செவ்வாய், 18 ஜனவரி, 2011

அத்யாத்ம சாஸ்த்ரம்



இந்தச் சொல்லை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இதன் பொருள் யாது? ’கல்வி’ என்பது என்ன?பலவற்றைக் கற்றுக்கொள்ள, விஷயங்களைத் தெரிந்து கொள்ள சாதனமாக இருப்பது கல்வி. இதைத்தான் வடமொழியில் வித்யை என்கிறோம். ‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்கின்றனர். கலைகள் எனப்படுவது இக்கல்வியின் ஒரு பகுதியே. இக்கலைகள் வாழ்க்கைக்குப் பயன்படுபவை.

இக்கல்விகள் பலவகையாவன. அவரவர் தேவைக்கேற்ப, செய்யவிருக்கும் தொழிலுக்கேற்ப, அவரவர் விருப்பம் ,ஈடுபாடு இவற்றுக்கேற்ப உலகில் பலவிதமான கல்விகள் உண்டு.ஆனால் இவற்றுள் எல்லாம் தலை சிறந்த கல்வி என்பதுஆன்மீகக் கல்வியே என்பர் நம் பெரியோர். இதையே அத்யாத்ம சாஸ்த்ரம் என்கிறோம். பிறவற்றை அறியும் முன் ஒருவன் தன்னைப் பற்றி உணர வேண்டாமா? ’நான் யார்’ என்னும் கேள்விக்கு விடை தெரிந்து கொள்ளவேண்டாமா? இதைத் தெரிவிக்கும் கல்வியே அத்யாத்ம சாஸ்த்ரம். ‘ஆத்மானம் அதிக்ருத்ய க்ருதம் சாஸ்த்ரம் அத்யாத்ம சாஸ்த்ரம்’ அதாவது ஆத்மாவைப் பற்றிப் பேசும் சாஸ்த்ரம் என்பது இதன் விளக்கம்.
உடல் வளர்க்க வயிற்றுப்பிழைப்புக்காகக் கற்கும் கல்வி தேவையாயினும் ஆத்மாவின் நலத்துக்காகக் கற்கும் கல்வி உயர்ந்ததன்றோ! எனவேதான் ஸ்வாமி தேசிகன் ஆன்மீகக் கல்வி தவிர மற்றவற்றைச் ’சுமையான கல்விகள்’ என்கிறார். திருவள்ளுவரும் ஆன்மீகக் கல்வியை ஏற்றிப் பேசுகிறார். இக்கல்வி ஒருவனுக்கு உயிர்துணையாக விளங்குவதால் பின் வரும் ஏழு பிறவிகளுக்கும் அது அவனுடைய உயிர்ச் செல்வமாகிறது என்கிறார்.
            ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
            எழுமையும் ஏமாப்புடைத்து [40.8]
ஆத்மாவைப் பற்றிய கல்விமட்டுமே ஆத்மாவுக்கு உயிர்த்துணை
உயிர்ச் செல்வமாக முடியும். உடல் வளர்க்க உதவும் கல்வி உடலோடு அழிந்துவிடும் என்பது வள்ளுவர் போன்ற ஆன்றோர்களின் கருத்து.

‘நான் யார்’  இதற்குச் சரியான பதில் நமக்குத் தெரியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக