தனியனில் பராசர பட்டர்” நப்பின்னையின் இதயத்தில் உறங்கிகொண்டிருக்கும் கண்ணபிரானை எழுப்பி அவனுடைய பரத்வத்தை [மேன்மையை] சொல்லி , தான் சூடிக்களைந்த மாலையால் கட்டுப்படும் அவனை வற்புறுத்தி அவனுடைய குணங்கள் செயல்களை அனுபவிக்கிறாள் ஆண்டாள். அவளுக்கு என் நமஸ்காரங்கள்” என்கிறார்.
தன் பக்தர்களிடம் பாராமுகமாயிருத்தல் பகவானுக்கு அழகல்ல. நப்பின்னை போன்ற உயர்ந்தோரின் பக்தியில் திளைத்து மகிழும் கண்ணபிரான் தன்னைப் போன்ற எளிய பக்தர்களுக்கும் முகம் கொடுத்தல் வேண்டும் என்று எம்பெருமானுக்கு உணர்த்துகிறாள் என்பதை ”அத்யாபயந்தி” என்னும் சொல் விளக்குகிறது. 
ஆண்டாள் பக்தர்களைப்பற்றிச் சிந்தியாது உறங்கும் [உறங்குவதுபோல் பாவனை செய்யும்] பெருமாளையும், பெருமாளைப் பற்றிய சிந்தனையில்லாது உறங்கிக் கிடக்கும் ஜீவர்களையும் துயிலெழுப்பி உணர்த்தும் பிரபந்தமே திருப்பாவை. வியாழன், 13 ஜனவரி, 2011

ஸ்ரீ ராமானுஜர்வேதம் கற்பிப்பவர்,வேதாந்த ஞானம்,சாஸ்திரங்களைப் போதிப்பவர், ஸமாச்ரயண, பரந்யாஸங்களைச் செய்து வைப்பவர்,ஸ்ரீபாஷ்யம், பகவத்கீதைமுதலிய நூல்களை காலக்ஷேபமாக ஸாதிப்பவர் என ஒருவர் பல முகங்களில் ஆசார்யர்களைப் பெற்றுப் பயனடையலாம்.

விசிஷ்டாத்வைதத்தை விளங்கச் செய்த ஸ்ரீ ராமானுஜர் ஐந்து ஆசார்யர்களைப் பெற்றிருந்தார்.

1-ஸ்ரீ பெரியநம்பி-மதுராந்தகத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்து வைத்து திருமந்திரம், த்வயம், சரமச்லோகம் என்னும் மூன்று ரஹஸ்யங்களுள் த்வயத்துக்கு மட்டும் அர்த்தம் ஸாதித்தார்.
நாலாயிரத்தில் திருவாய்மொழி நீங்கலாக மூவாயிரத்துக்கும் விளக்கம் அருளினார்.

2- திருக்கோஷ்டியூர் நம்பி- இவர் திருமந்திரத்துக்கும், சரம ச்லோகத்துக்கும் விளக்கம் அருளினார்.

3- திருவரங்கப் பெருமாள் அரையர்- திருவாய்மொழி ஓதி சில விசேஷங்களான நல்வார்த்தைகள் அருளிச் செய்தார்.

4- பெரிய திருமலை நம்பி- ஸ்ரீமத் ராமாயண அர்த்தங்கள்.

5- திருமலையாண்டான்- திருவாய்மொழி காலக்ஷேபம் சாதித்தார்.

ஸ்ரீ ராமானுஜருக்குப் பல திருநாமங்கள் உண்டு. அவையாவன

1- ராமானுஜன் -இவர் பெற்றோர் இட்டது

2- யதிராஜர்- காஞ்சி பேரருளாளப் பெருமாள் இவர் ஸந்யாஸ ஆச்ரமத்தை ஏற்ற பொழுது அருளியது
   
3-உடையவர்- திருவரங்கத்துப் பெருமாள்நம் உடையவரேஎன்றழைத்ததால் அடைந்தது

4- எம்பெருமானார்- திருக்கோஷ்டியூர் அடியார்கள் இட்டது

5- இளையாழ்வார் மேலும் லக்ஷ்மண முனி- முன்னோர் உரையில் வழங்கப் படுபவை 

புதன், 12 ஜனவரி, 2011

குருவா, கோவிந்தனா?’ஆசார்யர்’ என்னும் சொல்லுக்கு சாஸ்திரங்களை நன்கு அறிந்து கொண்டு அதன் வழி தானும் நடந்து பிறரையும் நடக்கச் செய்பவர் என்பது பொருள். ‘குரு’ என்னும் இந்த இரண்டெழுத்துச் சொல்லுக்கு இருளை அகற்றி ஒளி தருபவர் என்பது பொருள். ஆசார்யனை தெய்வமாக நினை [ஆசார்ய தேவோ பவ] என்கிறது வேதம். தத்வம், பரம்பொருள், சாஸ்திரம், வேதம். வேதாந்தங்கள் பற்றிய ஞானத்தை இவர்கள் போதிப்பர். நம் ஸம்ப்ரதாயத்தில் பெருமாளே [ஸ்ரீமந் நாராயணனே] முதல் ஆசார்யன். ’கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்’, ‘குருஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம’ என்பவை இதனைக் கூறும்.

தெய்வத்தை நமக்குக் காட்டித்தந்து அவரை அடைவதற்கு வழியையும் கற்பிக்கும் ஆசார்யனை [தெய்வத்தைப் பாடாமல்] பாடுவதில் தவறில்லை என்பது கருத்து. ஏனெனில் இந்த ஆசார்யர் இல்லையெனில் தெய்வத்தை அறிந்துகொண்டிருக்கமுடியாதே!

‘குரு கோவிந்த்’ எனத் தொடங்கும் கபீர்தாஸரின் தோஹா [குறள்] கூறும் கருத்தும் இதுவே!


 GURU GOBIND DOU KHADE KAKE LAGOO PAYE,
 BALIHARI GURU APNE,GOBIND DIYO MILAYE

 "குரு, கோவிந்தன் இருவரும் ஒரே சமயத்தில் என் எதிரில் வந்து நின்றால் நான் முதலில் யார் திருவடிகளில் விழுந்து வணங்குவேன்? குருவின் திருவடிகளில் தான், ஐயம் என்ன! இந்த கோவிந்தனை எனக்குக் காட்டிக்கொடுத்தவரே இந்த குருதானே!"என்கிறார்.

ஒருவருக்கு ஆசார்யர் ஒருவர்தானா? அல்லது பலர் இருக்கலாமா?

செவ்வாய், 11 ஜனவரி, 2011

ஆழ்வார்களும் அருளிச்செயலும்"ஸ்ரீவைஷ்ணவர்” என்னும்பொழுது முதலில் நினைவுக்கு வருபவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் ஸ்ரீமந்நாராயணனிடம் அவனுடைய தன்மை [nature] [ஸ்வரூபம்] அழகிய தோற்றம் [ரூபம்] திருக்கல்யாணகுணங்கள் , பெருமைகள் [விபவம்] செல்வம் [ஐச்வர்யம்] ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். பெருமாளிடம் ஆழ்ந்துவிட்டதால் ‘ஆழ்வார்கள்’ என அழைக்கப்பட்டனர். இவர்கள் பக்தியுடன் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப்ரபந்தம் . வடமொழியில் ‘ப்ரகர்ஷேண பத்நாநி’ என்பதே ப்ரபந்தம் என்னும் சொல்லாயிற்று. பெருமாளுடன் நம்மை இறுக்கிக் கட்டி வைப்பதால் இப்பெயர். தமிழில் எழுதப்படும் பாடல்களை செய்யுள், பாடல் என்று அழைப்பது போலன்றி இப்ரபந்தத்திலுள்ள பாடல்கள் பாசுரங்களென்று குறிப்பிடப்படுகின்றன.  தீவிர பக்தியினால் தாம் பெற்ற அனுபவங்களை நமக்கும் உணர்த்துவதற்காக ’அருளுடன் செய்த’ இப்பாசுரங்கள் ”அருளிச் செயல்” எனவும் வழங்கப்படுகின்றன.

ஆழ்வார்கள் பன்னிருவர் [12] என்றும் பதின்மர் [10] என்றும் கூறுவதுண்டு. ஆண்டாள் பெருமாளின் தேவியருள் ஒருவர், மதுரகவிகள் மற்ற ஆழ்வார்களைப் போல் எம்பெருமானைப் பாடாமல் தம் ஆசார்யராகிய நம்மாழ்வாரை மட்டுமே பாடியதால் இவ்விருவரை சேர்க்காமல் பதின்மர் [10] என்று கூறுகிறோம். ஸ்வாமி தேசிகன் ஆழ்வார்களில் எண்ணப்படாத திருவரங்கத்தமுதனார் என்பவர் அருளிச் செய்த இராமானுச நூற்றந்தாதி பாடல்களையும் சேர்த்தே நாலாயிரம் என்று கணக்கிடுகிறார். மதுர கவிகள் ’தொல்வழியே [ஆசார்யர்களையே தெய்வமாகக் கொண்டாடுவது ]நல்வழி என்று காட்டிக்கொடுத்துள்ளார்’ என்பது ஸ்வாமி தேசிகனின் கருத்து. திருவரங்கத்தமுதனாரும் இந்நல்வழியைத்தானே கைக்கொண்டு பாடினார்!

பெருமாளைப் பாடாமல் ஆசார்யர்களை மட்டுமே பாடுவது சரியா?

Alwars image- Thanks to Kumbakonam Tradition.org

திங்கள், 10 ஜனவரி, 2011

எல்லாம் நன்மைக்கே

'பூமியில் தர்மத்துக்கு வாட்டமும் அதர்மத்துக்கு எழுச்சியும் நேரும்போதெல்லாம் வந்து பிறக்கிறேன்' [யதா யதா ஹி---- கீதை 4-7] என்றும் நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும்,சிறந்த தர்மத்தை நிலைநாட்டவும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன் [பரித்ராணாய----கீதை4-8] என்றும் ஸ்ரீகிருஷ்ண பகவான் அருளிச் செய்துள்ளார். எனவே பெருமாளும் பிராட்டியும் இணைந்து பூமியில் வந்து அவதாரமாகிய நாடகத்தை நடத்திக்காட்டுவது எல்லாம் நம்முடைய நன்மைக்காகவே!
இது தொடர்பான ஒர் நகைச்சுவை நிகழ்ச்சி
ஸ்ரீ உ.வே. ஸேவா ஸ்வாமி அவர்களின் பேச்சில் எப்பொழுதும் மெல்லிய நகைச்சுவை இழையோடும். வட இந்தியாவில் ஒருமுறை ஓரிடத்தில் உபன்யாஸம் செய்து முடித்ததும் ஒருவர் அவரிடம் வந்து பெருமையுடன் "ஸ்வாமி! ராமர், க்ருஷ்ணர் போன்ற தெய்வங்களெல்லாம் பாரதத்தின் வட தேசமாகிய எங்கள் பகுதியில்தான் அவதரித்துள்ளனர். உங்கள் பகுதிக்கு அந்த பாக்யம் கிடைக்கவில்லையே" என்று வினவினார். ஸ்வாமி புன்னகையுடன் " தர்மத்துக்கு அழிவு ஏற்படும்பொழுது அங்கு, அப்பொழுது வந்து அவதரிப்பதாக பகவான் கீதையில் சொல்லியிருக்கிறாரே. இங்கு அதற்கு ஏற்பட்ட அவசியம் எங்கள் பகுதிக்கு நேரவில்லையென்பதே காரணமென நினைக்கிறேன்" என்று கூற கேட்டவர் தலை குனிந்தவராய் அங்கிருந்து அகன்றுவிட்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?    

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

சங்கத் தமிழ் மாலை- ஸ்ரீஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைக்கு ஓர் அனுபவ உரை
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

முன்னுரை

‘நோன்பு நோற்றல்’ என்பது முன்காலத்திலிருந்தே செய்யப்படும் ஒரு செயலாகும். இது உள்ளத்தையும், உயிரையும் உயர்வடையச் செய்கிறது. இவ்வுயர்வினால் ஒருவனது செயல்களும் உயர்வடைகின்றன. உலகில் நெடுங்காலமாக எல்லாவிடங்களிலும் எல்லா மக்களிடமும் நோன்புகள் பலபடியாகக் காணப்படுகின்றன. இதனால் பயனடைவதாக மக்கள் 
எண்ணுவதே இதன் பெருமையைக் காட்டுகிறது.

திருவள்ளுவர் ‘ஒருவன் கற்ற கல்வி அவனுக்கு பின்வரும் ஏழ் பிறவிக்கும் உயிர்த் துணையாக நிற்கும்’ என்கிறார் [குறள் 40.8] தவம் என்னும் அதிகாரத்தில் உலகில் பலர் தவம் செய்யாதவர்களாக இருப்பதால் ஆற்றல் அற்றவர்களாக இருக்கிறார்கள் . தவம் செய்ய சிலரே ஆற்றாலுடையவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் [27-10] தவம் என்பது தன்னுடைய துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதும் பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமல் இருத்தலும் ஆகும் என்று தவத்தின் வடிவத்தைக் கூறுகிறார். மேலும் இத்தவமானது முன்பு செய்த தவத்தால் கைகூடும். அது இல்லையேல் முயற்சி செய்வதும் பயனளிப்பதும் அரிதகும் என்கிறார் [27-12] . வாழ்கையில் நாம் சம்பாதிக்கும் செல்வங்களில் கல்வி, நோன்பு இவைகள் மூலமாகப் பெறும் செல்வங்கள் மற்றெல்லாச் செல்வங்களைக் காட்டிலும் உயர்ந்தவையாகும் என்பதே வள்ளுவர் கருத்து.

இந்நோன்புகள் பலவகைப்பட்டவை. பலநூல்களும் இவைகளை விளக்குகின்றன. அடைய வேண்டிய பலனுக்குத் தகுந்த நோன்பினைத் தக்க பெரியோர்களிடம் கேட்டறிந்து அதன்படி கடைப்பிடிப்பதே வழக்கமாகும்.

பெரியாழ்வாரின் திருமகளாக வளர்ந்த ஆண்டாள் பெருமாளே தனக்கு நாயகனாக வேண்டும் என்னும் உறுதி கொண்டாள். ஸ்ரீபாகவத புராணத்தில் 10வது ஸ்கந்தம் 22வது அத்யாயத்தில் “காத்யாயனி” விரதம் என்னும் நோன்பை அறிவிலா இடைச்சிறுமியர்கள் நோற்று தாங்கள் விரும்பியபடியே கண்ணனைக் கணவனாக அடைந்தார்கள் என அறிந்து கொள்கிறாள்.

இது வேதத்திற்கு ஏற்புடைய நோன்பாகும். மனிதன் இங்கு வாழ்ந்தபின் மோக்ஷத்தைச் சென்றடையவேண்டும். ’கதி’ [அர்ச்சிராதி, தூமாதி முதலிய வழிகள்] ’அயனம்’ [உத்தராயணம், தக்ஷிணாயணம்] என்னும் இவ்விரு சொற்களால் மோக்ஷத்திற்குச் செல்லும் வழியைப்பற்றி ஆராயும் கூட்டத்தினரின் தலைவர் கத்யயனர் என்னும் ரிஷியாகும். இவர் குலத்தில் பிறந்தவர் காத்யாயனி. இப்பெயருடைய பார்வதி தேவியே இந்த நோன்பின் வழிபடு தெய்வமாகும். பெரியாழ்வாரும் பரம்பொருளைப்பற்றிக் கூறி பொற்கிழியைப் பரிசாகப் பெற்றவர். இவர் திருமகளாகிய ஆண்டாள் இவர் பரம்பொருள் என்று காட்டித் தந்த கண்ணபிரானையே அடைய விரும்பினாள். அவனையே தன் நோன்பின் வழிபடு தெய்வமாகக் கொண்டாள். அவனையடைய அவனே வழி [உபாயம்] என்று கருதினாள். ஆழ்வார்கள் அனைவரும் கண்ணபிரானையே ஆறும், பயனுமாக [செல்லவேண்டிய வழி, சென்றடையும் பயன்] அறுதியிட்டனர். அதற்கேற்ப இவள் நோற்ற நோன்பும், அதன் பயனும் திருப்பாவையின் முப்பது பாடல்களிலும் பொதிந்துள்ளன.

“ஆழ்வார், எம்பெருமானார் ஸம்பிரதாயம்” என்று வழங்கப்படும் ஸம்பிரதாயத்தைச் சேர்ந்தோருக்கு இத்திருப்பாவை முதல் நூலாகவும் ஆண்டாளின் மற்றொரு படைப்பான நாச்சியார் திருமொழி இதன் குறிப்புரையாகவும், மாறன் சடகோபனின் [நம்மாழ்வாரின்] நான்கு நூல்களும் இவைகளின் விரிவுரைகளாகவும், திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்களும் இவைகளின் விரிவுரைகளாகவும் அமைந்துள்ளன. மற்றைய ஆழ்வார்களின் அருளிச் செயல்களும், இராமானுச நூற்றந்தாதியும் மேற்கண்ட நூல்களிலிருந்து அவர்கள் கண்டெடுத்த மாணிக்கக் குவியல்களாகும். இதுவே நாலாயிர திவ்யப்ரபந்தங்களின் சிறப்பாகும்.
இத்திருப்பாவைக்கு முன்னோர்கள் ஐவர் உரை செய்துள்ளனர். நால்வர் புற உரையும் ஒருவர் அகவுரையும் [ஸ்வாபதேசம்] வரைந்துள்ளனர்.

இவ்வுரையாசிரியர்கள் மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் வேதம், சாஸ்திரங்கள் ஆகியவற்றையும் எடுத்துக் காட்டி விளக்கியுள்ளதை நோக்குகையில் அவர்களுடைய உயர்ந்ததான கல்வி, அறிவு, ஆற்றல்கள் அனைவரையும் வியக்கச் செய்வனவாகும். தன் நூல் ‘சங்கத் தமிழ் மாலை முப்பது’ என்று தாம் காட்டித்தந்த குறிப்பை இனி வருவோர் உணர்ந்துகொண்டு அதன்படி பொருள் காணவேண்டும் என்பது ஆண்டாள் நமக்கு அன்புடன் இட்ட கட்டளை எனக்கொண்டு அதன்படி இவ்வுரையை எழுத விழையும் அடியேனுடைய இம்முயற்சியும் முறையானதே.         

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

விரிவுரை என்பது தேவையா?

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது ஒரு உயர்ந்த கலை. திருக்குறளின் பெருமைகளில் இதுவும் ஒன்று. எனினும் படிப்பவர்கள் அனைவரும் எழுதியவரின் கருத்தை ஐயந்திரிபற புரிந்துகொண்டு ரசிப்பதற்கு விளக்கவுரை என்பது அவசியமாகிறது. சிறுகதை, நாவல் என்னும்பொழுது இதன் தேவையில்லை. ஆனால் கடினமான தத்துவங்களையும், மதங்களின் கோட்பாடுகளையும் கூறும்பொழுது இவ்விளக்கவுரைகளின் தேவை ஏற்படுகிறது. இதை உணர்ந்தே நம் முன்னோர்கள் [ பூர்வாசாரியர்கள் ] ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு வ்யாக்யானம் எனப்படும் விரிவுரைகளை வட மொழியும், தமிழும் கலந்த மணிப்ரவாளம் என்னும் நடையில்எழுதிவைத்தனர். தமிழ்மொழியும், தத்துவங்களும், ஆழ்வார்கள் காட்டும் விசிஷ்டாத்வைத வேதாந்தக் கருத்துக்களும் அறிந்தவர்களும் கூட இவ்விரிவுரைகள் [    தங்கள் சிந்தனைக்கெட்டாத விஷயங்களையும் கூறுவதால் ]  தெவிட்டாத நல்விருந்தாக அமைவதை உணர்வர். எனவே எடுத்துக்கொண்ட பொருளைப்பற்றி அறிந்தோர், அறியாதார் என அனைவருக்கும் நூலின் ஆழத்தைப் புரிந்துகொண்டு அநுபவிப்பதற்கு 
விரிவுரைகளின் அவசியம் ஏற்படுகிறது.

ஸ்ரீ NRK ஸ்வாமி சுருக்கமாக எழுதும் இயல்புடையவர். ஸ்ரீஆண்டாள்       திருப்பாவையின் இறுதி பாசுரத்தில் ’ சங்கத் தமிழ் மாலை முப்பது ’ என்று அருளிச் செய்துள்ளார். எனவே இதுவும் ஒரு சங்கத் தமிழினால் வரையப்பட்ட நூல் என்னும் கருத்துடன், சங்கப் புலவர்களின் நூல் படைக்கும் முறையையும், ஆற்றலையும் நன்கு கற்று அறிந்திருந்த இவர் அதே கோணத்தில் இந்த விரிவுரையை எழுதியுள்ளார். சங்கத் தமிழைப் புரிந்து கொள்வது இக்காலத் தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு எளிதல்ல. மேலும் சொல்லவந்ததை சுருங்கக் கூறியிருப்பதாலும் இவருடைய உரைக்கும் ஒரு விளக்க உரையின் தேவை ஏற்படுகிறது