செவ்வாய், 11 ஜனவரி, 2011

ஆழ்வார்களும் அருளிச்செயலும்



"ஸ்ரீவைஷ்ணவர்” என்னும்பொழுது முதலில் நினைவுக்கு வருபவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் ஸ்ரீமந்நாராயணனிடம் அவனுடைய தன்மை [nature] [ஸ்வரூபம்] அழகிய தோற்றம் [ரூபம்] திருக்கல்யாணகுணங்கள் , பெருமைகள் [விபவம்] செல்வம் [ஐச்வர்யம்] ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். பெருமாளிடம் ஆழ்ந்துவிட்டதால் ‘ஆழ்வார்கள்’ என அழைக்கப்பட்டனர். இவர்கள் பக்தியுடன் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப்ரபந்தம் . வடமொழியில் ‘ப்ரகர்ஷேண பத்நாநி’ என்பதே ப்ரபந்தம் என்னும் சொல்லாயிற்று. பெருமாளுடன் நம்மை இறுக்கிக் கட்டி வைப்பதால் இப்பெயர். தமிழில் எழுதப்படும் பாடல்களை செய்யுள், பாடல் என்று அழைப்பது போலன்றி இப்ரபந்தத்திலுள்ள பாடல்கள் பாசுரங்களென்று குறிப்பிடப்படுகின்றன.  தீவிர பக்தியினால் தாம் பெற்ற அனுபவங்களை நமக்கும் உணர்த்துவதற்காக ’அருளுடன் செய்த’ இப்பாசுரங்கள் ”அருளிச் செயல்” எனவும் வழங்கப்படுகின்றன.

ஆழ்வார்கள் பன்னிருவர் [12] என்றும் பதின்மர் [10] என்றும் கூறுவதுண்டு. ஆண்டாள் பெருமாளின் தேவியருள் ஒருவர், மதுரகவிகள் மற்ற ஆழ்வார்களைப் போல் எம்பெருமானைப் பாடாமல் தம் ஆசார்யராகிய நம்மாழ்வாரை மட்டுமே பாடியதால் இவ்விருவரை சேர்க்காமல் பதின்மர் [10] என்று கூறுகிறோம். ஸ்வாமி தேசிகன் ஆழ்வார்களில் எண்ணப்படாத திருவரங்கத்தமுதனார் என்பவர் அருளிச் செய்த இராமானுச நூற்றந்தாதி பாடல்களையும் சேர்த்தே நாலாயிரம் என்று கணக்கிடுகிறார். மதுர கவிகள் ’தொல்வழியே [ஆசார்யர்களையே தெய்வமாகக் கொண்டாடுவது ]நல்வழி என்று காட்டிக்கொடுத்துள்ளார்’ என்பது ஸ்வாமி தேசிகனின் கருத்து. திருவரங்கத்தமுதனாரும் இந்நல்வழியைத்தானே கைக்கொண்டு பாடினார்!

பெருமாளைப் பாடாமல் ஆசார்யர்களை மட்டுமே பாடுவது சரியா?

Alwars image- Thanks to Kumbakonam Tradition.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக