வெள்ளி, 21 ஜனவரி, 2011

ஆத்ம, தேக யாத்திரைகள்



ஆத்ம யாத்திரை, தேக யாத்திரை என்கிறோமே, அப்படியானால் ஜீவாத்மாவும் அதன் உடலும் தினமும் பயணிக்கின்றனவா?
ஆம். இதுதான் நம் வாழ்க்கைப் பயணம். நம் வாழ்நாள் முழுவதும் இவை இரண்டும் இணைந்தே பயணிக்கின்றன. அதனால் இரண்டையும் பேணிக்காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது.
தேக யாத்திரைக்காக நாம் செய்யவேண்டியது உடலுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து நன்கு பேணி வளர்ப்பது. ஆத்ம யாத்திரைக்கு அதன் நலனுக்காக நாம் செய்யவேண்டியது என்ன?
இந்தக் கேள்விக்கு விடையளிக்கிறது நம் வேத வேதாந்தங்கள். நம் ஸம்ப்ரதாயத்தில் தத்வ, ஹித புருஷார்த்தங்கள் என்னும் மூன்று தலைப்புகளில் இந்த விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. இதை நன்குணர்வதால் வரும் அறிவை ஞானம் என்றும் விவேகம் 
என்றும் கூறுகிறோம்.

இந்த விவேகத்தை, ஞானத்தை நாம் பெறுவதால் நமக்குக்  கிடைக்கும் நன்மைகள் அல்லது பலன்கள் என்ன?
முதன் முதலில் எழுந்த கேள்வியாகிய ‘நான் யார்’ என்பதற்கு இந்த ஞானம் [அறிவு] வந்த பிறகே சரியான தெளிவான உறுதியான பதில் கிடைக்கும். நான் யார் என்பது தவிர இதைத் தொடர்ந்து வரும் பல கேள்விகளுக்கும் கூட விடை கிடைக்கும். நான் யார்? நான் எத்தனை காலமாக இருக்கிறேன்? இப்பொழுது இங்கிருக்கும் நான் முன் எங்கிருந்தேன்?  இப்பிறவியில் என்காலம் முடிந்த பின் நான் என்ன ஆவேன்? எங்கு செல்வேன்? இப்பிறவி எனக்கு ஏன் கிடைத்தது? இதில் நான் செய்யவேண்டியவை என்ன? பெற்ற இப்பிறவியை எவ்வாறு பயன் படுத்துவது? எது சரி? எது தவறு?  இதுகாறும் நடந்த ஆத்ம தேக  [பயணங்கள்] யாத்திரை இந்தப் பிறவியோடு முடிந்துவிடுமா? முடிவே கிடையாதா?  உண்டென்றால் அதன் முடிவு எப்படியிருக்கும்? ஜீவாத்மாவிற்குள் இருந்து அவனை இயக்கும் பரமாத்மாதான் இவ்விருயாத்திரைகளையும் நடத்துகிறானா? இப்படி பலவிதமான கேள்விகள்! இவை அனைத்துக்கும் விடையளிக்கும் ஒரே கல்விதான் “அத்யாத்ம சாஸ்த்ரம்”.

மேற்கண்ட கேள்விகளுக்கு ஆராய்ந்து தெளிவான விடை கிடைக்க ஆத்ம  விசாரம், தர்ம விசாரம், வேதாந்த விசாரம் செய்ய வேண்டுமென பெரியோர் பணிப்பர். ‘விசாரம்’ என்பதற்கு விசாரித்துத் தெளிதல், ஆராய்ந்து அறிதல் என்பதாகும்.

விசாரம், விசார் என்னும் சொல்லை தமிழிலும், ஹிந்தியிலும் ‘கவலை’ என்னும் பொருளில் நாம் பயன்படுத்துகிறோம் மேற்சொன்ன ஆத்ம விசாரம், தத்வ விசாரம், முதலியவற்றைப்பற்றி நாம் ஏன்  விசாரப்படவேண்டும்? இவை நமக்குத் தேவைதானா?       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக