திங்கள், 17 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


தனியன் 2

அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்க்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்_இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

அன்னவயல் என்பது உடலை வளர்க்கும் நெல் முதலிய தானியங்கள் வளரும் இடம் என்றும்,  அன்னம் நீரைப் பிரித்து பாலை மட்டும் பருகுவது போல் தீய எண்ணங்களை விடுத்து ஆத்மாவை வளர்க்கும் சிறந்த எண்ணங்கள் மட்டுமே தோன்றும் மனத்தையும் குறிப்பதாக இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். மனதாகிற வயலில் நீரை ஒதுக்கி பாலை மட்டும் பருகும் அன்னப் பறவை போல எண்ணம் சொல், செயல், மூன்றாலும் ஸாரமற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டு ஸாரமான பொருளைமட்டுமே கொள்ளவேண்டும் என்பதையே ’அன்னவயல்’ குறிக்கிறது.

பகவானை அடைய முப்பத்திரண்டு வித்யைகள் [வழிகள்] வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இவை பாரதத்தில் மிகப் பிரபலமாகவும் பலராலும் கைக்கொள்ளப் பட்டதாயும் உள்ளவை. இவை தவிர பகவானையடைய ஆண்டாள் ஒரு புது வித்யையை இங்கே கற்றுத்தருகிறாள். கன்னிப் பெண்கள் நாட்டில் நல்ல மழை பெய்யவும் தங்கள்பால் குறையாத அன்பும், நிறைந்த ஆயுளும் உடையவர்களான கணவர்கள் தங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நோற்றுவரும் இந்நோன்பினால் எம்பெருமானும் மகிழ்கிறான், மோக்ஷம் வரையிலான உயர்ந்த பலன்களையும் கொடுக்கிறான் என்பதை நோக்கும்பொழுது இந்தத் திருப்பாவையும் ஒரு மோக்ஷ வித்யையே என உணரலாம். இது ஆண்டாள் காட்டிய புது வழி. பிராட்டியான இவளுக்கு ஜீவர்கள் அனைவரும் குழந்தைகளே. தம் குழந்தைகளை நல்வழிப்படுத்த தாயான இவளுக்கும் தகுதி உண்டன்றோ!

கடந்த யுகங்களான க்ருத, த்ரேதா மற்றும் த்வாபர யுகங்களில் முன் சொன்ன இந்த 32 வித்யைகளைக் கைக்கொண்டு மோக்ஷ பலனைப் பெற வல்லவர்களாக விளங்குவதற்குத் தேவையான நீண்ட ஆயுள், நோயற்ற உடல், யோகாப்யாஸம் முதலியனவற்றால் 10 [கர்ம5, ஞான5] இந்த்ரியங்களையும் தன் வசத்தில் வைத்துக்கொள்ளவல்ல உயர்ந்த சக்தியும், இந்த வித்யைகளுக்குத் தேவையான சாதனங்கள் ஆகிய அனைத்தையும் உடையவர்களாக மக்கள் விளங்கினர். மாறாக இக்கலியுகத்திலோ குறைந்த ஆயுள், பிணி, பசி, மூப்பு, துன்பம் இவைகளால் பீடிக்கப்பட்ட உடல் கட்டுப்படுத்த இயலாத இந்த்ரியங்களினால் உண்டாகும் தூக்கம் சோம்பல் ஆகிய தாழ்ந்த குணங்கள் , தேவையான சாதனங்களை வாங்கவியலாத ஏழ்மை ஆகியவற்றால் அந்த 32 வித்யைகளை இவர்களால் கைக்கொள்வியலாது என்பதை உணர்ந்த ஆண்டாள் மிக எளியதான இவ்வழியைக் காட்டினாள். மிகக் குறைவான காலச் செலவும், பொருட் செலவும் உடைய இவ்வித்யையால் பகவானும் மகிழ்ந்து இவ்வுலகில் நல்ல வாழ்வையும் பின்னர் மோக்ஷ பலனையும் கொடுக்கவல்லதானது . ஆண்டாள் பாலை பரிபாடல் முதலிய சங்க நூல்களிலிருந்து தெரிந்து, அதைப் பிற விஷயங்களிலிருந்து பிரித்தெடுத்து ஒரு புது வித்யையாக ஆக்கித் தந்துள்ளாள் என்பதால் புது வித்யையைத் தந்த ஆண்டாளை ’ புதுவை’ ஆண்டாள் என்கிறார்.

இது புதிது. பரி பாடல், நற்றிணை முதலிய பல சங்க நூல்களில்காணப்படும் பலவிதமான கலைகளிலிருந்து இதைப் பிரித்தெடுத்து தொடுத்துக் கொடுத்ததால் இதற்கு சங்கத் தமிழ் மாலை என்னும் பெயரை இறுதிப் பாட்டில் இவள் தானே சூட்டியுள்ளாள்.

வேதத்திற்குப் பொருந்தக் கூடியது, வேதத்தின் ஒப்புதல் இதற்குண்டு. ஆதலால் இது ஒரு வேத வித்யை. எனவே இதை வேதப் பொருளான அரங்கர்க்குக் கொடுத்தாள்.

 இயற்றமிழால் ஆக்கப்பட்டது போல் காணப்படும் இந்நூலை இன்னிசையால் என்று இசைத் தமிழாகக் கூறுகிறாரே  [சங்கீதம் கீர்த்தனைகள் போன்றவை இசைத் தமிழ்] இசைத்தல் என்பது மீண்டும் மீண்டும் ஜபித்தலைக் காட்டும் [chant, riff] இத்திருப்பாவையின் எழுத்துக்கள் மந்திரங்களில் உள்ள எழுத்துக்களைப் போல் எதிர்பார்க்கும் சிறந்த பலன்களையெல்லாம் கொடுக்கக் கூடியவையாக இருக்கின்றன. எனவே இந்நோக்கில் இது இசைத் தமிழ். [இசை என்பதற்கு கேட்பவரை இசையவைக்க வல்லது என்றும் பொருள்] உயர்ந்த பலனைத் தர வல்ல இந்த இசையை இன்னிசையால் என்று கூறினார்.

பல்பதியம்- வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை [ஏக வசனம், த்வி வசனம், பகு வசனம்] என்னும் அமைப்பு உண்டு. இதில் இரண்டுக்கு மேற்பட்ட பல என்பதன் தொடக்க எண்ணான மூன்று என்பதை உள்ளடக்கி மூன்று பதிகம் , முப்பது பாட்டு என்று பொருள். பூமாலையானது பூ என்னும் சொல்லுக்கு அதன் வடமொழி பெயராகிய ‘ஸுமனஸ்’ அதாவது நல்ல உள்ளம் என்றும் பொருள் கொள்ளலாம்.[ இவள் ’அன்னவயல்’ உடைய ஆண்டாளாயிற்றே!]

ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அம்சமாக அவதரித்தவள். பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமிக்கு இயல்பு [தன்மை] ’கந்தம்’ எனப்படும் வாசனையாகும் எனவே இவள் சூடிக்கொடுத்த பூமாலை வெளிப்புற இந்த்ரியமான மூக்கிற்கு இன்பம் கொடுப்பது. இவள் பாடிக்கொடுத்த பாமாலையோ வேத சாஸ்த்ரங்கள் அறுதியிடும் உண்மைப் பொருள்களாகிய மணங்கள் வீசுவது. அதனால் ஞானமும் அனுஷ்டானமும் பெருகி அதன் பலனாக மோக்ஷமும் கிடைத்துவிடுவதால் உள்ளேயுள்ள ஆத்மாவின் இன்பத்துக்கும் காரணமாய் அமைகிறது. இவள் தாய். ஆத்மாக்கள் எல்லாம் இவள் குழந்தைகள். குழந்தைகள் எதற்கும் தாயாரையே சொல்வார்கள். அதனால் சூடிக் கொடுத்தாளைச் சொல்லு என்று முடித்தார். இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’ யைக் கொண்டு சூடிக்கொடுத்தாளை என்பதுடன் நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ என்பதைக்கொண்டு சூடிக்கொடுத்தாளுக்குச் சொல்லு என்றும் ஏழாம் வேற்றுமை உருபைக்கொண்டு [இல்,இடம், கண்] சூடிக்கொடுத்தாளிடம் சொல்லு என்றும் பொருள் கொள்ளலாம் ஏனெனில் ”பொருள் சேர் மருங்கின் வேற்றுமை சாரும்”, பொருள்போகும் வழியில் வேற்றுமையை மாற்றிக்கொள்ளலாம் என்பது தமிழ் இலக்கணம்.

1 கருத்து: